«

»


Print this Post

கர்ட் போராட்டம், ஓரான் பாமுக், ஒத்திசைவு


images

நேற்று முதல் தொடர்ச்சியாக வாசித்து முடித்த நீளமான கட்டுரைத் தொடர் கர்ட்களின் தேசிய எழுச்சி பற்றியும் அவரது தோழி கில்யஸ் அதில் இறந்ததைப்பற்றியும் ஒத்திசைவு ராமசாமி அவரது இணையதளத்தில் எழுதியது. உண்மையில் நான் முதல்முறையாக இத்தனை விரிவான, தகவல்செறிந்த ஒரு கட்டுரையை இவ்விஷயமாக வாசிக்கிறேன். நுணுகி நுணுகி செய்தியை வாசிப்பவன் இல்லை என்றாலும் ஆங்கில, தமிழ் நாளிதழ்களை தொடர்ந்து வாசிப்பவன். ஏன் இதைப்பற்றி ஒரு குறிப்பிடும்படியான கட்டுரை என் கண்களில் படவேயில்லை என்ற வியப்புதான் எனக்கு ஏற்பட்டது.

இணையத்தில் தமிழில் வேறெவராவது எழுதியிருக்கிறார்களா என்று பார்த்தேன். வியப்புக்குரிய வகையில் ஒன்றுகூட தட்டுப்படவில்லை. பொதுவாக தமிழில் அரசியல்கட்டுரைகள் எழுதும் ‘விற்பன்னர்கள்’ அனைத்து சிந்தனைகளுக்கும் ஆங்கிலச்செய்தித்தாள்களையே சார்ந்திருக்கிறார்கள். புதியதாக ஒரு சிந்தனை அல்லது நிகழ்வின் மேல் வெளிச்சம் வீசுவது அவர்களால் இயலாது. ஏற்கனவே பேசப்பட்டுவிட்டவற்றை வைத்துக்கொண்டு தங்களை முற்போக்காகக் காட்ட என்னென்ன ஜல்லியடிக்க முடியும் என்றுதான் மூளை ஓடும்

பொதுவாக தேசிய இனப்பிரச்சினை என்றாலே எங்கோ எவரோ சமூகத்தைப் பிளவுபடுத்தி அரசியல் அதிகாரம் அடையவிரும்புகிறார்கள், அதை வேறுநாடுகள் அரசியலாடலுக்குப் பயன்படுத்திக்கொள்கின்றன என்ற சித்திரம்தான் எனக்கு. ஏனென்றால் கவனித்துப்பார்த்தால் உலகில் நிகழும் பெரும்பாலான உபதேசியக் கிளர்ச்சிகளின் நோக்கம் இதுதான். விளைவு உள்நாட்டுப்போரும், ஒட்டுமொத்த அழிவும், கடைசியில் அன்னிய வணிக அமைப்புகளின் கொள்ளையும்தான்

ஆனால் கர்ட்களின் போரை ராமசாமி அதன் பின்னணியை விளக்கி விரிவாக காட்டியிருக்கிறார். கர்ட்கள் போராடுவது ஜனநாயக வாய்ப்புள்ள ஒரு அரசமைப்புடன் அல்ல. மாற்றுப்பண்பாடுகளின் இருப்பை அணுவளவும் அங்கீகரிக்காத, அதற்காக அழித்தொழிப்பை மட்டுமே நம்பிகிற இஸ்லாமிய அடிப்படைவாத சர்வதேசிய இயக்கமாகிய ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகளிடமும் வஹாபிய அழிவுச்சித்தாந்தங்களிடமும். அவர்களின் வீரம் செறிந்த போர் இன்றுவரை தொடர்ச்சியாக உலகசமூகத்தால் புறக்கணிக்கப்பட்டே வருகிறது, காரணம் அதனால் அவர்களுக்கு லாபம் ஏதுமில்லை

ராமசாமி அவரது தோழில் கில்யஸ் பற்றி அளிக்கும் சித்திரமும் உணர்ச்சிகரமானது. ஒரு பெரிய காவியம்போன்றிருக்கிறது அது.

images

இந்த நீண்ட கட்டுரையில் எனக்கு முழு உடன்பாடுள்ள ஒரு சிறிய குறிப்பையும் கண்டேன். அது ஓரான் பாமுக்கின் நாவல்களைப் பற்றி. ஏறத்தாழ இதே கருத்தை நான் பத்துவருடம் முன்பு சுருக்கமாக எழுதியிருக்கிறேன். எங்கே என தெரியவில்லை. ஓரான் பாமுக் ஒரு முக்கியமான எழுத்தாளர். ஆனால் நோபல் பரிசு பெற்ற இலக்கியமேதைகளுக்கு நிகரானவர் அல்ல. அதாவது ராமசாமியின் சொற்களில் ‘நல்ல சராசரி எழுத்தாளர்’ அவரது நாவலான என் பெயர் சிவப்பு அந்த அபிப்பிராயத்தையே என்னுள் உருவாக்கியது

ஏன் என்று சுருக்கமாக மீண்டும் வகுத்துக்கொள்கிறேன். இருவகை எழுத்துக்கள் உண்டு. ஒரு பண்பாட்டின், நிலப்பகுதியின் அடிப்படை உள்ளியல்பை வெளிப்படுத்துபவை முக்கியமானவை. அவ்வகையில் எழுதும் எழுத்தாளர் அப்பண்பாட்டிலிருந்து பிரிக்கமுடியாதவராக இருப்பார். அதன் சிறப்பு மட்டுமல்ல சிக்கல்களும் அவரில் இருக்கும். அதை ஓரளவேனும் புரிந்துகொள்ளாமல் அவரைப் புரிந்துகொள்ளமுடியாது. அப்பண்பாட்டைப் புரிந்துகொள்ளும்தோறும் அவர் மேலும் மேலும் தெளிவடைந்து வருவார்.

அவர் அந்தப்பண்பாட்டின் பிரதிநிதி. காடு நாவலில் ஒரு மிளா மொத்தக் காட்டுக்கும் பிரதிநிதியாக முடியும், அதன் உடலில் அத்தனை விதைகள் ஒட்டியிருக்கும், அந்தக்காடு அழிந்தாலும் அந்த மிளாவிலிருந்து மீண்டும் உருவாக்கிவிடமுடியும் என்று ஓர் உவமை வரும். அதேதான் முதன்மைப் படைப்பாளிகளைப்பற்றிச் சொல்லவேண்டியது.

இரண்டாவது வகை எழுத்தாளர்கள் அந்தப்பண்பாடு எதை காட்சிக்குவைக்கிறதோ அதை எழுதுபவர்கள். சிறப்பை, வீழ்ச்சியை இரண்டையும். showcase writers என்று சொல்லலாம். இந்தியா தாஜ்மகால், தஞ்சைகோயில், யானை, வேங்கை, கங்கை, காசி, யோகம், குடும்பமுறை, ஊழல், பாலியல் ஒடுக்குமுறை, சாதி என பலவற்றை காட்சிக்கு வைத்திருக்கிறது. இந்தியா என இவற்றைப்பற்றித்தான் உலகம் பேசிக்கொண்டிருக்கிறது. இவற்றைப்பற்றி எழுதுவது உலக வாசகர்களுக்கு எளிதில் பிடிகிடைக்கும். அவர்களால் ரசிக்க முடியும்.

ஆகவே அவற்றை எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள். பெரும்பாலான இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் இவ்வகையினர். ஓரான் பாமுக் துருக்கியை சேர்ந்த திறன் வாய்ந்த ஷோகேஸ் எழுத்தாளர். துருக்கியை ஐரோப்பா எப்படிப் பார்க்கிறதோ அந்தக்கோணத்தில் அவர்களுக்கு ஆர்வமுள்ள விஷயங்களைக் கொண்டு புனைவுகளை உருவாக்குகிறார். அவர்களுக்கு பிரியமான வடிவங்களை எடுத்துக்கொள்கிறார்.

Ben-Okri-writer-006

எப்படியானாலும் இன்று பெரும்பாலான உலகநாடுகளுக்கு ஓர் ஐரோப்பியமுகமும் இன்னொரு பாரம்பரிய முகமும் உண்டு. முந்நூறாண்டுக்கால காலனியாதிக்க உலகம் உருவாக்கியது இது. இதில் அந்த ஐரோப்பிய முகத்தை மட்டும் முதன்மையாக்கி அதன் கோணத்தில் பாரம்பரிய முகத்தை மெல்லிய கேலியுடன் சித்தரிக்கும் நாவல்களே சமீபகாலமாக ஐரோப்பாவில் புகழ்பெறுகின்றன. ஏனென்றால் அவர்களின் ரசனைக்கு உரியவை அவை, அவர்களுக்காக எழுதப்படுபவை.

My Name Is Red ஒரு பொதுவான வாசகனுக்கு சிறந்த தருணங்கள் பலவற்றை அளிக்கக் கூடியது. அதன் நுண்ணிய பாலியல் அவதானிப்புகள், மேற்கத்திய கீழை கலைகளைப்பற்றிய அவதானிப்புகள், அவற்றை குறியீடாக மாற்றி துருக்கிய வரலாற்றை நோக்கி கொண்டுசெல்லும் நுட்பம் ஆகியவை முக்கியமானவை. ஆனால் அது துருக்கியின் சாராம்சம் நோக்கி செல்லும் நாவல் அல்ல.

அப்படிப்பட்ட ஒரு புனைவை ஒப்புநோக்க சுட்டிக்காட்டவேண்டும் என்றால் பென் ஓக்ரியின் famished road நாவலை காட்டுவேன். அது ஓர் ஆப்ரிக்க மூதாட்டியிடம் கதைகேட்ட உணர்வை அளித்தது. ஷோகேஸ் ஆப்ரிக்க எழுத்துக்குச் சரியான உதாரணம் என்றால் சிமமெண்டா அடிச்சியின் Half of a Yellow Sun ஐ சொல்வேன்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/74593