மார்க்ஸியம் கடிதம்

அன்புள்ள ஜெ,

இடதுசாரிகள் மற்றும் மாரக்ஸியம் பற்றிய பொதுவான சமூகப்புரிதல்கள் இன்று தமிழகத்தில் மாறி அவையும் திராவிடக்கட்சிகளைப் போன்றவையே என்ற நிலையில் தான் இருக்கின்றன.இடதுசாரிகளின் இடங்களான கேரளத்திலும்,மேற்கு வங்கத்திலுமே இன்று இச்சிந்தனைகள் அழிந்து தேர்தல் அரசியல் ஒன்றை மட்டுமே இலட்சியமாகக் கொண்ட இந்திய அரசியல் கட்சிகளுடன் கம்யூனிஸ்ட்டுகளும் ஒன்றாகிவிட்டனர்.தொழிலாளர்கள் முன்னேற்றம்,போராட்டங்கள் எல்லாம் காலாவதியான சொற்களாகவே பார்க்கப்படுகின்றன.

மார்க்சிய,லெனினிய சிந்தனைகள் உருவாக்கிய தலைவர்கள் அடுத்த கட்டமாக அச்சிந்தனைகளை வளர்க்கவில்லை.அடுத்த நிலையில் சிந்திக்கும் வாரிசுகளை உண்டாக்காமல் மாறாக இவர்களையே மையமாகக்கொண்டு வணங்கும் கும்பலையே வளர்த்தார்கள்.நூலகங்களையும்,வாசிப்புகளையும் முன்வைத்த தொழிற்சங்கங்களின் பண்புகள் முற்றிலும் மாறி வெறும் அரசியல் குழுக்களாவே மாறின.படிப்பறிவு குறைவாக இருந்த காலகட்டத்திலேயே நூலகங்கள் அறிவினை வளர்த்தன,அதன்பிறகு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கல்வியறிவு பரவலாக அதிகரித்த போது புத்தக வாசிப்பும்,சமூக எண்ணங்களும் அதிகரித்திருக்க வேண்டும்.ஆனால் நடந்தது அதற்கு மாறானதே.பொதுவுடமை என்பது ஏமாளித்தனமாக மாறி,சினிமாவும்,மேடைப்பேச்சு அரசியலுமே மக்களின் ஆதரவைப் பெற்றன.

இங்குதான் இடதுசாரி சிந்தனைகள் சறுக்கின.திராவிட இயக்கங்களும் கொள்கைகளை மறந்தன.அதிகாரம் கிடைத்ததும் சர்வாதிகாரிகளாக மாறினர்.தம்மைப் புகழ்பவர்களையே கட்சிகளில் ,அதிகாரத்தில் வைத்தனர்.கொஞ்சங்கொஞ்சமாக பிறர் புகழ்வது சரியே என தம்மையே தெய்வமாக நம்பத்தொடங்கினர்.தனிமனித வழிபாடு முன்னிறுத்தப்பட்டது.நம் மரபினை மறந்து,மறைத்து தமிழ் பண்பாட்டின் மையமாக தம்மையே உருவகித்துக்கொண்டனர்.அதானால் தான் மக்களிடையே சிந்தனை,வளர்ச்சி எல்லாம் மறைந்து,குறுக்கு வழியில் சம்பாதிப்பதும்,ஏமாற்றுவதும் தவறல்ல,அவையே சாமர்த்தியம் என்ற எண்ணங்களும்,குற்ற உணர்வின்றி பொதுசொத்துகளை அபகரிப்பதே இலட்சியவாதம் என்றெல்லாம் பதிந்துவிட்டன.உலகமயமாக்கலும் இந்நிலையை இன்னும் வளமாக்கியது.

இந்தியாவில் இத்தகைய மக்களிடம் வரும் அரசியல் அதிகாரம் மீண்டும் தனிமனித அதிகாரமாக,அல்லது குழுக்களின் அதிகாரமாகவே மாறுகிறது.காரணம் நம் மனங்களில் பதிந்துள்ள பழமையான மன்னராட்சி மனப்பான்மையே என தோன்றுவதுண்டு.யாரையாவது புகழின் உச்சியில் வைத்து இலட்சிய ஆளுமையாக,கதாநாயகனாக வணங்குவது சமூகத்தின் குணமாகவே உள்ளது.தமிழகத்தின் திராவிட அரசியல் இதற்கு மிகச்சரியான உதாரணம்.

படிக்காத ,கீழ்த்தட்டு மக்கள் மட்டுமே சினிமாக்காரர்களப் போற்றி ஆட்சி அதிகாரத்தை வழங்கவில்லை.அவர்களே பரவாயில்லை என எண்ணுமளவிற்கே மேல்தட்டு மக்களும் உள்ளனர்.சமூக ஊடகங்களான பேஸ்புக்,டுவிட்டர்,வாட்ஸ்அப் இவற்றையெல்லாம் பார்த்தால் எப்பொழுதும் சினிமாக்காரர்களுக்காகத்தான் சண்டையே.நன்கு படித்த மென்பொருள் போன்ற துறையிலுள்ள வசதிமிக்க இளைஞர்கள் பேசுவது ரிலீசாகும் படங்களைப் பற்றியும்,அடுத்தவர்களின் அந்தரங்கங்களுமே.ஏனெனில் அவர்கள் அறிந்த பொழுதுபோக்கு ,சிந்தனை எல்லாம் அவ்வளவே.

இன்றைய முதலாளித்துவ வணிக அதிகாரம் மாற வேண்டுமெனில்,மக்களைப் பற்றிச் சிந்திக்கும் புதிய தலைவர்கள் அடுத்த கட்டங்களில் தோன்ற வேண்டும்.தனிமனித வழிபாடுகள் மறைந்து கொள்கைகளை முன்னிறுத்தும் நிலை உருவாக வேண்டும்.

இம்மனநிலையை இலக்கிய உலகிலும் நான் எண்ணிப் பார்ப்பதுண்டு.நான் மிகவும் மதிக்கும் ஜெயகாந்தன் இப்படித்தான் அவர் ரசிகர்களால் பிதாமகனாக மாற்றப்பட்டார்.அவரைச்சுற்றிலும் அவரை தெய்வமாக வணங்கும் கூட்டம் சூழ்ந்து இருந்தனர். பிறர் பேசுவதையோ,எழுதுவதையோ பற்றி முற்றிலும் தவிர்த்துவிட்டார்.அதனாலேயே அவர் போன்று சிந்திப்பவர்களையோ,எழுதுபவர்களையோ அவர் உருவாக்கவில்லை என நான் எண்ணுவதுண்டு.இது என்னுடைய கோணமாக இருக்கலாம்.

இடது சாரிகள்,மார்க்சியம் பற்றிய பதிவுகள் எனக்கு தெளிவினை அளித்தன.

நன்றி

மோனிகா மாறன்.

முந்தைய கட்டுரைகொற்றவை-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒரு கணத்துக்கு அப்பால் [ சிறுகதை]