கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன் சார்,

ஷாஜியின் இசையின் தனிமை நூல் பற்றிய கருத்தரங்கில் உங்களைச் சந்தித்தேன்.இன்று தி இந்துவில் வந்த கட்டுரை ஆத்மார்த்தமாக இருந்தது. உங்களின் கட்டுரைகள் சிலவற்றை படித்திருக்கிறேன். உங்களின் சிறுகதைகள் மற்றும் நாவல்களை புரிந்து கொள்ள இன்னும் நிறைய வாசிக்க வேண்டும். கட்டுரைகளே அதிகம் படிப்பதால் சிறுகதைகள் , நாவல்கள் மீது இன்னும் ஈர்ப்பு வரவில்லை.

நண்பன் பெலிக்ஸ் படிக்கச்சொல்லிக் கொடுத்ததால் ஆதவனின் இரண்டு நாவல்கள், பா.சிங்காரத்தின் இரண்டு நாவல்களில் இரண்டாவது படித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நாவல்கள் பிடித்திருக்கின்றன. ஜெயமோகனின் எழுத்து என்றாலே புரிந்து கொள்ள சிக்கலாக இருக்கும் என்ற மனநிலையை முதலில் மாற்றவேண்டும். சமீக காலங்களில் அ.முத்துலிங்கம் , ஆர்.அபிலாஷ் ஆகியோரின் எழுத்துகள் மிகவும் பிடித்திருக்கின்றன.

இன்னமும் புனைவுகள் மீது ஆர்வம்வரவில்லை.எந்த விசயத்திலும் எல்லோரையும் போல கருத்து சொல்லாமல் உங்கள் எண்ணத்தைச் சொல்லிக் கலகத்தை உண்டு பண்ணுகிறீர்கள். கலைஞர்கள் கலகம்செய்யத்தான் செய்வார்கள் சாப்ளின்,எம்.ஆர்.ராதா போல.

நன்றி சார்,
அன்புடன்,
ஜெ.செல்வராஜ்,

www.jselvaraj.blogspot.in

அன்புள்ள செல்வராஜ்

புரிந்துகொள்ள சிக்கலான எழுத்தெல்லாம் இல்லை. புரிந்துகொள்ள சற்று மானசீகமான தொடர்பு தேவையாகக்கூடிய கதைகள் அவ்வளவுதான். முதலில் என்னுடைய மொழியையும் நான் கதைகளுக்குள் அமைக்கும் மௌனங்களையும் கூர்ந்து கவனிக்கப்பழகினாலே போதும்.

ஜெ

அன்புள்ள ஜெமோ

உங்கள் புனைவுலகுக்குள் நான் இன்னமும் முழுசாக வரவில்லை. நன் உங்கள் அறம் தொகுப்பையும் சமீபத்தில் கன்யாகுமரி நாவலையும் மட்டும்தான் வாசித்தேன். ஆரம்பத்திலேயே இது வேறுமாதிரியான எழுத்து என்று தெரிந்துவிட்டது. அதிலிருக்கும் அந்த நெகிழ்ச்சியும் தீவிரமும் மனசைக் கவர்ந்தன. ஆனால் அதைவிட முக்கியமானது நுட்பம்

மயில்கழுத்து கதையில் அந்த நடனமணியைப் பார்க்கும்போது உருவாகும் மனநிலையும் கண்களின் சந்திப்புகளும் எல்லாம் மிகக்கூர்மையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. மயில்கழுத்து என்பதே நுட்பமான தலைப்பு. அசையும்போது நிறம் மாறக்கூடியது அது.

கன்யாகுமரியில் நடுவயதுக் கதாநயகன் கீழே பிரவீணா இருப்பதனால் இளைஞனைமாதிரி துள்ளித்துள்ளி படிகளில் ஏறுவதன் உளவியலை வாசித்தபோதும் இதேதான் தோன்றியது. இந்த நுட்பங்களைத்தான் வாசிக்கவேண்டும் என்று. மேலோட்டமான கதைகளையாக வாசித்து நேரத்தை வீணாக்கமுடியாது என்று நினைத்தேன்.

இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்

நன்றி
திவாகர் எம்

அன்புள்ள திவாகர்

நன்றி

படைப்பில் எப்போதுமே ஊகித்து எடுக்கவேண்டிய ஒர் அம்சம் உண்டு. உண்மையான படைப்பு என்பது அதுதான்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 91
அடுத்த கட்டுரைசென்னையில் இன்று உரையாற்றுகிறேன்