அன்புள்ள ஜெயமோகன்
நலமா? தங்களுக்குச் சற்றுத் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சமீபத்தில் தங்களது ‘அனல்காற்று ‘ நாவல் படித்தேன். அனல் காற்று’ நான் சமீபத்தில் படித்தவற்றில் மிகச்சிறந்த நாவல். உக்கிரமான கொந்தளிப்பான உணர்வுகளின் வெளிப்பாடு. தாஸ்தாய்வஸ்கியின் எழுத்தைப் போல் மனித மனத்தின் இருண்ட அடியாழத்தை ஊடுருவுவது.
காமம் ஒரு கூர்மையான கத்தி போல. இன்னும் சொல்லப் போனால் கைப்பிடி இல்லாத கத்தி. எப்படிக் கையாள்வது என்று பலருக்குத் தெரியாது. ஆண் பெண் உறவின் சிக்கல்களை மிகவும் உணர்ச்சிகரமான ஒரு சித்திரமாக அளித்திருக்கிறீர்கள்.
எனக்கு இரவு நாவலும் அனல்காற்றும் ஒரே விஷயத்தின் வேறு வேறு வெளிப்பாடுகள் போன்றே தோன்றுகிறது. இரவு தத்துவார்த்தமாகக் கவித்துவமாக அக இருளைக் காட்டுகிறது என்றால் அனல் காற்று உணர்ச்சிக் குவியலான கதையாக உறவுகளின் சிக்கல்களைக் காட்டுகிறது. அதிலும் அனல்காற்றில் வரும் சந்திரா இரவு நாவலில் வரும் கமலாவின் நீட்சியாகவே எனக்குத் தோன்றியது. குறிப்பாகப் பெண்களின் நுட்பமான புலனுணர்வு, யூகிக்கும் திறன் போன்றவைகளைப் பற்றிய உங்களின் கூர்மையான கணிப்பு வெளிப்படுகிறது.
இந்தக் கதை பாலு மகேந்திரா அவர்களால் திரைப்படமாக உருவாக இருந்தது. அது நடக்காமல் போனது திரையுலகத்திற்கு ஒரு இழப்பு. காதல் ,காமம் ,சமூக வரையறை மீறிய உறவுகளை அதற்குரிய நேர்மையோடும் அழகியல் பார்வையோடும் படமாக்குவது அவரது தனித்தன்மையல்லவா?.
சமீபத்தில் என்னிடம் இலக்கிய ஆர்வலர் ஒருவர் “ஜெயகாந்தன் இறந்து விட்டாரே! தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு!” என்றார். “ஆம்” என்று நான் ஆமோதித்ததும் “இனி யார் மகாபாரதத்தை எழுதுவார்கள்?” என்று ஆத்மார்த்தமாகக் கவலைப் பட்டார். இது போன்ற பேச்சுக்கள் வந்தால் ஆயுள் கெட்டி என்று சொல்வார்கள்.
மகாபாரதப் புயலுக்கு நடுநடுவே அனல்காற்று போன்ற படைப்புக்களையும் அளியுங்கள். இன்னுமொரு நூற்றாண்டிரும்!
மிக்க அன்புடன்
டாக்டர் ஜி. ராமானுஜம்
திருநெல்வேலி
அன்புள்ள ராமானுஜம்
நலம்தானே?
அனல்காற்றை சினிமாவாக ஆக்க பலமுறை பலர் பேசியிருக்கிறார்கள். ஆக்கமுடியாது என உடனே தெரிந்துவிடும். ஏனென்றால் தமிழ்சினிமாவுக்குத்தேவை கலவையான உணர்ச்சிகள். நகைச்சுவை பரபரப்பு உணர்ச்சிகள். அத்துடன் அவை முன்னரே தெரிந்தவையாகவும் இருக்கவேண்டும். கொஞ்சம் சிக்கலான உணர்ச்சிகள் என்றால்கூட புரியவில்லை , மொக்கை என விமர்சனம் வரத்தொடங்கிவிடும். அதை சினிமாக்காரர்கள் நன்கறிவார்கள்.
ஜெ