சுஜாதா அறிமுகம்
இனிய ஜெயம்,
நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் இது என்ன விளையாட்டு? வெண் முரசு வரிசையில் ஒவ்வொரு நாவல் முடிந்து, அடுத்த நாவல் துவங்கும் இடைவெளி தோறும் யார் கிட்டயாவது சண்டை போட்டுகிட்டே இருக்கீங்க.
இந்த முறை [சுஜாதா விருது] சண்டையில் ஒரு விஷயத்தை கவனிக்காமல் விட்டு விட்டீர்கள். இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் கமல்ஹாசன் போல வேறு கலைத்துறையை சேர்ந்த ஆளுமைகளும், தங்கள் தாய்,தந்தை பெயரில் இலக்கியவாதிகளுக்கு விருதளித்து கௌரவிக்கிறார்கள்.
நிச்சயம் அப்படி தாய் அல்லது தந்தை நிலையில் மனுஷ்ய புத்திரன் அவர்கள் சுஜாதாவை நிறுத்தி இந்த விருதை உருவாக்கி இருக்கக் கூடும். சுஜாதாவை இலக்கிய ஐக்கான் ஆக்கும் முயற்சியை நீங்கள் எதிர்க்கும் குரலில், புண்படும் இந்த மெல்லிய உணர்வின் பின் தான் நான் நிற்பேன்.
மற்றபடி ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கையில் எப்போதும் ஒரு வார்த்தை கூடுதலாக ‘அடித்து’ ஆடுவீர்கள். அந்தப் பின்னணியில் ‘இணைய மாபியா’ எனும் பதத்துக்கு [என் உடல் வாகுக்கு தக்க] மென்மையாக என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
மற்றபடி ஒருஇலக்கிய வாசகன் சாகித்ய ‘அக்காதமி’ விருதுகள் மீது வைக்கும் அதே விமர்சனம் தான் சுஜாதா விருதுகள் மீதும் வைப்பான். தோல் எழுதியவருக்கும் ,சூடிய பூ சூடற்க எழுதியவருக்கும் ஒரே விருது என்றால் அது என்ன மாதிரியான ”குசும்போ ” அதுதான் சுஜாதா விருதுகளிலும் நடக்கிறது.
சுஜாதா கூட மனுஷ்ய புத்ரனைத்தான் ”கவிஞராக” வாசக கவனத்துக்கு கொண்டுவந்தாரே அன்றி, இலவச வார இணைப்புகளில் பத்து ரூபாய்க்கு எழுதும் ”மூக்கனேறி பாபு ”க்களை அல்ல.
கடலூர் சீனு