இணையச் சமவாய்ப்பு

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இப்பொழுது தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களால் “Net Neutrality” முறைக்கு பங்கம் வர வாய்ப்பு இருப்பதை தாங்கள் அறிந்து இருப்பீர்கள்.இதனால் இணைய சேவை கட்டணம் மிகவும் அதிகரித்து,இணைய சேவையை பயன்படுத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அறிகிறேன் ,மேலும் குறிப்பிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருப்பதால் ஒருதலைப் பட்ச கருத்துக்களோ,அல்லது செய்திகளோ மட்டும் எங்களை சென்றடையவும் வாய்ப்பு உள்ளது,இது ஒருவகையில் நமது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு ஒப்பாகும்,மேலும் கருத்து சுதந்திரத்திற்கும் எதிராகும் என கருதுகிறேன். இது பற்றிய தங்கள் கருத்தை அறிய ஆவலாயிருக்கிறேன்.

இந்த “Net Neutrality” பற்றி நான் அறிந்த மேல் அதிக விவரங்களை ஒரு கோப்பில் இணைத்து தங்களுக்கு அனுப்பிஉள்ளேன்.முடிந்தால் தங்கள் தளத்தில் இதை வெளியிட்டு நமது பரவலான வாசக நண்பர்களுக்கு தெரியப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி,

தங்கள் அன்புள்ள,

அ .சேஷகிரி.

அன்புள்ள சேஷகிரி

இதில் எனக்கு ஒரு கருத்து இருக்கும் என நம்பி என்னை கௌரவித்திருக்கிறீர்கள். நன்றி ;))

இணையச்சமநிலை என்று பேசப்படுவதை நாவலை முடித்த இடைவெளியில் தேடிப்பார்த்தேன். என்னைப்போன்று தரையில் நிற்பவனுக்குப் புரியும் வகையில் அதில் என்னதான் பிரச்சினை என்று எழுதப்பட்ட ஒரு கட்டுரையும் இல்லை. எங்கோ ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சில கட்டுரைகளை புரியாமல் தழுவி எழுதப்பட்டுள்ளன. தெளிவாக எழுதுபவர் என நான் நினைக்கும் சரவணக்கார்த்திகேயன் ஏதாவது எழுதியிருக்கிறாரா என்று பார்த்தேன். இல்லை.ஆங்கிலக்கட்டுரைகளிலேயே சுழலும் சொல்ஜாலங்களே அதிகம்.

உண்மையில் இணையம் ஒரு வணிக ஊடக வலை. ஒரு வினியோகமுறை அது. நவீன முதலாளித்துவ அமைப்பில் வினியோக முறை எங்காவது ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளதா என்ன? வணிகம் எப்போதும் வணிகமுதலைகளால் கையகப்படுத்தப்பட்டு ஆளப்படுகிறது அல்லவா? ஹாலிவுட் பாலிவு கோலிவுட் சினிமாக்கள், தொலைக்காட்சிகள், நாளிதழ்கள் எல்லாவற்றிலுமே வினியோகம் மிகச்சிலரின் ஏகபோகத்தில் தானே உள்ளது? ஏன் லாரிப்போக்குவரத்து கூட அப்படித்தானே? இணையம் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்கமுடியும்?

எனக்குத்தான் ஒன்றும்புரியவில்லை என நினைக்கிறேன்

ஜெ

இணையச்சமவாய்ப்பு எதிர்வினைகள்

இணையச்சமவாய்ப்பு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 86
அடுத்த கட்டுரைவரலாறுகளின் அடுக்குகள்