இழத்தலின் இனிமை

Neelakuyil

நாவல் எழுதுவது மகிழ்ச்சியான நிலை. ஒரு போதைபோல. காலை எழுந்ததுமே கைநடுங்க ஆரம்பிக்கும் குடிகாரர்களின் நிலைக்கும் அதற்கும் வேறுபாடில்லை. நாவல் அதன் உருவ ஒருமையுடன் எழுந்துவிடும்போது வலுவான ஆழ்படிமங்கள் நம்முள் இருந்து எழுகின்றன. சாமி குடியேறுவதுபோல. அதன்பின் அவையே நம்மை இட்டுச்செல்கின்றன. வேறெதையும் நினைக்க விடுவதில்லை. அவை ஆடிமுடித்து இறங்குவது வரை நாம் அதற்கு நம்மை ஒப்புக்கொடுத்துவிட்டால் மட்டும்போதும்

நாவல் ஒரு மெய்நிகர் உலகை உருவாக்கி அங்கே வாழச்செய்கிறது. ஒவ்வொன்றும் பொருள் பொதிந்த, உள்ளடுக்குகள் கொண்ட உலகு அது. ஆகவே முடிவற்றது. அதில் வாழும்போது புறவுலகு அபத்தமான பொருளற்ற ஓசைகளாலும் அசைவுகளாலும் நிறைந்துவிடுகிறது. ஆகவே எழுதுவதற்குப் பெருந்தடை என்பது பிற உலகியல் செயல்பாடுகள்தான். அலுவலகம் செல்வது, வேலைசெய்வது, சம்பந்தமில்லாதவர்களைப் பார்ப்பது எல்லாமே வதைகள்.

என்வாழ்க்கையின் பெரிய வாய்ப்பு என்னவென்றால் நான் இரவுப்பணியாற்றும் வேலையில் இருந்ததுதான். அந்த பணியிலிருந்து மேலே செல்லவேண்டாமென்று சேர்ந்த சிலநாட்களிலேயே முடிவு செய்துவிட்டேன். மூளைக்கு இடமே இல்லாத வேலை. கைப்பழக்கமே போதும். மாலை தொடங்கி மறுநாள் காலைவரை பணியாற்றினால் இரண்டு நாட்களின் வேலை. அதை எவரும் விரும்புவதில்லை என்பதனால் என் பணிக்காலத்தில் பெரும்பாலும் அதைத்தான் செய்தேன். பன்னிரண்டு மணிக்குமேல் அலாரத்தைப் போட்டுவிட்டு காலை ஐந்தரை வரை தூங்கமுடியும். இரண்டுமூன்று போலீஸ் அழைப்புகள் இருக்கும். அதை இணைப்புகொடுக்க கண்விழிக்கவேண்டியதில்லை

தனிமை எனக்கு நிறையவே கிடைத்தது. எழுத. கிராமங்களில் அலைந்து திரிய. ஆகவேதான் நிறைய எழுத முடிந்தது. தமிழ் எழுத்தாளனுக்கு இதெல்லாம் லாட்டரி அடிப்பதுபோல. வேலையை விட்டபின் இப்போது மேலும் சுதந்திரம். நாளெல்லாம் எழுதமுடியும். மாலையில் ஒரு நீண்ட நடை. ஏதாவது டீக்கடையில் அமர்ந்து கொஞ்சம் வம்புகளைக் கவனிப்பது. வீட்டுவேலைகளைச் செய்வது அகத்தனிமையைக் கலைப்பதில்லை.

நாளிதழ் வாசித்து பத்துநாட்களாகின்றன. வெண்முகில்நகரம் எழுதி முடிந்தது. எங்கெங்கோ சுழற்றி எதையெதையோ பார்த்து அதுவே அதன் வடிவை அடைவதைக் கண்டு வியந்து நின்று இளைப்பாறினேன். இவையெல்லாம் எனக்குள்ளே இருந்திருக்கின்றன என்ற திகைப்பு

எழுதும்போதுள்ள பெரிய சிக்கல் என்னவென்றால் எழுதி முடித்ததும் வரும் திடீர் வெறுமை. சற்றுநேரத்தில் அடுத்த அத்தியாயத்தின் இருபத்திகளை எழுதிவைத்துக்கொண்டால் அதைக் கடக்க முடியும். ஆனால் அதற்குள் பித்துப்பிடிக்கும். போதையடிமையின் பித்துதான்

அதைவெல்ல பல வழிகளில் ஒன்று வாசிப்பது. கவிதைகள் உகந்தவை. நகைச்சுவைப்படைப்புகள் மேலும் சற்றுநேரம் உள்ளே வைத்திருக்கின்றன. ஆனால் அனைத்தையும் விட சிறந்தது இசை. இந்துஸ்தானி இசை அளவுக்கு ஆற்றி அரவணைக்கும் பிறிதொன்று இல்லை

அதேயளவுக்கு ஈர்ப்பது பழைய மலையாளப் பாடல்கள். அதன் காரணம் கடந்தகால ஏக்கம். என் வயதுக்கு அது ஒரு நோய்க்கூறான மனநிலையே. ஆழ்ந்து அமிழ்த்திக்கொள்ளும் வசீகரம் கொண்ட நோய். பாலு மகேந்திரா அவரது பழைய படங்களை ஒருமுறை அடுக்கிக்கொண்டிருந்தபோது நான் கடந்தகால ஏக்கம் பெரிய நஞ்சு, அதிலிருந்து வெளியேறுங்கள் என நீண்ட உரை ஆற்றியிருக்கிறேன். ஆனால் என்னால் தவிர்க்கமுடியவில்லை

மலையாளப் படங்கள் அம்மா நினைவுடன் கலந்துள்ளன. அக்காலத்து முகங்கள். எனக்கு நேற்றுடன் [22- 4-2015] ஐம்பத்துநான்காகிறது. [1962] இதற்குள்ளாகவே எனக்குத்தெரிந்தவர்களில் ஏராளமானவர்கள் இறந்துவிட்டிருக்கின்றனர். வாழும் உலகளவுக்கே இறந்த உலகும் விரிந்துவிட்டது. அவர்களெல்லாம் இந்த காட்சிகள் வழியாக இசை வழியாக எழுந்துவருகிறார்கள்.

மிகப்பழைய படங்கள். 1950களைச் சேர்ந்தவை. நான் பிறப்பதற்கும் பத்துவருடம் முந்தையவை. ஆனால் அக்காலத்தில் சிறிய திரையரங்குகளில் பத்துப்பதினைந்து வருடம் பழைய படங்கள் எல்லாம் ஓடும். அம்மாவுடன் அமர்ந்து பார்த்த படங்கள் சில. பாடல்கள் அனைத்தும் பலமுறை கேட்டவை. வானொலியில் திருவனந்தபுரம் நிலையம் பேரின்பத்தின் அடையாளம். ஒருபாடல் ஒலிப்பதென்பது கனவு வருவதுபோல. எதிர்பாராத பரவசம். அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள்.

இன்று பழைய மலையாளப் பாடல்களைப் பார்க்கையில் சில எண்ணங்கள் எழுகின்றன. ஒன்று ஆரம்பகாலத்திலேயே மலையாளப்படங்கள் யதார்த்தச் சித்தரிப்பை அளிக்கத்தான் முயன்றிருக்கின்றன. வங்க சினிமா மட்டுமே அந்தத்திசையில் சென்ற பிற இந்திய சினிமா. மலையாளத்தின் திசையை முன்னோடிகளே வகுத்துவிட்டனர்

அன்றைய சினிமாவின் எல்லைகள் இன்று எனக்குத் தெரியும். ஒளியமைப்புதான் பெரிய பிரச்சினை.குறைந்த இடத்த்துக்கு மட்டும் ஒளியமைப்பது, அந்த ஒளிபடும் எல்லைக்குள் நடிப்பது, ஒளிக்காக முகத்தை தூக்கிக்கொள்வது என அக்கால நடிப்பைத் தீர்மானித்தவை பெரும்பாலும் ஒளியமைப்புச்சிக்கல்களே. அத்துடன் ஒளியமைப்பு வசதிக்காக அனைத்தையும் ஸ்டுடியோவிலேயே எடுப்பதனால் வரும் செயற்கைத்தனம்

அத்தனையையும் கடந்து ஆரம்பகால மலையாளப்படங்கள் யதார்த்ததை உருவாக்கியிருக்கின்றன என்பது வியப்பூட்டுவதே. 1954ல் இந்தியாவில் சிறந்த திரைப்படத்துக்கான தேசியவிருதுகள் உருவாக்கப்பட்டபோது முதல்விருதைப் பெற்றது பி.பாஸ்கரன் இயக்கிய நீலக்குயில். ஏ.வின்செண்ட் காமிரா. சத்யன் நடிப்பு. கெ.ராகவன் இசை. புகழ்பெற்ற மலையாள நாவலாசிரியர் உறூப் கதை. இன்றும் ரசிக்கத்தக்க கிளாஸிக் இந்தப்படம்

இதிலுள்ள ‘காயலரிகத்து வலையெறிஞ்ஞப்போள்’ என்றபாட்டு இன்று ஒரு நாட்டார்பாட்டாகவே மாறிவிட்டிருக்கிறது. அதை தெரியாத மலையாளிகள் எவரும் இருக்கமுடியாது. அதன் படமாக்கலை இன்றுபார்க்கையில் அதன் நேர்த்தியான யதார்த்தம் பிரமிக்கச்செய்கிறது

காயல் அரிகத்து வலை எறிஞ்ஞப்போள்
வள கிலுக்கிய சுந்தரீ
பெண்ணு கெட்டினு குறியெடுக்கும்போள்
ஒருநறுக்கினு சேர்க்கணே

கண்ணினால் என்றே கரளில் உருளியில்
எண்ண காய்ச்சிய நொம்பரம்
கல்பில் அறிஞ்ஞப்போள் இந்நு ஞம்மளு
கயறுபொட்டிய பம்பரம்

சேறில் நிந்நு வளந்நு பொந்திய
ஹூறி நின்னுடெ கையினால் நெய்ச்
சோறு வச்சது தின்னுவான்
கொதியேறி உண்டென் நெஞ்சிலே

வம்பெழும் நின்றெ புரிக கொடியுடே
அம்பு கொண்டு ஞரம்புகள்
கொம்பொடிஞ்ஞ சீலக்குடையுடெ
கம்பி போலே வலிஞ்ஞு போய்

குடவுமாய் புழ கடவில் வந்நென்னெ
தடவிலாக்கிய பைங்கிளீ
ஒடுவில் நீயென்னே சங்கடப்புழ
நடுவிலாக்கருது இக்களி

வேறேயாணு விசாரம் எங்கிலு
நேரமாயது சொல்லுவான்
வெறுதே ஞான் எந்தினு எரியும் வெயிலத்து
கையிலும் குத்தி நடக்கணு?

[தமிழில்]

காயல் கரையில் வலைவீசியபோது
வளையல் குலுக்கிய சுந்தரி
உன் திருமணத்திற்கு குலுக்கல் செய்யும்போது
என்பெயரையும் ஒரு துண்டில் சேர்த்துக்கொள்

கண்களால் என் நெஞ்சின் வாணலியின்ல்
எண்ணை காய்ச்சிய வேதனை
இதயத்தை தொட்டபோது இன்று நான்
கயிறு உடைந்த பம்பரம்

சேற்றில் இருந்து வளர்ந்து எழுந்த
தேவதையே உன் கைகளால்
வைத்த நெய்ச்சோறு சாப்பிட
ஆசை மிகுகிறது

வளைந்து எழும் உன் புருவங்களின்
அம்பு பட்ட என் நரம்புகள்
கம்பு ஒடிந்த துணிக்குடையின்
கம்பிகள் போல இழுபட்டன

குடத்துடன் ஆற்றுக்கரைக்கு வந்து
என்னை சிறைப்பிடித்த பைங்கிளீ
இறுதியில் என்னை நீ
துயர நதியில் விட்டுவிட்டு போகாதே

வேறு நினைப்பு இருந்தால்
சொல்வதற்கு நேரம் இது
சும்மா நான் எதற்காக
எரியும் வெயிலில் கைகட்டி அலையவெண்டும்?

பாடியவர் கெ ராகவன் இசை கெ ராகவன்

நாழியுரி பாலு கொண்டு
நாடாகே கல்யாணம்

ஒரு கிறிஸ்தவப்பெண்ணும் இஸ்லாமியப்பெண்ணும் இரவில் பாடிக்கொள்கிறார்கள்! படம். ராரிச்சன் எந்ந பௌரன். இசை கெ ராகவன். பாடல் சாந்தா பி நாயர்

இன்னொன்றும் சொல்லத்தோன்றுகிறது. ஆரம்பம் முதல் மலையாளத்தில் நல்ல படங்களை உருவாக்கியவர்கள் மலபார்காரர்கள். அங்கே இஸ்லாமியரும் இந்துக்களும் நல்லுறவுடன் இணைந்து வாழ்ந்த பொற்காலம் அது. ஆகவே எல்லா படங்களிலும் இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் உள்ளன. இஸ்லாமியப் பண்பாடு ஊடுகலந்துள்ளது. கேரளத்து இஸ்லாமியப் பண்பாட்டின் முக்கியமான அம்சமாகிய மாப்ளப்பாட்டு பெரும்பாலான படங்களில் உள்ளது. காயலரிகத்து ஒரு மாப்பிளபாட்டுதான்

மாப்பிளை என்ற சொல்லுக்கு புதியவன் என்று பொருள். பொதுவாக மதம் மாறிய இஸ்லாமியர் மாப்ளை முஸ்லீம்கள் எனப்படுகிறார்கள். சிரியன் கிறிஸ்தவர்களும் அப்படி அழைக்கப்படுவதுண்டு. மாப்பிளை பண்பாடு என்பது இந்தியாவின் பிற இஸ்லாமியப் பண்பாடுகளில் இல்லாத தனித்துவமும் அழகும் கொண்டது. காசர்கோட்டில் இருந்த நாட்களில் நான் மிக அணுக்கமாக அதை அறிந்திருக்கிறேன்

மாப்ளைக்கள் கடல்வணிகத்தை தொழிலாகக் கொண்டிருந்தனர். போப்பூர் , அவர்களுடைய தலைமைத் துறைமுகம். இன்று அது மணல்மூடி அழிந்துவிட்டது. கடல்வணிகம் அழிந்தபோது அவர்கள் பலவகையான சிறுவணிகங்களுக்கு வந்தனர். மீன்விற்பதும் பிடிப்பதும் எல்லாம் அவர்கள் செய்வதுண்டு.

ஆனால் நீண்ட கடல்வாழ்க்கை காரணமாக அவர்களின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியிருப்பது நட்பு. மாப்பிளைகள் மிக நம்பகமான நண்பர்கள் என்பது கேரளப்பண்பாட்டில் வேரூன்றியது. ‘மாப்பிளைய மரணம் வரை நம்பலாம்’ என்ற பழமொழி லோகிக்கு மிகப்பிடித்தமானது.

இன்னொன்று அவர்களின் தனித்துவமான நகைச்சுவை. அனேகமாக பிறபகுதி இஸ்லாமியர் எவரிடமும் அத்தகைய நகைச்சுவை உணர்வை நான் கண்டதில்லை. இஸ்லாமியர் பொதுவாக இறுக்கமாக இருப்பதே வழக்கம். ஆனால் மாப்பிளைகள் எப்போதுமே உற்சாகமானவர்கள். கேலியும் கிண்டலும் நிறைந்தவர்கள்.

நான் இக்கா என்றழைத்துவந்த பிரபலமான மாப்பிளைகள் கொச்சின் ஹனீஃபா [வி எம் சி ஹனீஃபா] புனத்தில் குஞ்ஞ்சப்துல்லா இருவருமே பெரிய நகைச்சுவையாளர்கள். மாப்ளாக்களின் நகைச்சுவை கேரளப்பண்பாட்டில் உள்ள மிகப்பெரிய அழகு. பிரியமான ஒரு நகைச்சுவை அது.

பழைய மலையாளப்படங்களில் இஸ்லாமியப்பெண்கள் நிறைய வருகிறார்கள். நட்பும் பெருந்தன்மையும் மிக்க இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் வருகின்றன. அத்துடன் அருமையான மாப்பிளப்பாட்டும் மாப்பிளை நகைச்சுவையும் உள்ளன. மெல்லமெல்ல அவை மலையாள சினிமாவிலிருந்து அகன்றன. இஸ்லாமியர்கள் மைய ஓட்டத்திலிருந்து விலகியதன் அடையாளம் அது.

நான் இளமையில் ரசித்த பல பாடல்கள் மாப்பிள்ளைப்பாட்டுகளென காசர்கோட்டுக்குபோனபின்னர்தான் அறிந்தேன்.

இன்னொரு மாப்பிள்ள பாட்டு

காத்து சூக்‌ஷிச்சொரு கஸ்தூரி மாம்பழம்
காக்க கொத்தி போகும் அய்யோ
காக்கச்சி கொத்தி போகும்
நோக்கி வச்சொரு காரகாரப்பழம்
நோட்டம் தெற்றியால் போவும்

நட்டு நனைச்சு வளர்த்திய பூச்செடி
முட்டனாடு எத்தி தின்னும் அய்யோ
முட்டனாடு எத்தி தின்னும்’
கூட்டின் உள்ளிலே கோழி குஞ்ஞினெ
காட்டு குறுக்கன் தட்டும்

காய்ச்சி குறுக்கிய மோகத்தின்பாலு
மோகத்தின் பாலு
பூச்ச குடிச்சு போகும்
ஒரு பூச்ச குடிச்சு போகும்
பத்திரி சுட்டு பரத்தி மறிச்சது
கட்டுறும்பு கக்கும் ஒரு
கட்டுறும்பு கக்கும்

[ பாதுகாத்து வைத்த கஸ்தூரி மாம்பழத்தை
காகம் கொத்திக்கொண்டு செல்லும்
காகப்பெண் கொத்திக்கொண்டு செல்லும்
பார்த்து வைத்த காரைப்பழம்
பார்வை தவறினால் போகும்

நட்டு நீரூற்றி வளர்த்த பூச்செடி
ஆட்டுகிடா வந்து தின்னும்
கூட்டினுள் இருக்கும் கோழிக்குஞ்சை
காட்டுநரி வந்து கவரும்

காய்ச்சி வற்றவைத்த மோகத்தின்பாலை
பூனை குடித்துவிட்டுப்போகும்
பத்திரி அப்பத்தை சுட்டு பரப்பி வைத்ததை
கட்டெறும்பு திருடும்]

ஆடுபவர் எஸ்.பி.பிள்ளை. அமர்ந்திருப்பவர் சத்யன். படம் நாயரு பிடிச்ச புலிவாலு. பாடியவர் கொச்சி மெகபூப் இசைம் கெ ராகவன் எழுதியவர் பி பாஸ்கரன்.இதில் பாலி, குடிச்சி என்ற உச்சரிப்புதான் சரியான மலபார் மாப்பிளைத்தனம்.அதை அழுத்திவேறு காட்டுகிறார்.

https://www.youtube.com/watch?v=PCjsfW__PHw

இன்னொரு பாட்டு

ஹாலு பிடிச்சொரு புலியச்சன்
புலி வாலு பிடிச்சொரு நாயரச்சன்
நடுவிலு நட்டம் திரிஞ்ஞு ஞம்மளு
ஹலாக்கிலாயி சங்ஙாதீ

மாப்பிளை பார்வையில் நாயர்களைப்பற்றிய ஒரு நக்கல். புலியை நரி தின்னும். நரியை நாயர் தின்பார். நாயரையும் நரியையும் புலியையும் சேர்த்து நாயர்பெண் தின்பாள்! எஸ்.பி. பிள்ளையின் நடிப்பு. உடன் பகதூர். ஹாலு ஹலாக்கு போன்ற அரபுச்சொற்கள் நிறையவே உள்ள பாடல்

https://www.youtube.com/watch?v=6qSll6_FuWE

கொச்சி மெஹபூப் பாடியது. இசை கெ ராகவன். படம் நாயரு பிடிச்ச புலிவால்

இன்னொரு பாடல். [ நடிகரை தெரிகிறதா? ]

ஆற்று வஞ்சி கடவில் வச்சு
அந்நு நின்னெ ஞான் கண்டப்போள்
பாட்டு வந்நது பவிழ சுண்டில்
பாதி நிர்த்தியது எந்தாணு?

இப்போது கேட்கும்போது காசர்கோடும் என் நெருக்கமான நண்பன் ரசாக் குற்றிக்கமும் நினைவுகளில் சேர்ந்துகொள்கிறார்கள். ரசாக் இன்றில்லை. உடனே கிளம்பி காசர்கோடு செல்லவெண்டுமென இரவில் ஓர் உந்துதல் ஏற்பட்டது

நாவல் விலகி மறைந்து நெஞ்சு இழத்தலின் இனிமையால் நிறைந்தது.

முந்தைய கட்டுரைஜெகெ உரை- கடிதங்கள் 4
அடுத்த கட்டுரைஜேகே- முருகபூபதி