கோடுகளை மீறி…ஆழியாளின் கவிதைகள்

ஒரு கவிதைத்தொகுப்பை சம்பிரதாயமாகப் படித்து சீராகக் கருத்துரைப்பது எனக்குச் சாத்தியமாகவே இருந்ததில்லை. நல்ல கவிதைகள்கூட சட்டென்று சொற்களாகச் சிதறிவிடும் அனுபவங்களே அதிகம். எனினும் மீண்டும் மீண்டும் கவிதைகளுக்குள் செல்ல முயன்றபடியே இருப்பேன். கவிதைத்தொகுதியின் வாசலைத்திறக்க ஒரு சாவி தேவைப்படுகிறது. அந்தக் கவிஞரின் ஆதாரமான மன அவசத்தை, தேடலை, கண்டுகொள்ளலை நமக்கு துல்லியமாக அடையாளம் காட்டும் ஒருவரி ஒரு படிமம் அல்லது ஒரு கவிதை. அது கிடைத்ததும் எல்லாமே தெளிவாகிவிடுகிறது. அதுவரை பூட்டைத்திறக்கும் திருடன்போல கைவசமிருக்கும் பலநூறு சாவிகளை தேய்த்தும் வளைத்தும் போட்ட்ப் போட்டு முயலவேண்டியதுதான்.

‘துவிதம்’ என்ற ஆழியாளின் கவிதைத் தொகுதியை முன்னரே படித்து சில வரிகள் எழுதி அவ்வரிகளில் அவர் இல்லை என்று உணர்ந்து விட்டுவிட்டு மறந்திருந்தேன். இந்தியச் சுற்றுப்பயணத்தின்போது வைசாக்-சென்னை சாலையில் காரில் வந்துகொண்டிருந்தோம். ஆறுபட்டைச் சாலை. வளைவுகளே இல்லை. சீரான உயர்வேகத்தில் கார் பீரிட்டு வந்துகொண்டிருந்தது. சற்று நேரத்தில் சலித்துவிட்டது. காருக்குள் சோர்வு படர்ந்தது.

நான் நினைத்ததையே சிவா சொன்னார். ”ரோடு இப்டி இருந்தா போர் அடிச்சுடுது சார். நேரா இருந்தாலே ரொம்ப செயற்கையா இருக்கிற மாதிரி இருக்கு”. நேராக இருப்பதென்பது மனிதனின் வசதி. இயற்கை பல்லாயிரம் வளைவுகளும் நெளிவுகளும் சுழல்களும் சிடுக்குகளும் அலைகளும் கொண்ட ஒரு பெரும்பரப்பு. கனடா சென்றிருந்தபோது அங்குள்ள மாபெரும் சாலைகளும் செங்குத்தான பெரும் கட்டிடங்களும் எனக்கு உருவாக்கிய எண்ணமும் இதுவே. இயற்கையை மனிதன் சீவிச் சிடுக்கெடுத்துக்கொண்டிருக்கிறான் என. இந்த ஆறுபட்டைச் சாலைகள் கள்ளிப்பெட்டிமீது அடிக்கும் உலோகப்பட்டைகளைப்போல பல்வேறு நிலக்காட்சிகளும் பண்பாடுகளுமாக சிதறிப்பரந்து வளர்ந்து கொண்டிருக்கும்  இந்தியாவை கட்டி இறுக்குகின்றன என்று எண்ணிக்கொண்டேன்.

அப்போது ஆழியாளின் ஒரு கவிதை நினைவுக்கு வந்தது.

கலாச்சாரம்

==========

நேர்கோட்டுக் கூட்டங்கள்
உருவமைத்த
அடுக்குமாடிச் செவ்வகங்களும்
கூரை முக்கோணங்களும்
நீலத்தில் அளைந்து கரையும்
பார்வைகளுக்கு இடையூறாய்
கண்ணாடிச்சன்னல்களும்

அறையுள்
இயந்திரச் சலிப்புடன்
நேர்கோடு மேலும் வரைந்துவைத்த
ஆதாரத் திண்மங்களாய்
மேசை, தன் கோப்புப் புத்தகங்களோடு
விடைத்த அவன்

திடநிலைச் சுவர்கள்
நாலுமூலைகளில் நெட்டையாய் குந்தியிருந்தன
இருத்தலின்
சுவாரஸியம் அருக
அடைபட்ட நிலைக்கதவின்
பித்தளை வளையம் திருகித்
திறந்தபோது
சிரித்துக் கலகலத்துப்
பெருவெள்ளமாய் கரையுடைக்கும்
புகுந்த
நேர்கோட்டிற் பயணமுறா ஒளிக்கற்றைகள்.

கட்டுக்கடங்கா வடிவங்களின் பரப்பில் மனிதன் தனக்கென உருவாக்கிய நேர்வடிவங்களைக் கண்டு சலிப்புறும் மனத்தின் சித்திரத்தை எளிய நேரடிச் சொற்களால் சொல்லிச் செல்கிறது இக்கவிதை. கட்டிடங்கள் அதனுள் அறை மேஜை என நேர்கோட்டு வடிவங்களைச் சொல்லிச்செல்லும் பார்வை ‘அவன்’ என்ற சொல்லை அடையும்போதுதான் இக்கவிதை அதன் நுண்தளத்தை தீண்டுகிறது.

திடநிலைச் சுவர்கள் என்ற கோடுகளைத்திறக்கும் ஒரு சிறுவாசல். அதற்கு அப்பால் அத்தனை மனித யத்தனங்களாலும் மறைத்துவிட முடியாத வெயில் பெருவெள்ளம். எப்போதும் எந்நிலையிலும் நேர்கோடாகவே செல்லும் என இயற்பியல் வகுக்கும் ஒளி இங்கே மனித நேர்கோடுகளுக்கு மகத்தான மாற்றாக அமைகிறது. நீரின் அலைகளையும் நெளிதல்களையும் கொப்பளிப்பையும் ஒளியில் காணும் ஒரு கவித்துவ மாற்றுக்காட்சி இக்கவிதையின் மையப்படிமம். ‘நேர்கோட்டிற் பயணமுறா ஒளிக்கற்றைகள் ‘ என அவற்றை கவிமனம் அறியும் இடமே இக்கவிதையின் உச்சத்தை நிகழ்த்துகிறது.

ஆழியாளின் கவிதை பிடுங்கி நடப்பட்ட ஒரு செடி மெல்ல தயங்கி வேரோடி திணறி மீண்டும் மெல்ல தன் இடத்தைக் கண்டுகொள்வதன் அனுபவச்சிக்கல்களை ஆரவாரமில்லாமல் சாதாரணமாகச் சொல்கின்றது. ‘எட்ட ஒரு தோட்டம்’ என்ற கவிதை நேரடியாகவே அதே படிமத்தை முன்வைக்கிறது. ‘ஏற்கனவே அறிந்த மலர்களின் நிறங்களை மட்டுமே அடையாளம்கண்டுகொள்ள முடிகிறது’ என்று தன் எல்லைகளை உணரும் கவிதை இது.

ஓர் ஈழத்துப்பெண் என்ற அம்சம் அபூர்வமான சில படிமங்களை ஆழியாளுக்கு அளிக்கிறது ‘ஒரு பூஞ்சை நிராயுதபாணியை வழிநடத்திச்செல்லும் துப்பாக்கியைப் போல அவள் பாடிக்கொண்டிருந்தாள்’ என்ற வரி ஓர் இந்தியத்தமிழ் வாசகனுக்கு அளிக்கும் அதிர்ச்சி ஆழமானது.

ஆழியாளின் கவிதைகளின் முக்கியமான குறைபாடென எனக்குப் படுவது சற்று வலிந்துரைக்கும் கவிமொழிதான். பல கவிதைகளில் மொழி சரளமாக எழவில்லை. எழுத்துநடையின் இறுக்கம் உணர்வுகளை நெருடச்செய்கிறது. ‘புகுந்த நேர்கோட்டிற் பயணமுறா ஒளிக்கற்றைகள்’ போன்றவரிகளில் சொற்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்கின்ற உணர்வு உருவாகிறது.

நல்ல கவிதையின் மொழி எப்படி இருக்கும்? ஒரு தன்னிச்சையான பேச்சு போல அத்தனை சரளமாக அத்தனை இயல்பாக இருக்கும். ஆனால் பேச்சுமொழியின் நீர்த்த தன்மைக்குப் பதிலாக உயர்தர இலக்கியவெளிப்பாட்டுக்குரிய சொல்மிகாத நுட்பமும்  ஆழ்தள மௌனமும் கொண்டதாகவும் இருக்கும்.  பிரயத்தனமில்லாததாக இருக்கும் அதேசமயம் நுண்ணிய ஒலிநேர்த்தியும் கூடிவந்திருக்கும்.இந்த முரணியக்கம் கொள்ளும் உச்சப்புள்ளியே நல்ல கவிதை.

அடையாளம்

=============

பிறந்த வீட்டில்
கறுப்பி

அண்டைநாட்டில்
சிலோன் அகதிப்பொண்ணு

இலங்கையர் மத்தியில்
‘தெமள’

வடக்கில்
கிழக்கச்சி

மீன்பாடும் கிழக்கில்
நானொரு மலைக்காரி

மலையில்
மூதூர் காரியாக்கும்

ஆதிக்குடிகளிடம்
திருடப்பட்ட தீவாக இருக்கும்
என் புகுந்த நாட்டில்
அப்பாடா
பழையபடி நானொரு கறுப்பியானேன்
.

முதல் கவிதையின் அதே அனுபவம் இன்னொரு வெளிப்பாடு கொண்டது இக்கவிதை. முற்ற வகுத்துவிடமுனையும் கோடுகளுக்குச் சிக்காமல் வெளிப்படும் அடிப்படை மானுட இயல்பை நாம் இக்கவிதையில் காண்கிறோம். அந்த ‘அமைதல்’ அளிக்கும் மெல்லிய விடுதலையே ஆழியாளின் கவிதைகளின் உச்சமாக பொதுவாக திரண்டுவருகிறது.

[துவிதம். ஆழியாள் கவிதைகள். மறு வெளியீடு, MathuBhashini, 20,Dulverton Street Amaroo, Canberra ACT 2914 Austraila விலை ரூ 60 ]

முந்தைய கட்டுரைஆலயம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைபோதகரின் வலைப்பூ