வரலாறும் இலக்கியமும் – ஒருவிவாதம்

schopenh

அன்புள்ள ஜெமோ,

சமீபத்தில் நான் தங்களது தளத்தில் வெளியான ‘பண்பாட்டாய்வு மற்றும் வரலாற்றாய்வு குறித்து எழுத்தாளர்கள் உரையாடலாமா?’ என்ற அரவிந்தன் கண்ணையனின் கேள்வியும் அதற்கு தாங்கள் அளித்த சிறிய ஆனால் உள்ளடக்கம் கொண்ட மறுமொழியும் படித்தேன். அதில் எழுத்தாளர்கள் எப்படி அறிவியலின் கருவியான, அதன் organon-ஆன principle of sufficient reason (causality எனப்படும் காரண-காரியமும் அதில் ஒன்று) எனும் இரும்புத்தூணின் ஒழுக்கத்திலிருந்து விடுபட்டு அது எதிர்கொள்ளும் கேள்விகளுக்கு விடைகொள்கிறான் என்று விளக்கியிருந்தீர்கள்.

இது முழுக்க முழுக்க ஏற்றுகொள்ளக்கூடிய வாதம். காரணம் அறிவியல் உண்மை என்பது ஏந்த தளத்திலும் உணரப்படுவதே(perception). அதன் வழியை நிறுவுவதும் மறுப்பதுமே அறிவியலாளனின் பணி. அதற்கே அறிவியலின் முறைமை உதவவேண்டும். அனால் நீங்கள் கூறும் இந்த வாதம் எல்லா அறிவியல் தளத்திற்கும் பொருந்தும். அதன்படி பார்த்தால் ஓர் எழுத்தாளனுடைய insights-க்கு இயற்பியலில் என்ன மதிப்போ அதே மதிப்பே வரலாற்றிலும் உள்ளது என பொருளாகிறது.

நீங்கள் Schopenhauer –ஐ குறிப்பிட்டதுடன் அவரது ‘The World as Will and Representation’ புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டியிருந்தீர்கள். Schopenhauer இன் வரலாற்றை குறித்த கூற்றை வைத்து பார்க்கும்போது எழுத்தாளருக்கு வரலாற்று உரையாடலில் மற்ற துறைகளை விட பெரும்பங்கு இருப்பது தெளிவாகிறது. அந்த புத்தகத்தை தற்போது வாசித்துகொண்டிருப்பவன் என்ற முறையில் வரலாறு குறித்தும் அதற்கும் விஞ்ஞான முறைமைக்குமான உறவு குறித்தும் அவர் முன்வைக்கும் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாமென எண்ணினேன்.

மனித சிந்தனையின்(reason) மூன்று முக்கியமான கூறுகளில் ஒன்றாக அறிவியலை(science) Schopenhauer குறிப்பிடுகிறார் மற்ற இரண்டு பேச்சும்(speech) சுயமுடிவுடன் கூடிய செய்கையும்(deliberate action) என வகுக்கிறார்.

இதில் அறிவியலின் இயங்கு முறையை அவர் இவ்வாறு விளக்குகிறார். மனித மனம் தான் உணர்ந்துகொள்ளும் (knowledge of perception) அனைத்தையும் தன் சிந்தையின் (reason) உதவியுடன் உள்ளறிவாக(abstract Knowledge) மாற்றி வகுத்துக்கொள்கிறது. இவ்வாறு வகுத்துக்கொண்ட ஞானம் ஒவ்வோன்றையும் அதை காட்டிலும் பரந்த கொள்கை வட்டங்களாக (concept spheres) தொகுத்துக்கொள்கிறது. இவ்வாறு தொகுப்பது இரண்டுவகையாக நிகழலாம் ஒன்றன் கீழ் ஒன்றாக தொகுப்பது (sub ordination), இணை இணையாக தொகுப்பது (co-ordination).

1 (2)

எவ்வளவுக்கு எவ்வளவு பொதுவாக தொகுத்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு அறிவியல் வலிமையடைகிறது. இதனால் அறிவியல் அதன் மேல்தளத்தில் sub ordination எனும் ஒன்றன் கீழ் அல்லது ஒன்றனுள் ஒன்றாக தொகுப்பதிலேயே முழுமை அடைகிறது. மேல்தளத்தில் co-ordination எனும் இணை தொகுப்பு என்பது அதன் வலிமையை குறைக்கிறது. வரலாறு என்பது அனேகமாக முழுக்க முழுக்க இணை தொகுப்புகளால் ஆன ஒரு அறிவுக்களம். ஆனால் ஒன்றனுள் ஓன்றை தொகுப்பது நிகழ்ந்தால் தான் அறிவியலின் தர்க்க முறைமையான எந்த ஒரு syllogism-மும் இயங்க முடியும்.

Syllogism என்பது இரண்டு இணை கோட்பாட்டிலிருந்து மூன்றாமதை அடையும் முறை உதா: எல்லா பாலூட்டிகளும் விலங்கினங்களே, சில பாலூட்டிகள் நாய்கள், எனவே எல்லா நாய்களும் விலங்குகளே. இதில் ’எல்லா பாலூட்டிகளும் விலங்கினங்களே’ என்பது உள்ளடக்கிய கோட்பாடு (universal statement) ‘சில பாலூட்டிகள் நாய்கள்’ என்பது தனித்துவக் கோட்பாடு (particular statement), syllogism மூலம் முடிவை அடைய குறைந்தது ஒரு universal அல்லது major statement தேவை. உதாரணமாக சில பாலூட்டிகள் விலங்குகள், சில பாலூட்டிகள் நாய்கள், எனவே எல்லா நாய்களும் விலங்குகளே. இதில் முதல் இரண்டுமே particular அல்லது minor statement என்பதால் மூன்றாவது கோட்பாடு தர்க்கபூர்வமான முடிவாக ஏற்றுகொள்ளப்பட முடியாது. universal statement-ஐ ஒன்றனுள் ஒன்றாக தொகுப்பதன் மூலமே அடைய முடியும். அதாவது பாலூட்டிகள் எனும் கொள்கை வட்டம்(concept sphere) முழுவதுமாக விலங்குகள் எனும் கொள்கை வட்டத்துக்குள் அடங்கியிருப்பதன் மூலமே ‘எல்லா பாலூட்டிகளும் விலங்கினங்களே’ எனும் கோட்பாடு சாத்தியாமாகிறது. ஒரு உதாரண அறிவியல் கொள்கை வட்ட வரை சித்திரம் கீழ்கண்டவாறு அமைந்திருக்கும்.

2

மேல் கண்ட வரைபடத்தில் முழுவதுமாக உள்ளடங்கிய வட்டங்கள் மட்டுமல்லாமல் படிப்படியாகப் பெருகிச்செல்லும் செறிவையும் காணலாம். அனால் வரலாறோ universal statements அற்றது, முழுக்க முழுக்க particular statements ஆல் ஆனது, அதாவது விதிவிலக்குகள் மிகுந்த கோட்பாட்டுக்களை கொண்டு இயங்குவது. மேலும் எந்த ஒரு செயலோ நிகழ்வோ கொள்கையோ பல்வேறு இணைக் கொள்கைகளின் கூட்டுச் செயல்பாட்டின் மூலமாகவே புரிந்து கொள்ளமுடியும். ஒரு சம்பவம் பல்வேறு சம்பவங்களின் கூட்டு காரணத்தால் நடைபெற்று அது பல சம்பவங்களுடன் இணைந்து மற்றோரு சம்பவத்தை நிகழ்த்துகிறது. எனவே வரலாற்றைப் பொருத்தவரை இதனால் இது நிகழ்ந்தது என எந்த சந்தர்பத்திலும் அறுதியிட்டு கூற முடிவதில்லை, நம்மால் அடையமுடியும் கோட்பாடெல்லாம் இதானாலும் இது நிகழ்கிறது என்பதே.

அப்படியென்றால் வரலாறு எப்படி ஒரு அறிவுத்தளமாக இயங்க முடியும். எல்லா நிகழ்வுகளையும் குணாதிசயங்களையும் இணைக்கும் ஒன்று, ஒரு பெரிய கொள்கைவட்டம் இல்லையென்றால், தகவல் குவியல்களாலான abstract knowledge தான் எஞ்சும். அது வரலாறு எனும் வடிவத்தை கண்டடையமுடியாது. எல்லா நிகழ்வுக்கு பின்னாலும் உறுதியாகக் கூறமுடிகிற ஒரு பொது அம்சம் அவை எல்லாவற்றையும் உள்ளடக்கி, அவற்றுக்கு வரலாறு எனும் வடிவத்தை அளிக்கிறது, அது அடிப்படை மனித இயல்புகள். நிலைபெற்றிருத்தல், வளர்தல், பெருகுதல், கடைசியாக அழித்தொழித்தல் எனலாம். இந்த அம்சம் வெளிப்படாத எந்த ஒரு நிகழ்வும் இருக்கமுடியாது என்பதாலையே இது முழுமையான sub ordination-க்கு வழிவகுக்குகிறது.

ஆனால் அறிவுதளம் இயங்குவதற்கு உச்ச தளத்தில் குறைந்தது இரண்டு concept spheres தேவை என்பது அதன் இயக்க விதிமுறையாகும். அதாவது எல்லா இயற்பியல் நிகழ்வுகளும் நான்கு அடிப்படை விசைகளால் உள்ளடக்கப்படுவது போல வரலாறு தன் உச்ச தளத்தை பகிர்ந்துகொள்ளும் பிறிதொரு கொள்கை வட்டம் இருந்தாக வேண்டும். எப்படி ஈர்ப்பு விசை மட்டும் அடிப்படை விசையாக இருப்பின் இயற்பியல் நிகழ்வுகள் நிகழாது போகுமோ அதேபோல அடிப்படை மனித இயல்புகள் மட்டும் வரலாற்றை நிகழ்த்திவிட முடியாது. அந்த இன்னொரு கொள்கை வட்டம் மிகவும் வெளிப்படையே, அது புவியமைப்பு, தாவிரங்கள், விலங்குகள் எல்லாம் அடங்கிய இயற்கை எனும் எதிர்விசை (antithesis). இவ்வாறுதான் அறிவுத்தளமாக இயங்குவதற்கான அத்தியாவசிய தேவைகளை வரலாறு கண்டடைகிறது.

இதுவும் இயற்பியல், வேதியியல் போன்ற துறைகள் கண்டடைந்த exclusive concept spheres அல்ல, ஆதாவது ஒன்றில் அடங்காதவற்றின் தொகையல்ல ,மாறாக இங்கு நாம் அடைவதும் இணை கொள்கைகளே (coordination). அதாவது எல்லா நிகழ்வுகளும் ’அடிப்படை மனித ஆற்றல் – இயற்கை’ எனும் இரண்டு எதிரெதிர் விசைகளுக்கும் உட்பட்டே இயங்குவதால் அடிப்படையில் இவ்விரண்டு கொள்கை வட்டங்களுக்குமான பரப்பு ஒன்றே. இவை இரண்டின் தாக்கத்தின் அளவும் அதன் வேறுபாட்டையும் கொண்டே வரலாற்று நிகழ்வுகளை புரிந்துகொள்ளமுடிகிறது. இது மேலும் வரலாறை வரையறைக்கு உட்பட்டதாக்குகிறது. மேலும் தத்துவத் தேடலின் துவக்க படிநிலைகளிலேயே கண்டடையப்பட்ட இந்த இரு எதிரெதிர் விசையை தவிர வரலாற்றால் எந்த ஒரு உறுதியான sub ordination ஐயும் வரலாற்று நிகழ்வுகளுக்கு அளிக்க முடியவில்லை. விளைவாக நமக்கு கிடைத்திருப்பது கீழ்கண்டது போன்றதொரு கொள்கை வட்ட வரைபடம்.

history

பிளேட்டோ முதலான தத்துவவாதிகள் வகுத்துறைக்கும் அறிவியலுக்கான கட்டமைப்பு என்பது படிப்படியாக பெருகி செல்லும் செறிவும் தெளிவாக வகுக்கப்பட்ட வடிவ ஒருங்கிணைப்பும் கொண்டது. வரலாறு இந்த மேற்கூறிய அமைப்பை ஒருபோதும் அடைவதில்லை. அனால் முன்னர் கூறிய அந்த பொது எதிரெதிர் விசைகளால் அதன் உள்ளடக்கக் கொள்கைகளை விளக்கவும் தொகுத்து கொள்ளவும் முடிகிறது. இதனால் வரலாறை அறிவியலாக எற்றுகொள்ளப்பட முடியாது என்றாலும் ஒரு அறிவுத்தளமாக (Rational Knowledge) அது தன் இடத்தை நிறுவிக்கொள்கிறது.

எனவேதான் ஒரு அறிவுத்தளமாக அதன் வளர்ச்சி என்பது அறிவியலுக்கான பாதையில் பயணிப்பதில்லை. இது ஒரு வகையில் அறிவியலின் என்றென்றைக்குமான மைய முரண்பாட்டிலிருந்து அதை விடுவிக்கிறது. அது தன்னியல்புகளுக்கும் (particular) பொதுமைக்குமான (universal) முரண்பாடு உதா: கூழாங்கற்களை எடுத்து கொள்ளலாம், இந்த கொள்கையின் ஒரு எல்லையில் ஒட்டுமொத்த கூழாங்கற்கள் என்னும் பொது கொள்கையும் மறு எல்லையில் ஒவ்வொரு தனிப்பட்ட கூழாங்கற்களும் இருப்பதாக கொள்ளலாம். ஒரு கோட்பாடு என்பது உயர்தளத்தில் இயங்கும் போது அதன் அறிவியல் மதிப்பு அதிகமாகிறது அதே சமயம் அதன் கூர்மையை (certainty) இழக்கிறது, ‘எல்லா கூழாங்கற்களும் உறுதியாணவை’ என்னும் கோட்பாடு ‘இந்த கூழாங்கல் உறுதியானது’ என்பதை விட அறிவியல் மதிப்பு மிகுந்தது ஆனால் இரண்டாவதின் கூர்மையை அது அடையமுடிவதில்லை. எனவே அறிவியல் இவை இரண்டுக்குமான சமநிலையை அடைவதே தன் இயல்பிலேயே அமைந்த முரண்பாடாக கொண்டிருக்கிறது, ‘சிவப்பு கூழாங்கற்கள் உறுதியானவை’ போன்ற இடைப்பட்ட கோட்பாடுகளுக்கு வந்துசேர்கிறது. எனவே அறிவியல் இந்த சமநிலையை வழிநடத்தும் நிர்ணயத்திறனை (Faculty of Judgement) தனது முக்கிய அம்சமாக கொண்டு இயங்குகிறது.

வரலாற்றின் வளர்ச்சி என்பது தன்னியல்புகளையும் (particulars) முழுமையான கொள்கை இணைப்புகள் அல்லது தொடர்புறுத்துதலையும் (associations) நோக்கியே அமைகிறது. சற்று சிந்தித்து பார்த்தோமேயானால் இதற்கும் கலைகளுக்கும் குறிப்பாக இலக்கியத்திற்கும் இருக்கும் நெருக்கமான உறவு புலப்படும். வரலாற்றை போலவே இலக்கியமும் பொதுமையை காட்டிலும் தனித்துவங்களை நோக்கிய தேடல் கொண்டது, பல்வேறு தொடர்புறுத்துதலின் மூலம் செறிவான முழுமையை நோக்கி பயணிப்பது. எனவே உலகேங்கும் ஆரம்பகாலங்களில் வரலாறும் இலக்கியமும் பின்னிப் பிணைந்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கென ஏதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் வரலாறு இலக்கியத்திலேயே தனது சிறந்த வெளிபாட்டை அடைகிறது. வரலாறு இயல்பிலேயே நிர்ணயத்திறனை அதிகம் சாராமல் அல்லது முற்றிலும் தவிர்த்து கற்பனையையும் தகவலறிவையும் சார்ந்த ஒரு அறிவுத்தளமாக இயங்குகிறது.

கிட்டதட்ட 18 ஆம் நூற்றாண்டில்தான் வரலாறு என்பது இன்று நாம் பரவலாக காணும் கல்வித்துறையின் வடிவத்தை அடைகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற அறிவியல் துறைகள் தங்களது அறிவு ஒழுக்கத்தையும் கல்வித்துறையின் வடிவத்தையும் அடைந்து பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இது நிகழ்கிறது. இதற்கு காரணம் இவ்வறிவு துறைகளின் கொள்கைகளுக்கு இருந்த உபயோக மதிப்பு, வரலாற்று கொள்கைகள் அவற்றின் கூர்மையற்ற இயல்பாலேயே உபயோக மதிப்பை முற்றிலுமாக இழக்கிறது. அனால் இந்த வரையரை வரலாற்றை உண்மைக்கான தேடலாக இல்லாமல் ஆக்கிவிடுவதில்லை, வரலாற்றால் உபயோக மதிப்பு கொண்ட கொள்கை உண்மைகளையே அடையமுடிவதில்லை, மாறாக வரலாற்றின் குறிக்கோள் கடந்தகாலத்தை அதன் செறிவான தன்னியல்பு மிக்க உண்மைகள் (Particular Truths) அனைத்தையும் இழக்காமல் மீட்டுருவாக்கம் செய்வதாகவே இருக்க முடியும். வரலாறு எந்த ஒரு கட்டத்திலும் புனையப்படுவதே அன்றி நிறுவப்படுவதல்ல. வரலாறு மீது நமக்குள்ள ஆர்வமும் அதில் நாம் கண்டடைவதும் இலக்கிய நுகர்வின் மூலம் நாம் அடைவதற்கும் மிகவும் நெருக்கமான தொடர்புள்ளது.

அப்படியிருக்க வரலாற்றுக்கு எப்படி நாம் தற்போது காணும் இந்தக் கொள்கை உருவாக்க நோக்கமும் கல்வித்துறைக்கான கட்டுப்பாடு மிக்க வடிவமைப்பும் அமைந்தது என் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலக நாகரீகங்களை கண்டடைந்த ஐரோப்பியர்கள், அதன் ஒட்டுமொத்த சித்திரத்தை அடைவதற்கு வரலாற்றுக் கொள்கைகளை பயன்படுத்தியாகவேண்டிய அரசியல் தேவை இருந்ததை வைத்து அதை புரிந்துகொள்ளமுடியும். வரலாறு போன்றதொரு அறிவுத்துறை அறிவியலின் பாதையில் பயனிக்கும்போது அதன் இயல்பான, தனித்துவங்கள் மீதான கவனத்தை இழக்கிறது. விளைவாகவே மாயன் நாகரீகத்தை ஆராய்ந்த அதே அராய்ச்சி முறையை சிந்து சமவெளி நாகரீகத்தை ஆராய பயன்படுத்துவது போன்ற அபத்தங்கள். இவ்வாறு வரலாற்றில் தர்க்கபடிநிலைகளை திணிப்பதன் விளைவாக நாம் அடைவது ஒருவகை historical sophism. அதாவது தேவைக்கேற்ப தர்க்கத்தின் பாதையில் முடிவுகளை நோக்கி செல்வது.

sophism

மேற்கண்ட படத்தில் மற்ற இணைகொள்கைகளை நிராகரித்துவிட்டு கணிக்கப்பட்ட தேர்வுகள் மூலம் ஒரு உண்மையை அடைவதை காணலாம். இதுவே நவீன வரலாறு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிழை.

இதிலிருந்து விடுபட தேவையாவது அபாரமான இணைப்புகள் மற்றும் நுட்பங்களுக்கு செல்லும் படைப்பூக்க மனதின் என்றென்றைக்குமான அறிவுதேடல். அது தேவைகளுக்கான கொள்கை தேடலல்ல ஒத்துமொத்த மானுடத்தை புரிந்து கொள்வதற்கான தரிசனத்தேடல்.

கஸ்தூரிரங்கன்

பிகு: இப்படிப்பட்ட விவாதங்களுக்கு தமிழில் இடமிருக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது, இந்த விவாதத்தில் அரவிந்தன் கண்ணையன் அவர்கள் மட்டுமல்லாமல் பிறரது ஈடுபாட்டையும் எதிர்பார்க்கிறேன்

பேசாத பேச்செல்லாம்

அறிவியலின் மொழியும் கலையின் மொழியும்

முந்தைய கட்டுரைசென்னையில் இன்று உரையாற்றுகிறேன்
அடுத்த கட்டுரைபெண்களின் நகரம்