பெண்களின் நகரம்

வெண்முகில்நகரம் தொடங்கும்போது வழக்கம்போல ஒரு மெல்லிய கதைக்கட்டுமானமே உள்ளத்தில் இருந்தது. இது பிரயாகையின் தொடர்ச்சி போன்ற நாவல். திரௌபதியின் குணச்சித்திரம் முழுமையடைவதை காட்டுவது. பிரயாகையில் திரௌபதி பிறப்பதற்கான முகாந்திரமும் அவள் இளமையும் அவளுடைய திருமணமும் சொல்லப்பட்டிருக்கின்றன. வெண்முகில்நகரம் அவளுடைய ஆளுமை முதிர்ச்சியடைந்து, அவளுடைய மிகப்பெரிய கனவாக இந்திரப்பிரஸ்தம் எழுவதுவரை செல்கிறது.

ஆனால் வழக்கம்போல எழுதும்போது நாற்புறமும் விரிந்துசென்று மெல்ல ஒருங்கிணைந்து வடிவம்கொண்டது வெண்முகில்நகரம். இன்று இது பாஞ்சாலியின் கதைமட்டும் அல்ல, கூடவே அஸ்தினபுரிக்கு வந்துசேரும் இளவரசிகளின் கதை. அவர்களைச் சுற்றி விரியும் அரசியல் நாற்கள ஆடலின் கதை. அவர்கள் சிக்கிக்கொள்ளும் வலை இது.

மகாபாரதத்தில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் அனேகமாக இல்லை. நூறு உடன்பிறந்தவர்களின் தங்கையாகிய துச்சளையைப்பற்றியும் அஸ்தினபுரியின் அரியணை அமர்ந்த துரியோதனனின் அரசி பானுமதி பற்றியும் ஓரிரு வரிகளுக்குமேல் வியாசன் சொல்லவில்லை. பானுமதி என்ற பெயரே ஓர் ஊகம்தான். பிற்காலப்புராணங்களில்தான் அவள் பெயர் சொல்லப்பட்டுள்ளது. தூயமகாபாரதப் பிரதியில் சொல்லப்படவில்லை. ஏனென்றால் வியாசன் எழுதியது வீரகதை, குலக்கதை. இரண்டிலும் பெண்களுக்கு இடமில்லை.

ஆனால் மகாபாரதத்தை அதன் உணர்வுமுழுமையுடன் அணுகமுயலும் வெண்முரசுக்கு பெண்கள் மிகமுக்கியமானவர்கள். அவர்கள் வழியாக நிகழும் நிகர்வரலாறு இதில் வந்தபடியே உள்ளது. ஆகவே மகாபாரதத்தின் பிற்பகுதியான சாந்திபர்வம், பிற்கால இணைப்பான ஸ்த்ரீபர்வம், ஸ்காந்தம் போன்ற புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட சிறியதகவல்கள் கற்பனைமூலம் விரிவாக்கப்பட்டு பெண்களின் விரிவான சித்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

காட்டை ஆளும் பிடியானை போல திரௌபதிதான் இதில் முதன்மைப்பெண். மகாபாரதம் அவளுடைய ஆடரங்கு. ஆனால் அவளுடன் ஆடுபவர்கள் அவளால் ஆட்டுவிக்கப்படுபவர்கள் என பெண்களின் நீண்ட நிரை உள்ளது. அவர்கள் வழியாகவே வெண்முகில்நகரம் விரிந்து செல்கிறது. அவர்களை பெருவிருப்புடனும் மதிப்புடனும் அணுகும் ஆண்களின் கண்கள் வழியாக அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் உண்மையில் இப்பெண்களை இணைக்கும் சரடுகள் மட்டுமே என்று சொல்லலாம்.

முதல்நாவலான முதற்கனல் முதல் அஸ்தினபுரியில் பெண்கள் நுழைந்துகொண்டே இருக்கிறார்கள். அம்பை அம்பிகை அம்பாலிகை முதலில். காந்தாரியும் குந்தியும் பிறகு. மூன்றாம் தலைமுறையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள். அவர்களில் களமாடியவர்கள் உண்டு. திகைத்து ஒதுங்கியவர்கள் உண்டு. தோற்று உதிர்ந்தவர்கள் உண்டு. திரௌபதியின் பெரிய சித்திரம் திரண்டு வரும்போதே ஒவ்வொருவருக்கும் அவர்களின் தனியாளுமைகள் உருவாகி எழுவதையும் காணலாம். வெண்முகில்நகரம் இந்திரனுக்குரியது. குன்றாத வீரியமுடைய இந்திரனுக்குரியவர்கள் பெண்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைவரலாறும் இலக்கியமும் – ஒருவிவாதம்
அடுத்த கட்டுரைஅழியும் பாரம்பரியம், மார்க்ஸியம்