சுஜாதா அறிமுகம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இது சராசரிகளின் நாடு. இங்கே இவர்கள் எது உச்சம், எது உண்மை, எது சரி என்றறிவதிலும் சராசரிகளாகவே இருந்துவிடுகிறார்கள். அது தான் பிரச்சனை. ஓர் எல்லைக்கு மேல் இவர்களின் தேடல் நிற்பதோடன்றி, இதுவே போதும்! இதுதான் சரி! என்பது போன்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். அதை விளைவை அவ்வப்போது அல்லது தொடர்ந்து கூட நாம் அனுபவிக்க வேண்டியிருகிறது. இதோ இப்போது உங்களின் ‘சுஜாதா விருதுகள்’ பற்றிய பதிலுக்கும் அதுவே நடந்து கொண்டிருக்கிறது.
உண்மையில் நீங்கள் அளித்த விளக்கத்தை இந்த சராசரிகள் முழுமையாக வாசித்தார்களா என்பதே சந்தகம்தான். ‘மாஃபியா’, ‘அரிப்பு’ என்ற சொற்களை மட்டும் Ctrl+F போட்டு தேடியிருப்பார்கள் போல! உண்மையில் ம.பு. இணைய ‘மாஃபியா’ அல்ல. ஊடக ‘மாஃபியா’. இவர் முகம் தெரியா தொலைக்காட்சி விவாதமென்பது அரிதாகிவிட்டது. நாளையே ஆட்சி மாறினால் இவ்விருதின் பிம்பம் இன்னும் ஊதிப் பெரிதாக்கப்படும். அதை நினைத்தால் தான் அடி வயிறு கலக்குகிறது! இந்த வா…ரம்… ‘இலக்கிய வா…ரம்’ என்று வீடுவரை வந்து கூவினாலும் கூவுவார்கள்.
இவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு நல்ல இலக்கியத்தை கண்டடைவதென்பது உண்மையில் பெரும் போராட்டம் தான். இந்த சராசரிகளைப் பொருத்தவரை இலக்கியமென்பது மாலை நேர செய்தித்தாள் தரத்திலிருந்தால் போதும்! தமிழர்களுக்கே உரித்தான எதுகை மோனை கொஞ்சம் நக்கல் இருந்துவிட்டால் இன்னும் சிறப்பு! போகிறபோக்கில் படித்துவிட்டு கருத்து சொல்ல இவைதான் ஏற்றது. கொஞ்சம் செறிவான மொழிநடை என்றாலே யோசிக்கும் இவர்களுக்கு சுஜாதா இலக்கிய உச்சமாக தெரிவதில் வியப்பில்லை என்றே எண்ணுகிறேன்.
உண்மையில் இந்த விருது தொடர்பான உங்களின் கருத்தை ஒரு முக்கிய ஆவணமாகப் பார்க்கிறேன். அதை தக்க நேரத்தில் பதிவு செய்ததற்கு நன்றி!
பின் குறிப்பு: இந்த சராசரிகளில் குறிப்பிடத்தகுந்த சராசரி வா.மணிகண்டன்… இவரின் சில கட்டுரைகளை திரு.’ஒத்திசைவு’ ராமசாமி அவர்கள் கிழித்துத் தோரணம் கட்டியிருக்கிறார். அதற்கு எதிர்வினையாற்றத் திராணியற்ற இவர், உங்களின் பதிலுக்கு ஆற்றியிருக்கும் உடனடி எதிர்வினையை என்னவென்று சொல்ல… வாழ்க சராசரிகள்!
திசையிலி scalar <[email protected]>