சாங்கிய யோகம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

பகவத் கீதையை நீங்கள் அணுகியுள்ள விதம் மிகவும் அருமையாக இருக்கிறது. அந்நூலை எப்படி ஒரு முழுமைப்பார்வையில் அணுகவும் அத்துடன் நம் அகத்தேடலுக்கான ஒரு வலிமையான கருவியாக பயன்படுத்தவும் சொல்லிக்கொடுத்துள்ளீர்கள். தங்களுக்கும் தங்கள் குரு நித்ய சைதன்ய யதிக்கும் தனிப்பட்ட முறையிலேயே ஒரு வாசகனாக கடமைப்பட வைத்துள்ள உரை. சாங்கியம் குறித்த தங்கள் கட்டுரைகளை பலமுறை வாசித்தேன் – அது உருவாக்கிய மனக்கிளர்ச்சி அடங்கும் வரை. ஹென்றி பெர்கூஸனின் உயிர்வாதம் மற்றும் அதனை நிராகரிக்கும் எளிய பொருள்முதல்வாதம் ஆகிய இரட்டையில் விழாமல் ஆன்மாவினை அருமையாக விளக்கியுள்ளீர்கள். பொருள்முதல்வாதமும் எளிய இரட்டைநிலைகளைவிட்டு முன்னகர்ந்துள்ளது.

இன்றைக்கு பிரக்ஞை அறிவியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அறிதல் புலமாகிவிட்ட பிறகு தங்களைப் போன்ற synthesis செய்பவர்கள் அறிவியலின் முன்னகர்தலுக்கு முக்கியமான epistemological frameworkகளை கொடுப்பவர்களாகிவிட்டனர். ஏற்கனவே ராமச்சந்திரன் அத்தகையதொரு framework மூலம் theoretical என்பதற்கும் மேலாக சென்று சிகிச்சை முறைகளையே உருவாக்கியுள்ளார். உங்கள் பகவத் கீதை குறித்த எழுத்துக்கள் தமிழக அறிவியலாளர்களால் உள்வாங்கப்படுமானால் பல புத்தெழுச்சிகளையும் நாம் உருவாக்கலாம்.  

தங்கள் மைந்தனை வெர்னாட்ஸ்கியின் நூல்கள் கிடைத்தால் படிக்க சொல்லுங்கள். அஜிதனின் வயதில் நானும் இப்படித்தான் தீவிரமாக நம்பினேன். புத்தர் மானுட பரிமாணத்தின் மற்றொரு நிலை என்றும் அவரது டி.என்.ஏ தொடர்களில் தேடி அந்த மாறுபடும் டி.என்.ஏ மூளையில் எந்த சூழலில் எத்தகைய மாற்றங்களை கொண்டு வரும் என கண்டுபிடித்தால் எந்த மனிதக் கருவின் குறிப்பிட்ட க்ரோமோஸோமிலும் அந்த டி.என்.ஏ தொடரை செலுத்தி அதற்கு செயற்கையாக புத்தருக்கு ஏற்பட்ட சூழ்நிலைகளை உருவாக்கினால் புத்தராக மாற்றிவிடலாம் என்றும் நினைத்தேன்.

 ஆனால் சூழல் அறிவியலும் பரிணாம அறிவியலும் இணையும் போதுதான் உயிரியல் என்பது குறுகல் வாதத்தில் அடங்காத ஒரு விஷயம் என்பதே புரிகிறது. பரிணாமவியல்+கரிமவியல்+மூலக்கூறு உயிரியல் என்பது ஒரு கவர்ச்சிதான். உண்மையில் ஓரளவிற்கு மேலாக பரிணாம அறிவியல் – ஆராய்ச்சி சாலைகளில் நடக்கும் மூலக்கூறு உயிரியலுடனும் கரிம வேதியியலுடனும் அப்படி ஒன்றும் இணைவதில்லை. ஆனால் சூழலியலிருந்து பெறப்படும் தரவுகளே பரிணாம அறிவியலின் பல பரிமாணங்களை ஆழமாக்குகின்றன. Gaia இன்றைக்கு ஒரு கருதுகோள் என்ற நிலையிலிருந்து ஒரு வலுவான ஆராய்ச்சி அறிதல் சட்டகமாக மாறியுள்ளது. Gaia அல்லது system thinking உடைய பல அடிப்படைகளை வெர்னாட்ஸ்கியிடம் காணமுடியும்.

மாஸ்கோ மிர் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள ‘Ages of bygone biospheres’ 16-17 வயது உயிரியல் மாணவர்களுக்கு மிகச்சிறந்த முறையில் வெர்னாட்ஸ்கியின் சிந்தனைகளை அறிமுகம் செய்யும். அதை படித்த பிறகு ஒரு மலையையோ அல்லது ஒரு கறையான் புற்றையோ ஒருவித மனக்கிளர்ச்சியில்லாமல் ஒரு உயிரியல் மாணவனால் பார்க்காமலிருக்க முடியாது. 

பணிவன்புடன் 

அரவிந்தன் நீலகண்டன்

அன்புள்ள அரவிந்தன்

நன்றி

கீதை பற்றிய இவ்விவாதத்தை நான் தொடங்கும்போது அதை பக்தி நூலாக, மதமூலநூலாக, கருதக்கூடாது என்று சொல்லியிருந்தேன். அதற்குக் காரணம் அந்த அணுகுமுறையானது கீதையின் முரணியக்கத்தை விளக்க முடியாது போகும். அப்போது முரண்பாடுகளே கண்ணில் படும் சாங்கிய யோகம் முடியும்போதே முதல் முரண்பாடு கண்ணில் பட்டுவிடும். உனக்கு சொற்கம் கிடைக்கும் புகழ்கிடைக்கும் என்று சொன்ன அதே மூச்சில் கிருஷ்ணன் ஏன் பயன்கருதாது செயலாற்று என்று சொல்கிறான் என்ற கேள்விஎழும். அதற்கு அதெல்லாம் பகவான் வார்த்தை பேசாமல் படி என்ற பதிலே சாதாரணமாக அளிக்கப்படும்.

கீதையை தத்துவ நோக்கில் ஆராய்ந்த முன்னோடி நடராஜகுரு. அவரது ஆங்கில நூலான The Bagvath Girta’ [DK Print world New Delhi] ஒரு முக்கியமான நூல். இவ்வுரை அதற்குத்தான் பெரிதும் கடன்பட்டிருக்கிறது. ஆனால் நித்யாவுடன் நடந்த ஏழுவருட உரையாடல் இல்லையேல் இது சாத்தியமாகியிருக்காது

ஜெ

***

ஜெயமோகன் அவர்களுக்கு,

                                              கீதையை பற்றி நீங்கள் எழுதும் போதேல்லாம் ஒரு விஷயம் சொல்கிறிர்கள், கீதை ஞானத்தேடல் கொண்டவர்களுக்கு , சாமாணியர்களுக்கு இல்லை என்று.அப்படியல்ல என்று தோன்றுகிறது.

மாசனோபு தன் ‘The Natural way of Farming’  புத்தகத்தில் தேடல் என்பது நகரத்து இளைஞர்களுக்கானவை , ஒரு கிராமத்து விவசாயி அப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பமாட்டான். அதற்காக அவன் முட்டாள் எனப் பொருள் அல்ல.ஏனேனில் முட்டாள் விவசாயியாக இருக்க முடியாது.அவனிடம் எந்த தத்துவமமும் இல்லை என்றில்லை.மாறாக அவன் எந்த தத்துவமும் தேவையற்றது என்ற மகத்தான தத்துவத்தை உடையவனாக இருக்கிறான் என்கிறார்.

எல்லா தேடல்களுக்கு பின்யிருப்பது அகங்காரம் மாத்திரமே. அஜிதர்,பிங்கலன்,சங்கர்ஷணன்,யோகவிரதர் எல்லோருமே அந்த அகங்காரத்தின் வெறுமையை உணர்கிறார்கள்.

பாகவன் ‘மனிதனால் ஒரு கூழாங்கல்லை கூட முழுமையாக புரிந்து கொள்ளமுடியாது’ என்று சொல்வது எத்தனை அசாத்திய உண்மை.

எந்த அகங்காரமும் இல்லாமல் அடையும் பிரபஞ்ச தரிசணம் எத்தனை பெரிய ஆசி. மனிதர்களை தவிர எல்லா  ஜுவராசிகளுக்கும் அது எளிதில் சாத்தியப்பட்டு இருக்கிறது.

நன்றி,

ச.சர்வோத்தமன்.

அன்புள்ள சர்வோத்தமன்
நலம்தானே? நீங்கள் விஷ்ணுபுரம் பற்றி எழுதிய தபால் கடிதமும் கிடைத்தது. கீதை என்றல்ல எந்தப்புத்தகமும் ஞானத்தேடல் கொண்டவர்களுக்கு உரியதெ. அத்தேடல் இல்லாதவர்கள் படிக்கவே மாட்டார்கள் அல்லவா?

அப்படிப் படிக்காததனால் அவர்கல் விடுதலை இல்லாதவர்கள் என்று பொருள் இல்லை. கீதையின்  இரண்டாம் மூன்றாம் அத்தியாயங்களே அதைப்பற்றித்தான் சொல்கின்றன. தன் தன்னியல்பு சொல்லும் செயலை பயன்கருதாத அர்ப்பணிப்புடன் முழு மூச்சுடன் செய்யும் ஒருவனுக்கு அதுவே விடுதலைவழியாகும். அதுவே அவனது . அதை என் உரைகளில் சொல்லியிருக்கிறேன். ஒருவனுக்கு அதற்கு மேல் ஐயங்கள் இருக்கும்போதுதான் கீதையின் அடுத்த பக்கங்கள் தேவையாகின்றன.

அதாவது கீதைத்தருணம் — ஆழமான தத்துவக்கேள்வி– உருவாகிவிட்டவர்களுக்கு மட்டும் உரியது கீதை. அதன் விவாதங்களுக்குள் செல்வதற்கு அந்த தேடல் கொடுக்கும் விசை இன்றியமையாதது. அதனால்தான் கீதை மத நூல் அல்ல மூல நூல் அல்ல அனைவரும் படித்தாகவேண்டிய நூல் அல்ல என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். அபப்டி நம் மரபில் வலியுறுத்தப்பட்டதும் இல்லை.

தத்துவக் கேள்விகள் இல்லாதவர்களின் பாதை எளிமையானது. ஒவ்வொருவருக்கும் பாதை ஒவ்வொன்று. ஒரு அம்பு வில்லில் இருந்து புறப்பட்டு நேராக இலக்கை அடைகிறது. அதன் நிழல் ஊரெல்லாம் ஓடி வளைந்துசென்று அதே இலக்கில் அதே கணம் சென்று தைக்கிறது. இது புறநநூற்று  உவமை
ஜெ

– ****

முந்தைய கட்டுரைமரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி
அடுத்த கட்டுரைபொருளியல் விபத்து:கடிதங்கள்