ஆத்மானந்தா

ஆத்மானந்தா என்ற பேரில் அறியப்பட்ட கிருஷ்ண மேனன் கேரளத்தில் திருவல்லா பகுதியில் பெரிங்ஙரா என்ற சிற்றூரில் பிறந்தார். 1883 டிசம்பர் 8. அவரது ஒரு நாயர் நிலப்பிரபுக்குடும்பம். அக்கால வழக்கப்படி அவரது அம்மா மூவிடத்து மடம் கோவிந்தன் நம்பூதிரி என்ப்வருடனான மண உறவில் அவரைப்பெற்றார். கிருஷ்ண மேனனின் தாய்மாமன்களில் சம்ஸ்கிருத அறிஞர்களும் சோதிடர்களும் உண்டு. இளமையிலேயே அவர் சம்ஸ்கிருதக் கல்விக்குள் சென்றிருக்கிறார்.

பொதுவாக ஆன்மீகமான எழுச்சியைப் பெற்றவர்களிலும் இலக்கியவாதிகளிலும் ஒரு தனித்தன்மையைப் பார்க்கலாம். ஒன்று, அவர்கள் மிக இளமையிலேயே அபாரமான உடல்,மன வலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். அசுரத்தன்மை கொண்டவர்கள். எங்கும் எதிலும் ஊடுருவிச்செல்பவர்கள். அச்சமென்பதே இல்லாதவர்கள். அவர்களுக்குள் கட்டற்ற உயிர்வேகம் கொந்தளித்துக்கொண்டே இருக்கும். ஆகவே அவர்களுக்கு எப்போதும் சிந்தனையில் புதிய வழிகள் தேவைப்படுகிறது

இரண்டாம் வகையானவர்கள் இளமையிலேயே நோயுற்றவர்கள். அதனாலேயே ஒதுங்கியவர்கள், தனித்தவர்கள். இந்தக் காரணத்தால் அவர்கள் வழக்கமான பாதைகளை முழுக்கவெ கவனிக்கப்படாதவர்கள். ஆனால் அவர்களுக்குள் மிக ஆழத்தில் உயிர்சக்தி கொந்தளித்துக்கொண்டிருக்கும். தங்கள் தனிமை காரணமாகவே அவர்கள் பிறர் அறியாத பாதைகளை நோக்கிச் செல்வார்கள். சட்டென்று ஒரு சந்தர்ப்பத்தில் ஆழமான வீச்சுடன் வெளிப்படுவார்கள்.

முதல்வகைக்கு தல்ஸ்தோய் உதாரணம் என்றால் இரண்டாம் வகைக்கு தஸ்தயேவ்ஸ்கி உதாரணம். முதல் வகைக்கு நாராயணகுரு உதாரணம் என்றால் இரண்டாம் வகைக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் உதாரணம். ஆத்மானந்தா இளமையில்மிகப்பலவீனமானவராக இருந்தார். அவரது 10 வயது வரை அவர் திட உணவு உண்ணமுடிந்ததில்லை. அவரது குடல் மிகவும் பலவீனமாக இருந்தது. அப்போது திருவல்லா கோயிலுக்கு வந்த ஒரு துறவி ஏதோ மருந்தை கதலிப்பழத்தில் வைத்துக்கொடுத்தமையால் அவரது நோய் தீர்ந்தது. கிருஷ்ண மேனனுக்கு மந்திரோபதேசம் அளித்த முதல் குருநாதரும் அவரே.

படிப்பில் மிகச்சூட்டிகையானவராக இருந்த கிருஷ்ண மேனன் 12 வயதில் உயர்நிலைப்பள்ளியை அடைந்தார். இளம் வயதிலேயே மலையாளத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். பத்து வயதுக்குமேல் அசாதாரணமான பசியும் அதற்கேற்ற உடல் வலிமையும் கொண்டவராக ஆனார் . 1896ல் கொல்லம் அருகே வேம்பநாட்டுக்காயலில் ஒருபடகு விபத்து நிகழ்ந்தது. அப்போது கடுமையான புயலடித்து காயல் கொந்தளித்துக்கொண்டிருந்தது.நடுக்காயலில் மூழ்கிய படகில் இருந்த அத்தனைபேரும் இறந்தார்கள். அலைகொதித்த காயலில் இருளில் எட்டு கிலோமீட்டர் தூரம் நீந்தி கிருஷ்ண மேனன் மட்டும் உயிர்தப்பினார்

படிப்பில் புகழ்பெற்றிருந்த கிருஷ்ண மேனன் 1897ல் நடந்த சென்னைப்பல்கலைக்கழகம் நடத்திய மெட்ரிக்குலேஷன் பொதுத்தேர்வில் மலையாளத்தில் வெறும் 9 மதிப்பெண் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். மலையாளத்தில் அவரது கவிதைகள் புகழ்பெற்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்துகொண்டிருந்த காலம் அது. ஒருமாதம் கழித்து சென்னைப் பல்கலைக் கழகம் தற்செயலாக நிகழ்த்திய மறுகூட்டலில் அவர் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 90 மதிப்பெண்ணில் சுழியம் விடுபட்டிருந்தது.

படிப்பின்மீது கிருஷ்ணமேனனுக்கு அபாரமான ஈடுபாடு இருந்தது. மிகப்பெரிய தாய்வழிக்குடும்பத்தில் அக்காலத்தில் படிப்புக்கான வருமானம் இருக்கவில்லை. கிருஷ்ணமேனன் தனியார்பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றி பணம் மிச்சம் செய்து சென்னைபல்கலையில் சேர்ந்து இளங்கலை பட்டம் பெற்றார்.

பட்டப்படிப்பு முடிவதற்கு முன்னரே 1910 ல் தன் 27 வயதில் அவர் பாறுக்குட்டி அம்மாவை மணம்செய்தார். [பார்வதி என்றபேரின் கொச்சைவடிவம் பாறு] இந்தக்காலகட்டத்தில் கிருஷ்ண மேனன் பிரிட்டிஷ் நாத்திக வாதத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்தார். குறிப்பாக ஃபாயர்பாக் மீது பெரும் பற்று இருந்தது. பிரிட்டிஷ் பொருள்முதல்வாத தத்துவம் குறித்து விரிவான உரைகள் நிகழ்த்துபவராக அவர் அறியப்பட்டிருந்தார். அதேபோல பதவி ,பணம் ஆகியவற்றிலும் பெரும் ஈடுபாடு இருந்திருக்கிறது. இளங்கலைபட்டம் பெற்ற பின் திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தில் உதவியாளராக வேலைபார்த்தார். இக்காலகட்டத்தில் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம்பயின்றார்.

கிருஷ்ணமேனன் உருவத்தில் சிறியவர். ஆனால் மிகச்சிறந்த உடல்பலம் கொண்டிருந்தார். அவர் நீதிமன்றத்தில் வேலைசெய்யும்போது அந்த வளாகத்தில் வெள்ளைய அதிகாரிகள் குதிரைப்பயிற்சி செய்வதுண்டு. அன்றைய திருவிதாங்கூரின் காவல் ஆணையராக இருந்தவரின் குதிரையை கிருஷ்ணமேனன் வெறும் கையால் பிடித்து அடக்கியதைக் கண்ட அவர் கிருஷ்ண மேனனை காவல் மேலாய்வாளராக நியமித்தார். கிருஷ்ணமேனன் குதிரை ஏற்றத்தில் தனித்தேர்ச்சிகொண்டவராகவும் மிகச்சிறந்த துப்பாக்கிசுடுபவராகவும் புகழ்பெற்றிருந்தார்

பதவியில் இருந்தபடியே படித்து சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றதும் குற்றவியல் ஆய்வாளாராக பதவி உயர்வு கிடைத்தது. அந்த பதவியுடன் அவர் அக்காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் இரண்டாம் தலைநகரமாக இருந்த பத்மநாப புரத்துக்கு வந்தார். கோட்டைக்குள் தெற்குத்தெருவில் ஒரு வீட்டில் குடிபுகுந்தார். இக்காலகட்டத்தில் நாத்திகவாதமும் பதவிமிடுக்குமாக அவர் வாழ்ந்திருந்தார். ஆங்கில இலக்கியத்தில் தீவிரமான ருசி இருந்தது

1919ல் அப்போது இன்றைய தக்கலை அரண்மனைச்சாலையில் இருந்த காவல்நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்து பத்மநாபபுரத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது குறுக்காக ஓடிய சிற்றாறின் மீதிருந்த பாலத்தின் விளிம்புச்சுவரில் அமர்ந்திருந்த ஒரு துறவியைச் சந்தித்தார். நீளமான காவி அங்கியும் வங்கபாணி தலைப்பாகையும் அணிந்த அந்த துறவி அவரை அழைத்து ஆங்கிலத்தில் பேசினார். கிருஷ்ணமேனன் அவரிடம் விவாதிக்க ஆரம்பித்தார். துறவிகளிடம் விவாதித்து அவர்களை அவமதிப்பது அவரது விளையாட்டாக இருந்தது

அந்த வங்கத்துறவியின் பெயர் யோகானந்தா . அவர் கல்கத்தாவில் இருந்து வந்திருந்தார். கொஞ்சம்பேசுவதற்குள்ளேயே கிருஷ்ணமேனன் ஒன்று தெரிந்துகொண்டார். அதுவரை அவர் இந்திய துறவிகளை மேலைநாட்டு தத்துவத்திற்குரிய தர்க்கமுறைகளைக் கொண்டு குழப்பி தோற்கடித்துக்கொண்டிருந்தார். ஆனால் யோகானந்தா மேலைநாட்டு தத்துவமரபை ஆழமாக கற்றவராக இருந்தார். கிருஷ்ணமேனனுக்கு ஆஸ்திரிய-ஜெர்மானிய தத்துவசிந்தனையாளர்கள் அறிமுகமிருக்கவில்லை. உருவாகிவரும் புதிய தத்துவத்துறைகளையும் அறிஞர்களையும் யோகானந்தா கிருஷ்ணமேனனுக்கு எடுத்துரைத்தார்

இருட்ட ஆரம்பித்தது. இருவரும் மெதுவாக மேடேறி பத்மநாபுரம் கோட்டைவாசலுக்கு நேர்முன்னால் உள்ள பழைய வீட்டுத்திண்ணையை அடைந்தார்கள். அப்போது அதில் யாரும் தங்கியிருக்கவில்லை. நிலவு எழுந்தது. அந்த ஒளியில் இரவெல்லாம் இருவரும் பேசினார்கள். ஆரம்பத்தில் அந்த உரையாடல் விவாதமாகத்தான் இருந்தது. கிருஷ்ணமேனன் தன் அனைத்து அறிவையும் தர்க்கத்திறனையும் கொண்டு யோகானந்தாவை மோதி உடைக்க முயன்றார். மெல்ல மெல்ல அவர் யோகானந்தாவின் குரலைக்கேட்டுக்கொண்டே இருக்க ஆரம்பித்தார். விடியற்காலையில் கோழி கூவி கோட்டைக்காவல் மாற்றப்பட்ட ஒலிகள் எழுந்தபோது அவர் யோகானந்தாவின் சீடராக வெளியே வந்தார்

யோகானந்தாவின் வழிகளைப்பற்றி கிருஷ்ணமேனன் பிற்பாடு விளக்கினார். அறிவுத்தர்க்கத்தின் உச்சத்தில் நின்ற கிருஷ்ணமேனனை எந்த தர்க்கமும் உடைத்திருக்க முடியாது. ஏனென்றால் தர்க்கம் என்பது ஒரு ஆடி போல. அது உடனே எதிர்தரப்பில் அதேயளவில் பிரதிபலிக்கும். யோகானந்தா எதைச் சொல்லியிருந்தாலும் அதற்கிணையான எதிர்த்தர்க்கத்தை கிருஷ்ணமேனன் உடனே உருவாக்கிக் கொண்டிருப்பார். யோகானந்தர் தர்க்கம் பிரமித்து நிற்கும் இடங்களை நோக்கி கிருஷ்ணமேனனை நகர்த்திச் சென்றார். ஒன்று உயர்கவித்துவம், இரண்டு முரண்புதிர்கள். அறிவுத்திமிர் அடங்கப்பெற்றதும் சட்டென்று முற்றிலும் ஒரு புதிய வெளி அவரது கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் யோகானந்தர் சீடனுக்கு கர்மயோகத்தையே பரிந்துரைத்தார். ஆனால் கிருஷ்ணமேனன் மனம் அதற்கு ஒப்பவில்லை. அது ஞானமார்க்கம் நோக்கியே சென்றது. ஞானத்தை தொடுவதற்கே ஞானமார்க்கம் உதவும், ஞானமாகவே ஆவதற்கு யோகமே வழி என்று குரு சொன்னதாக கிருஷ்ணமேனன் பிற்பாடு சொன்னார். ஞானம் ஏதாவது இடத்தில் வழிமுட்டி நிற்கையில் யோகத்தைத் தொடங்கும்படி அறிவுறுத்தினார். விடிகாலையிலேயே யோகானந்தர் கல்கத்தாவுக்குச் சென்றார். அதன்பின்னர் அவரை கிருஷ்ணமேனன் சந்தித்ததில்லை. அந்தச் சந்திப்பிலேயே அவரது மறு தொடக்கம் நிகழ்ந்தது. குருவின் ஆணைப்படி தன் பெயரை ஆத்மானந்தா என்று மாற்றிக்கொண்டார்.

யோகானந்தரைப்பற்றி பிற்பாடு சில தகவல்கள் கிடைத்தன. ராஜபுதனத்து அரசகுடும்பத்தைச் சேர்ந்தவரான யோகானந்தர் பன்னிரு வயதில் துறவு பூண்டவர். கல்கத்தாவுக்கு வந்து நான்கு சீடர்களுடன் ஒரு சிறு ஆசிரமத்தில் வசித்தார். அவரது மாணவர்களில் கடைசியானவர் கிருஷ்ண மேனன். ஒரே இல்லறச் சீடரும் அவரே. யோகானந்தர் காட்டியவழியில் கிருஷ்ணமேனன் ஞானத்தேடலை ஆரம்பித்தார். பலவருடங்கள் வேதாந்த மூலநூல்களில் ஆழ்ந்திருந்தார்.

ஆச்சரியமென்னவென்றால் கிருஷ்ணமேனன் ஞானத்தேடலில் தன் எல்லையைக் கண்டடைந்ததும் தீவிரமான உணர்ச்சிகர பக்திபாவத்தை நோக்கி திரும்பினார் என்பதுதான். கிருஷ்ணனின் வடிவில் பிரம்மத்தை உணர்ந்து ராதையாக தன்னை நிறுத்திச் செய்யும் ராதாமாதவஃபாவனா என்ற ’ராகயோக’ முறையை மேற்கொண்டார். இக்காலகட்டத்தில் 48 பாடல்கள் கொண்ட ராதாமாதவம் என்ற மலையாள இசைப்பாடல்நுலை எழுதியிருக்கிறார். இன்றும் அதன் பாடல்கள் எழுதியவர் பெயர் தெரியாமல் கேரளத்தில் பாடப்படுகின்றன.

அதை தொடர்ந்து சில குறிப்பிட்ட யோகப்பயிற்சிகளில் ஈடுபட்ட கிருஷ்ணமேனன் நரம்புகள் பாதிக்கப்பட்டு பக்கவாதநோய்க்கு ஆளாகி படுக்கையில் விழுந்தார். திருவனந்தபுரத்தின் முக்கியமான மருத்துவர்கள் அவரது நோய்க்குச் சிகிழ்ச்சை அளித்து பயன் ஏற்படவில்லை. அப்போது திருவனந்தபுரத்தில் இருந்த ஞானியான சட்டம்பி சுவாமி [இவர் நாராயணகுருவின் நண்பர்] யிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து பார்த்துவிட்டு நேரடியான குரு உதவி இன்றி மூர்க்கமாகச் செய்யப்பட்ட யோகப்பயிற்சியால் நிகழ்ந்தது அது என்று சொன்னார். சட்டம்பி சுவாமி அளித்த ஆழ்ந்த தூக்கத்தை விளைவிக்கும் ஒரு மூலிகையால் தொடர்ச்சியாக தூங்கவைக்கப்பட்ட கிருஷ்ண மேனன் நோயில் இருந்து மீண்டெழுந்தார்.

சட்டம்பிசுவாமி கிருஷ்ணமேனனுக்கு அளித்த அறிவுரை தெளிவான ஞானயோகப் பயிற்சியின் பக்கச்செயல்பாடாக மட்டுமே பிற யோகமுறைகளை வைத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான். அதாவது கிருஷ்ணமேனன் அவரது இயல்புக்கு மீறிய எதையுமே வலுக்கட்டாயமாகச் செய்ய முற்படக்கூடாது. கிருஷ்ணமேனன் செய்த யோகப்பயிற்சிகள் அடிப்படை இச்சையான காமம் மூலம் மூலாதார ஆற்றலை எழுப்பும் பயிற்சிகளாக இருக்கலாம். அவர் அதைப்பற்றி பேசியதில்லை.

யோகசாதனைகள் போதிய பலன் தராத நிலையில் 1922ல் கிருஷ்ணமேனன் துறவுபூண்டு கல்கத்தா செல்ல திட்டமிட்டு வேலையை விடுவதற்கு விண்ணப்பித்தார். மனைவியிடம் எதையும் சொல்லவில்லை. ஆனால் அவரது கனவில் குரு வந்து தன்னிடம் வரவேண்டாம் என்றும், இலக்கு தொட்டுவிடும் தொலைவே என்றும் சொன்னதாக ஆத்மானந்தர் சொல்லியிருக்கிறார். சில நாட்களில் 1922 ஜூன் 9 அன்று யோகானந்தர் இறந்துவிட்ட செய்தி கிடைத்தது. அதன்பின்னர் தன் வாழ்நாள்முழுக்க இல்லறத்தாராகவே ஆத்மானந்தா இருந்தார்

ஆத்மானந்தா தன் மனைவி பாறுக்குட்டியைப்பற்றி பெரிதும் பாராட்டி சொல்லியிருக்கிறார். அவரது அனைத்து யோகசாதனைகளுக்கும் உறுதுணையாக இருந்த பாறுக்குட்டியம்மா அவர் பக்கவாதம் வந்து கிடந்த நாட்களில் குழந்தைபோல அவரைக் கவனித்துக்கொண்டார். சுயநலமில்லாத பேரன்பு எப்போதும் எந்தபாதைக்கும் உறுதுணையாகவே அமையும், தடையாக ஆகாது என்பதற்கான உதாரணமாக ஆத்மானந்தர் தன் மனைவியை குறிப்பிடுவதுண்டு. தன் மனைவியை தன் முதல் மாணவியாக ஏற்றுக்கொண்ட ஆத்மானந்தா அவருக்கு துறவு அளித்தார். ஸ்வரூபானந்தமயி என்று அவரால் பெயர் மாற்றம் பெற்றார் பாறுக்குட்டியம்மா. ஆத்மானந்தரின் மகனும் அவரிடம் தீட்சை பெற்று துறவியாக இருந்தார்.

இப்போது பார்க்கையில் நம்பமுடியாத ஒரு விஷயம், ஆத்மானந்தர் அவரது 60 வயது வரை காவல்துறை உயரதிகாரியாகவே செயல்பட்டு 1943ல் ஓய்வுபெற்றார் என்பதே. இக்காலகட்டத்தில் மிகச்சிறந்த புலனாய்வு அதிகாரியாக கருதப்பட்ட அவர் பல முக்கியமான வழக்குகளை தெளியச் செய்திருக்கிறார். அவரது இல்லத்தில் காலையில் உலகின் முதன்மையான பேரறிஞர்கள் அவரது உரைக்காக காத்திருக்கையில் அவர் காலை எட்டரை மணிக்கு உரையை நிறுத்திவிட்டு அதிகாரபூர்வ சீருடை அணிந்து வேலைக்குச் சென்று மாலை இருள்வது வரை பணியாற்றினார். திருவிதாங்கூர் மகாராஜாவே அவரது உரைகேட்கவரும் பக்தராக இருந்தும் திருவிதாங்கூர் அரசின் ஊழியராக இருந்தார். அவரது காவல்துறை நண்பர்கள் பலருக்கு அவரது அறிவுத்தள முகம் கொஞ்சம் கூட தெரிந்திருக்கவில்லை. ஏன் அவரது உறவினர்கள்கூட அதை அறிந்திருக்கவில்லை. முற்றிலும் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமலேயே வாழ்ந்து மறைந்தார்.

1951ல் அவர் தன் ஐரோப்பிய மாணவர்களின் அழைப்பின்பேரில் பிரான்ஸ், இங்கிலாந்து,சுவிட்சர்லாந்து ,ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் சென்றார். வெளிப்படுத்தப்படாத காரணங்களுக்காக தன் மாணவர்களுடன் அர்ஜெண்டினாவுக்கும் எகிப்துக்கும் சென்றிருக்கிறார். பணி ஓய்வுபெற்றபின் திருவனந்தபுரத்தில் இருந்து செங்ஙன்னூர் அருகே மாலக்கரை என்ற சிறு கிராமத்தில் வீடுகட்டிக்கொண்டு அங்கே சென்று வாழ்ந்தார். 1959 மே 14 அன்று சமாதியானார். அவரது சமாதியிடம் அந்த கிராமத்தில் உள்ளது.

கிருஷ்ணமேனனின் பேச்சு உரையாடல் போன்றது. அவர் எவருக்காகவும் பேசவில்லை என்று தோன்றும். ஒன்றில் இருந்து ஒன்றாக தொட்டுச் செல்லும் கேள்விகளும் விடைகளுமாக அது நீண்டு இயல்பான முடிவை அடையும். அபாரமான ஆங்கிலத்தில் மூளையைச் சொடுக்கும் கவித்துவச் சொற்றொடர்களுடன் அவை அமைந்திருக்கும். அன்று ஐரோப்பாவில் உருவாகி வந்த உளவியலின் பல வினாக்களை கிருஷ்ண மேனன் மிக ஆழமாகச் சென்று தொட்டிருக்கிறார் என்று சி.ஜி.யுங் கூறியிருக்கிறார். குறிப்பாக சுயம் [Self ] , தன்னிலை [subjectivity] , இருப்பு [Exisitance], தன்முனைப்பு [Ego] ஆகிய கருதுகோள்களைப்பற்றிய அவரது நுண்ணிய அவதானிப்புகள் இன்றும் யுங்கியர்களால் பேசப்படுகின்றன.

ஆனால் அவர் சொன்னவை அனைத்துமே பல நூற்றாண்டுக்காலமாக பேசப்பட்ட தூய அத்வைதக் கருத்துக்கள் மட்டுமே. கிருஷ்ணமேனன் அவற்றுக்கு நவீன மேலைநாட்டு மனம் புரிந்துகொள்ளும் சொல்லாட்சிகளை அளித்தார். அந்த காலகட்டத்தில் அத்வைதத்தை சமகாலச் சொல்லாடலுக்குள் கொண்டுவரவேண்டிய தேவை இருந்தது, அந்த தேவையை அவர் நிறைவேற்றினார் எனலாம்.

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் 2010

http://www.advaita.org.uk/discourses/atmananda/atmananda6b.htm
தூய அறிவு http://www.jeyamohan.in/?p=7133

இந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம் http://www.jeyamohan.in/?p=7018

யோகம், ஒரு கடிதம் http://www.jeyamohan.in/?p=6765

ஞானியர், இரு கேள்விகள் http://www.jeyamohan.in/?p=6752

நித்யானந்தர் http://www.jeyamohan.in/?p=6700

கென் வில்பர்,ரமணர்,முழுமையறிவு:ஓரு உரையாடல் http://www.jeyamohan.in/?p=536

குருகுலமும் கல்வியும் http://www.jeyamohan.in/?p=204

நாராயண குரு எனும் இயக்கம் -1 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20404291&format=html

நாராயண குரு எனும் இயக்கம்-2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20405065&format=html

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 4
அடுத்த கட்டுரைஅஞ்சலி : யு.ஆர்.அனந்தமூர்த்தி