அன்புள்ள ஜெயமோகன்,
கொற்றவை முடித்தகையொடு இதை எழுதுகிறேன். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எண்ணற்ற சொற்கள் அலைமோதும் ஒரு மனநிலை. இது மகிழ்ச்சியா துக்கமா எனப் புரியவில்லை. ஆனால் ஒரு நிறைவு இருக்கிறது.
என்தோள்மீது உறங்கும் என் மகள்களை இன்னும் ஆசையோடு அணைத்துக்கொள்ள விழைகிறேன்.
அணைப்பில் மகிழும்போதே ஊரிலிருக்கும் என் அம்மாவைப் பற்றிய ஒரு ஏக்கம்… கோர்வையாக எழுத முடியவில்லை. மன்னிக்கவும்.
நன்றி.
என்றென்றும் அன்புடன்,
மூர்த்தி ஜி
பெங்களூரூ
***
ஜெ
கொற்றவையை பலமுறை வாசிக்க முயற்சி செய்து கைவிட்டு பிறகு மெதுவாக முயற்சி செய்து இப்போதுதான் வாசித்துமுடித்தேன். அந்த பாஷைக்குள்ளே போவதற்குக் கொஞ்சம் காலமாகிறது. அந்த முதல் பகுதியை தாண்டுவது ஒரு நீளமான கவிதையை வாசிப்பது போல. அதைக்கடந்த பின்னர் கொற்றவை மிகச்சிறப்பாக தொடர்ச்சி அடைந்து விடுகிறது . மொழியும் பழகிவிடுகிறது
ஆனால் ஒவ்வொரு இடத்தையும் கவிதையாகவே வாசிக்கும்போது மட்டும்தான் நம்மால் இதைமேலதிகமாக வாசிக்கமுடியும். உதாரணமாக கோவலன் காற்றைப்பற்றி எண்ணும் இடம். அது காற்றா காமமா என்ற மயக்கம் இருந்தால்தான் அதை நுணுக்கமாக உணரமுடியும்
அற்புதமான மொழியனுபவம். அதை அடைவதற்குக் கொஞ்சம் முயற்சி செய்யவேண்டியிருக்கிறது. ஒரு பெரிய கனவிலே பன்னிரண்டுநாள் இருந்து மீண்டும்வந்ததுபோல இருக்கிறது
அன்புச்செல்வம்
***