பின்நவீனத்துவம் – விளையாட்டுக்கையேடு

1
பின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது

காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை என்பது. நவீனத்துவம் என்ற சொல்லே சரியாக வரையறுக்கப்படாமல் இருந்தது. அதில் பிழையேதும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு பண்பாட்டுவெளிக்கும் அதற்குரிய தத்துவார்த்தமான கோட்பாட்டுரீதியான பிரச்சினைகள் உண்டு. உலகத்தில் அனைத்துப்பகுதிகளிலும் ஒரே விஷயம் பேசப்படவேண்டும் என்பதில்லை. நவீனத்துவம்,பின்நவீனத்துவம் போன்ற சிந்தனைகளே அறிமுகமாகாமல் மிகத்தீவிரமான அறிவியக்கம் நிகழும் ஒரு சூழல் இருக்கக் கூடும். உண்மையில் பின்நவீனத்துவம் சொல்வதும் அதுவே. ஆனால் இங்கே பின்நவீனத்துவம் பேசியவர்கள் இங்கு முன்னரே பேசப்பட்டவை எல்லாம் ‘பாடாவதி’ சிந்தனைகள் என்றும் அவர்கள் இருப்பதிலேயே புதிய சிந்தனைகளைக் கொண்டு இறக்குவதாகவும் எண்ணிக்கொண்டனர். அந்த முதிர்ச்சியின்மை காரணமாக மார்க்ஸியம் போன்ற பிறசிந்தனைகள் இங்கே உருவாக்கிய பாதிப்பை எந்தப் பின்நவீனத்துவச் சிந்தனையாளரும் உருவாக்கவில்லை

சிந்தனைகள் நேரடியான வாழ்க்கைச்சூழலில் இருந்து உருவாவதும், வாழ்க்கையை முன்வைத்துப் பேசுவதும்தான் இயல்பானது. அழகியல்தளத்திலும் தத்துவத்தளத்திலும் பேசப்படும் விஷயங்களுக்கு அந்தப் பண்பாட்டில் ஒரு பெறுமதி இருக்கவேண்டும். அவ்வகையில் முப்பதுகள் முதல் எண்பதுகளின் இறுதிவரை தமிழ்ச்சூழலில் முதன்மையாகப்பேசப்பட்டது மார்க்ஸிய சிந்தனையாளர்கள் முன்வைத்த இலக்கியம் குறித்த கருதுகோள்கள்களுக்கும் இலக்கியத்தை கலைநிகழ்வாகப் பார்த்தவர்கள் முன்வைத்த கருதுகோள்களுக்கும் இடையேயான மோதல்தான். தமிழ்ச்சூழல் அதற்கேயுரிய பல சிந்தனைகளையும் சொற்களையும் உருவாக்கிக்கொண்டு அதுசார்ந்த ஒரு தெளிவை நோக்கிச் சென்றது என்பதை இப்போது காணமுடிகிறது.

1 [ஜிம் பவல்]

இப்பிரச்சினை தமிழில் மட்டுமல்ல வறுமையும், நிலப்பிரபுத்துவகால சமூகமனநிலைகளும், தொழிற்சூழலில் கடுமையான சுரண்டல் மற்றும் அடிமைத்தனமும் இருந்த பெரும்பாலான மூன்றாமுலகநாடுகளில் இருந்ததுதான். அன்று உருவாகிவந்த தேசியவிடுதலைசார்ந்த, சமூகசீர்திருத்தம்சார்ந்த, தொழிலாளர்வர்க்க நோக்குகொண்ட எழுத்துமுறைகள் கலை என்றும் நுட்பம் என்றும் தனிமனிதனின் அகவெளிப்பாடு என்றும் தன்னை முன்வைத்த எழுத்துமுறைகளை கடுமையாகத் தாக்கிச் சிதறடிக்க முயன்றன. ஆகவே அவை தங்களை மரபார்ந்த மதச்சாயல் கொண்ட சொல்லாட்சிகளில் இருந்து விடுவித்துக்கொண்டு புதிய ஜனநாயகச்சூழலில் வைத்து கலையின் உருவாக்கத்தையும் தொடர்புறுத்தலையும் வடிவங்களையும் விளக்கவேண்டியிருந்தது.

இந்த பெருவிவாதத்தின் வீச்சையும் அதன் சாதனைகளையும் எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடமுடியாது. கலைக்கும் அறவுணர்வுக்குமான உறவு, பண்பாட்டுக்கும் பொருளியல் அடிப்படைகளுக்குமான உறவு ஆகியவை சார்ந்து தமிழில் நிகழ்ந்த விவாதங்கள்தான் சென்ற நூறாண்டுகளில் இங்கே நிகழ்ந்த உண்மையான தீவிரமான நவீனசிந்தனைகள். தமிழ்ச்சூழலில் ஜீவா, எஸ்.ராமகிருஷ்ணன்,ஆர்.கே.கண்ணன், கைலாசபதி, சிவத்தம்பி, நா.வானமாமலை,எஸ்.என்.நாகராஜன், ஞானி, தோத்தாத்ரி, ராஜ் கௌதமன், அ.மார்க்ஸ்,யமுனா ராஜேந்திரன் போன்றவர்களை மார்க்ஸிய அழகியலின் குரலாகச் சொல்லலாம். வ.வே.சு.அய்யர், ரா.ஸ்ரீ.தேசிகன். ஏ.வி.சுப்ரமணிய அய்யர், புதுமைப்பித்தன், க.நா.சு, சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி, மு.தளையசிங்கம்,பிரமிள்,வெங்கட் சாமிநாதன், வேதசகாயகுமார் போன்றவர்களை கலைவாதத்தின் தரப்பினர் எனலாம். இவர்கள் ஒவ்வொருவரின் பார்வையும் வேறுபட்டது என்பதையும் கூறியாகவேண்டும்.

இவ்வாறு நடைமுறைத்தேவை சார்ந்து உருவான விவாதக்குவியம் ஐரோப்பியச் சூழலில் எழுந்த பலவிவாதங்களைப் பொருட்படுத்தவில்லை. முக்கியமாக இரண்டு விஷயங்களை. ஒன்று, வலுவான தனிமனித நோக்கின் அடிப்படையில் சிந்தனையையும் கலையையும் வகுத்துக்கொண்டு அவ்வரையறையின் அடிப்படையில் உலகளாவிய முறையில் பண்பாட்டுச்செயல்பாடுகளை தொகுத்துக்கொள்ள முயன்ற நவீனத்துவ சிந்தனைகளை. இன்னொன்று, தத்துவவிவாதங்களுக்கு அடித்தளமாக அமைவது என்ன என்ற வினாவை ஒட்டி கணிதமும் பின்னர் மொழியும் அடைந்த முக்கியத்துவத்தை. நவீனத்துவத்தின் ஆணிவேர்கள் என்று சொல்லப்படும் மார்ட்டின் ஹைடெக்கர், மாக்ஸ் வெபர் போன்றவர்கள் இங்கு பேசப்படவேயில்லை. அதேபோல தத்துவத்தை தொகுத்துநோக்கவும், மொழி சார்ந்து அணுகவும் முயன்ற ஏ.என்.வைட்ஹெட், ரஸ்ஸல், விட்ஜென்ஸ்டீன் போன்றவர்களும் இங்கே பேசப்படவேயில்லை.

அது இயல்பானது, ஏனென்றால் மரபின் பிடியிலிருந்து விடுபடுவதை மெல்லத் தொடங்கியிருந்த தமிழ்ச்சிந்தனையின் சவால்களும் சிக்கல்களும் வேறுதளத்தில் இருந்தன. மரபிலிருந்து விடுபடுவது, மரபை வேறுவகையில் மறுஅமைப்பு செய்துகொள்வது என அவன் தத்தளித்துக்கொண்டிருந்தான். நவீனத்துவச் சிந்தனைகள்கூட ஓரளவுக்குத்தான் இங்கே அந்த தத்தளிப்புடன் உரையாடின. மார்க்ஸியசிந்தனைகள் அந்த தத்தளிப்பை எதிர்கொண்டதுபோல அவற்றால் எதிர்கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் நவீனத்துவச் சிந்தனைகளும் வெறும் ஏட்டறிவாக மட்டுமே வந்தன. இலக்கியநுட்பம் என்ற அளவிலேயே பேசப்பட்டன. மார்க்ஸியம் நேரடியாக மண்ணுடன், மக்களுடன் தொடர்புகொண்டிருந்தது.

அத்துடன் இன்னொன்றையும் சொல்லவேண்டும். மேலைநாட்டு நவீனத்துவச் சிந்தனைகள் அங்குள்ள விரிவான கல்விச்சூழலில் விவாதிக்கப்பட்டவை. அச்சூழலே பின்நவீனத்துவச் சிந்தனைகளின் தளம். இங்கே நம்முடைய கல்விச்சூழலில் அத்தகைய சிந்தனைகளுக்கு இடமே இருக்கவில்லை. அதையும் சூழலைக்கொண்டு புரிந்துகொள்ளமுடியும், அரைநூற்றாண்டுக்காலம் தமிழ்க்கல்வித்துறை கையாண்ட பேசுபொருட்கள் அதற்கு ஒருநூறாண்டுமுன்னரே தமிழ்ச்சூழலில் உருவாகி வந்த தமிழ்உள்ளத்தை மறு உருவாக்கம் செய்த பண்பாட்டியக்கங்களுடன் சம்பந்தப்பட்டவை. தமிழ்ப்பதிப்பியக்கம்,தனித்தமிழ்இயக்கம் போன்றவை முதன்மையாக. பின்னர் பகுத்தறிவியக்கம். நம் கல்வித்துறையின் சாதனைகள் அந்தத் தளத்திலேயே அமைந்தன.

பின்நவீனத்துவம் இங்கே அறிமுகம்செய்யப்பட்டபோது அதைப்பற்றி பேசியவர்களில் மிகச்சிலரே அங்குள்ள பின்புலம் உணர்ந்து இங்குள்ள சூழலுக்கு ஏற்ப விவாதத்தை முன்னெடுத்தவர்கள். மற்றவர்கள் அதுவரை நிகழ்ந்த அறிவியக்கங்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்து எள்ளலும் எக்காளமுமாக பேசி விவாதத்திற்கான வாசல்களையே மூடினர். அவர்களுக்கு பின்நவீனத்துவச் சிந்தனைகள் ஐரோப்பியச்சூழலில் எந்த விவாதப்பின்புலத்துடன் உருவாயின என்றும் தெரியவில்லை. இங்கே அவை ஆற்றச்சாத்தியமான பணி என்ன என்றும் புரியவில்லை. புதிய அதிரடிக்கருத்துக்கள் என்ற அளவிலேயே முன்வைத்தனர். இதனாலேயே பின்நவீனத்துவம் என்பது ஒருவகை ஒவ்வாமையை உருவாக்குவதாகவே இங்கே வந்தது, நீடித்தது.

நடைமுறையில் இங்கே பின்நவீனத்துவச் சிந்தனை என்பது இலக்கியம் என்ற இயக்கத்தை நிராகரிப்பது, அறிவுக்கு எதிரான வெறும் கலகம், உருவ ஒழுங்கற்ற இலக்கிய எழுத்துமுறை என தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அதற்கான பதிலாகவே பொதுவாக விவாதங்கள் நிகழ்ந்தன. இங்கே மார்க்ஸியம் வலுவான ஒருதரப்பாக இருந்தும்கூட அதனுடன் பின்நவீனத்துவச் சிந்தனைகள் பெரிய அளவில் உரையாடல் எதையும் திறக்கவில்லை.

தமிழில் பின்நவீனத்துவ அடிப்படைகளை சூழலுணர்வுடன் பின்னணிப்புரிதலுடன் பேசிய சிலரில் ஒருவர் க.பூரணசந்திரன் .அவரது மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது ‘பின்நவீனத்துவம் தொடக்கநிலையாளருக்கு’ என்ற நூல். காலம்கடந்தபின்னராவது பின்நவீனத்துவச் சிந்தனைகளை பொதுவாசகனுக்குரிய கோணத்தில் அறிமுகம் செய்யும் நூல்கள் வருவது பாராட்டுக்குரியது.

ஜிம் பவல் ஆங்கிலத்தில் எழுதிய இந்தச்சிறிய நூல் பாடப்புத்தகத்தன்மை வந்துவிடக்கூடாதென்ற கவனத்துடன் உருவாக்கப்பட்டது. மொழியாலான ஒரு சித்திரத்தை அளிப்பதற்குப்பதிலாக சிந்தனையை ஒரு மனவரைபடமாக ஆக்க முயல்கிறது. ஆகவே கோட்டொவியங்கள், கேலிச்சித்திரங்கள், துணுக்குகள் படங்கள் என பலவற்றையும் கலந்து ஒரு சுவாரசியமான வாசிப்பை உருவாக்குகிறது. இந்நூலின் முக்கியமான கவர்ச்சியே இதுதான்.

பின்நவீனத்துவம் கலை, இலக்கியம் போன்றவற்றில் சில புதியவடிவங்களையும் தத்துவத்தில் சில வலுவான வினாக்களையும் முன்வைத்து ஓரளவு பின்னகர்ந்து சற்றே கேலிக்குரியதாக ஆகிவிட்டிருக்கும் இன்றைய சூழலில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. மெல்லிய கேலியுடன் செயற்கைச்சிக்கல் கொண்ட பின்நவீனத்துவ எழுதுமுறையை அறிமுகம் செய்தபடித்தான் இது ஆரம்பமாகிறது. கட்டிடக்கலையில் நவீனத்துவம் எப்படி ஓர் அமைப்புவாதத்தை உருவாக்கியது என்றும் பின்நவீனத்துவம் அதன் சிதறடிப்பாக வெளிப்பட்டது என்றும் விளக்குகிறது. கட்டிடக்கலையின் உவமைகளைப் பயன்படுத்தி நவீனத்துவம் கட்டி எழுப்பிய ஒவ்வொன்றும் எப்படி மெல்லமெல்ல பின்நவீனத்துவக் காலகட்டத்தில் சிதறடிக்கப்பட்ட நிலையில் உள்ளன, அவை எப்படி சிந்தனையிலும் கலையிலும் வெளிப்படுகின்றன என்று காட்டுகிறது. நவீனத்துவத்திற்கும் நுகர்வியத்துக்குமான உறவை தமிழில் இத்தனை சுவாரசியமாகப் பேசிய இன்னொரு நூல் இல்லை என்றே சொல்லமுடியும்.

இந்த விரிவான பின்புலத்தில் ஃபூக்கோ, பூத்ரியார், தெரிதா, டில்யூஸ்-கத்தாரி என பின்நவீனத்துவத்தின் அடிப்படைச்சிந்தனையாளர்களாகக் கருதப்படும் ஆளுமைகளை இந்நூல் அறிமுகம் செய்கிறது. புத்தகம் போல நேர்கோடான வாசிப்பை அளிக்காமல் வாரப்பத்திரிகைபோல துளித்துளியான வாசிப்பை உருவாக்குகிறது இந்நூல். ஆனால் அதேசமயம் ஒரு புதிர்நூல்போல பலவிஷயங்களை ஒன்றுடன் ஒன்று கூட்டி ஒட்டுமொத்தமாக ஒரு சிந்தனை வரைபடத்தை நாமே உருவாக்கிக்கொள்ளவும் செய்கிறது. அவ்வகையில் மிக முக்கியமானது இது.

இந்நூலில் சுவாரசியமான இரு அவதானிப்புகளை கண்டேன். ஒன்று பூத்ரியார் டில்யூஸ் போன்றவர்கள் பின்நவீனத்துவ யுகத்தின் இயல்புகளாக சிதறுண்டநிலை, ஒருமையழிவு, விளிம்புநிலைக் கதையாடல்கள் ஆகியவற்றை குறிப்பிடுகிறார்கள். எண்பதுகளில் நின்றபடி அவை மேலும் வளர்ந்து உலகை மூடும் என முன்னூகம் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அதற்குமாறாகவே நடந்தது. மேலும் பெரிய ஒருங்கிணைந்த சிந்தனைகளும், கனவுகளுமே உருவாகிவந்தன. தொடர்பாடலில் உருவான சிதறுண்டநிலையை மேலும் வலுவான ஒருமைகளை உருவாக்கியபடித்தான் மானுடம் எதிர்கொண்டது என்கிறார்

இன்னொன்று, விளிம்புகளை உள்ளிழுத்துக்கொள்ளும்போதே அவற்றுக்கான இடத்தை அழிக்காமல் பன்முகத்தன்மையை உருவாக்கிக்கொண்ட சிந்தனைக்கு முதன்மை உதாரணமாக அவர் சுட்டிக்காட்டுவது இந்துமதத்தை, வேதாந்தத்தை.

[பின்நவீனத்துவம் தொடக்கநிலையினருக்கு. ஜிம் பவல். தமிழில் க.பூரணசந்திரன். அடையாளம் வெளியீடு]

முந்தைய கட்டுரைவிளம்பரம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகோபுலுவும் மன்னர்களும்