«

»


Print this Post

அ.முத்துலிங்கத்துக்கு வயது ஆறு


அ.முத்துலிங்கத்தின் முதல் கதையை அவரது முதல் தொகுப்பான ’அக்கா’ வில் நான் வாசித்திருக்கிறேன். அந்நூல் அவர் மாணவராக இருந்தபோது எழுதப்பட்டது. வேதசகாயகுமாரின் சேமிப்பில் இருந்து. அதை அவருக்கு பத்மநாப அய்யர் கொடுத்திருக்கலாம். எழுதாமல் போன ஒரு சிறந்த படைப்பாளி என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை எழுதியிருக்கிறேன். பின்பு ஓய்வுபெற்ற பின்னரே அவர் மீண்டும் எழுத வந்தார். அப்போது அவர் எழுதிய முதல் ஆக்கம் இந்தியாடுடே இதழில் வெளிவந்தது. ஆப்கானிய பின்புலத்தில் ஒரு மரணதண்டனை நிறைவேற்றத்தைச் சித்தரித்த அக்கதையை பாராட்டி அடுத்த இதழில் நான் ஒருவாசகர் கடிதம் எழுதியிருந்தேன். அப்போது முதல் இன்றுவரை தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராக அவரை நான் முன்வைத்து வருகிறேன்.

அ.முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கைத்தரிசனத்தை. ’இன்னல்களும் சிக்கல்கலும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுடவாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத்துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஓர் இலக்கிய விமரிசகனாக நான் ஒன்றைச் சொல்வேன், ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே.

அ.முத்துலிங்கத்தின் இணையதளத்தை பெரும்பாலும் இரவில் கடைசியாக வாசிக்கிறேன். விதவிதமான அன்றாட வாழ்க்கையனுபவங்கள் வழியாக செல்லும் அவரது நாட்குறிப்புகள் எப்போதும் என்னை மெல்லிய புன்னகையுடன் தூங்கச்செல்லவைக்கிறது. நாய்கள் மேல் நீரைவிட்டால் அவை கொஞ்சம் உதறிக்கொள்ளுவதுபோல பூமி மெல்ல உதறிக்கொண்டது என்று அவர் நிலநடுக்கத்தைச் சொல்லுமிடத்தில் அவரிடம் இருப்பது ஒரு ஆறுவயதுப்பையன். ஆறு வயதில் புழுக்கள் இருந்த தேன் தட்டு ஒன்றைப்பார்த்துவிட்டு அஜிதன் சொன்னான், ’ஒரே குழந்தைமட்டும் படிக்கிற கிளாஸ்ரூம் மாதிரி இருக்கு’ முத்துலிங்கத்துக்குள் வயதாவதேயில்லை

http://www.amuttu.com/index.php?view=pages&id=219

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7492

4 comments

Skip to comment form

 1. stride

  நான் ஆறு மாதமாக தான் அவர் தளத்தினைப்படிக்கிறேன். ஒவ்வொரு வரியிலும், வரிகளின் இடையிலும் இழையூடும் நகைச்சுவை அமர்க்களமாக இருக்கிறது.

  அவர் எழுதிய “ஆச்சரியம்” கட்டுரையில் இந்த வரிகள் குபீர் சிரிப்பை வரவழைத்தது.

  “அந்த அச்சுக்கூடத்தில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இடதுசாரிக்கட்சியை சேர்ந்த ஒரு சங்கம் இதழ் ஒன்று தயாரிக்கும். அதில் நிறையக் கட்டுரைகள் இருக்கும்.


  எல்லா கட்டுரைகளிலும் ‘என்னே கொடுமை! என்னே துன்பம்! பாட்டாளி மக்களே! விழித்தெழுங்கள்!’ போன்ற வாசகங்கள் நிறைந்திருக்கும். இந்த ஆச்சரியக் குறிகளை அகற்றிவிட்டால் கட்டுரை அரை சைசுக்கு வந்துவிடும்.”

  சிவா

 2. Dondu1946

  உங்களது இக்கட்டுரையை படித்ததும் முத்துலிங்கம் அவர்கள் பற்றி நான் எழுதியது இங்கே.

  http://dondu.blogspot.com/2010/07/blog-post_26.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 3. ramji_yahoo

  பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
  இது வரை நான் இவர் வலைத்தளமே சென்றது இல்லை. இப்போது தான் பார்க்கிறேன்.
  முத்துலிங்கம் எழுத்துக்கள் உயிர்ம்மையில் அடிக்கடி படிப்பது உண்டு. ஆனால் இவரின் வலைப்பக்கத்தை தேடுவோம் என்ற எண்ணமே வர வில்லை என் மூளைக்கு.

 4. அ.சிவபாதசுந்தரம்

  பல வருடங்களுக்கு முன்னர், அ. முத்துலிங்கத்தின் கொழும்பு நாட்களில், அவர் எனக்கு ஓரளவு பரிச்சயம்; நானும் அவருக்கு ஓரளவு பரிச்சயம் என அவர் சொல்வாரோ தெரியாது!– இப்படி நான் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது—அதனைப் பின் சொல்கிறேன்.

  அக்கால கட்டம், அமரர் கைலாசபதி அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘தினகரன்’ பத்திரிகையைத் தளமாகக் கொண்டு, கைலாசபதியின் ஆளுமையாலும், அறிவாலும், ஈடுபாட்டாலும் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளின் ஜாம்பவன்களாகத் திகழ்ந்த முருகையன், மஹாகவி, சில்லையூர் செல்வராஜன், காவலுர் ராஜதுரை, எஸ். பொன்னுத்துரை, சிவத்தம்பி, டானியல், டொமினிக் ஜீவா, அ.ந. கந்தசாமி போன்றோர்களின் பங்களிப்புகளினால் ஏற்பட்ட இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி என்பது என் கணிப்பு. கொழும்பு சர்வகாலாசாலை மாணவனாக இருந்த அ. முத்துலிங்கம் ‘தினகரன்’ பத்திரிகை நாடாத்திய சிறு கதைப் போட்டியில் “பக்குவம்” என்ற கதைக்கு முதற் பரிசினைப் பெற்று தரமானதோர் சிறு கதை எழுத்தாளனாக அறிமுகமான காலகட்டமும் அதுதான்.

  –அப்போதுதான் அ. முத்துலிங்கத்துடனான எனது சிறிது காலப் பரிச்சியம்! அவர், எதையுமே ஒரு வித்தியாசமான, தனித்துவமான கோணத்திலேயே பார்ப்பார். அவற்றைப் பற்றி அவர் குறிப்பிடும்போது, ஒரு மெல்லிய நகைச் சுவையும் இழையோடும். அதனை அவரின் சிறுகதைகளிலும் கட்டுரைகளிலும் படித்து அனுபவித்து, சுவைக்க முடிகிறது.

  உதாரணமாக, அவருடனான எனது சொற்ப அனுபவம் வாயிலாக சில– கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். மற்றவர்கள் வழமைபோல் தேநீர் பரிமாறப்படும் பாத்திரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கைப்பிடி வளையத்தைப் பிடித்தவாறு, அதன் அருகாமையிலிருக்கும் விளிம்பின் மேல் உதடுகளைப் பதித்து அருந்தினோம். ஆனால், அவர், பாத்திரத்தின் கைவளயமில்லாத பகுதியை இரு கைகளாலும் ஏந்தி, கைவளையத்தின் மேலேயுள்ள விளிம்பில் தன் உதடுகளைப் பதித்து தேநீரை அருந்தினார். ஏன் என்று கேட்டபோது அவர் சொன்ன பதில், “பாத்திரத்தின் அப் பகுதியில்தான் அநேகரின் வாய் படிந்திருக்க மாட்டாது”!.

  ஒரு நாள் கூறினார்:- (இது அவரது ஏதாவது கதைக்கான கற்பனையோ அல்லது உண்மையாகவே நடப்பதோ தெரியாது) “என்னுடைய சிநேகிதி கெட்டிக்காரி! என்னைப் பார்க்க வரும் பொழுதெல்லாம், தனது தோழிகளில் ஒருவரையும் தன்னுடன் கூட்டி வருவாள். அனால் அத் தோழி யாராக இருந்தாலும் தன்னைவிட மிகவும் அழகு குறைந்தவளாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறாள்”!

  இன்னொரு நாள்- நானும் இன்னொரு நண்பரும் முத்துலிங்கத்துடன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது வேறொருவர் வருகிறார். அவருக்கு எங்களுடன் நின்ற நண்பர் “இவர் எனது நண்பர், பெயர் முத்துலிங்கம்” என அறிமுகம் செய்தபோது, அந்தப் புதியவரின் கையைக் குலுக்கியபடி முத்துலிங்கம் கிண்டலாகச் சொன்னார்: “நான் அவரது நண்பராக இருக்கலாம். ஆனால் அவர் எனது நண்பர் இல்லை”!.

  அந் நிகழ்ச்சியின் நினைவால்தான் நான் ஆரம்பத்திலேயே தற்பாதுகாப்பாக “அவர் எனக்கு ஓரளவு பரிச்சயம்; நானும் அவருக்கு ஓரளவு பரிச்சயம் என அவர் சொல்வாரோ தெரியாது” என்று கூறியிருந்தேன்!

  இப்பொழுது, ஜெயமோகனாலேயே “தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராக அவரை நான் முன்வைத்து வருகிறேன்” என்றும், “ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே” என்றும் எழுதப்படுகிறார். எத்துணை உயரிய அடைவு! — கல்வியிலும், உத்தியோகத்திலும் உயர்வு நிலைகள் அடைந்ததோடு தமிழ் எழுத்துலகத்திலும் வெகுவாகச் சிலாகித்துப் பேசப்படும் நிலையை எய்திய முத்துலிங்கத்துக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

  அ. சிவபாதசுந்தரம்

Comments have been disabled.