அன்புள்ள ஜெயமோகன்,
ஏப்ரல் 19ல் தங்களின் ‘ஆலமர்ந்த ஆசிரியன்’ பதிவு அருமை.
ஜெயகாந்தனின் ‘பாரிஸுக்குப்போ’ நாவலைப் பற்றிய குறிப்பு மிக அற்புதம்.
1978-83 (மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி) காலகட்டத்தில் ஜெயகாந்தன் மேல் ஒரு பைத்தியம். அவரின் எல்லா இலக்கிய வகைமைகளையும் படித்தவன்.
‘பாரிஸுக்குப் போ’ நாவல் ஜெயகாந்தனின் படைப்புகளில் மிக முக்கியமானது, அதை தாங்கள் திரும்பவும்(1980-களுக்கு பின்) சிலாகித்து பேசியதற்கு நன்றி. அவரின் படைப்புக்கலை பூரணத்துவம் பெற்ற நாவல்.
இதனிடையில் தங்களின் ‘விஷ்ணுபுரம்’, ‘காடு’, ‘கொற்றவை’ பற்றியும் நிறைய எழுத வேண்டும்.
‘விஷ்ணுபுரம்’ நாவல் படிக்கப் படிக்க புதுப் புது சாளரங்களை திறக்கக் கூடியவை.
‘கொற்றவை’ மிக அற்புதமான முயற்சி. சேரன் மற்றும் கவுந்தி அடிகள் பாத்திர படைப்புகள் மிக அருமை.
‘காடு’ இன்றளவும் என் மனதுக்கு மிக நெருக்கமான நாவல். சைக்கிளில் அந்த காடு முழுவதும் நீலியுடன் சுற்றுவது தான் என் கனவு.
‘கணையாழி’ வழி தங்களின் எழுத்துக்களை அறிந்து கொண்டவன். தமிழ் இலக்கிய உலகிற்க்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்துகொண்டு இருக்கிறீர்கள்.
அசோகமித்திரனுடன் பேசும் போதெல்லாம் தங்களின் பங்களிப்புப் பற்றி நிறைய பேசுவோம்.
வாழ்த்துக்கள்!
அன்புடன்,
கேசவ ரவி, சென்னை.
அன்பு ஜெயமோகன்,
அக்காலத்தில் ஜெயகாந்தன் அவர்களை நான் அதிகம் வாசித்தவனில்லை. விகடனில் வெளியான அவரின் முத்திரைக் கதைகள் சிலவற்றைப் படித்திருந்தேன்; அவ்வளவே. ’அக்னிப்பிரவேசம்’ உள்ளிட்ட கதைகளின் வழியே அவர் ’முற்போக்கு எழுத்தாளர்’ என்பதாகவே அப்போது என்னில் பதிந்திருந்தார். ஒரு குறிப்பிட்ட இலட்சியவாதக் கருத்தியல் அடிப்படையிலேயே அவரின் படைப்புகள் இருப்பதாக நான் உணர்ந்திருந்த தருணம் அது. ’முரட்டு முற்போக்கு’ ஆர்வம் கொண்டிருந்த அக்காலகட்டத்தில் ஜெயகாந்தன் எனும் பெயரைச் சொல்வதே ஒரு கம்பீரமாகத்தான் இருந்தது. எனினும், அவரின் படைப்புகளை நுட்பமாய் அணுகும் மனநிலை இல்லாததால் ‘பத்தோடு பதினொன்றான’ எழுத்தாளராகவே அவர் எனக்குத் தெரிந்தார். அப்போதெல்லாம் நாவல் வாசிப்பில் எனக்கு அதிக ஆர்வம் இல்லை. தொடர்ச்சியாக சிறுகதைகளை வாசித்துக் கொண்டே இருப்பேன். விந்தன், மேலாண்மை பொன்னுச்சாமி, வாசந்தி, கோபி கிருஷ்ணன், சுந்தர ராமசாமி, பாவண்ணன், வண்ணதாசன், அசோகமித்திரன், வல்லிக்கண்ணன் போன்றோர் அப்படியாகத்தான் எனக்கு அறிமுகமாகினர். இந்தியாடுடே இலக்கியமலரை அக்காலகட்டத்தில் எங்கிருந்தாவது இரவல் வாங்கிவந்துவிடுவேன். ஒரு இலக்கிய மலரில் ஆயிரங்கால் மண்டபம் என உங்கள் கதையையும் படித்த ஞாபகம். அச்சமயத்தில் அக்கதை எனக்கு அதிர்ச்சியூட்டியது. வழக்கமான என் வாசிப்புக்கு அக்கதை சவாலாக அமைந்தது என்றுகூட சொல்லலாம். பிறகு ‘ஜெயமோகன்’ எனும் பெயரைப் படித்தாலே ‘வேண்டாம்ப்பா..படுத்திடுவார்’ என விலகிவிடுவேன். பிற்பாடு உங்கள் இணையதளத்துக்கு வருவேன் என்றோ, உங்கள் நாவல்களில் நுழைவேன் என்றோ கூட நான் கற்பனை செய்தது கிடையாது. இப்போதும் சொல்கிறேன். உங்களின் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. எனினும், அக்கருத்துகளை எம்மேல் திணிக்க நீங்கள் முயலவில்லை என்பதையும் உணர்ந்தே உங்களைத் தொடர்கிறேன். பின் தொடரும் நிழலின் குரலும், கொற்றவையும் நான் இன்னும் வாசிக்கவில்லை. கொற்றவை என்னை அதிகம் இழுக்கும் நாவல். இவ்வாண்டுக்குள் இரண்டு நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பு இருக்கிறது. நிச்சயம் அவை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.
ஜெயகாந்தனுக்கு வருகிறேன். கல்லூரிக்காலத்தில் அவரின் நாவல்களைக் குறித்து என் நண்பர் சக்திவேல்தான்(இன்று அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. குடும்பத் தகராறில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பல இடங்களில் சென்று அவரைத் தேடிப்பார்த்தேன். இன்றுவரை அவர் கண்ணுக்குத் தட்டுப்படவே இல்லை. வரும் நாட்களில் என்றாவது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு அமையும் எனவும் நம்புகிறேன்) என்னிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பார். பத்து வயது என்னைவிட மூத்தவரான அவர்தான் பாலகுமாரனையும், சுஜாதாவையும் அறிமுகப்படுத்தியவர். ராஜேஷ்குமாரையும், சுபாவையும், பட்டுக்கோட்டை பிரபாகரையும் தேடித்தேடிப் படித்த காலகட்டம் அது. ”கிரைம் நாவலில் வெளியான முதல் நாவல் நந்தினி 440 வோல்ட்ஸ்” என்பது வரை அப்போது நான் அறிந்து வைத்திருந்தேன். அப்படி தெரிந்து வைத்திருந்ததில் படிக்கும் நண்பர்களிடம் எனக்கு மதிப்பு அதிகம். பள்ளிகளில் கிரைம் நாவல் படித்து மாட்டிக்கொண்ட அனுபவங்களும் உண்டு. சக்திவேல் அண்ணன் அறிமுகம் கிடைத்தபின்தான் பாலகுமாரனும், சுஜாதாவும் எனக்கு நெருக்கமாகினர். வீட்டில் அதுவரை அடுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான கிரைம் நாவல்களையும். பாக்கெட் நாவல்களையும் பழைய புத்தகக்கடையில் போட்டு பாலகுமாரன் நாவல்களை வாங்கிப் படிக்கத் துவங்கினேன். அகல்யா, இரும்புக்குதிரைகள், மெர்க்குரி பூக்கள், பந்தயப்புறா, கரையோர முதலைகள், ஏழாவது காதல் போன்ற அவரின் நாவல்கள் இன்றும் என் நினைவில் இருக்கின்றன. கடலோரக் குருவிகள் என்றொரு நாவல். தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான உறவைச் சராசரி தளத்திலிருந்து விலகி ஆய்ந்திருக்கும். வழக்கமான ‘நாவல் பாணி’யில் அமைந்திராத அந்நாவல் அக்காலகட்டத்தில் நான் பலமுறை படித்தது. ஒவ்வொருமுறையும் அந்நாவல் என்னை ஒவ்வொருவிதமாய் யோசிக்கத் தூண்டியதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. சமீபமாய்க் கூட அந்நாவலை எடுத்துப் பார்த்தேன். முந்தைய பரவசத்தைத் தராவிட்டாலும், அந்நாவலின் உரையாடல்கள் இப்போதும் புதிதுபோலவே இருந்தன. கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான பாலகுமாரன் நாவல்களைச் சில ஆண்டுகள் முன்புவரை கூட என்னிடம் வைத்திருந்தேன். பிறகு ஏனோ அவற்றை நண்பர்களுக்குத் தந்துவிட்டேன்.
ஒருமுறை சக்திவேல் அண்ணன் அவர் பழைய வீட்டில் இருக்கும் புத்தகங்களை எடுத்து வர என்னையும் அழைத்துப்போனார். அங்குதான் ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு மற்றும் சில நாவல்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இதழ்களில் அவரின் சிறுகதைகளைப் படித்திருந்தாலும் புத்தகங்களாக அவற்றைக் கண்டபோது கிடைத்த மகிழ்ச்சியை உள்ளவாறே பகிர்ந்து கொள்தல் சிரமம். ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ போன்ற நாவல்களை அவர் படிக்கும்படி எனக்குத் தந்தார். எளிமையான நடையாய் இருந்தாலும் ஏனோ அந்நாவல்களுக்குள் நான் நுழையவே இல்லை. இருந்தாலும் என் வாசிப்பு அலமாரியில் அந்நாவல்களைப் பத்திரமாய் வைத்துக் கொண்டேன். இடையில் என் வாசிப்பு வேறோரு பக்கம் நகர்கிறது. குக்கூ சிவராஜ் சுந்தர ராமசாமியை அறிமுகப்படுத்தி வைக்கிறார். ‘ஜேஜே : சில குறிப்புகள்’ நாவலைப் பலமுறை வாசிக்கிறேன். கண்ணைக்காட்டி காட்டில் விட்டது போன்றிருந்தது. என்றாலும், அந்நாவலின் நடைவசீகரம் என்னைத் திரும்ப திரும்ப அதை வாசிக்கத் தூண்டியபடியே இருந்தது. தொடர்ந்து க.நா.சுவின் ‘பொய்த்தேவு’, அசோகமித்திரனின் ‘தண்ணீர்’, எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’, ஆ.மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ போன்ற நாவல்களை வாசிக்கும் வாய்ப்பு. வாசிப்பின் பரவசம் சிறுமலரொன்றின் நறுமணமாய் எனக்குள் விரிந்து கொண்டிருந்தது. இருந்தும் ஏனோ வாசிப்பு அலமாரியில் இருந்த ஜெயகாந்தன் நாவல்களைப் படிக்கவே தோன்றவில்லை.
சிலமாதங்களுக்கு முன் எதேச்சையாக துறவு எனும் ஜெயகாந்தனின் சிறுகதையைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. முன்பு நான் அக்கதையைப் படித்துக்கூட இருக்கலாம். ஆனால், இப்போது அக்கதை என்னுள் முதல் வாசிப்பிலேயே நன்கு அமர்ந்து கொண்டது. இடைவெளிவிட்டு பலமுறை அச்சிறுகதையை வாசித்தேன். எளிமையான நடையில் அமைந்த அக்கதையின் மையப்புள்ளி ஒருவனின் ஆன்மீகத் தேடல். எப்போதும் கடவுள் தேடலிலேயே இருக்கும் மாணவன் சோமுவின் பார்வையில் அக்கதை அமைந்திருக்கும். சுருக்கமாகச் சொல்வதானால் அவனுக்கு வேதாந்தப் பித்து. அப்படி இருப்பவனை இருபத்தேழு நாட்கள் நடக்கும் அருளானந்தரின் பிரசங்கம் மேலும் உசுப்புகிறது. அவர் சொல்லும் லோக குருவைப் போலத் தானும் இருந்துவிட வேண்டும் என்பதான சிந்தனையோடு இமயமலைக்குக் கிளம்பத் தயாராகிறான் சோமு. அப்போது அவன் எதிர்கொள்ளும் சம்பவங்களே கதையின் பிற்பாதி. சதாசிவம் பிள்ளை, பங்கஜம் அம்மாள், ராஜி, அருளானந்தர், லோக குரு, நகப்பழம் விற்பவள், அதை வாங்கிச் சுவைக்கும் பொக்கைவாய் தாத்தா, பாம்பு எனக்கதையின் பாத்திரங்களை விலகி நின்று பார்த்தபோதுதான் அவை குறியீடுகளாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அப்படியான குறியீட்டுத்தளத்தில் அக்கதையின் சோமுவாக நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோமோ என நினைக்கத் தோன்றியது. வேதாந்தத்தைக் குறித்த கருத்தியலுக்கும், உலக நடைமுறைக்கும் இடையேயான முரண்பாட்டை விளக்க ஜெயகாந்தன் முயன்றிருந்தாலும் அதன் ஆழத்தில் ‘விளங்கிக் கொள்ள முடியாத பித்தையே’ சொல்லியிருப்பதாகப் படுகிறது. ’பித்து பிடித்திருப்பதாக’ நாம்தான் நினைக்கிறோம்; ‘பித்திலிருந்து விடுபட்டதாக’வும் நாம்தான் நினைக்கிறோம். ‘பித்தின்’ வழியாக நமக்குள் நிகழும் அகத்தின் மாயக்காட்சிகளை அழகாக அக்கதையில் நான் கண்டேன். ”தன்னை ஏதோ ஒன்று பின்னாலிருந்து திரும்ப அழைப்பது போல உணர்ந்தான்” எனும் வரியின் சுழலில் நான் அதிகம் திக்குமுக்காடிப் போனேன். எப்பேர்ப்பட்ட ஆளுமையை நான் தவறவிட்டிருக்கிறேன் என்பதை அவ்வாளுமையே எனக்குக் காட்டியதில் கூடுதல் மகிழ்ச்சி. துவக்கத்தில் ஜெயகாந்தனை ‘இலட்சியவாதி’யாக மட்டுமே அணுகியதும், பிற்பாடே ‘அவர் குழப்பவாதி’ என விலகியதும் புரிய வந்தது. புற உலகின் பார்வையில் ஒரு வடிவத்துக்குள் நிற்காதவராகத் தோன்றும் வடிவமே அவரின் இயல்பு என்பதை நான் தாமதமாகத்தான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.
துறவு சிறுகதையால் நான் பந்தாடப்பட்ட அதே காலகட்டத்தில்தான் அவரின் வேதம் என்றால் என்ன எனும் உரையைக் கேட்கவும், படிக்கவும் நேர்ந்தது. அனிச்சையாக நான் நொறுங்கிப்போனேன். அவரின் குரலால் அவ்வுரையைக் கேட்டும், தனியாக பலமுறை அவ்வுரையைப் படித்தும் விதிர்த்துக் கிடந்த கணங்களை இப்போதும் பெருமிதமாகவே உணர்கிறேன். “நாமெல்லாம் கடவுளைக் கருத்துக்களில் தேடுகிறோம். நூல்களில் தேடுகிறோம். கவிதையின் தேடுகிறோம். பிரபஞ்சத்தில் தேடியதற்குப் பெயர்தான் வேதம்” எனும் வாக்கியத்தின் அனல் இன்றும் எனக்குள் இருக்கிறது. வேதங்களை ‘புனிதமாக’, ‘அபுனிதமாக’ ரிக், யசூர், சாம, அதர்வணமாக மட்டுமே நாம் பார்த்துக் கொண்டிருக்க எப்பேர்ப்பட்ட தரிசனம்? பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள உதவுவதே வேதம் என்பதாக நான் அதை விரித்தும் கொண்டேன். திருமுறைகளும், சித்தர் பாடல்களும், இலக்கியப்படைப்புகளும் வேதமாகத் துலங்கும் காட்சி எனக்குள் அப்போது புலர்ந்ததுதான். ’இல்லை’ என்பதாக வேதம் சொல்வதை வலியுறுத்தும் ஜெயகாந்தன் அதைப்பிடித்துக் கொண்டே மேல்நகர்கிறார். ‘ஆம்’ எனச் சொல்லும் கம்பராமாயணப்பாடல் வரியை உதாரணம் காட்டுகிறார். ‘ஆம்’, ‘இல்லை’ என்பதைப் புறவயமாக அணுகும் ஒருவனுக்கு அவர் சொல்வதைப் புரிந்து கொண்டுவிடவே முடியாது. “நம்மால் எங்கு அறிய முடியாமல் திகைத்து நிற்கிறோமோ, அந்த அறியாமையில் கிடைக்கின்ற ஒளி வேதாந்தம்” எனும் அவரின் வரிகளில் பலநிமிடங்கள் சிலிர்த்து அமர்ந்திருந்தேன்.
ஜெயகாந்தனை ஒரு வடிவில் வைத்துப் பார்க்க முயன்ற என் முட்டாள்தனம் இப்போது புரிகிறது. ஒரு வாழ்க்கையை அவர் வாழவில்லை. அப்படி ஒரு வாழ்க்கையை வாழச்சொல்லித்தான் உலகம் வற்புறுத்தி இருக்கிறது. ஆனால் அவரோ பல வாழ்க்கைகளை வாழ்ந்திருக்கிறார். எப்போதும் புறத்தின் கருத்துகளுக்கு அவர் அதிகம் மதிப்பளிக்கவில்லை. மாறாக, தன் அகத்தின் உணர்வுகளுக்கே முக்கியத்துவம் தந்திருக்கிறார். அதனால்தான் நம்மால் அவரைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர் மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும் அப்படித்தான். ஆனால் நாமோ புறத்தின் கருத்தியல் ஒன்றுக்குள் ஒளிந்து கொண்டு புத்திசாலிகளைப் போல நடித்துக் கொண்டிருக்கிறோம். தனியே உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் அவ்வுண்மையை எளிதில் அறிந்து கொள்ளலாம். அதன்பின் என்ன செய்யப்போகிறோம் எனும் கேள்விதான் ஆபத்தானது. ஆபத்தைத் துணிச்சலாக எதிர்கொண்டவர் ஜெயகாந்தன். அதைத் தாமதமாகக் கண்டுகொண்டதில் வருத்தமில்லை. இப்படி எத்தனைபேரை நாம் கண்டுகொள்ளாமல் இருந்க்கிறோமோ எனும் குற்ற உணர்வுதான் கொஞ்சம் அலைக்கழிக்கிறது.
என்னிடம் இருக்கும் ஜெயகாந்தனின் நாவல்களை வரும்நாட்களில் வாசிக்கப் போகிறேன். வாசித்த பின்பு எனக்குள் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் அவரிடம் அதுபற்றி நிச்சயம கலந்துரையாடவும் செய்வேன். ஜெயகாந்தன் மரணித்து விட்டதாய்ச் சொல்கின்றனர். எனக்குள் இப்போதுதான் அவர் உயிர் பெற்றிருக்கிறார்.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.