சில வம்புக்கடிதங்கள்…

சமீபகாலமாக ஒரு குறிப்பிட்டவகையான கடிதங்களை நான் தொடர்ச்சியாக பெற்றுக்கொண்டே இருக்கிறேன். அவற்றில் நான் திரைப்பட உலகுக்குச் சென்று என் மதிப்பை இழக்கிறேன் என்றும், இலக்கிய மதிப்பீடுகளில் அதற்காக சமரசம்செய்துகொள்கிறேன் என்றும் ஐயப்படபப்ட்டிருக்கும். நான் இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபடவேண்டுமென்ற ஆலோசனையும் இருக்கும்

இந்த மனநிலையை எப்போதும் கூர்ந்து கவனிப்பதுண்டு. இலக்கிய மதிப்பீடுகள் மீதும் அடிப்படை அறங்கள் மீதும் ஆழமான பற்றுடன், அவை இழக்கப்படுகின்றனவா என்ற பதைப்பை பாவனை செய்தபடி, இவை எழுதப்படுகின்றன.

உண்மையில் அப்படித்தானா? எழுதுபவர்கள் தங்களைத் தாங்களே பரிசோதனைசெய்துகொள்வார்கள் என்றால் அதில் உள்ள போலித்தனம் அவர்களுக்கு தெரியக்கூடும். ஆனால் பொதுவாக அத்தகைய நுண்ணுணர்வு கொண்டவர்கள் இப்படி எழுத முற்படுவதில்லை. அவர்களின் மனம் இயங்கும்தளமே வேறு.

இக்கடிதங்களின் ‘கவலைகள்’ என்னென்ன? ஒன்று எனக்கு இலக்கியம் மீதுள்ள பற்று மற்றும் அர்ப்பணிப்பு குறித்தது. இரண்டு என் கருத்துக்களில் எனக்குள்ள நேர்மை குறித்தது. அதாவது ஒட்டுமொத்தமாக என்னுடைய தனிப்பட்ட ஆளுமையின் மீதான ஐயம்.

என் அர்ப்பணிப்புக்கான ஆதாரங்கள் என் இலக்கிய ஆக்கங்கள். கடந்த இருபதாண்டுக்காலமாக இலக்கியத்தை மட்டுமே வாழ்க்கையின் தளமாகக் கொண்டு நான் செயல்பட்டு வருவதை அவை எந்த எளிய வாசகனுக்கும் காட்டும். கடும்உழைப்பும் மனக்குவிப்பும் இன்றி, உக்கிரமான தியாகங்கள் இன்றி அவற்றை ஒருவன் எழுதியிருக்க இயலாது என்று அவன் புரிந்துகொள்வான். அந்த வாசகனுக்கு என் அர்ப்பணிப்பு குறித்த எந்த ஐயமும் எழாது. இந்த கடிதங்கள் எழுப்பும் ஐயங்கள் எந்த இலக்கிய ஆக்கத்தையும் வாசிக்காமல் இலக்கிய வம்புகளினூடாகவே இலக்கியப்பயணம் நிகழ்த்துவதன் விளைவுகள்

ஓர் எழுத்தாளனாக என்னுடைய மிகச்சிறந்த வெளிப்பாட்டை நிகழ்த்தவேண்டுமென்பதே என் இலக்கு. என்னுடைய தனி வாழ்க்கையை நான் அதற்காகவே அமைத்துக்கொண்டுள்ளேன் என்பது என் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் தெரியும். எளிமையான அலுவலகப் பணிக்கு அப்பால் செல்வதில்லை, லௌகீக இலக்குகளை வைத்துக்கொள்வதில்லை என்ற முடிவை எடுத்துக்கொண்டமையால்தான் நான் அதிகமாக எழுத முடிந்தது. இன்றும் எந்த உலகியல் இன்பங்களுக்கும் பின்னால் செல்லாத தன்மையையே என் வலிமையாகக் கொண்டிருக்கிறேன்.

என் எழுத்து அடிப்படையில் ஆன்மீகத் தேடல். நிலையான சீரான வாழ்வல்ல, பயணமும் அலைதலுமே அதன் வழி. அதன் அழுத்தங்களும் தேவைகளும் எப்போதும் ஒன்றல்ல. இந்த பருவத்தில்தான் ஒரு சராசரி குடும்பத்தலைவன் மேல் பொறுப்புகள் அதிகமாகின்றன. அதேசமயம் இந்த வயதில்தான் நான் இதுவரை சேர்த்துக்கொண்டவற்றையெல்லாம் உதறி மேலே செல்லவும் வேண்டியிருக்கிறது. அந்த முன்னகர்வு எளிதல்ல. அதன் தத்தளிப்புகளையும், சங்கடங்களையும், அலைபாய்தல்களையும் இலக்கிய ஆக்கங்கள் வழியாக இலக்கியவாதியை அறிய முடியாதவர்களிடம் விவாதிக்க முடியாது.

மீண்டும் மீண்டும் இந்த உலகியல் வாழ்க்கை என்னை கட்டிப்போடாத சுதந்திரத்தை நான் தேடிக்கொள்கிறேன். தேவைகளை குறைப்பது ஒருபக்கம். கௌரவங்களையும் பொறுப்புகளையும் ஏற்க மறுப்பது இன்னொரு பக்கம். பொருளியல் சுதந்திரம் அதன் இன்னொரு பக்கம் மட்டுமே. அது எல்லா எழுத்தாளர்களுக்கும் உரிய நிபந்தனை அல்ல. நான் கஞ்சி காய்ச்சும் எழுத்தாளன் அல்ல, வரலாற்றை உருக்கி வார்ப்பவன். என்னையும் என் மொழியையும் மீண்டும் மீண்டும் சிதைத்து வார்த்துக்கொள்பவன்.

என் வாழ்க்கையில் எதையுமே எப்போதுமே ரகசியமாக வைத்துக்கொண்டதில்லை. அதை எனக்கான ஒரு விதியாகவே வைத்திருக்கிறேன். என் வாழ்க்கை என் வாசகர்களுக்கு முழுமையாகவே அறிவதற்குரிய ஒன்றே. என் ஆக்கங்கள் வழியாக. என் கட்டுரைகள் வழியாக. என் தத்தளிப்புகளும் தோல்விகளும் கூட அவ்வாறு வெளிப்படையானவை. நான் முழுமையானவன் என்று சொல்லவில்லை. அதை நோக்கிச் செல்பவன்.

என் ஆக்கங்களை தொடர்ச்சியாக வாசிக்கும் எவரும் என் கருத்துக்களின் ஒட்டுமொத்தமான திசையை, அவற்றில் நான் கொண்டிருக்கும் ஒழுங்கை உணர முடியும். அப்பட்டமாக இருப்பது என்பதே நான் என் குருநாதர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது. அந்த அப்பட்டத்தன்மை பலசமயம் சமகாலத்து அரசியல்சரிகளை அறநெறிகளை பொதுநம்பிக்கைகளைச் சீண்டும்போது நான் விவாதமையமாக ஆகிறேன். வசைபாடப்படுகிறேன்

என் கருத்துக்களை நான் முழுமையான, கடைசியான முடிவுகளாக நினைக்கவில்லை. அவற்றை வேறு கோணத்தில் பார்க்கும் ஒருவாசகனுக்கு அவற்றில் நான் கொண்டிருக்கும் குழப்பங்களோ சிக்கல்களோ பார்வையில்படக்கூடும். ஆனால் ஒருபோதும் சுயநலம் சார்ந்த சமரசங்களை பார்க்கமுடியாது என்றே கூறுவேன்.

ஆனால் என் வாசகர்களே அதைப்பற்றி என்னிடம் உரையாடும் தகுதி கொண்டவர்கள். வம்பாளர்களை என் தணிக்கையாளர்களாக வைத்துக்கொண்டு அவர்களின் சான்றிதழ்களை நான் தேடிக்கொண்டிருக்க இயலாது. ஆகவே வம்பின் தரத்தில் வரும் கடிதங்களுக்கு பொதுவாக நான் பதில் அளிப்பதில்லை. பல கடிதங்களுக்கான பொதுவான பதில் இது.

நான் சினிமாவில் நுழைந்து ‘சமரசம்’ செய்துகொண்டதாகவும் சுயகௌரவத்தை இழந்துவிட்டதாகவும் ‘கவலை’ப்பட்டு எழுதப்படும் கடிதங்களை ஆரம்பத்தில் என்னை பரிசீலனை செய்துகொள்ள நான் பயன்படுத்தியிருக்கிறேன். அப்படி நிகழ்கிறதா என்ற ஆவலுக்கும் மேலாக அப்படி நிகழவேண்டுமே என்ற ஆசையே இந்த கடிதங்களின் பின்னால் உள்ள மனநிலை என நாளாடைவில் புரிந்துகொண்டேன். அன்றாட சமரசங்கள் வழியாக, சுயஇழிவுகளினூடாக வாழ்பவர்களின் அற்ப ஆசை இது.

இதன் உளவியல் என்ன? தங்கள் தனி வாழ்க்கையில் எந்த விதமான மதிப்பீடுகளையும் பேணிக்கொள்ள முடியாது போனவர்கள் சில மதிப்பீடுகளின் பிரதிநிதிகளாக இருப்பவர்களின் சரிவை உள்ளூர ஆசைப்படுகிறார்கள். ‘எல்லாரும் நம்மள மாதிரித்தான் மாப்ள’ என்ற எளிய ஆறுதலை தேடுகிறார்கள்.

சினிமாவில் என் பங்களிப்பு என்ன? நான் அதில் பணியாற்றுவதற்காகச் சென்றிருக்கிறேன். அதில் இன்று ஓர் எழுத்தாளன் ஆற்றியாகவேண்டிய பங்கு அடையாளப்படுத்தப்படவில்லை, வணிகரீதியாக நிரூபிக்கப்படவும் இல்லை. சினிமா எனக்கு இலக்காக இருந்ததில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் அது உருவாக்கும் வாய்ப்பு எனக்கு தெரிந்தது. என் அலுவலகவேலையில் ஓர் உச்சகட்டத்தை நான் கண்டுகொண்ட தருணம் அது.

இன்று, அரசு அலுவலகங்களில் வேலைசெய்யும் அனைவருக்குமே ஒன்று தெரியும், வேலைசெய்தபடி கலையிலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்ட காலம் முடிந்துவிட்டது. அமெரிக்கவேலைமுறை மெல்லமெல்ல உருவாகி வந்துவிட்டது. ஒருவேலையில் இருப்பவன் மொத்த வாழ்க்கையையும் அதற்காகக் கொடுக்கவேண்டும். எளிய சில விடுமுறைகளை மட்டும் அவன் எடுத்துக்கொள்ளலாம். வரும்காலத்தில் இரு வாய்ப்புகளே உள்ளன. மேலைநாடுகளைப்போல முழுநேர எழுத்து உருவாகலாம். அல்லது கீழை ஆசிய நாடுகளைப்போல இலக்கியமும் கலையும் அற்றும்போகலாம்.

இச்சந்தர்ப்பத்தில் நான் கண்டடைந்த வெளியேறும் முறை சினிமா. அது எனக்கு விடுதலை அளித்தது. எழுத்து மீதான அர்ப்பணிப்பினால்தான் நான் என்னை ஒரு மிகச்சிறிய வேலைக்குள் நிறுத்திக்கொண்டிருந்தேன். அதன் காரணமாகவே வெளியேறவும் முடிவுசெய்தேன். சினிமா என் இலக்கோ இடமோ அல்ல. இதன் வழியாக இன்னும் பெரிய ஒரு வெளியேறலை, ஒரு புதிய தொடக்கத்தை உத்தேசித்திருக்கிறேன்.

இன்றைய தமிழ் சினிமாவின் தளத்தில் அதன் படைப்புப் பங்களிப்பு எப்போதுமே கூட்டான ஒன்று. எழுத்தாளனின் பங்களிப்பு என்பது இன்றும் வரையறுக்கப்படாமலேயே உள்ளது. சினிமாவில் எழுத்தாளனாகச் செயல்படும்போது இன்று எழுத்தாளன் என்னென்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்துக்காட்டவேண்டியிருக்கிறது. ஆகவே நிபந்தனைகள் வைக்கும் தருணம் அல்ல இது. உதாரணமகா பாலாவின் நான்கடவுளில் ஏழாம் உலகம் நாவலின் கூறுகள் இருப்பதை தலைப்பில் அங்கீகரிக்கவில்லை என்றும் ஆகவே நான் அவரிடம் இலக்கியத்தை ஒப்புக்கொடுத்துவிட்டேன் என்றும் சிலரால் சொல்லப்படுகிறது.

நான்கடவுள் பாலாவின் கதை, திரைக்கதை. அதற்கு நான் வசனம் எழுதியபோது என் நாவலின் சூழலின் சில அம்சங்களை மட்டும் அதில் சேர்த்துக்கொண்டேன். அது என் முடிவு. அதை நான் போராடி மெல்லமெல்லத்தான் செய்யமுடிந்தது. ஒரு வணிகசினிமாவில் இலக்கியத்தின் ஒரு கூறு இருக்கமுடியும், ஓர் அப்பட்டமான யதார்த்தத்தை திரையில் காட்டமுடியும் என்று காட்டுவதற்கான ஒரு தருணமாக அதை மேற்கொண்டேன். அது வணிகரீதியாக செல்லுபடியாயிற்று என்றும் அது தேசிய அளவில் விருதுக்கான அங்கீகாரத்தில் ஒரு வலுவான இடத்தை வகித்தது என்றும் அதன் மூலம் காட்ட முடிந்தது.

தமிழ் சினிமாவின் வழக்கமான கருப்பொருட்களில் இருந்து ‘நான் கடவுள்’ விலகியமைக்குக் காரணம் இந்த இலக்கிய அம்சம்தான். அதை தமிழ் சினிமா வேண்டி விரும்பி தேடிவரவில்லை, நிபந்தனைகள் விதிப்பதற்கு. அதை நான் என் முயற்சியால் உள்ளே கொண்டு செல்ல முனைகிறேன். அதன் வெற்றியே மேலும் சில இலக்கியங்கள் திரையில் நிகழ வழி வகுத்தது. ஆனால் இன்று இந்த முயற்சி ஓர் ஆரம்ப நிலையிலேயே உள்ளது.

தமிழ் சினிமாவில் பெரிதாக எதையும் சாதிக்கும் எண்ணம் எனக்கில்லை என்பதைச் சொல்லியிருக்கிறேன். என் நோக்கம் சிறிதுகாலம் அதை ஒரு தொழிலாகக் கொள்வதே. ஆனால் அதில் இருக்கும் காலத்தில் என் பங்களிப்பை அதில் நிகழ்த்தவும் அதன் போக்கில் எதையாவது கொடுக்கமுடியுமா என முயலவும் எண்ணுகிறேன். சினிமாவின் வழக்கமான கட்டமைப்புக்குள் இலக்கியத்தின் இடத்தை கொஞ்சமேனும் சாத்தியமாக்குவதே அதில் என் குறைந்தபட்ச இலக்கு. அதற்காக சில சமரசங்களையும் செய்ய துணிவேன்.

ஆனால் தமிழ் சினிமாவின் தரம் குறித்து ஓயாது பேசுபவர்கள் இப்படி ஒரு முயற்சி நிகழக்கூடாதென்று விரும்புவதன் உளவியல் ஆச்சரியமளித்தாலும் புரிந்துகொள்ளக்கூடியதுதான். இம்முயற்சிகளின் வெற்றி அவர்களை பதற்றப்படுத்துகிறது. அதை நிராகரிக்கவும் குறைத்து மதிப்பிடவும் முயல்கிறார்கள். முடிந்தால் சினிமாவில்செயல்படுபவர்களிடம் மனச்சிக்கல்களை உருவாக்கலாமென நினைக்கிறார்கள்.

காரணம் மிக எளியது. தமிழில் பெரும்பாலானவர்கள் சினிமாவில் நுழைவதையே அந்தரங்கமான கனவாகக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக எந்த சமரசத்தையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். தங்களைப்போன்றவர் என்று நம்பும் ஒருவர் நுழைகையில் பதற்றம் கொள்கிறார்கள். அந்த உளச்சிக்கலே இவ்வகையில் வெளிப்படுகிறது.

சினிமாவில் எழுத்தாளர்கள் கௌரவத்தை இழக்கவேண்டும் என்ற ஆசையை இணையத்திலும் பலரிடம் கண்டுகொண்டிருக்கிறேன். எத்தனை எள்ளல்கள், எத்தனை அற்பக் குதூகலங்கள். உண்மை, சினிமாவில் எழுத்தாளர்களுக்கு இன்று இயல்பான இடம் ஒன்று இல்லை. அதாவது அவன் படைப்புரீதியாக என்ன செய்யமுடியும் என்பது தெளிவாக இல்லை. அது எழுத்தாளர்கள் உள்ளே நுழைந்து எழுதி, வெற்றி காட்டி நிரூபித்து எடுக்க வேண்டிய ஒன்று. எழுபதுகளில் எம்.டி.வாசுதேவன் நாயரும் பத்மராஜனும் அப்படித்தான் மலையாளத்தில் சாதித்தார்கள். அது மலையாள சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றது.

அது தமிழில் நிகழலாம், நிகழாமலும் போகலாம். ஆனால் பல எழுத்தாளர்கள் வழியாக அந்த முயற்சி நிகழவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதற்கான போராட்டங்கள் வெற்றி தோல்விகளுடன், பலவகையான சறுக்கல்களுடன், சிக்கல்களுடன், மோதல்களுடன்தான் நிகழ முடியும். எழுத்தாளன் தன் அகங்காரத்தை சோதித்துப்பார்க்க வேண்டிய இடமல்ல சினிமா.

ஆனால் சினிமாவில் எல்லா எழுத்தாளர்களும் தனிப்பட்ட முறையில் அபாரமான மரியாதையைத்தான் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். சினிமாவில் நான் சந்தித்தவர்களில் எனக்கு அந்த முதல்மரியாதையை அளிக்காதவர்கள் என எவரும் இல்லை. பணம் என்ற அளவிலும் அப்படித்தான் – ஒருவர்கூட நான் கேட்டு பணம் பெறும் நிலையை எனக்கு உருவாக்கியதில்லை. நான் பணியாற்றிய எந்த இயக்குநரையும் பெயரிட்டு அழைக்கக்கூடிய, அவர்களின் தனிவாழ்க்கையில்கூட பங்கெடுக்கிற நண்பராகவே இருந்திருக்கிறேன். படப்பணி முடிந்த பின்னரும்கூட நீடிக்கும் நட்புகள் அவை.

அது இலக்கியம் உருவாக்கியளிக்கும் இடம். ஏனென்றால் இணையத்திலும், சிற்றிதழ்களிலும் எந்த இலக்கிய நூல்களையும் வாசிக்காமல் வம்புபேசுபவர்களைவிட அதிகமாகவே சினிமாக்காரர்கள் இலக்கிய நூல்களை வாசித்திருக்கிறார்கள். அவற்றில் மனம் பறிகொடுத்திருக்கிறார்கள். அவற்றின் வழியாக இலக்கியவாதியின் மனத்தை அறிந்திருக்கிறார்கள்.

உண்மையில் தமிழ் எழுத்தாளன் அவனது மிக மோசமான அவமதிப்புகளை அடைவது இலக்கியத்தை வம்புகளாக மட்டுமே அறிந்து இலக்கியச்சூழலில் புழங்குபவர்களிடமே. அந்த அவமதிப்பு அவன் எந்த சாதனை ஆற்றியிருந்தாலும் அதற்காக எந்த தியாகங்களைச் செய்திருந்தாலும் விலகுவதில்லை. அடுத்தபடியாக நம் கல்விநிலையங்களில் அவனுக்கு அவமதிப்பு திரண்டிருக்கிறது. நான் முற்றிலுமாக தவிர்க்க நினைப்பது இந்த இரு சாராரையுமே.

சமீபத்தில் வந்த ஒரு கடிதத்தில் நான் இப்போது திடீரென வைரமுத்துவை புகழ்வதாக சொல்லப்பட்டிருக்கிறது. வைரமுத்துவின் ஆக்கங்களைப்பற்றி நான் என்ன எழுதியிருக்கிறேன் என இந்த ஆசாமிக்கு எதுவுமே தெரியாது என்று உணர்ந்தேன்.எப்போதுமே அவரை வானம்பாடி இலக்கிய அழகியலின் சிறந்த உதாரணமாகவே சொல்லியிருக்கிறேன். அந்த அழகியல் எனக்கு உடன்பாடானதல்ல அவ்வளவே. தமிழின் ஆகச்சிறந்த பாடலாசிரியராக நான் அவரைத்தான் பார்க்கிறேன். அவற்றை மிக விரிவாக எழுதியிருக்கிறேன் — அவருக்கு சாகித்ய அக்காதமி விருது கொடுக்கப்பட்டதைக் கண்டித்து எழுதிய கட்டுரையில்கூட! அவரை புனைகதையாசிரியராகத்தான் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

வைரமுத்துவின் ஆளுமைச் சித்திரம் குறித்த மரபின்மைந்தனின் நூலில் எப்படி அவரது ஆளுமை கணிசமான இளைஞர்களிடம் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது என்பதை குறிப்பிட்டிருக்கிறேன். பொதுவாக கவிஞர்கள் உருவாக்கும் சோர்வுமனநிலைக்கு மாற்றாக அவர் உருவாக்கும் ஊக்கமே அதற்குக் காரணமாக இருக்கலாமென குறிப்பிட்டிருக்கிறேன். அதைப்பற்றியே இந்த புகார். ‘அப்ப திட்டினான் இப்ப பாராட்டுறான். ஏதோ இருக்கும்போல’ என்ற வம்பு மனநிலை வேலைசெய்கிறது.

அதேபோல் சென்ற பலநாட்களாக எனக்கு வரும் கடிதங்களின் மையக்கேள்வி நான் ஒரு குறிப்பில் ‘கமல் அவர்கள்’ என்று சொன்னதைப்பற்றியது. அது பெரிய சமரசம் என்றும் வீழ்ச்சி என்றும் எழுதினார்கள். எனக்கு கமல் அவர்கள் நெருக்கமானவரல்ல என்பதனாலும், அவர் என்னை ‘ஜெயமோகன் அவர்கள்’ என்று சொல்வதனாலும்தான் அப்படிச் சொல்கிறேன் என்று சொன்னேன். அதற்கு ‘அதெல்லாமில்லை, நீங்கள் அவருக்கு எழுதப்போகிறீர்கள்’ என்று பதில் வருகிறது. இந்த அற்ப ஆசைகளுக்கு என்ன பதில் சொல்வது? ‘சரி, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். சமரசம் செய்து வீழ்ந்துபோன ஒருவனை கொள்கைக்குன்றான நீங்கள் மேற்கொண்டு வாசிக்கவேண்டாம்’ என்று பதில் சொன்னேன்.

எனக்கு இந்த வம்புகள் புதியனவல்ல. நான் எழுத ஆரம்பித்தபோதே இதைத்தான் சந்தித்தேன். சுஜாதாவையும் கல்கியையும் அவர்களின் தளத்தில் வைத்து அங்கீகரித்து எழுதிய ஆரம்ப நாட்களில் ‘அந்தப்பக்கம் போய்ட்டீங்களா? குமுதத்திலே எழுதுறீங்களா?’ என்று வம்பாளர்கள் கேட்டதை நினைவுகூர்கிறேன். இந்த வம்புகள் அவதூறுகள் உருவாக்கும் சிக்கல்களின் நடுவேதான் நான் என் சிறந்த ஆக்கங்களை எழுதி என் வாசகர்களைக் கண்டுகொண்டிருக்கிறேன்

புறக்கணிப்பை மட்டுமே கோரும் இந்த வம்புகளைப்பற்றி இந்த விளக்கமே கூட பலர் நேர்ப்பேச்சில் இந்தவகையான சலிப்பூட்டும் வினாக்களை மீண்டும் மீண்டும் கேட்டு நேரவிரயம்செய்வதை தவிர்ப்பதற்காகவே

வாசிப்பை விட வம்பு அதிகமாக உள்ள தமிழ்ச்சூழலில் எந்த இலக்கியவாதியும் சந்திக்க நேரும் சிக்கல் இது. ஏளனம், திரிபு, மூட்டிவிடுதல். இதைத்தாண்டித்தான் நாம் எழுத வேண்டியிருக்கிறது. இலக்கு தெளிவாக இருந்தால் அதைமட்டுமே நோக்கவேண்டும். என்ன செய்கிறோம் என்பதே பதிலாக அமையும்.

ஜெ

முந்தைய கட்டுரை“காட்சிப்பிழை”.
அடுத்த கட்டுரைஅ.முத்துலிங்கத்துக்கு வயது ஆறு