‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 89

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 8

பூரிசிரவஸ் இரவு முழுக்க துயில்கொள்ளவில்லை. முந்தையநாள் மாலையிலேயே நகரெங்கும் விழாவுக்கான ஒருக்கங்கள் தொடங்கிவிட்டிருந்தன. நகரின் அனைத்து சந்திப்புமுனைகளிலும் யானைமேல் ஏற்றப்பட்ட முரசுடன் கொம்பூதிகள் துணைக்க நிமித்திகர்கள் வந்து நின்று மறுநாள் திரௌபதி நகர்புகுவதையும் அதை அரசப்பெருவிழாவாக கொண்டாட பேரரசர் ஆணையிட்டிருப்பதையும் அறிவித்தனர். முதலில் அச்செய்தி மக்களை குழப்பியது. ஆண்கள் அதன் அரசியல் உட்பொருளைப்பற்றி கூடிக்கூடி நின்று பேசிக்கொண்டிருந்தனர். பெண்கள் உடனே திரௌபதியைப்பற்றி பேசத்தொடங்கினர்.

ஆனால் விழவுக்கான ஒருக்கங்கள் தொடங்கியதும் நகரம் களியாட்ட மனநிலையை அடைந்தது. புராணகங்கையிலிருந்து நூறு யானைகள் பெரிய ஈச்சைமரங்களை குலைகளுடன் பிடுங்கி அணிவகுத்து கிழக்குக் கோட்டைவாயிலுக்குச் சென்றபோது அதன்பின்னால் கள்ளுண்டு மயங்கிய இளைஞர்கள் கூச்சலிட்டு பாடியபடியும் நடனமாடியபடியும் தொடர்ந்தனர். சிறுவர்கள் கூவிச்சிரித்து மலர்களைச் சுழற்றி யானைகள் மேல் எறிந்தபடி சென்றனர். வணிகநிலைகளில் இருந்தும் அரண்மனை மலர்ச்சாலையிலிருந்தும் வண்டிகளில் மாவிலைகளும் மலர்க்கொத்துக்களும் வந்து குவிந்தன. பூக்கள் தொடுக்கத்தெரிந்த அனைவரும் உடனடியாக அரண்மனை அணிகள்நாயகத்தை சந்திக்கவேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது.

கங்கைக்கரைத் துறைமுகத்தில் பெரும்படகுகளில் வந்திறங்கிய மலர்மாலைகளும் தோரணத்தொங்கல்களும் குலைவாழை மரங்களும் பொதிவண்டிகளில் நகருக்குள் வந்திறங்கத்தொடங்கியதும் அனைவரும் அணிபொலிந்த அஸ்தினபுரியை அகத்தே கண்டுவிட்டனர். இரவுமுழுக்க பணிகள் நிகழும் என்று தெரிந்த கோட்டைக்காவல் அமைச்சரான கைடபர் நகர்முழுக்க ஆயிரம் மீன்நெய் விளக்குகள் எரியும்படி ஆணையிட்டிருந்தார். இரவுசூழ்ந்ததும் நகரம் எரியெழுந்த காடுபோல தெரிந்தது. நகரின் ஒளி வானிலெழுந்து வானம் மெல்லிய செம்பட்டால் கூரையிடப்பட்டதுபோலிருந்தது.

பூரிசிரவஸ் புரவியில் தெற்குக்கோட்டை வாயில் நோக்கிச் செல்லும்போது எதிரே புரவியில் காவலர்தொடர வந்த கைடபர் “கோட்டைமுழுக்க பந்தங்கள் எரியும்படி ஆணையிட்டிருக்கிறேன் பால்ஹிகரே. இளவரசி கிழக்குக் கோட்டைவழியாக நுழைகிறார். நான்கு அரசவீதிகளிலும் அணியூர்வலமாகச் சென்று அரண்மனையை அடைகிறார். அப்படித்தானே?” என்றார். “ஆம், அதுவே இப்போதுள்ள திட்டம். தெற்கு வாயிலருகே பீஷ்மபிதாமகரின் குருகுலம் உள்ளது. அப்பால் இந்திரகோட்டத்தின் அருகே இளைய யாதவரின் மாளிகை. அவர்கள் வரும்வழிகள் முழுக்க நம்மால் அலங்கரிக்கப்படவேண்டும். காந்தார மாளிகைக்குச்செல்லும் வழியும் அணிசெய்யப்படவேண்டும். நகரின் அனைத்துத்தெருக்களிலும் அணிச்செயல் நிகழ்ந்திருக்கவேண்டும் என்பது அரசாணை.” .“ஒவ்வொரு குறுந்தெருவையும் அத்தெருவினரே அணிசெய்யவேண்டுமென ஆணையிட்டிருக்கிறோம். அதற்குரிய பொருட்களை நம்மிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இல்லங்களை அணிசெய்யவேண்டியது பெண்களின் பணி…” என்ற கைடபர் “அணிசெய்து சலித்துவிட்டனர் அஸ்தினபுரியினர். ஆனாலும் திரௌபதியின் வருகை அவர்களை எழுச்சிகொள்ளச் செய்திருக்கிறது” என்றார். பூரிசிரவஸ் “அணிசெய்யத் தொடங்கினால் உவகையும் எழுச்சியும் வந்துவிடும்…” என்றான். “நான் கிழக்குக் கோட்டைவாயில் வரை சென்று பார்க்கிறேன்.”

கிழக்குக்கோட்டைவாயில் வரை கைதொடு தூரத்திற்கு ஒரு மூங்கில்கழி என நடப்பட்டிருந்தன. அவற்றில் அலங்காரத்துணியாலான தூண்தோரணங்களையும் அவற்றை இணைத்து கொடித்தோரணங்களையும் கட்டிக்கொண்டிருந்தனர். மலர்மாலைகளும் மலர்த்தொங்கல் செண்டுகளும் வாழையிலைகளிலும் கமுகுப்பாளைகளிலும் குவிக்கப்பட்டிருந்தன. ஒரு தாமரை மொட்டுக்குவியலை ஒருவன் நீரால் நனைத்துக்கொண்டிருந்தான். காவல்மாடங்களில் உச்சியில் கயிற்றில் தொங்கியபடி மலர்மாலைகளை தொங்கவிட்டுக்கொண்டிருந்தனர்.

பூரிசிரவஸ் கிழக்குக் கோட்டை முகப்பை அடைந்தபோது கோட்டைச்சுவரின் பித்தளைக் குமிழ்களையும் பட்டைகளையும் தேய்த்துக்கொண்டிருந்தனர். கதவின் மேல் கயிற்றில் தொங்கிய ஏவலன் கீழே நின்றவனிடம் இருந்து அமிலத்தில் முக்கிய துணிகளை சிறிய கயிற்றால் தூக்கி மேலேவாங்கி துடைத்துவிட்டு கீழிறக்கினான். கோட்டைக்கு முன்னால் கங்கையை சென்றடைந்த அரசப்பெருவீதியிலும் மூங்கில்கள் நடப்பட்டு தோரணங்களை கட்டிக்கொண்டிருந்தனர். “கங்கைவரைக்கும் அணிசெய்கிறீர்களா?” என்றான். காவலர்தலைவன் வணங்கி “ஆம் இளவரசே, அரண்மனை ஆணை. நாலாயிரம் ஏவலர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.

“பொதி வண்டிகள் எங்கே?” என்றான். “நாளை உச்சிக்குப்பின்னரே கங்கைத் துறைமுகத்தில் வணிகப் படகுகள் அணையவேண்டுமென்பது கருவூலர் மனோதரரின் ஆணை.” பூரிசிரவஸ் புரவியில் கங்கை வரை சென்றான். வழிநெடுக அலங்காரப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. பிற எந்தப்பணிகளைச் செய்யும்போதும் பணியாளர்களிடம் இருக்கும் சோர்வு அலங்காரப்பணிகளில் இருப்பதில்லை என்பதை அவன் கண்டிருந்தான். அவர்கள் சற்று நேரத்திலேயே அப்பணியின் அழகால் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள். பணியை முடிப்பதைப்பற்றி எண்ணவே மாட்டார்கள். ஆகவே அலங்காரவேலைகள் பெரும்பாலும் உரியநேரத்தில் முடிவதில்லை. நேரம் நெருங்கும்போது பணியாளர்களை அதட்டி விரைவுபடுத்தவேண்டும். நிறைவுறாமலேயே அவர்கள் முடித்துவிலகுவார்கள். கொண்டாட்டம் தொடங்கியபின்னரும்கூட எவருமறியாமல் சரிசெய்து கொண்டே இருப்பார்கள்.

துறைமுகப்பில் பெரிய மூங்கில் கோபுரங்களை அமைத்து அவற்றின்மேல் மீன்நெய் விளக்குகளை ஏற்றியிருந்தனர். அப்பகுதியே செவ்வொளியில் அசைந்துகொண்டிருந்தது. தோரணவாயில் முழுமையாகவே ஈச்சைத்தளிர்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அணிப்படகு வந்து நிற்கும் துறையிலும் ஒரு பெரிய மலர்வாயிலை அமைத்துக்கொண்டிருந்தனர். காவலர்தலைவர் கிருதர் அருகே வந்து “இளவரசி படகிலிருந்து நடைபாலம் வழியாக அஸ்தினபுரியின் மண்ணில் காலெடுத்து வைக்குமிடம் மலர்ப்பாதையாக இருக்கவேண்டும் என்பது ஆணை. அங்கிருந்து தேர்வரைக்கும் மலர்ப்பாதை. அதன்பின் தேரில் கோட்டை நோக்கிச் செல்கிறார்கள்” என்றார்.

“மலர்ப்பாதை என்றால்?” என்றான் பூரிசிரவஸ். “மலராலான பாதையேதான். கீழே மரவுரி விரிப்பு உண்டு. அதன் மேல் மலர்கள். எளிதில் வாடாதவையும் முள்ளில்லாதவையுமான ஏழுவகை மலர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.” பூரிசிரவஸ் புன்னகையுடன் தலையசைத்து “வண்டுகள் இருக்கக் கூடாது” என்றான். அவன் குரலில் இருந்த சிரிப்பை அறியாத கிருதர் “வண்டுகளை ஒன்றும் செய்யமுடியாது. தேனுள்ள மலர்களில்தான் மணம் இருக்கிறது…” என்றார். தலையசைத்துவிட்டு அவன் திரும்பி கோட்டை நோக்கி சென்றான்.

திரும்பிவந்தபோது கோட்டை மேலும் மலர்கொண்டிருந்தது. உள்ளே தெருக்களில் தோரணங்கள் மேலேறிக்கொண்டிருந்தன. இருபக்கமும் வீடுகள் முழுக்க நெய்விளக்குகள் எரிந்தன. குழந்தைகள் கூச்சலிட்டு முற்றத்தில் தங்கள் நிழல்களுடன் விளையாடிக்கொண்டிருக்க உப்பரிகை முகப்புகளிலும் கூரை முனைகளிலும் ஏறிநின்று தோரணங்களை கட்டிக்கொண்டிருந்த இளைஞர் அவர்களை கூவி அதட்டினர். சாலையோரமாக நான்கு யானைகள் நின்று குவிக்கப்பட்டிருந்த பழைய பூத்தோரணங்களை துதிக்கையால் அள்ளிச் சுழற்றி வாயில் செருகி தின்றுகொண்டிருந்தன.

அரண்மனை முற்றத்திலும் பூக்களே சிறிய குன்றுகளாக குவிந்திருந்தன. அவற்றின்மேல் ஊற்றப்பட்ட நீர் கசிந்து வழிந்தோடியிருந்த தடங்களில் விளக்குகளின் வெளிச்சம் அசைந்தது. பூரிசிரவஸ் புரவியை நிறுத்திவிட்டு அரண்மனைக்குள் சென்றான். அமைச்சகத்தில் மனோதரர்தான் இருந்தார். அவனைக் கண்டதும் “நாளை சித்திரை பதின்மூன்றாம் வளர்பிறைநாள், சரிதானே?” என்றார். “ஆம், வளர்பிறையின் இறுதிநாள்.” மனோதரர் “குடித்தலைவர்கள் அனைவருக்கும் மீண்டும் ஓர் ஒலை. நாளைகாலை மீண்டும் பேரவை கூடுகிறதல்லவா?” என்றார்,

”மீண்டுமா?” என்றான். “ஆம், அவர்கள் இங்குதான் இருக்கிறார்கள் என்பதனால் வருவதில் சிக்கல் இல்லை. இளவரசியின் மணநிகழ்வும் துரியோதனர் முடிசூடலும் முடிந்தபின்னரே அவர்கள் திரும்புகிறார்கள். ஆயினும் முறைப்படி அழைக்கவேண்டும் அல்லவா? ஓலை வரவில்லை என்றே வராமலிருந்துவிடுவார்கள்.” மனோதரர் சிரித்து “அவர்கள் அப்படி இருப்பதும் நன்றே. இல்லையேல் இத்தனை பெரிய அமைச்சுநிலை எதற்கு? நானும் எதற்கு?” என்றார்.

“நான் சற்று ஓய்வெடுக்கிறேன்…” என்றான். “ஓய்வெடுங்கள். இளவரசியின் படகுகள் பிலக்‌ஷகட்டத்தை அடைந்ததும் எரியம்பு அனுப்புவதற்கு ஆணையிட்டிருக்கிறேன். அதன்பின்னர் இங்கிருந்து கிளம்பிச்சென்றால்கூட போதுமானது” என்றார் மனோதரர். “நீங்கள் துயிலவில்லையா?” அவர் நகைத்து “பணியாற்றுபவர்கள் துயின்றாலும் கணக்குபார்ப்பவன் துயிலமுடியாது இளவரசே…” என்றார். பூரிசிரவஸ் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு தன் அறைக்கு சென்றான்.

அறைநோக்கி செல்லும்போது துயிலின் எடையில் கால்கள் தள்ளாடின. ஆனால் மஞ்சத்தில் கால்நீட்டியதுமே உள்ளம் விழித்துக்கொண்டது. காலையில் நிகழ்ந்தவை நெடுந்தொலைவில் என தோன்றின. ஒருநாள் அத்தனை நீளமானதா? சிலநாட்கள் நிகழ்வுகளால் செறிந்து முழுவாழ்வளவுக்கே பெரியதாகிவிடுகின்றன. தேவிகை, விஜயை நினைவின் அடித்தட்டில் கலங்கி கலங்கி மறையும் முகங்கள். ஆனால் அஸ்தினபுரியின் முற்றத்தில் பாண்டவர்களுடன் காத்து நின்றிருந்தது ஒவ்வொரு காட்சிநுணுக்கத்துடனும் அருகே தெரிவதுபோல தெரிந்தது.

யுதிஷ்டிரரின் நிழல் நகுலன் மேல் பாதியாக விழுந்து கிடந்தது. சகதேவனின் காதோர முடியின் நிழல் கழுத்தில் வளைந்திருந்தது. குதிரை ஒன்று செருக்கடித்து பெருமூச்சு விட்டது. அரண்மனையின் மீதிருந்து ஒரு புறா மெல்ல சிறகடித்து இறங்கி செங்கல் முற்றத்தில் மெல்ல நடந்தது. அருகே செம்பட்டுத்திரை ஆடிய ஒளியில் தருமர் முகம் அனல் முன் நிற்பதுபோல தெரிந்தது. தொலைவில் ஏதோ பலகை அடிபட்டது. குதிரை மீண்டும் மெல்ல தும்மியது.

அவன் கனவில் தேவிகையை கண்டான். தூமபதத்தில் அவன் அவளுடன் புரவியில் சென்றுகொண்டிருந்தான். “நம்மைத் துரத்தி வருகிறார்கள்” என்றாள். “இது பால்ஹிகநாடு. எல்லையை கடந்துவிட்டோம். இனிமேல் எவரும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது.” அவள் “இல்லை, புரவிகள் அணுகுகின்றன” என்றாள். “புரவிகளா? நான் எதையும் கேட்கவில்லையே” என்றான். அவள் அவன் கைகளை பிடித்துக்கொண்டு “எனக்கு அச்சம் ஏற்படுகிறது” என்றாள். வா என்று அவளை அவன் புரவியில் அழைத்துச்சென்றான்.

அவர்கள் பால்ஹிகபுரியில் அவனுடைய அறையில் இருந்தனர். மஞ்சத்தில் அவன் தேவிகையுடன் விலங்குபோன்ற விரைவுடன் உறவுகொண்டபோது அவள் “குதிரைகள்… குதிரைகள் வருகின்றன” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். கதவு தட்டப்பட்டது. அவன் எழுந்து சென்று திறந்தான். விஜயை நின்றிருந்தாள். அவள் வெற்றுடலுடன் கையில் ஒரு நெய்விளக்குடன் நின்றிருந்தாள். “அவர்கள் வந்துவிட்டார்கள்.” அவன் படபடப்புடன் “யார்?” என்றான்.

இருளில் இருந்து உருவிய கூர்வாள் வெளியே வந்தது. அதை ஏந்தியபடி கவசஉடை அணிந்த வீரன் முன்னால் வர தொடர்ந்து பாண்டவர்களும் கௌரவர்களும் வாட்களுடன் வந்தனர். பீமன் அர்ஜுனன் நகுலன் சகதேவன் மறுபக்கம் துரியோதனன் துச்சலன் துச்சாதானன். தலைமையேற்று வந்தவனை நோக்கி “அவர்கள் என் மனைவிகள்… அவர்களை விடமாட்டேன்” என்றான். “மூடா, நான் அவர்களுக்காக வரவில்லை” என்றபடி அவன் ஓங்கி வெட்ட தன் கை துண்டாகி தரையில் விழுவதை பூரிசிரவஸ் கண்டான்.

அதிர்ந்து நடுங்கும் உடலுடன் எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்து நீர்க்குடுவையை எடுத்து தண்ணீர் குடித்தான். ஒலிகளைக் கொண்டு அவன் துயிலவேயில்லை என்பதை புரிந்துகொண்டான். அரைநாழிகைகூட ஆகவில்லை. கச்சையை எடுத்துக் கட்டி வாளைச்செருகிக்கொண்டு வெளியே சென்றான். இடைநாழி முழுக்க ஏவலர் விரைந்துகொண்டிருந்தனர். அரண்மனை தீப்பற்றி எரிவதுபோல விளக்குகள். எங்கெங்கோ ஒலிகள். போர் நிகழ்வதுபோல. புரவிக்குளம்போசைகள்.

நடந்து சென்று படியிறங்கி முற்றத்திற்கு வந்தபோது அவன் நினைவுகூர்ந்தான், முன்னால் வந்த வாள்வீரனின் முகம் விழியிழந்த சூதர் தீர்க்கசியாமருடையது. ஆனால் அவர் விழிகள் அதில் கனலென எரிந்துகொண்டிருந்தன. வியப்புடன் அவன் நின்றுவிட்டான். பின்னர் பெருமூச்சுடன் முற்றத்தில் நடந்து தன் புரவியை அடைந்தான். அது நின்றபடியே துயின்றுகொண்டிருந்தது. அவன் அதை தட்டியதும் விழித்துக்கொண்டு சப்புகொட்டியது. அவன் ஏறிக்கொண்டு காலால் மெல்ல தட்டி செலுத்தினான்.

நகரம் மேலும் மாறியிருந்தது. ஒருகாட்டை பூக்கவைக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டான். அத்தனை அலங்காரங்களும் மலர்க்காடுகளில் இருந்து பயின்றவையாகவே இருந்தன. மலர்மரங்கள். மலர்க்கொடிகள். மலர்க்குவைகள். மலர்த்தொங்கல்கள். எதிரே வந்த நூற்றுவனிடம் “விடிவதற்குள் அலங்காரங்கள் முடிந்து அத்தனை தெருக்களும் தூய்மை செய்யப்பட்டாகவேண்டும்” என்றான். “ஆம் இளவரசே. இவர்கள் இந்நேரம் முடித்திருக்கவேண்டும். நாங்கள் தூய்மைசெய்யத் தொடங்கியிருப்போம். இவர்கள் இப்போதுதான் பாதி முடித்திருக்கிறார்கள்.”

“விரைவு” என்றபடி அவன் கிழக்குக் கோட்டையைக் கடந்து சாலைவழியாக சென்றான். சாலையும் பூத்திருந்தது. மலர்கள். ஒருநகரத்தை பூக்கச்செய்ய எத்தனை காடுகளின் மலர்கள் தேவை? இன்று வண்டுகளும் தும்பிகளும் நிலையழியும். நாளை இந்நகரில் அவை தேடியலையுமா என்ன? துறைமுகப்பில் அலங்காரங்கள் முடிவடைந்திருந்தன. கிருதர் வந்து வணங்கி “அனைத்தும் முடிவடைந்துவிட்டன இளவரசே. மலர்த்தரையில் மலர்பரப்பும் பணியை மட்டும் எரியம்பைக் கண்டபின் தொடங்கலாமென எண்ணுகிறோம்” என்றார்.

சுங்கமாளிகைக்குச் சென்று அமர்ந்தான். சுங்கநாயகம் “சற்றுமுன்னர்தான் கனகர் வந்துசென்றார் இளவரசே” என்றான். “ஒவ்வொருவரும் எங்களை அதட்டுகிறார்கள். பணியாற்றுபவர்கள் விரைவாகச்சென்றால்தான் நாங்கள் முடிக்கமுடியும்.” பூரிசிரவஸ் புன்னகைத்து “அலங்காரப்பணிகள் மெல்லத்தான் முடியும்” என்றான். “ஆம், இங்கே தச்சுப்பணியும் மெல்லமெல்லத்தான் முடியும்” என்றான். “இன்கடுநீர் அருந்துகிறீர்களா? துயில்நீத்தலுக்காக கொண்டுவரச்சொன்னேன்.”

அவன் அங்கிருந்து மீண்டும் ஒருமுறை கோட்டைக்குள் சென்றான். தெற்குவீதியில் சூதர்களின் தெருக்களில் நெய்விளக்கு ஒளியில் அவர்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் சிறிய குழுக்களாக நின்றிருந்தனர். ஹிரண்யாக்‌ஷர் ஆலய முகப்பில் தீர்க்கசியாமர் நின்றிருக்கிறாரா என்று பார்த்தான். அத்தனை சூதரும் அவரைப்போல தெரிந்தனர். அவர்களனைவருமே பட்டாடை அணிந்து துலக்கப்பட்ட இசைக்கருவிகளுடன் சித்தமாக இருந்தனர். ஹிரண்யாக்ஷர் ஆலயத்தில் பூசனைகள் முடிந்ததும் கிளம்புவார்கள் என்று எண்ணினான்.

நிமித்திகர்களின் தெருவில் மையவிடுதியின் அருகே அஜபாகரின் ஆலயத்தின் முகப்பில் படையலிட்டிருந்தார்கள். வெள்ளை ஆடையை மார்புக்கு குறுக்காக அணிந்த நிமித்திகர்கள் கூடி நின்றனர். அவன் இளைய யாதவனின் மாளிகை வரை சென்று அலங்காரங்களை பார்த்துவிட்டு கோட்டைவழியாகவே நகரைச்சுற்றி சென்றான். தெற்குக்கோட்டைவாயிலில் அணிவேலைகள் பெரும்பாலும் முடிந்திருந்தன. பணியாளர்கள் அமர்ந்து வெற்றிலைபோட்டுக்கொண்டிருந்தனர். தூய்மைப்பணியாளர்கள் உதிர்ந்த பூக்களையும் இலைகளையும் கூட்டிக்கொண்டிருந்தனர்.

மேற்குவாயிலருகே ஏரியின் கரையில் குளிப்பாட்டப்பட்ட யானைகளுக்கு நெற்றிப்பட்டமும் பட்டுப்போர்வையும் கொம்புப்பூணும் துதிக்காப்பும் காதுமணிகளும் அணிவித்துக்கொண்டிருந்தனர். பொன்மரங்கள் போல விளக்கொளியில் சுடர்ந்தபடி யானைகள் செவியாட்டி உடலசைத்து நின்றிருந்தன. நீருக்குள் நின்ற யானைகள் சீறும் ஒலியுடன் துதிக்கையால் நீரை அள்ளி முதுகில் பாய்ச்சின. நெடுந்தூரம் நீந்திச்சென்றுவிட்ட ஒரு யானையை பாகன் நீந்திச்சென்று அதட்டினான்.

வடக்குக் கோட்டைமுகப்பில் அனுமனின் ஆலயத்தில் விளக்கெரிந்தது. யானைக்கொட்டடிகள் ஒழிந்துகிடந்தன. கோட்டை வாயிலுக்கு மறுபக்கம் விரிந்துகிடந்த காந்தாரக்குடிகளின் தெருக்களில் இருந்து ஓசைகளும் வெளிச்சமும் எழுந்தன. காந்தாரப்படைவீரர்கள் சிறிய குழுக்களாக படைக்கலங்களுடன் அங்கிருந்து உள்ளே வந்துகொண்டிருந்தனர். அனைவருமே குளித்து புத்தாடை அணிந்து குழல்களில் மலர்சூடியிருந்தனர். இரவெல்லாம் பணியாற்றியபின் வீடுதிரும்பி குளித்து மீள்கிறார்கள் என்று தெரிந்தது.

அவன் கிழக்குக் கோட்டையை அங்கிருந்தே பார்த்தான். அரண்மனை முற்றம் வழியாக செல்லவேண்டாம் என்று திரும்பி மீண்டும் மேற்குக்கோட்டைமுகப்பு வழியாக தெற்குக் கோட்டைமுகப்புக்கு சென்றான். காவலர்களின் பேச்சொலிகள் கோட்டைக்குமேல் கேட்டன. கோட்டையை ஒட்டியபாதை ஒழிந்து கிடந்தது. எவரும் பாராத அலங்காரங்கள் தனியழகு கொள்கின்றன என்று நினைத்தான். காற்றில் மெல்ல திரும்பிய மலர்த்தூண்கள். வளைந்த மலர்மாலைகள் மலர்மிதக்கும் கங்கையின் அலைகள் போலிருந்தன.

அப்போதுதான் அந்த சார்வாகரை பார்த்தான். கையில் யோகதண்டுடன் பெருச்சாளித்தோல் ஆடை அணிந்து உடம்பெல்லாம் நீறுபூசி சடைமுடிக்கற்றைகள் தோளில் தொங்க அவர் சென்றுகொண்டிருந்தார். முதியவர் என்று தெரிந்தது. அவன் அவர் அருகே சென்றதும் இறங்கி “வணங்குகிறேன் சார்வாகரே” என்றான். அவர் யோகதண்டை தூக்கி வாழ்த்திவிட்டு நடந்தார். அவன் அவரை சிலகணங்கள் நோக்கியபின் கடந்துசென்றான்.

மீண்டும் தெற்குவாயிலை அடைந்தபோது அங்கே சௌனகரும் கனகரும் வந்திருந்தனர். அவர்களின் தேர்கள் தோரணவாயிலுக்கு முன்னதாகவே காடோரமாக நிறுத்தப்பட்டிருந்தன. படைத்தலைவர்கள் வந்திருப்பதையும் தேர்கள் காட்டின. அப்பால் காட்டுக்குள் உருவாக்கப்பட்ட முற்றத்தில் பந்த வெளிச்சத்தில் அணியூர்வலத்துக்கான தேர்கள் ஒருங்குவது தெரிந்தது. அவன் தன்புரவியை நிறுத்திவிட்டு நடந்து சுங்கமாளிகையை அடைந்தான். கிருதர் வெளியே வந்து “பேரமைச்சர் சௌனகரும் அமைச்சர் கனகரும் வந்திருக்கிறார்கள். உடன் படைத்தலைவர்கள் ஹிரண்யபாகுவும் வீரணகரும் வந்திருக்கிறார்கள்” என்றார். பூரிசிரவஸ் தலையசைத்து உள்ளே சென்றான்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தி ஏறிட்டு நோக்கினர். சௌனகர் “வருக இளவரசே!” என்றார். “அணிப்படகுகள் அணுகிக்கொண்டிருக்கின்றன என்று செய்தி வந்தது. எரியம்பு எப்போது வேண்டுமென்றாலும் எழலாம்.” பூரிசிரவஸ் “அவர்கள் காலையில்தானே வருவதாக சொன்னார்கள்?” என்றான். “இப்போது நேரம் என்ன என்று நினைக்கிறீர்கள்? பிரம்மமுகூர்த்தம் கடந்துவிட்டது” என்று சௌனகர் சிரித்தார். “நான் அறியவில்லை. நகரைச் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தேன்.” கிருதர் “இன்னீர் அருந்துகிறீர்களா இளவரசே?” என்றார். பூரிசிரவஸ் ஆம் என்றபடி அமர்ந்தான்.

வீரணகரை தேடி ஒரு வீரன் வந்தான் அவர் எழுந்துபோய் ஆணைகளை இட்டுவிட்டு திரும்பி வந்து “நகருக்குள் ஒரு சார்வாகர் நுழைந்திருக்கிறார் என்கிறார்கள்” என்றார். சௌனகர் “சார்வாகரா? எங்கிருந்து?” என்றார். “தெற்குவாயிலில் நானும் அவரைப்பார்த்தேன்” என்றான் பூரிசிரவஸ். “இங்கே சார்வாகர்கள் இருப்பதாக அறிந்ததே இல்லை. முன்னர் ஒருவர் சுடுகாட்டில் இருந்தார். அவரை சிலர் பாத்திருக்கிறார்கள்.” பூரிசிரவஸ் “அவரேதான் என நினைக்கிறேன். மிக முதியவர்” என்றான்.

“என்னசெய்வது?” என்றார் வீரணகர். “ஒன்றும் செய்யமுடியாது. எந்த ஞானியும் நமக்கு மூதாதைவடிவம்தான்” என்றார் சௌனகர். வெளியே இருந்து கிருதர் உள்ளே வந்து “எரியம்பு எழுந்துவிட்டது” என்றார். “பூமுற்றம் விரிக்கப்படட்டும்… கோட்டைக்கு செய்தி அனுப்பிவிடுங்கள்” என்றார் சௌனகர். “உண்மையில் ஏன் இத்தனை ஒருக்கங்கள் என எனக்குப்புரியவில்லை. வருபவர் ஒரு மணமகள் மட்டும்தானே?”

பூரிசிரவஸ் “அரசரின் ஆணை” என்றான். “ஆம், அரசர்கள் ஆசாரங்களை அமைக்கிறார்கள்” என்றார் சௌனகர். “செல்வோம்… படகுகள் விரைவில் வந்துவிடும்.” இன்கடுநீர் வந்தது. செஞ்சந்தனமும் நெல்லிக்காயும் தேனும் கலந்து திரிகடுக மணத்துடன் சூடாக இருந்தது. அருந்தியதும் அவர்கள் வெளியே சென்றனர். “குளிர்காலம் முடிந்துவிட்டது. விடிகாலைக் குளிர் மறைந்துவிட்டது” என்றார் சௌனகர். பூரிசிரவஸ் கங்கையை நோக்கிக்கொண்டு நின்றான். இருளே அலைகளாக ஓடுவதுபோலிருந்தது. இருளில் ஒலி பளபளத்தது. அனல்வளைவுகள். அனல்பாவைகளால் ஆன மாளிகை ஒன்று நீருக்குள் தலைகீழாக பறந்தது.

பார்த்திருக்கவே வானம் சாம்பல்பூத்து மலரத்தொடங்கியது. நீருக்கும் வானுக்குமான வேறுபாடு தெளிந்தபடியே வந்தது. விழிகூர்ந்தபோது நீரை நோக்கமுடியும் என்று தோன்றியது. மேலே வானைநோக்கியபோது வானம் மேலும் தெளிந்திருந்தது. “விடிந்துவருகிறது” என்று சௌனகர் சொன்னார். திரும்பி துறைமுற்றத்தில் நின்றவர்களைப்பார்த்துவிட்டு “அனைத்தும் பிழையின்றி அமைக்கப்பட்டுவிட்டன. ஆயினும் இறுதியில் ஒரு பிழை எழுந்து நிற்கும்… அதை சனிதேவனின் குழந்தை என்பார்கள்” என்றார்.

அங்கே பதினாறு அணிப்பெருந்தேர்கள் செம்பட்டுத்திரைச்சீலைகளுடன் கொண்டுவரப்பட்டு நிரைவகுத்து நின்றன. பொன்னிற மலர்ச்செதுக்குகளில் செம்மணிக்கற்கள் பொறிக்கப்பட்ட அரசத்தேர் நடுவே மூன்றடுக்கு குவைமுகடுடன் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி பறக்கும் பொற்கொடிமரத்துடன் நின்றது. அதில் வெண்ணிறமான பட்டுத்திரைச்சீலைகள் பறந்தன. ஏழு வெண்குதிரைகள் அதனருகே ஒன்றுடன் ஒன்று தோல்பட்டையால் பிணைக்கப்பட்டு நின்றிருந்தன.

பிற குதிரைகள் அனைத்தும் கருநிறமும் மாந்தளிர் நிறமும் கொண்டவை. அவற்றை ஓட்டும் பாகர்கள் செந்நிறத் தலைப்பாகையில் இறகு சூடி பொன்னாரமும் பொற்குண்டலங்களும் அணிந்து கையில் சவுக்குகளுடன் நின்றனர். ஒளிரும் வேல்முனைகளுடன் நீலப்பட்டுத் தலைப்பாகையும் நீலமேலாடையும் அணிந்த அகம்படிக் காவலர்கள். வெண்ணிறத்தலைப்பாகையும் வெண்ணிறமேலாடையும் பொன்னாலான இலச்சினைகளும் அணிந்த அமைச்சுப்பணியாளர்கள். துறைப்பணியாளர்கள் மஞ்சள்நிற ஆடையும் தலைப்பாகையும் அணிந்திருந்தனர். வலப்பக்கம் தாலங்கள் ஏந்தும் பதினாறு அணிப்பரத்தையர் நின்றிருந்தனர். தாலங்கள் அருகே மூங்கில்மேடையில் வைக்கப்பட்டிருந்தன. அருகே ஏழு முதுமங்கலைகள் புத்தாடைகள் அணிந்து மலரும் அணியும் சூடி மூங்கில் பீடங்களில் அமர்ந்திருந்தனர்.

இடப்பக்கம் சூதர் பதினாறுபேர் இசைக்கருவிகளுடன் நின்றனர். முழவுகளும் கொம்புகளும் மணிகளும் சங்குகளும் காத்திருந்தன. சுங்கக்காவலன் பதற்றத்துடன் மூங்கிலால் ஆன காவல்மாடத்தின் மேலேறி அனைத்தையும் மீண்டும் ஒருமுறை சரிநோக்கினான். அவன் இறங்கும்போது விண்ணில் எரியம்பு எழுந்தது. அவன் திரும்பி விரைந்து மேலேறிச்சென்று நோக்கி கையசைத்தான். துறைமேடை முழுக்க ஆணைகள் ஒலித்தன. வீரர்கள் அங்குமிங்கும் ஓடினர். “வந்துவிட்டார்கள்” என்றார் சௌனகர்.

மூங்கில்களால் கட்டப்பட்டிருந்த முரசுமேடையில் முரசுக்காரர்கள் கோல்களுடன் எழுந்து நின்றனர். சரிந்திருந்த பெருமுரசின் தோற்பரப்பு காலையின் செந்நீல ஒளியில் நீள்வட்டமாக மின்னியது. பூரிசிரவஸ் நெஞ்சு படபடப்பதை உணர்ந்தான். அது ஏன் என அவனே புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். மேடைமேல் நின்றவன் கைகாட்டியதும் ஏவல்நாயகம் தன் வெள்ளிக்கோலை சுழற்றி ஆணையிட்டான். பெருமுரசின் தோற்பரப்பில் கோல்விழுந்த ஒலியை பூரிசிரவஸ் தன் வயிற்றுக்குள் என உணர்ந்தான். முரசு அதிரத்தொடங்கியதும் கங்கையின் அலைகளும் அருகே நின்ற ஆலமரங்களின் இலைகளும் நெய்விளக்குகளின் சுடர்களும் எல்லாம் அந்தத் தாளத்திற்கேற்ப அசைவதாகத் தோன்றியது.

முரசின் தாளமாக காலம் அலையடித்துச்சென்றுகொண்டிருந்தது. எவரோ எழுப்பிய வியப்பொலி அனைவரையும் குனியச்செய்தது. நீர்வெளியில் சிறிய செந்தழல் போல படகு ஒன்றின் பாய்கள் தெரிந்தன. காற்றுவெளியில் ஒளி ஊறிப்பரவியிருந்ததை பூரிசிரவஸ் அப்போதுதான் உணர்ந்தான். விழிதெளிந்தது போல விடிந்திருந்தது. கங்கைநீர் நீலமாகியது. விளக்குகளின் சுடர்கள் மலரிதழ்கள் போல எளிமை கொண்டன. பறவைக்குரல்களால் ஆலமரம் ஓசையிட்டது. வெண்கொக்குகள் எழுந்து கங்கைமேல் சுழன்று திரும்பவந்தன. காகங்கள் காற்றில் நீந்தி நீந்தி கடந்துசென்றன. கங்கைக்குமேல் வானில் மிக உயரத்தில் சிறகசைக்காமல் சென்றன வடபுலத்து சாரஸங்கள்.

ஏழு செந்நிறப்பாய்கள் கொண்ட பெரிய படகு தீச்சுடர்கள் படபடக்கும் அகல்விளக்கு போல தெரிந்தது. அதற்குப்பின்னால் இளநீலநிறப்பாய்கள் விரித்த ஏழு படகுகள் வந்தன. அவற்றில் மூன்றுபடகுகள் மிகப்பெரியவை என தொலைவிலேயே காணமுடிந்தது. அவை பெரிதாகிக்கொண்டே இருந்தன. பின்னர் நீரில் அவை எழுந்தமைவதை காணமுடிந்தது. சௌனகர் “பெரிய படகு. பாஞ்சாலம் நம்மைவிடப் பெரிய படகுகளை வைத்திருக்கிறது…” என்றார். பூரிசிரவஸ் “அவர்களின் துறை மிகப்பெரியது” என்றான். “ஆம், அவர்கள் எப்போதுமே நீர்வணிகர்கள்” என்றார் சௌனகர்.

படகின் முகப்பிலிருந்த பாஞ்சாலத்தின் வில் முத்திரை தெளிவாகத் தெரிந்தது. சௌனகர் திரும்பிப்பார்த்தார். கனகர் கையை அசைக்க சூதர் தங்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்தனர். அணிப்பரத்தையர் தாலங்களை எடுத்துக்கொள்ள ஏவலர் அவற்றின் அகல்களில் சுடரேற்றினர். துறைமேடை பரபரப்பு கொண்டு பின் மெல்ல அடங்கி அமைதியடைந்தது. முறுக்கப்பட்ட யாழ்நரம்புகள் என அனைவரும் காத்து நின்றனர்.

அன்னம்போல அலைகளில் ஏறி அமைந்து ஏறி வந்தது படகு. அதன் முகப்பு துள்ளிவரும் கன்றுக்குட்டியின் மூக்கு போல அசைந்தது. அதன் அமரத்தில் நின்றிருந்தவன் விற்கொடியை ஆட்டினான். அதன் விலாவிலிருந்த மேடையில் நின்றிருந்த சூதர் முரசுகளையும் கொம்புகளையும் இசைக்க கன்று அமறியபடி அன்னை மடியை முட்ட வருவதுபோல படகு அணுகியது. துறைமேடையின் பெருமுரசம் விரைவுகொண்டது. அணையும் தழல் போல படகு மெல்ல தன் பாய்களை ஒடுக்கியது. பின்னால் வந்த படகுகளும் பாய்சுருக்கி விரைவிழந்தன.

படகின் வில் இலச்சினை தன் தலைக்குமேல் எழுந்துசெல்வதை பூரிசிரவஸ் கண்டான். அதுவே அவனைவிட நான்குமடங்கு பெரிதாக இருந்தது. படகின் இருபக்கமும் விழிதிறந்த யாளியின் முகம் இரண்டாள் உயரமிருந்தது. சற்று நேரத்திலேயே படகின் விலா கோட்டைச்சுவர் என அவர்கள் விழிகள் முன் விரிந்தது. பலகைகளை இணைத்து பதிக்கப்பட்டிருந்த வெண்கல ஆணிகளும் பட்டைகளும் பொன்னென மின்னின. தலைக்குமேல் மிக உயரத்தில் அதன் பாய்கள் கொடிமரத்தில் அறைந்து ஓசையிட்டன.

கனகர் கைகாட்ட பெருமுரசம் கார்வையாக ஒடுங்கி ஓய்ந்தது. மங்கல இசை எழுந்து துறைமேடையை சூழ்ந்தது. சூதரும் பரத்தையரும் நிரை வகுத்து படகை நோக்கி வந்தனர். படகின் முகப்பில் திருஷ்டத்யும்னன் மணிச்சரம் சுற்றி செம்பருந்தின் இறகு சூடிய பட்டுத்தலைப்பாகையும் மணிபொறித்த பொற்கச்சையில் பொன்னுறையிட்ட குத்துவாளும் பட்டு அந்தரீயமும் அணிந்தவனாக தோன்றினான். வைரங்கள் ஒளிர்ந்த கங்கணங்கள் அணிந்த கைகளை கூப்பிக்கொண்டு நின்றான்.

இதழ்விரிவதுபோல படகின் வாயில் திறக்க துறைமேடையிலிருந்து நடைபாலம் நீண்டு அதன் விலாவுக்குள் நுழைந்தது. திருஷ்டத்யும்னன் அதன் வழியாக கைகூப்பியபடி இறங்கி வந்தான். சௌனகர் அவனை அணுகி “நான் அஸ்தினபுரியின் பேரமைச்சன் சௌனகன். பாஞ்சால இளவரசரை அரசரின் சார்பிலும் எண்குலங்கள் சார்பிலும் வரவேற்கிறேன்” என்றார். திருஷ்டத்யும்னன் “அஸ்தினபுரியின் மடியை மிதிக்கும் கணம் மூதாதையரால் வாழ்த்தப்பட்டது பேரமைச்சரே. தாங்களே வந்ததும் என்னை பெருமைப்படுத்துகிறது” என்றான்.

பூரிசிரவஸ் வணங்கி “நல்வரவு இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் அவனை பொருட்படுத்தாமல் மெல்ல தலையை மட்டும் அசைத்தபின் “இளவரசி இரவெல்லாம் துயிலவில்லை” என்றான். அவன் திரும்பி கைகாட்ட உள்ளிருந்த அறையின் பட்டுத்திரை விலகியது. நான்கு அணிப்பரத்தையர் கையில் பொற்தாலங்களுடன் பட்டும் பொன்னும் ஒளிவிட நடனம்போல மெல்ல அசைந்தபடி வந்தனர். அவர்களின் அசைவுகளுடன் இசையை இணைத்துக்கொண்டது உள்ளம். அவன் விழிகளில் முழுச்சித்தமும் இருந்தது. அங்கிருந்த அனைவரும் அப்படித்தான் இருந்தனர்.

அணிப்பரத்தையருக்கு அப்பால் திரௌபதியின் உயர்ந்த கொண்டை தெரிந்தது. கோபுரம் போலஎழுப்பி கட்டப்பட்ட கருங்குழல் சுருள்களின் மேல் நீலவைரங்களால் ஆன மணிமாலை சுற்றிக்கட்டப்பட்டிருந்தது. இரவிலெழுந்த விண்மீன்கள் என்பார்களா சூதர்கள்? நெற்றிச்சுட்டியில் நீலவைரம். காதுகளில் ஆடின விண்மீன் தொகுதிகள். தோள்களுக்கும் கொண்டைகளுக்கும் அப்பால் அவள் முகம் தெரிந்து மறைந்தது. கரும்பளிங்குச் சிலைமுகம். யுகயுகங்களாக ஒற்றை நோக்கும் உணர்வுமாக உறைந்த தெய்வமுகம்.

அணிப்பரத்தையர் இறங்கி வந்து மலர்ப்பாதையில் நடந்து இருபிரிவாக பிரிந்தனர். நடுவே அவள் நடைப்பாலம் வழியாக மெல்ல நடந்து வந்தாள், இழுத்துக்கட்டிய கம்பியில் நடப்பவள் போல. துவளாத பெருந்தோள்கள். இருபக்கமும் சீராக அசைந்த இடை. கைகளில் ஏந்திய பொற்தாலத்தில் எண்மங்கலங்கள் இருந்தன. அஸ்தினபுரியின் அணிப்பரத்தையர் தாலங்களுடன் சென்று அவளை எதிரேற்றனர். முதுமங்கலைகள் இருவர் பொற்தாலத்தை அவள் காலடியில் வைத்தனர். அவள் வலக்காலை அதில் வைத்ததும் சேடியர் குரவையிட்டனர். மங்கல இசை சூழ்ந்தொலிக்க பொற்குடங்களில் இருந்து மஞ்சள்நீரை ஊற்றி அவள் கால்களை கழுவினர்.

பின்னர் முதுமங்கலை “எங்கள் மண்மேல் உங்கள் பாதங்கள் பதியட்டும் அன்னையே” என்றாள். திரௌபதி புன்னகைசெய்து நிமிர்ந்த தலையுடன் கைகளில் ஏந்திய தாலத்தில் எண்மங்கலங்களுடன் தன் வலக்காலை எடுத்து மலர்பூத்த அஸ்தினபுரியின் மண்மேல் வைத்தாள்.

முந்தைய கட்டுரைஅஞ்சலி : கோபுலு
அடுத்த கட்டுரைஇணையச் சமவாய்ப்பு- எதிர்வினைகள்