அறிவியலின் மொழியும் கலையின் மொழியும்

images
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் பதிவினைப் படித்தேன். மனம் விட்டு சிரித்தேன். நன்றி. எப்போதும் போல் இலக்கணப் பிழைகளுக்கு மன்னிப்புக் கோரி ஒருச் சின்னக் கடிதம். பெரும் விவாதங்களுக்குள் செல்ல விருப்பமுமில்லை உங்கள் நேரத்தை வீணடிக்கவும் விரும்பவில்லை.

முதலாவதாக நான் ஃபேஸ்புக்கில் எழுதியதை “ஆற்றப்போகும் உரையைக்கடுமையாகக் கண்டித்து, மறுத்து எழுதியிருப்பதாக”. நான் அப்படி ஏதும் கடுமையாகச் சொல்லிவிட்டதாக நினைக்கவில்லை. புண்படுத்தும் நோக்கமுமில்லை. இன்னொருவரின் நிலைத் தகவலுக்கு நான் இட்ட மறுமொழி தான் அது.

இரண்டாவது, நான் ஏன் அப்படிச் சொன்னேன் என்பதற்கான பின்புலம் பற்றி ஒரு சிறுக் குறிப்பு. என்னுடைய மேற்கத்திய மோகம் குறித்து நீங்கள் உட்படப் பலரும் சொல்லியாயிற்று ஆயினும் அங்கிருந்தே ஆரம்பிக்கிறேன். நையால் ஃபெர்குஸன் (Niall Ferguson) – அவரின் கருத்தியல்கள் எனக்கு ஒப்புமையில்லாதவை- எனும் வரலாற்றறிஞர் ஹார்வர்டில் வரலாற்றாசிரயராக இருப்பதோடு அப்பல்கலையில் MBA பிரிவு ஆசிரியராகவும் இருக்கிறார். ஒரு வரலாற்றாசிரியருக்கு மேலாண்மைப் படிப்பு சார்ந்தத் துறையில் என்ன வேலை? மேற்கத்திய செவ்வியல் இசையியலாளர் Igor Stravinsky ஹார்வர்டின் Charles Eliot Norton Lectures on Poetics எனும் உரைத் தொடரில் (Lecture series) பேருரையாற்றியுள்ளார். Stravinsky-கும் Poetics (not poetry) என்பதற்கும் என்னத் தொடர்பு? Mario Vargas Llosa பிரின்ஸ்டன் பல்கலைப் பேராசிரியராக கலாசாரம், பொருளாதாரம் (இப்போது அவர் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிக்கும் மிகச் சில எழுத்தாளர்களுள் ஒருவர்) ஆகியவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார். இயர்பியலில் நோபல் பரிசு வென்ற சந்திரசேகர் சுப்பிரமணியம் அழகியல் குறித்து ஒருப் புத்தகமே எழுதியுள்ளார். ஒருத் துறையில் ஆழ்ந்த ஞானமுள்ளவர்கள், ஒருத் துறையில் தன் வாழ்நாளெல்லாம் ஆராய்ச்சி செய்பவர்கள், வேறொருத் துறையில் அவதானிப்புகளைக் கொள்வதென்பது காலம் தோறும் மேற்கத்தியச் சூழலில் நடப்பது தான். அப்படி ஒருத் துறையின் வல்லுநர் இன்னொருத்துறையைப் பற்றி அவதானிப்புகளை முன்வைக்கும் போது புதியத் திறப்புகள் அந்த வேறொருத் துறையை முதன்மைப் படிப்பாகப் படிப்பவருக்குக் கிடைக்கும். இல்லையேல் தன் துறைச் சார்ந்த பேராசிரியர்கள் எழுதியதையே மொளடீகமாகக் கற்க வேண்டியது தான். ஆனால் இதில் மிகக் கவனமாக நடைபெறும் இன்னொன்றுண்டு. அதுப் பலக் கூறுகளையும் கொண்டது.

Stravinsky, Llosa, Chandrasekhar, Ferguson போன்றோரின் அவதானிப்புகள், அவர்கள் துறையில்லாத அவதானிப்புகள், முதலில் அதிகம் பேசப்படாதவையே. அவைக் காலப் போக்கில் முக்கியத்துவம் இழப்பதோடல்லாமல் அவற்றை யாரும் பொருட்படுத்துவதுக் கூடக் கிடையாது. அந்த ஆளுமைகளைப் பற்றி ஆராயும் போது வேண்டுமானால் அவர் இப்படி பரந்துப் பட்டுச் சிந்தித்தார் எனும் சித்திரத்தைக் கொடுப்பதற்காக எடுத்துக் கொள்வார்கள்.

நீங்கள் சலித்துக் கொள்ளலாம் நான் பேசவிருப்பது என் துறைச் சார்ந்தே. “பண்பாட்டைப்பற்றி எழுத்தாளன் பேசக்கூடாது என்று இன்றுவரை எவரும் சொல்லவில்லை”. மிகவும் சரி. பண்பாடென்ன எதுக் குறித்தும் எழுத்தாளனுக்குப் பேச உரிமைக் கட்டாயமிருக்கிறது. இன்னும் சொல்வதென்றால் பண்பாடுக் குறித்து மற்ற எல்லோரையும் போல், அல்லது அவர்களைவிட,பேச எழுத்தாளனுக்கும் உரிமையுள்ளது. தகுதியுமுள்ளது. பிரச்சினை அதுவல்ல.

உங்களுடைய ”தமிழ் பாரம்பரியம் பற்றி உரையாற்றுகிறேன்” பதிவில் குறிப்பிட்டது: “குமரி மாவட்டம் பழைய சேரநாடு. இங்கு தொன்மையான தமிழ் நாகரிகத்தின் பண்பாட்டு நீட்சி இப்போதும் ஓரளவு இருக்கிறது. இவற்றை விழாக்களில். ஆலயச்சடங்குகளில் நாம் காணலாம். பிற தமிழ்ப் பகுதிகளில் வெவ்வேறு பிற்கால ஆட்சியாளர்களாலும் தொடர்குடியேற்றங்களாலும் நிகழ்ந்த பண்பாட்டுமாற்றம் குமரிப் பகுதியில் நிகழவில்லை. ஆகவே இது ஆய்வாளார்களுக்குரிய ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது என்று கூறலாம். இந்தப் பண்பாட்டு எச்சங்கள் குறித்த ஓர் அறிமுகப் பார்வை”.

இப்போது நீங்கள் கூறியது: “பண்பாட்டாய்வு என்பது எப்போதுமே இலக்கியவாதியின் களம். குறிப்பாக ஓர் எழுத்தாளன் எழுதும் குறிப்பிட்ட நிலப்பகுதியின் பண்பாட்டுக்கு அவன் ஒரு அதிகாரபூர்வமான குரல்தான். உலகம் முழுக்க எழுத்தாளர்கள் பண்பாட்டைப்பற்றிப் பேசுபவர்களாகவும் விமர்சிப்பவர்களாகவும்தான் இருந்துள்ளனர்.”

மன்னிக்கவும் அது என் வரையில் ஒப்புக் கொள்ளக் கூடியதல்ல. “உலகம் முழுக்க எழுத்தாளர்கள் பண்பாட்டைப்பற்றிப் பேசுபவர்களாகவும் விமர்சிப்பவர்களாகவும்தான் இருந்துள்ளனர்”. இருக்கலாம். அப்படியே வைத்துக் கொண்டாலும் “பண்பாட்டைப் பேசுவதென்பது” வேறு பண்பாட்டை ஆராய்வதென்பது வேறு. “பண்பாட்டாய்வு என்பது எப்போதுமே இலக்கியவாதியின் களம்”. இல்லை. அங்கு இலக்கியாவாதிகள் மிகக் கறாரான எல்லக்குட்பட்டே செயல்பட முடியும். உங்கள் பதிவில் (‘தமிழ் பாரம்பரியம் பற்றி உரையாற்றுகிறேன்’) நீங்கள் குறிப்பிட்டவை இலக்கியவாதியின் எல்லக்கப்பாற்பட்டவையே. அல்லது Grey area என்று சொல்லத் தக்கது. இலக்கிய உணர்வுக் கொண்ட வரலாற்றாய்வாளன் அல்லது இலக்கியத்தையும் தன் கருத்தில் கொண்ட வரலாற்றாய்வாளன் அல்லது anthropologist செய்ய வேண்டிய ஆய்வு அது. மத்திய (Mid West) அமெரிக்காப் பற்றி ஆராயும் மானவன் வில்லியம் ஃபாக்னரைப் (William Faulkner) படிக்கலாம். படிக்க வேண்டும். ஆனால் நானறிந்தவரை ஃபாக்னர் தன்னை அந்தப் பகுதியின் “அதிகாரபூர்வமான குரல்” எனக் கருதியதாக நினைவில் இல்லை.

சமீபத்தில் ராமானுஜரை யார் எழுதலாம் என்ற விவாதம் வந்த போது நான் சொன்ன கருத்தையே மேற்கோள் காட்டி ‘ஒருவர் எழுதுவதற்கு முன்பே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமா’ எனக் கேட்டதை உங்கள் நிகழ்வை நிலைத்தகவலாகப் பகிர்ந்தவர் சுட்டிக் காட்டினார். கருணாநிதி என்பவர் ராமானுஜரைக் குறித்து எழுதக் கூடாதென எழுந்த கூக்குரலுக்குத் தான் அப்படி சொன்னேன். ஏனென்றால் சுஜாதா ஆழ்வார்களைப் பற்றி ஒரு வைதிக வைணவனின் நிலையிலேயே எழுதியதை ‘அது அவர் விருப்பம்’ என்று ஏற்றுக் கொண்டதோடு அப்படி எழுதியதே சிலருக்கு உவப்பாகவும் இருந்தது. அந்த விஷயத்தைக் குறித்த உங்கள் பதிவில் கருணாநிதி எழுதினால் ஒன்றும் கெட்டுவிடப் போவதில்லையெனவும் ஆனால் அதற்கு, இன்றைய தேதியில், எழுதத் தகுதியானவர் பி.ஏ. கிருஷ்ணனே என்றும் கூறியிருந்தீர்கள். பி.ஏ.கே மீதும் அவரின் பரந்த ஞானத்தின் மீதும் பெரு மதிப்புக் கொண்டவன் நான் என்றாலும் அத்தகைய தத்துவ நூலை எழுதுவதற்கான பயிற்சி என்பது வேறு என்றே கருதுபவன் நான்.

முன்பொருமுறை நீங்களே என்னைக் கேட்டீர்கள் “இந்தளவுக் கறாரான மதிப்பீடுகளை மேற்கத்திய நூல்கள் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் உங்களுக்குண்டா?” என. நிச்சயமாக. ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய ‘God Delusion’ எனும் நூலை ஆர்வமிகுதியால் புரட்டுவேனேத் தவிர அதற்கு வேறெந்த மதிப்பும் கிடையாதென் எனக்கு தெளிவுண்டு. அந்நூல் கிறித்தவத்தை எள்ளி நகையாடுவதால் அந்தப் புறக்கணிப்பு என்று தயவு செய்து எண்ணிவிட வேண்டாம். ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி அவர் இறந்தவுடன் சுடச்சுட வெளியிடப்பட்ட வாழ்க்கை சரிதம் அப்படி வெளியடப்பட்ட நூலிக்குரிய குறைப்பாடுகளுடையது என்ற தெளிவு எனக்கு நிச்சயமிருந்தது. இதோ அந்நூல் ஜாப்ஸ் பற்றி ஒரு தீர்க்கமான சித்திரத்தை அளிக்கவில்லையெனக் கூறி வேறொரு நூல் வந்துவிட்டது. ஜாப்ஸ் போன்ற ஒரு மனிதனைக் குறித்து இன்னும் சில நூல்களாவது வெளிவரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இதோ எவ்வளவோ எழுதிக் குவிக்கப் பட்டுவிட்ட காந்திப் பற்றியும் ஐன்ஸ்டீன் பற்றியும் இன்றும் நூல்கள் வந்த வண்ணமுள்ளன. ஒவ்வொன்றிலுள்ள நிறைக் குறைகளை இங்கு மதிப்புரை எழுதுவோர் புட்டுப் புட்டுத் தான் வைப்பார்கள். பி.ஏ.கேவும் நானும் ஃபேஸ்புக்கில் வரலாற்றெழுத்து பற்றி (குறிப்பாக ஸ்டாலின் பற்றி சமீபத்தில் வந்த நூலை முன் வைத்து) விவாதித்தப் போது நான் பெர்னார்ட் பெய்லின் (Bernard Bailyn) எனும் பேராசிரியர், இரு முறை புலிட்சர் வென்றவர், எழுதியப் புத்தகத்தை உதாரணம் காட்டினேன். பி.ஏ.கே அந்த ஆசிரியர் அமெரிக்காவில் இருந்த அடிமை முறைக் குறித்து எப்படி எழுதினார் என்பது விமர்சிக்கப் பட்டதென்றார். நான் சொன்னேன் “இருக்கலாம். ஆனால் அடிமை முறைக் குறித்து அறிவதென்றால் நான் பெய்லினை நாட மாட்டேன் அதற்கு டேவிட் பிரையான் டேவிசை (David Brion Davis) நாடுவேன்” என்றேன். ஏனோ நிறையப் பேர் நிணைத்துக் கொண்டிருக்கிறார்கள் நான் மேற்கிலிருந்து எது வந்தாலும் ஏற்றுக் கொள்வேனென.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு விஷயம். உங்களுக்கு வரும் வாசகர் கடிதங்கள். “இப்போது உரையாற்றும் செய்திக்கே விவாதங்கள் கிளம்பத் தொடங்கிவிட்டன. இனி உரையாற்றிவிடுவானோ என்ற சந்தேகத்திற்கே விவாதங்கள் வெடிக்கும் போலிருக்கிறது”. வேறெந்த இலக்கியவாதிக்கும் இல்லாத சங்கடம் உங்களுக்குண்டு. அது, உங்கள் வாசகர்களே விவாதப் பொருளாவது. அதற்குக் காரணம் உங்கள் தளத்தில் வெளியாகும் கடிதங்கள். இப்போதும் அந்த திருப்பூர் பேருரைக்கு வந்தக் கடிதங்கள் என் கண் முன் நிழலாடுகிறது. அவற்றைப் படித்த எவருக்கும் நம் சூழல் தெரியவில்லையென்றால் ஏதோ அரிஸ்டாடிலும், ஹண்டிங்டனும் மறுப் பிறப்பெடுத்து தமழகத்தில் அவதரித்ததுப் போல தோன்றும். வரப் போகும் வாசகர் கடிதங்களை நினைத்த மாத்திரத்தில் என்னையறியாமல் இரு சொட்டுக் கண்ணீர் என் கீ போர்டின் மேல் விழுந்தது. எல்லா வாசகர்களும் அப்படி என்று சொல்ல வரவில்லை. எல்லோரும் கோபித்துக் கொள்ள வேண்டாம்.

உங்களுடைய ‘ஆல் அமர்ந்த ஆசிரியன்’ படித்த போது எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை நீங்கள் ‘பாரீஸுக்குப் போ’வை ஏற்றிப் பேசியது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் நானும் கிரிதரன் ராஜகோபாலனும் கூகிள் பிளஸ்ஸில் அந்நாவல் குறித்துப் பேசிக் கொண்டோம். அந்நாவல் எனக்கு ஆதர்சமான ஒன்று. எங்கள் விவாதம் நடந்த சில நாட்களுக்கெல்லாம் நான் எதிர்பாராமல் நான் பெரிதும் வியக்கும் ஜெயகாந்தன் இறந்து விட்டார். அப்போது வந்த அஞ்சலிக் குறிப்புகளிலேயே குறிப்பிடும்படியானது நீங்கள் தமிழ் இந்துவில் எழுதியதுதான். அப்புறம் வந்தது இந்த உரை. உங்கள் உரையைப் படித்ததும் நான் கிரிதரனைக் கேட்டேன் பாருங்கள் ஜெமோவே அந்நாவலை மிக உயர்வாகக் கூறியுள்ளார் என்று. அவர், இல்லை அந்த உரைக் குறித்து குழுமத்தில் விவாதித்த போது நானும் கேட்டேன் அதற்கு ஜெமோ “அது செவ்வியல் நாவலல்ல ஆனால் அப்படி விமர்சிக்கப் படுவது வேறோரு தளத்திலிருந்து நடக்க வேண்டியது அதையே என் உரையில் சுட்டிக் காட்டச் செய்தேன்” என்று கூறியதாகச் சொன்னார். பின்னர் நீங்களும் அந்த பரிமாற்றத்தை உங்கள் தளத்தில் வெளியிட்டீர்கள். இப்போது நான் அந்த நம்பூதரிப் போல் விழிக்கிறேன். ஃபேஸ்புக்கில் ஒருவர் சொன்னார், இந்தப் பதிவை முன்னிட்டு, எனி உங்களை ‘அரவிந்தன் நம்பூதிரி’ என அழைக்கலாமென்று. ஆமென்.

பி.கு: எது எப்படியோ நீங்களே அன்றாடப் பேசுப் பொருள் பலருக்கு. என்னையும் சேர்த்தே சொல்லுகிறேன். நம்மிருவருக்கும் அறிமுகமான நண்பொருவர் சொன்னார் “ஆயிரம் சொல்லுங்கள் அரவிந்தன் ஆசானுக்கினையாக யாரலும் தன்னைப் பேசுப் பொருளாக, அதுவும் அன்றாடம், ஒருப் பெரும் திரளுக்கு முன்னிறுத்திக் கொள்ள முடியாது”. அவர் சொன்னது சத்தியமான உண்மை. நீங்கள் இல்லையென்றால் தமிழர்களிடையே ஃபேஸ்புக் செத்துவிடும். ஓ சொல்ல மறந்துவிட்டேன் உங்களின் சில நூல்களை சமீபத்தில் வாங்கினேன். அவற்றில் இரண்டை (‘பின் தொடரும் நிழலின் குரல்’, ‘இந்து மரபு: ஆறு தரிசனங்கள’) இரண்டு காபி வாங்கி வந்து அந்நண்பருக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டேன்.

நன்றி,
அரவிந்தன் கண்ணையன்.

அன்புள்ள அரவிந்தன்,

நீங்கள் சிரித்தீர்கள் என்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் சீண்டக்கூடிய, மட்டம்தட்டக்கூடிய விவாதங்களால் உண்மையான பயன் ஏதுமில்லை. அவ்வகை விவாதங்களில் நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டு அத்தனை வாசல்களையும் முழுமையாக மூடிக்கொண்டு இலக்கியத்திற்குள் சென்றுவிடுவதே நான் செய்வது. இது நாவல் முடிந்த இடைவெளி.

ஏனென்றால் ஒருவரை மட்டம்தட்ட எதைவேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். அந்நோக்கத்துடன் வாசித்தால் இலக்கியம் ஒன்றையும் அளிக்காமல் ஆகவும் செய்யும். ஏனென்றால் இலக்கியம் அறிவியலைப்போலன்றி மிகவும் அந்தரங்கமானது. அதற்கு ஒரு ஏற்புநிலையை அளிக்காவிட்டால் அது எதையும் பேசாது. பேசவில்லை என்று சொல்லி அதை எளிதில் நிராகரித்துவிட்டுச் செல்லவும் முடியும்.

நாம் பேசுவதில் உள்ள முக்கியமான சிக்கலை மட்டும் சுட்டிக்காட்டிவிடுகிறேன். அது ஐரோப்பா சென்ற நூறுவருடங்களில் உருவாக்கி எடுத்துள்ள அறிவியல்சார்ந்த கருத்தாடல்களின் முறைமை, மற்றும் மொழிக்கும் இலக்கியத்தின் அணுகுமுறை மற்றும் மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுதான். பல்வேறு கோணங்களில் இதை நான் விரிவாகவே பேசியிருக்கிறேன்

நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பவர்கள் அறிவியலாளர்கள். அறிவியலாளர்களுக்குரிய மொழியும் முறைமையும் பெருமளவுக்கு வகுக்கப்பட்டுவிட்டவை. தரவுகள், அந்தத்தரவுகளை தொகுத்தும் பகுத்தும் முடிவுகளுக்கு வரும் வழிகள், முடிவுகளை வரையறைகளாக முன்வைக்கும் மொழி, நிரூபிக்கவும் பொய்ப்பிப்பதற்கும் உரிய வழிமுறைகள் ஆகியவற்றால் ஆனது அது.

இலக்கியத்தின் மொழி, இலக்கியவாதியின் மொழி என்பது அது அல்ல. சொல்லப்போனால் முற்றிலும் மாறுபட்டது. பொருள்வரையறை வழியாகச் செயல்படுவது அறிவியலின் மொழி. பொருள்மயக்கம் [ambiguity ] வழியாகச் செயல்படுவது இலக்கியத்தின் மொழி. இலக்கியமொழியின் செயல்பாட்டுமுறையே வேறு. அது கூறுவதைவிட உணர்த்துகிறது. சிந்தனைகளை அளிப்பதில்லை, தொடங்கிவைக்கிறது.

தொடக்கநிலை அறிவியலாளர் சென்றகாலங்களில் இலக்கியத்தின் மொழியை நிராகரித்துப்பேசியதுண்டு. சரியாகச்சொல்லப்போனால் விட்ஜென்ஸ்டீனுக்கு முன் அதுதான் பொதுப்போக்கே. இன்னமும்கூட அமெரிக்கக் கல்விச்சூழலில் அத்தகைய தீவிர புறவயவாதிகள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சென்ற முப்பதாண்டுக்கால பின்நவீனத்துவப் பொதுவிவாதம் அந்த எல்லையை பெருமளவுக்கு கடக்கச்செய்து விட்டது. இதுசார்ந்து நீங்கள் வாசிக்கவேண்டிய நூல்கள், உங்கள் கவனத்துக்கு வந்தாகவேண்டிய ஆசிரியர்கள் பலர் உள்ளனர். .

ஒரு தொடக்கமாக போத்ரியார் [ Jean Baudrillard] லியோடாட் [Jean-François Lyotard]. அவர்களின் பெரும்பங்களிப்பு பரந்துபட்டது என்றாலும் அறிவொளிக்காலம் முதல் ஐரோப்பா உருவாக்கியிருக்கும் அறிவியல்மொழி, அறிவியல் அணுகுமுறை என்பதன் மீதான ஆழமான விமர்சனங்களை நீங்கள் படிக்கமுடியும். டில்யூஸ் [Gilles Deleuze] கூறும் ஒரு உவமையை நினைவிலிருந்து சொல்கிறேன். அறிவியலின் முறைமை செங்குத்தாக எழும் ஒரு மரம். இலக்கியம் என்பது கிடைமட்டமாக ஒழுகுவது. நீர் போல.ஒரு புனைவெழுத்தாளன் கதைசொல்பவன், அவனுக்கு அறிவியக்கவியல் முறைமை இல்லை, ஆகவே அவனுடைய பங்களிப்பு என அறிவியலில் ஏதுமிருக்கமுடியாது என்பதுபோன்ற சற்றே பழைமையான கருத்துக்களை நீங்கள் அவர்களைக்கொண்டு மறுபரிசீலனைசெய்யமுடியும்.

ஒரேதுறையைப்பற்றி ஓர் அறிவியலாளன் பேசுவதற்கும் இலக்கியவாதி பேசுவதற்கும் இடையே பெரும் வேறுபாடுள்ளது. அறிவியலாளன் அறிவியலின் முறைமைக்குள் நின்றுகொண்டு அவனுடைய முடிவுகளை நோக்கிச் செல்கிறான். இலக்கியவாதி ஒருபோதும் அந்தமொழி, அந்தமுறைமைக்குள் செல்வதில்லை. அது அவனுடைய வழி அல்ல. அப்படி அவன் அறிவியலின் மொழிக்குள்ளும் முறைமைக்குள்ளும் சென்று பேசமுயலும்போதுதான் ‘அமெச்சூர்’ ஆய்வாளன் ஆகிறான்.

நீங்கள் செய்யும்பிழை இதுதான். வரலாறு, பண்பாடு பற்றி எழுத்தாளன் பேசத்தொடங்கும்போது அவனை அறிவியலின் மொழியுடன் அந்த முறைமையுடன் உள்ளே நுழையும் அமெச்சூர் ஆய்வாளன் என நீங்களே முடிவுசெய்துகொள்கிறீர்கள். அத்துடன் உங்கள் கடிதத்தில் நீங்கள் சொல்வதுபோல ஓர் அறிவியலாளர் அவருக்கு தொடர்பில்லாத இன்னொரு அறிவுத்துறையில் சென்று பேசுவதுடன் ஒப்பிட்டுக்கொள்கிறீர்கள்.

நீங்கள் சொல்வதுபோல சந்திரசேகரின் அழகியல் தரிசனங்கள் பொருட்படுத்தப்படாது போகலாம். ஆனால் அது பொதுவிதி அல்ல. டி.டி. கோஸாம்பியை கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் அடிப்படையில் கணிதவியலாளர். கணிதத்தில் முக்கியமான கண்டுபிடிப்புகள் வழியாக உலகப்புகழ்பெற்ற பின்னர் வரலாற்றாய்வுக்கு வந்தார். இந்திய வரலாற்றாய்வில் அவர் ஒரு குறிப்பிட்ட சிந்தனைமுறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அப்படி பிற துறைகளில் ‘அமெச்சூர்’ ஆக நுழைந்து சாதனைசெய்த ஒரு ஐம்பது உதாரணங்களைக் காட்டமுடியும். உண்மையில் வரலாற்றாய்வின் வழக்கமான முறைமைகளை அறியாமல் வந்து வேறு முறைமைகளை உருவாக்கினார் என்பதே கோசாம்பியின் வெற்றிக்குக் காரணம்,

அத்துடன் இன்னொன்றும் உண்டு, எந்த அறிவுத்துறையிலும் அத்துறைசார்ந்த அவதானிப்புகளில் பெரும்பகுதி அடுத்தகட்டத்தில் காலாவதியாகும். மறுக்கப்படும். விரிவாக்கப்பட்டு கடந்துசெல்லப்படும். ஆகவே அவை பயனற்றுப் போய்விட்டன என்றும் இப்போது எவரும் பேசுவதில்லை என்றும் சொல்வது பொருளற்றது

இலக்கியவாதி பண்பாடுகுறித்து பேசும்போது முன்வைப்பது அறிவியல் கருதுகோள்களை அல்ல. அவற்றை நிரூபிக்க அவன் முயல்வதில்லை. அதற்கான முறைமை [methodology] இலக்கியத்தில் இல்லை. அவன் முன்வைப்பதை பழையமொழியில் insights என்று சொல்லலாம். புதிய விமர்சனமொழியில் மொழியின் தர்க்கத்தினூடாக அடையப்பட்ட நிரூபணவாதத்திற்கு எதிரான அறிதல்கள் [Antiempirical thoughts] என்று சொல்லலாம். நான் முன்னரே சொன்னதுபோல அறிவியலின் கீழ்த்தளங்களில்தான் அவற்றை பொருட்படுத்தாத அறிவியலாளர்கள் இருக்கிறார்கள். அறிவியலின் உண்மையான சிந்தனைத்தளத்தில் இவற்றுக்கான இடம் என்பது என்றும் இருந்துள்ளது. இன்று மேலும் அழுத்தமாக நிறுவப்பட்டுள்ளது.

இலக்கியவாதியின் மொழி என்பது நுண்ணிய அவதானிப்புகள், படிமங்கள், மொழிவிளையாட்டுகள், மொழித்திரிபுகள் வழியாக தொடர்புறுத்துவது. அது அதன் வாசகனை அல்லது கேள்வியாளனை வாதிட, ஆராய அழைப்பதில்லை. அது அளிப்பது ஒருவகையான தன்மயமாதலை. Invocation என்று சொல்லலாம். அதுவும் ஓர் அறிதல்முறையே. அந்த அறிதல்களை அறிவியலின் முறைமைக்குள் எடுத்துக் கொண்டுசெல்ல எந்த ஒரு தரமான அறிவியலாளனாலும் முடியும்.

அக, ஒரு ’அமெச்சூர்’ வரலாற்றாய்வாளனாக அல்லது மானுடவியலாளனாக நான் பேசப்புகவில்லை. இலக்கியத்திற்குரிய வழிமுறைகளின்படி அதற்குரிய மொழியில் அவற்றைப் பேசப்போகிறேன். இந்த முறைமையும் மொழியும் வேறென்பதனாலேயே இது அளிக்கும் திறப்புகளும் சாத்தியங்களும் முக்கியமானவை என்பது அந்தத் தளத்தில் உண்மையான ஆய்வுகளைச் செய்பவர்களுக்குத் தெரியும். முதன்மையான வரலாற்றாசிரியர்கள், மானுடவியலாளர்களுக்கு இலக்கியம் மீது அந்த மதிப்பு இருப்பதை நான் அறிவேன். எழுத்தாளனின் பார்வையின் சாத்தியங்களை அவர்கள் என்றுமே கருத்தில்கொள்கிறார்கள்- குறிப்பாக பண்பாட்டாய்வில்.அவர்கள் என்னை உரையாற்ற அழைப்பது அதனால்தான்.

அரிஸ்டாடிலும், ஹண்டிங்டனும் பேசும் தளத்திற்கும் எழுத்தாளன் பேசும்தளத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஓரளவுக்கேனும் தெளிவுபடுத்திவிட்டேன் என நினைக்கிறேன். அரிஸ்டாடிலும் ஹண்டிங்டனும் தன் முன்னிலையாளனின் தர்க்கபுத்தியுடன், ஆய்வுமனதுடன் பேசுகிறார்கள். அவர்களுக்கான எதிர்வினை அவ்வாறானதாகவே இருக்கும். எழுத்தாளன் வாசகனில் உருவாக்குவது ‘தான்அவ்வாறாக இருந்து’ அறியும் அனுபவ அறிவை. அந்த எதிர்வினைகளின் இயல்புவேறு.

ஹண்டிங்டனின் தளத்திலான உரைகளை எழுத்தாளன் ஆற்றமுடியாது, அவன் எழுத்தாளன் என்பதனால். ஆனால் அந்தத் தரத்திலான உரைகளை ஆற்றமுடியும், அது இங்கு ஓரளவுதான் சாத்தியம். ஏனென்றால் அங்கெல்லாம் இங்குள்ளதுபோல ஒவ்வொருமுறையும் அடிப்படைகளை விளக்கியபின்னர் கருத்துக்களுக்குச் சென்றாகவேண்டிய கட்டாயம் இல்லை.

மனிதர்களைப்பற்றிய ஆய்வை மானுடவியலும் கடந்தகாலத்தைப்பற்றிய ஆய்வை வரலாற்றாசிரியனும் சமூகங்கள் பற்றிய ஆய்வை சமூகவியலாளனும் மட்டுமே நடத்தவேண்டும் என்று சொல்வது ஒரு ‘அமெச்சூர்’ அறிவியலாளனின் பார்வை மட்டுமே. அந்தத் துறையினர் செய்வது அவர்கள் துறைசார் அறிவியல் ஆய்வு. அதற்கு வெளியேயும் ஆராயவும் கண்டறியவும் ஏராளமாக உள்ளன. சமூகம் பற்றிப்பேச சமூகவியலாளனிடம் சான்றிதழ்பெறவேண்டும், மனிதனைப்பற்றிப்பேச மானுடவியலாளனின் ஒப்புதல் வேண்டும் என்பது ஒரு சின்ன வேடிக்கைப்பேச்சுதான்.

அறிவியலின் மொழியை முறைமையை அறிவின் ஒரே வழியாகவும் முறையாகவும் எண்ணுவது அறிவியலாளருக்கு உரிய பிடிவாதமாக இருக்கலாம். என்றும் அதன்மேல் எழுத்தாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் ஐயம் இருந்தபடியேதான் உள்ளது. ஆகவேதான் ஒவ்வொருமுறையும் அவர்கள் வரலாற்றா,ய்வு பண்பாட்டாய்வு, சமூகவியலாய்வுத் துறைகளில் தங்கள் பார்வையை முன்வைத்து ஊடுருவல் செய்கிறார்கள். அறிவியலாளர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொள்வதில்லை.அறிவியலாளர்களின் இடைவெளிகளை கண்டடைகிறார்கள். அவர்களின் மிகையான உறுதிப்பாடுகளை ஐயப்படுகிறார்கள். ஏதோ ஒருவகையில் அறிவியல்சார்ந்த நோக்குகள்மீது ஒரு தாக்குதலைத் தொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களுக்குப்பின் இது பெரிதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு போக்காக மாறியிருந்தாலும் நவீன அறிவியலின் மொழியும் முறைமையும் உருவாகத் தொடங்கியபோதே இந்த மறுப்பும் ஐயமும் தத்துவத்துறையில் தொடங்கிவிட்டது.

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு மார்க்ஸியசிந்தனையின் குறைத்தல்வாதங்களில் இருந்து என்னை மீட்டது ஷோப்பனோவரின் கட்டுரைகள். நான் வாசித்த ஒரு சிறியதொகைநூலை கடந்துபோக எனக்கு ஆறுமாதமாகியது. அறிவியலுக்கு நிகராக, ஒரு கோணத்தில் அப்பாலும்கூடச் செல்லும் ஒரு தளம் இலக்கியத்திற்கு, அழகியலுக்கு உண்டு என்ற எண்ணத்தை அடைந்தேன்.

உங்களுக்கும் ஷோப்பனோவர் உதவக்கூடும். The world as will and representation என்ற நூலில் இருந்து நான் நினைவில் துழாவி மீட்டு எடுத்த வரிகளை அளிக்கிறேன்.

‘The aim and ideal of all natural science is at bottom a consistent materialism. The recognition here of the obvious impossibility of such a system establishes another truth which will appear in the course of our exposition, the truth that all science properly so called, by which I understand systematic knowledge under the guidance of the principle of sufficient reason, can never reach its final goal, nor give a complete and adequate explanation: for it is not concerned
with the inmost nature of the world, it cannot get beyond the idea; indeed, it really teaches nothing more than the relation of one idea to another’

நான் எந்நிலையிலும் எந்த அறிவுத்துறையின் முறைமை, மொழிக்குள் செல்லக்கூடாது என்ற எண்ணத்தை ஷோப்பனோவரில் இருந்து அடைந்தேன். அது இலக்கியத்தின் முறையையும் மொழியையும் அழிக்கும் என்பது என் எண்ணம். இலக்கியவிமர்சனம் என்பது தத்துவம், மதம், மொழியியல், சமூகஅறிவியல்கள் ஆகியவற்றின் கலைச்சொற்களைக் கையாண்டுதான் பேசமுடியும். ஆனால் இலக்கியவாதியாக நான் அவற்றை அந்த அறிவுத்துறைக்குள் வரையறைசெய்யப்பட்டிருக்கும் அதே முறையில் கையாள்வதில்லை. அவை பொதுமொழிக்குள் வந்தபிறகு, அவற்றின் அர்த்தம் பொதுவான புரிதலை அளிக்கும்படி சற்றே ‘மழுங்கடிக்கப்ட்ட’ பிறகுதான் பயன்படுத்துவேன். ஏனென்றால் நான் பேசுவது பொருள்மயக்கம் வழியாக.

அறிவியலுக்கு உள்ளே இருக்கும் organon என்னும் இரும்புத்தூண் அதை நடனமிடமுடியாதபடி ஆக்குகிறது. நடனமிடத்தெரிந்தது இலக்கியம். அறிவியல் குனிந்து நுழையமுடியாத இடங்களுக்கு அது எளிதில் செல்லமுடியும். அந்தச் சாத்தியத்தை நம்புகிறவன்தான் எழுத்தாளன். அவன் வரலாறு பற்றி பண்பாடு பற்றி பேசுவதன் அடிப்படை அதுவே

ஜெ

பி.கு

Every science must start from two principal data. One of these is always the principle of sufficient reason in some form or another, as organon; the other is its special object as problem. Thus, for example, geometry has space as problem, and the ground of existence in space as organon. Arithmetic has time as problem, and the ground of existence in time as organon. Logic has the combination of concepts as such as problem, and the ground of knowledge as organon. History has the past acts of men treated as a whole as problem, and the law of human motives as organon. Natural science has matter as problem, and the law of causality as organon. Its end and aim is therefore, by the guidance of causality, to refer all possible states of matter to other states, and ultimately to one single state; and again to deduce these states
from each other, and ultimately from one single state. Thus two states of matter stand over against each other in natural science as extremes: that state in which matter is furthest from being the immediate object of the subject, and that state in which it is most completely such an immediate object, i.e., the most dead and crude matter, the primary element, as the one extreme, and the human organism as the other. Natural science as chemistry seeks for the first, as physiology for the second. But as yet neither [037] extreme has been reached, and it is only in the intermediate ground that something has been won. The prospect is indeed somewhat hopeless. The chemists, under the presupposition that the qualitative division of matter is not, like quantitative division,an endless process, are always trying to decrease the number of the elements, of which there are still about sixty; and if they were to succeed in reducing them to two, they would still try to find the common root of these. For, on the one hand, the law of homogeneity leads to the assumption of a primary chemical state of matter, which alone belongs to matter as such, and precedes all others which are not essentially matter as such, but merely contingent forms and qualities. On the other hand, we cannot understand how this one state could ever experience a chemical change, if there did not exist a second state to affect it. Thus the
same difficulty appears in chemistry which Epicurus met with in mechanics. For he had to show how the first atom departed from the original direction of its motion. Indeed this contradiction, which develops entirely of itself and can neither be escaped nor solved. [Arthur Schopenhauer ]

முந்தைய கட்டுரைபதாகை நாஞ்சில் சிறப்பிதழ்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88