பேசாத பேச்செல்லாம்

 

எஸ்.வையாபுரிப்பிள்ளை

ஃபேஸ்புக்கில் நண்பர் அரவிந்தன் கண்ணையன் நான் சென்னையில் தமிழ்ப்பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் ஆற்றப்போகும் உரையைக்கடுமையாகக் கண்டித்து, மறுத்து எழுதியிருப்பதாக ஒரு நண்பரின் தகவல் வந்தது. நான் வரலாற்றாசிரியனோ மானுடவியலாளனோ அல்ல என்றும் வரலாற்றாசிரியர்கள்தான் வரலாற்றைப்பற்றி எழுதவேண்டும் என்றும் அக்கருத்தை நானே எழுதியிருக்கிறேன் என்றும் சுட்டிக்காட்டி நான் புனைவெழுத்தாளன் என்றுதான் அவர் நம்பிக்கொண்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்

நான் புனைவெழுத்தாளன்தான். அதை அவ்வளவு ரகசியமாக நான் வைத்திருக்கவில்லை. சந்தேகமிருந்தால் அவர் நேரடியாகவே எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டிருக்கலாம். என்னால் சில ஆதாரங்களையும் அனுப்பமுடியும். ஃபேஸ்புக்கில் இந்த ஐயங்களை எழுப்பி ஏன் அங்கே ஜாலியாக இருப்பவர்களைத் தொந்தரவு செய்கிறார் என்று தெரியவில்லை.

அரவிந்தன் கண்ணையன் அவர்களுக்கு ஒரு பதில். நான் வரலாற்றைப்பற்றிப் பேசவில்லை. மானுடவியல் பற்றியும் பேசவில்லை. பண்பாட்டைப்பற்றி மட்டுமே பேசுகிறேன். தலைப்பும் சரி, அதன் கீழே உள்ள குறிப்பும் சரி அதை தெளிவுபடுத்துகின்றன. பண்பாட்டைப்பற்றி எழுத்தாளன் பேசக்கூடாது என்று இன்றுவரை எவரும் சொல்லவில்லை. எங்காவது எவராவது சொல்ல ஆரம்பிப்பதற்குள் பேசிவிடலாம் என நினைக்கிறேன்.

இந்தியவரலாற்றாய்வில் பொதுவாகவும் தமிழ்வரலாற்றாய்வில் குறிப்பாகவும் இலக்கியத்திற்கு முதன்மை இடம் உண்டு. பழந்தமிழ்வரலாறு, பண்பாடு இவைபற்றி நமக்குக் கிடைக்கும் அனைத்துத் தரவுகளும் இலக்கியத்தில் உள்ளவைதான். ஆகவே இங்கே இலக்கிய ஆய்வும் வரலாற்றாய்வும் பிரிக்கமுடியாதபடி கலந்துள்ளன. இலக்கியத்தின் வெளிப்பாட்டுமுறைகளைப்பற்றிய அறிவும் அவற்றை பகுத்தறியும் நுண்ணுணர்வும் உடைய இலக்கியவாதி மட்டுமே அவற்றைக் கையாள முடியும்.

உதாரணமாக பழந்தமிழ் இலக்கியத்தில் காட்டில்வாழும் விலங்குகளில் யானைகள்,மான்கள்,செந்நாய்கள் போன்ற சில மட்டுமே பேசப்பட்டுள்ளன. அவற்றைக்கொண்டு அன்றைய மக்களுக்கு அவற்றைப்பற்றி மட்டுமே தெரியும் என்ற முடிவுக்குச் செல்வதே ஒரு நேரடியான தகவல்சார்ந்த ஆராய்ச்சியின் வழி. அம்மிருகங்கள் படிமங்கள். ஆகவே அவை திரும்பத்திரும்ப கையாளப்பட்டன, நுட்பமாக அவற்றின் இயல்புகள் புனைவாக மாற்றப்பட்டன என்பது ஓர் இலக்கியம் சார்ந்த அணுகுமுறை. இலக்கியத்தைப்பற்றி இலக்கியவாதிதான் முதன்மையாகப் பேசமுடியும் என்பதையாவது நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறுதான் பழந்தமிழக வரலாற்றின் அடிப்படை இலக்கியஅறிஞர்களால் இலக்கியத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, பி.டி.ஸ்ரீனிவாச அய்யங்கார்,கெ.என்.சிவராஜபிள்ளை, கவிமணிதேசிகவினாயகம் பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, ஔவை துரைசாமிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரம் முதலிய தமிழறிஞர்களின் கூட்டான உழைப்பால் உருவான அறிவியக்கம் அது. தமிழின் முதன்மையான அறிவியக்கமும் அதுதான். அதைத்தான் ஆரம்பகட்ட வரலாற்றாசிரியர்களும் ஆதாரமாக எடுத்துக்கொண்டனர்.

அந்தப்போக்கு தன் எல்லைகளை உணர்ந்து தன்னை புதுப்பித்துக்கொள்ளாமல் முன்செல்வது இன்று உருவாக்கும் பிழைகளையே நான் ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டினேன். இலக்கிய அறிஞர் இலக்கியத்தில் இருந்து உருவாக்கும் வரலாற்று- பண்பாட்டுச் சித்திரம் என்பது ஒரு முன்வரைவு மட்டுமே. அதை வரலாற்றறிஞர்களும் பிற மானுடஞானத்துறைகளின் அறிஞர்களும் சேர்ந்து முழுமைசெய்யவேண்டும். அத்துறைகளைப்பற்றிய அறிவு சற்றுமில்லாமல் இலக்கியத்தை மட்டுமே அறிந்துகொண்டு இறுதி முடிவுகளுக்கு வருவது பிற்காலத்தைய தமிழிலக்கிய ஆய்வாளர்களின் வழக்கமாக ஆகியது. அது இன்று சாதிசார்ந்த முன்முடிவுகளை உருவாக்கும் நிலைக்குச் சென்றுள்ளது.

நான் சுட்டிக்காட்டியதை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். இலக்கிய அறிஞர் இலக்கியம் வரலாற்றுக்கு அளிக்கும் அடிப்படைகளை பற்றி மட்டுமே பேசி நின்றுவிடுவதே நல்லது. வரலாற்றாய்வு சார்ந்த முடிவுகளை நோக்கிச் செல்லக்கூடாது

ஆனால் வரலாற்றாய்வு வேறு பண்பாட்டாய்வு வேறு. பண்பாட்டாய்வு என்பது எப்போதுமே இலக்கியவாதியின் களம். குறிப்பாக ஓர் எழுத்தாளன் எழுதும் குறிப்பிட்ட நிலப்பகுதியின் பண்பாட்டுக்கு அவன் ஒரு அதிகாரபூர்வமான குரல்தான். உலகம் முழுக்க எழுத்தாளர்கள் பண்பாட்டைப்பற்றிப் பேசுபவர்களாகவும் விமர்சிப்பவர்களாகவும்தான் இருந்துள்ளனர். லத்தீன் அமெரிக்கப் பண்பாடு பற்றிப் பேச மார்க்யூஸுக்கு என்ன தகுதி என்றோ கரிசல்வாழ்க்கை பற்றிப்பேச கி.ராஜநாராயணனுக்கு என்ன தகுதி என்றோ எந்த விஷயமறிந்தவரும் கேட்கமாட்டார் — தமிழ் ஃபேஸ்புக் சூழலில் அதையும் கேட்டு வைப்பார்கள். எந்த தகுதியான ஆய்வாளனும் அவர்களின் பண்பாட்டுப்பதிவை, ஆய்வை ஒரு முதன்மை தரவாகவே கொள்வான். அதை கையாள்வதற்கான ஆய்வுமுறைமைகளை அவனும் கொண்டிருப்பான்.

இன்று குமரிமாவட்டமாக உள்ள பழைய திருவிதாங்கூர் நான் பிறந்து வளர்ந்த மண். நான் முப்பதாண்டுக்காலமாக எழுதிவரும் வாழ்க்கை. என் நாவல்களின் களம். திருவிதாங்கூரின் வரலாற்றுப்பின்னணியில் அமைந்த பெரிய நாவல்தான் [முடிக்கப்படாத] அசோகவனம். திருவிதாங்கூரின் பண்பாட்டுவரலாறு பற்றி நான் கேரளத்தின் முதன்மையான பல்கலைகளில் உரையாற்றியிருக்கிறேன். கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவை முக்கியமான ஆய்வாளர்களால் மேற்கோளாக பலமுறை காட்டப்பட்டும் உள்ளன.

நான் உரையாற்றியபின்னரே வழக்கமாக விவாதங்கள் கிளம்பும். இப்போது உரையாற்றும் செய்திக்கே விவாதங்கள் கிளம்பத் தொடங்கிவிட்டன. இனி உரையாற்றிவிடுவானோ என்ற சந்தேகத்திற்கே விவாதங்கள் வெடிக்கும் போலிருக்கிறது

பிகு

நம்பூதிரி சர்க்கஸ் பார்க்கப்போனார். ஒருவன் ஒரு சிறிய வளையம் வழியாக நுழைந்துவந்தான். மேலும் சிறிய வளையம் வழியாக வந்தான். அதைவிடச் சிறிய வளையம் வழியாக நுழைந்தான்

மிகச்சிறிய வளையம் வழியாக நுழைந்து பிதுங்கிவந்தான். அதைவிட சிறிய வளையத்தை கையிலெடுத்தபோது நம்பூதிரி திகைத்தார். அவன் பிதுங்கி நசுங்கி வந்துவிட்டான்.நம்பூதிரி வாய்விட்டு வியந்துவிட்டார் ‘இப்டியே போனா இவன் வளையமில்லாமலேயே நுழைஞ்சிருவான் போலிருக்கே”

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் வாசிப்பு – கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 86