சுஜாதா விருதுகள் கடிதங்கள் 4

சுஜாதா அறிமுகம்

அன்புள்ள ஜெ,

மிகச் சரியாக சொன்னதை மட்டும் விட்டு விட்டு சொல்லாததையெல்லாம் கற்பனை செய்து, அதற்கு தொண்டைத் தண்ணி வற்ற எதிர்வினை புரிவதில் நம் இணைய எழுத்தாளர்களுக்கு இணை வேறு எவரும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி இருக்கிறது. நீங்கள் கொடுத்த உதாரணங்கள் பற்றி பேசவில்லை. நீங்கள் பேசிய விருதின் பின்னால் இருக்கும் நோக்கத்தைப் பற்றி பேசவில்லை. ஆனால் மாஃபியா என்று சொன்னதைப் பிடித்துக் கொண்டார்கள். இளம் எழுத்தாளனின் இருப்பு மூத்த எழுத்தாளர்களுக்கு அச்சமூட்டுகிறது என்று எழுதிய அந்த தன்னம்பிக்கை மயிர்கூச்செறிய வைக்கிறது. நீங்கள் சொன்னது ஏன் தவறு என்று ஒரு உருப்படியான வாதமாவது வருமா எனப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஹும்ம்ம்… அப்படியெல்லாம் வந்துவிட்டால் தமிழ்நாடு உடைந்து விடாதோ!!! இப்படியே இருக்கட்டும்!!! விருது கொடுக்கப்பட்ட நாவலையோ, அந்த கவிதையையோ படித்த ஒருவராவது இவர் சொன்னது இதனால் தவறு, இது ஒரு தலைப்பட்சமான மதிப்புரை என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஏன், எழுதியவர்களே அவற்றைப் பற்றி பேசவில்லையே, அப்புறமல்லவா படித்தவர்கள் பேசுவதற்கு. எப்படியோ வடக்கெல்லை சாமி தான் இவங்களயேல்லாம் காப்பாத்த வேண்டும். நல்லவேளை உங்களுக்கு தரப்படாததால் தான் இவ்வாறு பேசுகிறீர்கள் என்று எழுதவில்லையே!!! அந்த அளவுக்கு சரி. facebook திறந்தாலே ஒரே நகைச்சுவை தான்…

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.

அன்புள்ள மகராஜன்

ஆமாம் பார்த்தேன். மயிர்க்கூச்செறிய வைக்கும் தன்னம்பிக்கை. வேறென்ன சொல்ல? அது உண்மையில் உள்ளூர இருந்தால் நல்லதுதான். ஒரு பிடிமானம் இருக்கும்

மாஃபியா என்றேன் அல்லவா? அதை நிரூபிக்க உழைக்கிறார்கள்

ஜெ

அன்பின் ஜெ,

சுஜாதா விருதுகள் பற்றிய உங்கள் விளக்கம் நிச்சயம் இன்று தேவையானது.இதே எண்ணம் எனக்கு இவ்விருதுகள் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட போதே தோன்றியது.உயிர்மை எதற்கு சுஜாதாவை உயர்த்திப் பிடிக்கிறது என்றே குழம்பினேன்.

இலக்கிய வாசிப்பு என்பதைக் கொஞ்சமும் உணராத நண்பர்கள்(!) எனக்குண்டு.டைம் பாஸ் என்று மதிய லஞ்ச் பிரேக்கில் படித்து விவாதிப்பவர்கள்.இன்னமும் கல்கி,பாலகுமாரன்,சுஜாதா மட்டுமே எழுத்தாளர்கள் என்று நம்புபவர்கள்.இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால் இவர்கள் சீரியல் பற்றி பேசுபவர்களை இலக்கியம் தெரியாதவர்கள் என்று மட்டந்தட்டுவார்கள்.

இவர்களில் சிலர் என் புத்தகங்களைப் பார்த்து விட்டு இதப்போய் எப்படிப்படிக்கிற என்று கேட்பதுண்டு.தீவிர நவீன தமிழ் இலக்கிய புத்தகங்கள் நிறைந்த நூலகம் என்னுடையது.கடந்த வாரத்தில் என் வீட்டிற்கு வந்த தோழி ,விஷ்ணுபுரம்,கொற்றவை,தேவதச்சன்.நாஞ்சில்நாடன்,எஸ்ரா,தி.ஜா,கிரா.ஜேகெ, என்று தொடங்கி புத்தம்வீடு,தலைமுறைகள்,புலிநகக்கொன்றை,சஞ்சாரம் வரை பார்த்துவிட்டு உண்மையிலேயே இதெல்லாம் வாசிக்கிறாயா என்றார்.நான் அறம் தொகுதியைக் கொடுத்து வாசிக்கச் சொன்னேன்.அவர்நிறைய வாசிப்பதாக என்னிடம் அடிக்கடி கூறுவார்.மறுநாளே என்னிடம் புத்தகத்தை திருப்பிக் கொடுத்து இதெல்லாம் எனக்குப் புரியாது என்றார்.வணிக எழுத்திலிருந்து தீவிர இலக்கியம் பக்கம் வரும்போது உண்டாகும் திகைப்பு அது.நிறைய பேர் அங்கேயே நின்று விடுவார்கள்.அந்த அதிர்ச்சியிலிருந்து கொண்டே,தீவிர இலக்கியம் புரியாதது,குழப்பிவிடும் என்றெல்லாம் இறுதி வரை பேசுவார்கள்.

அத்தகையவர்களே இணையத்திலும் சுஜாதாவை எழுத்துலகின் சூப்பர்ஸ்டார் என்று புளகாங்கிதம் அடைபவர்கள்.அவர்களைப் பற்றி மிக நுட்பமாக எழுதியிருக்கிறீர்கள்.நிச்சயமாக இது பதிவு செய்யப்பட வேண்டியதே.

வணிக எழுத்தையும்,தீவிர இலக்கியத்தையும் ஒன்றாகக் குலுக்கி,குழப்பி சேறு போலாக்கிவிட்டார்கள்.நல்ல வாசகர்களும் இதனால் ஒருகணம் மனம் மயங்குவார்கள். எத்தனை பிலிம்பேர் வேண்டுமானாலும் கொடுக்கட்டும்.ஆனால் தமிழ் இலக்கியத்திற்கே அதுதான் அச்சாரம் என்று பரப்பாமல் இருக்கட்டும்.உங்கள் கருத்துகள் பலருக்கும் புரியும்

நன்றி
மோனிகா மாறன்.


சுஜாதா விருதுகள்

கடிதங்கள் 4

கடிதங்கள் 3

கடிதங்கள் 2

கடிதங்கள் 1

முந்தைய கட்டுரைசுஜாதா விருதுகள் -கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைசுஜாதா விருது- கடிதம் 5