எனக்கு மிகவும் பிடித்தமான பெயர்களில் ஒன்று காட்சன். [Godson] . எல்லா மனிதர்களும் அப்பெயருக்குப் பொருத்தமானவர்களே. மரபான பொருளில் அது மனிதகுமாரனையும் குறிக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு அப்பெயருள்ள இளைஞர் என்னை வந்து சந்தித்தார். அவர் அப்போது இறையியல் படித்து முடித்துவிட்டு கிறித்தவ அறக்கட்டளை ஒன்றால் நடத்தப்படும் பனைத்தொழில் பாதுகாப்பு அமைப்பு ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சர்ச்சில் கிறிஸ்துமஸ் உரை ஒன்றை நிகழ்த்துவதற்கான முதல்வரைவு ஒன்றை எழுதிக்கொண்டு வந்திருந்தார். அதைப் படித்து கருத்து சொல்லமுடியுமா என்று கேட்டார்.
கிறிஸ்துமஸ் உரைகளை நான் நிறைய கேட்டிருக்கிறேன். நானே சில நிகழ்த்தியும் இருக்கிறேன். காட்சனின் உரை மிக வித்தியாசமான ஒன்று. கலப்பைக்கும் சிலுவைக்கும் இடையேயான உருவ ஒற்றுமை பற்றி பேச ஆரம்பித்த அக்கட்டுரை ஆன்மீகமான உழுதலையும் விளைச்சலையும் தொட்டு முழுமை அடைந்தது. அதில் ஒன்றுமே செய்வதற்கில்லை, சிற்சில சொற்றொடர்ப் பிழைகளைத் தவிர என்று சொன்னேன். அதன்பின் காட்சன் அடிக்கடி வருவார்.”அண்ணன், இப்ப ஒரு விஷயம் படிச்சேன்..” என்று சொல்வார் நிறையப் பேசிக்கொண்டிருப்போம். அவர் நவீனத்தமிழிலக்கியத்துக்கு அறிமுகமானார்.
காட்சனுக்குப் பனைமீது அபாரமான ஈடுபாடு உண்டு. பனையோலையில் கலைப்பொருட்கள் செய்வதில் தொடங்கி பனைபற்றிய விரிவான ஆய்வுகளாக அந்த ஈடுபாடு விரிகிறது. பனையை அறிய நிறைய பயணங்கள் செய்திருக்கிறார். எந்த ஒரு விஷயத்திலும் நம் மனம் குவியுமென்றால் அது நம்மை முழுக்க உள்ளே இழுத்துக்கொண்டு பிரபஞ்சத்தைக் காட்ட ஆரம்பித்துவிடும். இத்தகைய ஆர்வங்கள் கொண்டவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
அவரைப்பற்றி எண்ணும்போதெல்லாம் அவருக்குப் பொருத்தமான சிறந்த பணி போதகர்பணிதான் என்று எனக்குத்தோன்றும். அதே சமயம் நமது தேவாலய அரசியலில் அவர் மாட்டிக்கொண்டால் அவரது இனிய இலட்சியவாதம் மழுங்கிவிடும் என்ற எண்ணமும் ஏற்படும். அவர் மும்பையில் ஆங்கிலிகன் சர்ச்சில் போதகராகச் சென்றபோது அதை சரியான முடிவா இல்லையா என்று சொல்லத்தெரியவில்லை. ஆனால் காட்சன் இப்போது மும்பையில் மகிழ்ச்சியாக இருக்கிறார். மும்பைக்குப் போனவர்கள் எல்லாருமே அபப்டித்தான், அந்த நெரிசலையும் சத்தத்தையும் வாயாரச் சபித்தபடி அங்கே மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
காட்சன் ஒரு இணைய தளம் தொடங்கியிருக்கிறார்.தன் அந்தரங்க தளத்தில் ஆன்மீகமான பயணத்தை நேர்மையாகவும் நேரடியயாகவும் நிகழ்த்த முயலும் ஒரு போதகரின் சொற்கள் அவை. நண்பர்கள் அதைக் கவனிக்கவேண்டுமென விரும்புகிறேன்.
http://pastorgodson.wordpress.com
other links