ஃபோர்டு பவுண்டேஷனும் மத்திய அரசும்

தேசியப் பாதுகாப்பு நோக்குடன் ஃபோர்ட்பவுண்டேஷன் கண்காணிக்கப்படும் என்று ராஜ்நாத்சிங் கூறியிருப்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வாசித்தேன்.இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. மூன்றாமுலக நாடுகள் பல ஃபோர்டு ஃபவுண்டேஷனை உள்ளே அனுமதிப்பதில்லை.சில நாடுகள் வெளியேற்றியுள்ளன. பல நாடுகள் கடுமையான கண்காணிப்புக்குள்ளாக்கி வைத்துள்ளன.

சுதந்திரமாக ஃபோர்டு ஃபவுண்டேஷன் செயல்பட்டது இந்தியாவில்தான். வடகிழக்கில் அமைதியைக் கொண்டுவர நரசிம்மராவ் நேரடியாக முயற்சி எடுக்கத் தொடங்கியபோதுதான் ஃபோர்டு ஃபவுண்டேஷன் மீது உளவுத்துறையின் கவனம் குவிந்தது. அது கண்காணிக்கப்பட்டது. இந்திய உளவுத்துறையிடம் அந்த அமைப்பைப்பற்றி மிக எதிர்மறையான ஏராளமான தரவுகள் இருந்தபோதிலும் மென்மையான நடவடிக்கைகளே எடுக்கமுடிந்தது.

இரண்டு காரணங்கள். ஒன்று ஃபோர்டு ஃபவுண்டேஷன் இந்தியாவில் நக்சலைட் இயக்கம் செல்வாக்கு பெற்றிருந்த காலங்களில் அதற்கு எதிராக இந்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. இடதுசாரிக்கருத்துக்களை கருத்தியல் தளத்தில் தோற்கடிக்க நிதி செலவிட்டது. இரண்டாவதாக இந்தியாவின் மதிப்பிற்குரிய கலைஞர்கள் சிந்தனையாளர்கள் பலர் அதனால் ஆதரிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்தனர். பெருவாரியானவர்கள் வெறும் கூலிச்சிந்தனையாளர்கள் என்றாலும்.

அத்துடன் மத்திய அரசு அதிகாரிகளிலேயே பலர் ஃபோர்டு பவுண்டேஷனின் நிதியுதவிப்பட்டியலில் மறைமுகமாக இருந்தனர். இப்போது ஃபோர்டு ஃபவுண்டேஷன் மேல் நடவடிக்கை எடுக்காமலிருக்க முடியாத அளவுக்கு தேசியப்பாதுகாப்பு கட்டாயங்கள் உள்ளன. ஆனால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பாரதிய ஜனதாவாலும் முடியாது. அதன் வலை அத்தகையது.

ஐந்தாண்டுகளுக்கு முன் நான் இதைப்பற்றி முதலில் எழுதியபோது புரளிகிளப்புகிறேன் என்ற பேச்சே ஓங்கி இருந்தது. ’அவருக்குக் கிடைக்கவில்லையா இவர் வாங்கவில்லையா?’ என்ற கேள்விகள் எழுந்தன. அசோகமித்திரன் கூட ஃபோர்டு ஃபவுண்டேஷன் நிதி பெற்றிருக்கிறார் என அவரது ஒற்றன் நூலில் இப்போது வாசித்தேன். அவரது அயோவா பல்கலைக்கழகப் பயணம் அதன் வழியாகவே.

அவ்வாறு நிதி பெற்ற, பெறும் எழுத்தாளர்களின் பட்டியல் நீளமானது. ஆனால் அது ஃபோர்டு ஃபவுண்டேஷனை நியாயப்படுத்தாது. அதன் நிதிபெற்றவர்களில் சிலர் சீரிய பணிசெய்திருக்கலாம். ஆனாலும் ஒருநாட்டின் குடிமக்களுக்கு சுரண்டல் நோக்கம் கொண்ட இன்னொரு நாடு நேரடியாக நிதி அளிக்கிறது என்பது எவ்வகையிலும் ஐயத்திற்குரியதுதான்.

அவ்வாறு நிதிபெற்றவர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு எதிராகப் பேசும்போது அவர்கள் பெற்ற நிதியையும் சேர்த்தே நாம் யோசிக்கவேண்டும் என்று மட்டுமே சொல்கிறேன். இத்தனை ஆண்டுகளில் மெல்லமெல்ல என் தரப்பு மறுக்கமுடியாத ஒன்றாக ஆகிவிட்டிருப்பதைக் காண்கிறேன்.

இனியாவது வாசகர்கள் ஒவ்வொரு இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்திற்குப்பின்னாலும் என்ன நிதிவலை உள்ளது என்றும் நோக்கும் பார்வையை வளர்த்துக்கொண்டால் நல்லது.
\
அன்னியநிதி தொகுப்புரை

ஃபோர்ட் ஃபவுண்டேஷன் குறிப்புகள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 84
அடுத்த கட்டுரைவிளம்பரம் – பாலா