போரும் அமைதியும் வாசிப்பும்

1

அன்புள்ள ஜெமோவிற்கு ,

செந்தூர் கொச்சினிலிருந்து..

தற்சமயம் ‘போரும் அமைதியும்‘ ஆங்கிலத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறேன். எங்கும் ரஷ்யாவும் அதன் மனிதர்களுமே நிறைந்திருக்கிறார்கள். தற்செயலாக நூலகத்தில் ராதுகா பதிப்பகத்தின் ‘ கொசச்குகள் மற்றும செவேச்தபோல் கதைகள் கிடைக்க , ஒருபக்கம் கிழவன் டோல்ஸ்டோயிடம் பெருங்கதை கேட்டுக்கொண்டே இளைஞன் லேவுடன் இலட்சியக்கனவுகளில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். பியர் ஆக சில சமயங்களிலும் ஆந்த்ரேவாக சில சமயங்களிலும் உணர்ந்து கொள்கிறேன். மனம் நான் பியர் என்று ஒப்ப மறுக்கிறது. ஆந்த்ரே முழுமையான வீரன் என்பதால் அவனது ஆன்மாவில் நுழைந்துகொள்வது பேருவகை அளிக்கிறது.

பகட்டுப் பிரபுகுல வாழ்வியல் முறைகளின் எச்சங்கள் இன்றைய ராணுவ அதிகாரி வாழ்விலும் உள்ளதால் மிக எளிதாக உள்நுழைவு. ஆஸ்டர்லிட்ஸ் யுத்த முடிவில் ஆந்த்ரே அண்ணாந்து பார்க்கும் வானம் கடந்து சென்று கொண்டிருக்கிறேன். முடிவில்லாத, ஏன் எதற்கு என்றே தெரியாத கேளிக்கைக் கூடுதல்களை சகித்துக் கொள்ளும் இம்சையை நன்கறிவேன். லேவும் நானும் நல்ல நண்பர்களாகி இருப்போம் , அவன் இப்போது என் சக அதிகாரியாக இருந்திருந்தால். பார்ட்டிகளில் ஒரு ஓரத்தில் நின்று எப்படா முடியும் என்று காத்துக் கொண்டிருந்திருப்போம்.

யுத்தத்தில் இளவரசர் பாக்ராடீயோனிடம் இக்கட்டான கட்டத்தில் அவருடைய தளபதிகள் ஆலோசனை தேடி வருகிறார்கள். அவர்களைப் பேச விட்டு, அவர்களையே முடிவுகளையும் எடுக்கவிட்டு, எல்லாவற்றிற்கும் ஒரு சிறு தலையசைப்பையோ , சிறிய மதிப்பேற்றத்தையோ அளித்துவிட்டு அவை தன்னுடைய ஆணைகளே எனும் மாயபிம்பத்தைத் தோற்றுவிக்கிறார். ஆணைபெற்றுத் திரும்பும் தளபதிகளும் வீரர்களும் மிகுந்த உற்சாகத்துடனும், கலங்கிய சித்தம் தெளிந்து, உறுதியுடன் விடைபெறும் காட்சி …. தன் உப்பின் மதிப்பறிந்த எந்தவொரு ராணுவ வீரனும் நெகிழும் காட்சி. நிகழ்வாழ்வில் நான் மிகவும் மதிக்கும் உயரதிகாரி ஒருவர் கடைபிடிக்கும் அதே சாமர்த்தியம். விதியின் ஒழுக்கு கணந்தோறும் மாறும் யுத்த களத்தில் , தெளிவும் உறுதியுமாகத் தோற்றந்தரும் தளபதியைப் போன்ற வேறொரு ஊக்கமருந்து வீரர்களுக்கில்லை

‘போரும் அமைதியும்’ ஒரு தலைமைப் பண்புக் கையேடாகவும் மாறும் அற்புதத்தைக் கண்கூடாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நாவலின் இந்தப் பகுதி உங்களிடம் இதே அளவு கவனம் பெற்றதா? அல்லது என் வாசிப்புக் கோணம் இப்படியிருக்கிறதா? தங்களை வெண்முரசு மனநிலையிலிருந்து வெளிக்கொணருவதில் விருப்பமில்லை. ஆயினும் என் பிரியத்திற்குரிய பீமன் பல இடங்களில் இரண்டு படைப்புகளிலும் மாறி மாறி நிகழ்ந்தது விந்தை. செவ்வியல் ஆக்கங்கள் எல்லாம் ஒன்றேதான் போலும்.

வெண்முரசு நான் விரும்பும் வரிசையில், ஆமை வேகத்தில் வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெரிதாக எதுவும் தொடர்முறி இருப்பதாகத் தெரியவில்லை. வெண்முரசு வாசிப்பதற்கு முன்பு மகாபாரதம் மடுவளவே அறிந்திருந்தது நல்லதற்கே இல்லையா ?

(காலந்தாழ்த்தி, மின்மடல் அனுப்பும் தறுவாயில் ரோஸ்டோவ் மிக அணுக்கமாக ஆகிவிட்டான். ஜூனியர்களை உட்கார வைத்துக்கொண்டு பல வீர சாகசப் பீலாக்களை அலுத்துப்போன முகத்துடன் வேறு வழியின்றி எடுத்துவுட்டுக்கொண்டிருக்கிறேன்… அவர்களும் கண்கள் விரியப் பார்க்கிறார்கள்.)

செந்தூர்
puthu-tolstoy
அன்புள்ள செந்தூர்

போரும் அமைதியும் நாவலில் ஒரு வரி உண்டு. மக்கள் குற்றவுணர்ச்சி இல்லாமல் சோம்பேறியாக இருக்கக்கூடிய இடங்களில்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள்- ராணுவம் அதில் முதன்மையானது. போர் வந்தால் சாகப்போகிறோம் என்ற நினைப்பால் சோம்பல் குற்றவுணர்ச்சியை அளிக்காதாம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என தெரியவில்லை

போரும் அமைதியும் பல கோணங்களில் வாசிக்கப்பட்டுள்ளது. பெருந்திரளின் மனநிலை எப்படி செயல்படும் என்ற கோணத்தில், அதிகாரத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட ஆசாபாசங்கள் எப்படி வரலாற்றைத் தீர்மானிக்கின்றன என்ற கோணத்தில், வரலாற்றுப்பெருக்கு எப்படி ஒவ்வொரு தனிமனிதனையும் ஆட்டிவைக்கிறது என்ற கோணத்தில், சந்தர்ப்பங்கள் எப்படி மனிதர்களை தலைமை நோக்கிக்கொண்டுசெல்கின்றன என்ற கோணத்தில்

குட்டுஸோவ் கதாபாத்திரம் நிர்வாகவியலில் பெரிதும் பேசப்பட்ட ஒன்றுதான். நமக்கு ஒரு குட்டுஸோவ் இருந்தார் – நரசிம்மராவ்

ஜெ.

அன்புள்ள ஜெமோவிற்கு

உங்கள் பதில் கண்டேன் . ராணுவம் மீது வைக்கப்படக் கூடிய குற்றச்சாட்டே. ஆனால் நவீன ராணுவங்கள் உடல் உழைப்பு குறுகினாலும் பெரிதும் தகவல் சார்ந்து உள்ளது. இன்றைய வீரன் வேறு வழியில்லாமல் நிறைய படிக்க வேண்டியுள்ளது. ஆழ்ந்து இல்லையெனினும் பரந்து . தனிமனித ஆயுதங்கள் குறைந்து , ஆயுதத் தொகுதிகளில் ஏதேனும் ஒரு கருவியையே கையாள்கிறான். தன் கருவியில் தான் வல்லுநன் என்பதே அவனுடைய முன்னேற்றத்துக்கான துருப்புசீட்டு. நீண்ட அமைதி ‘சாகப்போகிறோம்’ என்ற மனநிலையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதால் இன்று குற்றவுணர்ச்சி இல்லாமல் சோம்பலுடன் இருக்க முடிவதில்லை. ஓய்வு பெரும் வரை உயிருடன் இருக்கப்போவது கிட்டத்தட்ட உறுதி என்பதால் வெளியுலகில் இருக்கும் அதே முட்டி மோதி மேலே செல்வதற்கான முனைப்பு இங்கும் உண்டு. ஆனாலும் நானே அந்த இனிய மதுவில் சில சமயம் உழல்கிறேன் . மறுப்பதற்கில்லை. போட்டிகளும் தேர்வுகளும் வேலைக்காலம் முழுக்க நாற்காலியில் அப்பாட என்று உட்கார அனுமதிப்பதில்லை. நான் சராசரியாக நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய தொழில்சார் தரவுகளின் அளவு கடுப்பேற்றும் அளவுக்கு அதிகம். இது அதிகாரிகளுக்கு மட்டுமல்ல கடைநிலை வீரனுக்கும் பொருந்தும். தொடர்ந்த போர் அபாயச் சூழல் இருந்தால் சோம்பலுடன் உட்கார்வதற்கு வாய்ப்பு அமையலாம்.

குடுசோவ் நரசிம்ஹ ராவ் ஒப்பீடு அபாரம். ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டேன் . குதுசோவ் போர் ஆலோசனையின் போது தூங்கும் காட்சியில் நரசிம்மா அழகாய் வந்து உட்கார்ந்து கொண்டார் . அவரும் வரலாற்றின் ஒழுக்கை மாற்றுவது சிரமம் என்பதைப் புரிந்தவரா ? சிறு வயதில் அந்த முகத்தைப் பார்த்தாலே சிரிப்பு வரும் . நம் பொருளாதாரக் கதவுகளைத் திறந்து விட்டவர், தேசியப் பாதுகாப்பில் பெரும்பங்காற்றியவர் என்று அறிந்திருந்தேன் . இன்றும் குறைவாகவே மதிப்பிடப் படுகிறார் இல்லையா? உங்கள் பதிலுக்குப் பின் விகிபெடியாவில் தேடியபோது அவர் ஒரு பல்மொழி வித்தகர் என்பதும் இரண்டு படைப்புகளை மொழி பெயர்த்திருக்கிறார் என்றும் அறிந்தேன் . நமது குடுசோவைப் பற்றி இன்னும் நிறையப் படிக்க வேண்டும் .

எந்தப் பிரதமரும் தனக்குக் கிடைத்த ஐந்தாண்டுகளில் என்ன செய்து விட முடியும்? அவர் கடும் உழைப்பாளியும் தேசியவாதியும் ஆக இருக்கும் பட்சத்திலும்? டால்ஸ்டாய் கூறுவதுபோல் சுதந்திர வல்லமை ( FREE WILL – மொழிமாற்றத் திணறுகிறேன் ! ) என்று ஒன்று இல்லையெனின் இவர்களின் பங்குதான் என்ன? வரலாற்றின் சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளும் திறமை மட்டும்தான் இவர்களில் மேலானவர்களைத் தீர்மானிக்கிறதா?

போரில் திட்டமிடுவதின் உபயோகம்தான் என்ன? திசைக்கொரு பக்கம் பாயும் ஆயிரம் ஆயிரம் மனங்களின் கூட்டை எப்படிப் புரிந்துகொள்வது? திட்டம் வகுக்காமலும் இருக்க முடியாதல்லவா? டால்ஸ்டாய் கிழவன் ஆட்டையை யாரேனும் இதுவரை கலைத்திருக்கிறார்களா? இன்றும் செல்லுபடியாகிறதா? குழம்புகிறேன்.

செந்தூர்.

அன்புள்ள செந்தூர்

தல்ஸ்தோயின் இந்தவகையான கருத்துக்கள் விரிவாகப்பேசப்பட்டவைதான்.

ஒட்டுமொத்தமாக வரலாற்றின் உள்ளக்கிடக்கை என்ற அளவில் அவை முக்கியமானவை. ஆனால் சிறிய அலகுகளில் தலைமையின் செயலிச்சை [will] என்பது ஒரு பெரிய சக்தி என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைஇரு மகாபாரதப்புனைவுகள்
அடுத்த கட்டுரைஎலியும் பொறியும்