«

»


Print this Post

சுஜாதா விருதுகள் கடிதம் 7


இனிய ஜெயம்,

மனுஷ்ய புத்திரன் உங்களை சும்மா பந்தாடி இருக்கிறார். வழக்கமாக நீங்கள் உருவாக்கும் சர்ச்சைகள் எதையும் சில மாதங்கள் கழித்தே வாசிப்பேன். [உடனடியா வாசிச்சா உணர்ச்சி வசப்பட்டு வா. மணிகண்டன் கணக்கா ஆகிடுவேனோன்னு ஒரு பீதி. ஜெயமோகன் மீதான ஏச்சுக்களில் வா .ம போன்றதொரு இனிதான ஏச்சு எங்கும் காணோம் ] துரதிஷ்டம் இம்முறை சிக்கிக்கொண்டு விட்டேன்.

ஒரு எல்லையில் உங்களைப் பாத்தா பாவமா கூட இருக்கு. ‘பல்ப் பிக்சன்’ அப்டீன்னு நிரூபிக்க சொல்லி சவால் விட்டுருக்கார். [இப்போ என்னா செய்விங்க. இப்போ என்னா செய்வீங்க?]

குடிசை என்றொரு படம். நிச்சயம் வணிகப் படம் அல்ல. எவ்வவளவு சலுகை அளித்தாலும் அது கலைப் படமும் அல்ல. ஆக ஒரு விமர்சகர் இதை வணிகப் படம், கலைப் படம் என்ற எந்த பிரிவில் சேர்த்தாலும் சரி. ‘அடையாளமற்ற’ இப் படத்துக்கு அது வெற்றிதான்.

இங்கதான் இருக்கு உங்களுக்கு ஆப்பு. உதாரணமா உங்கள் நண்பர் கென்யுட்ராஜ் அவர்கள் எழுதிய சாரல் புதூர் எனும் நாவல். அது பல்ப்பும் அல்ல, சீரிய இலக்கியமும் அல்ல. ஒரு விமர்சகராக நீங்கள் அந்த நாவலை எங்கு நகர்த்தினாலும் அது அந்த அடையாளங்கள் அற்ற ‘வெற்று’ நாவலுக்கு கிடைத்த வெற்றியே. வசமாக மாட்டிநீர்கள்.

ஒரு படத்தில் வடிவேலு ரௌடி ஆக மாறி போலிஸ் ஜீப்பில் ஏற முயல்வார். அதை ஒரு போலிஸ் தடுப்பார். அந்த போலிஸ் நீங்கதான். [இளம் எழுத்தாளர்கள் எப்படியாவது ஜீப்பில் ஏறி விடுவார்கள்].

அப்புறம் தேவைப்பட்டா ‘புகழ்ந்து’ பதட்டம் வந்தா ‘இகழ்ந்து’ எழுதும் உங்கள் மன நிலை மீது இன்னும் கூட யாருக்கும் பிடி கிடைக்கவில்லை. சுஜாதாவின் நாடகங்கள் குறித்து நீங்கள் எழுதியது ‘மதிப்புரை’. ஒரு விமர்சகராக இந்திரா பார்த்தசாரதியின் நாவலுக்கு இணையாக அதை வைக்க மாட்டீர்கள். காரணம் மதிப்புரை வேறு. விமர்சனம் வேறு. ஜே கே குறித்து நீங்கள் பேசிய ஆலமர் ஆசிரியன் , அவர்மீதான கவனக் குவிப்புக்கான மதிப்புரை. வாசகனுக்கு அளிக்கும் மதிப்பீடு. இலக்கிய முன்னோடிகள் நூலில் ஜேகே வை அவரது பலம் பலவீனத்துடன் அணுகி விமர்சன மதிப்பீட்டை முன் வைக்கிறீர்கள்.[உஸ்ஸ் இப்பவே கண்ணக் கெட்டுதே].

பூ குறித்து போகனுக்கு எழுதியது மதிப்புரை. ஊக்குவிப்பு. அதன் பயனாக உங்களது வாசக கோடிகள் உங்களைக் கைவிட்டு, போகன் வசம் சேர்ந்ததில் , உங்கள் இடம் பறி போனதைக் கண்டு பதறி கதறி நீங்கள் எழுதியதே ‘போகனுக்கு அன்புடன்’ என்ற இன்றைய பதிவு என்பதில் எனக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

மும்முறை உங்களை மன்னித்த ம பு [ஷி ஷி இம்முறையும் மன்னித்து விட்டுவிடுவார் தானே] சமீபத்தில் விகடன் டாக்டர் இதழில் ஒரு கட்டுரை எழுதினார். இந்த உடல் வழியாக அவருக்கு கிடைத்த வாழ்வு குறித்த கட்டுரை. அது இப்படி முடிகிறது ” அடுத்த பிறவி என ஒன்றிருந்தால் இதே உடலுடன் பிறக்கவே ஆசைப் படுகிறேன்” விமர்சனத்தை விடுவோம் இந்தக் கட்டுரை குறித்து வாசகன் ‘நல்லாருக்கு’ ‘நல்லால்ல’ என்று எதைச் சொன்னாலும் அவன் மன்னிக்கப்பட வேண்டிய இடத்துக்கு தள்ளப் படுகிறான்.

அப்புறம் ‘உங்கள் கோஷ்டி’யை சேர்ந்த யாரும் எதையுமே வாசிப்பதில்லை என்று நம்புகிறார் . [அதைக் கொண்டுதான் தளத்தில் வரும் கடிதங்கள் எல்லாம் நீங்களே எழுதிய போலி கடிதங்கள் என மிக சரியாக யூகித்து விட்டார் what an i q] ஏற்க்கனவே இந்த சண்டையைத் துவங்கியவர் நானில்லை நானில்லை என கதறிக் கொண்டிருக்கிறார். மிச்ச பயகளும் சிக்கினா ஷாவுங்கடா தான்.

மற்றபடி இந்த சர்ச்சையில் எவ்விதத்திலும் சம்பந்தப் படாத நாஞ்சில் நாடன் அவரின் பெயரை வம்புக்கு இழுத்தது உங்களை உணர்ச்சி தவற வைத்து சமநிலை இழக்க வைக்கவே.

இறுதியாக ஒன்று, நாஞ்சில் குறித்த பதிவு எனக்களித்த சமநிலைக் குலைவை ஆற்றிக் கொள்ளவே இக் கடிதத்தை எழுதினேன். ம பு மீதான பிரேமையை முற்றிலும் இழந்தவனானேன். இந்த விவாதத்தில் நான் பெற்றது இதுவே. ஆகவே இந்த விவாதத்தில் இதுவே எனது கடைசி பதிவு.

கடலூர் சீனு

அன்புள்ள சீனு,

நான் எழுதியது சீரிய வாசகர்களுக்காக. அவர்களே எனது வாசகர்கள் என் கட்டுரையின் தொனியே அதற்குச் சான்று. உதிரிக்கவிதைகளும் பாலியல் எழுத்துக்களுமாக மனுஷ்யபுத்திரனைச் சூழ்ந்திருக்கும் அரைவேக்காட்டுக் கும்பலுக்காக அவர் எழுதுகிறார். அவரது மொழி அதை காட்டுகிறது.

மனுஷ்யபுத்திரன் உலகையே மன்னித்துக்கொண்டிருப்பது புளகாங்கிதம் அளிக்கிறது. பரிசுத்த ஆவியும் பிதாவும்கூட இந்த அளவுக்கு மன்னிப்பதில்லை.

சரிதான், நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். என் கடைசிப்பதிவும் இதுவே

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/74600