வாசகர் சந்திப்பு

இந்தமுறை பருவமழைப்பயணத்துக்காக பெரியாறு வனத்தில் இரவு அறையில் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் அரங்கசாமி ஓர் எண்ணத்தை சொன்னார். ஏதாவது ஒரு இடத்தில் நண்பர்கள் சந்தித்து தொடர்ச்சியாக உரையாடும் ஒரு மூன்றுநாள் சந்திப்பை நிகழ்த்தலாம் என்று. அது கடிதம் மூலம் பரஸ்பர அறிமுகம் கொண்ட என் நண்பர்கள் ஒருவரை ஒருவர் அறிவதற்காக மட்டுமல்லாமல் ஆழமான ஓர் உரையாடல் நிகழ்ச்சியாகவும் இருக்கவேண்டும். ஏனென்றால் வாசிப்பு என்ற அனுபவம் போலவே நேர்ச்சந்திப்பும் உரையாடலும் ஆழமான புரிதல்களை உருவாக்கக் கூடியது.

பலவருடங்களாக நான் தமிழ்-மலையாளக் கவிதை உரையாடல் அரங்கை ஊட்டி நாராயண குருகுலத்தில் நடத்தி வந்திருக்கிறேன். அதுவன்றி பொதுவான நண்பர் சந்திப்பு நிகழ்ச்சிகளும் பல நடந்துள்ளன. மொத்தம் 19 சந்திப்புகள். அச்சந்திப்புகள் சம்பந்தப்பட்ட நண்பர்களின் நினைவில் இனிய நினைவுகளாக இருப்பதனால் எப்போதுமே இச்சந்திப்புகளுக்காக அவர்கள் கோரிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தமுறையும் மே மாதம் கவிதை அரங்கை நிகழ்த்தலாம் என்று கவிஞர் நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். கவிதைகளை மொழியாக்கம் செய்து அனைவருக்கும் அனுப்புவது என்ற கடுமையான பணியை செய்யமுடியாத நிலையில் அப்போது இருந்தேன். ஆகவே சந்திப்பு நிகழவில்லை.

நண்பர்களின் எண்ணப்படி ஆகஸ்ட் 27,28,29 [வெள்ளி, சனி, ஞாயிறு] தினங்களில் ஊட்டி நாராயண குருகுலத்தில் இச்சந்திப்பை நிகழ்த்தலாம் என்றிருக்கிறேன். ஊட்டி நாராயணகுருகுலத்தில் இப்போது சுவாமி தன்மயா மட்டுமே உள்ளார். அங்கேயே போதிய தங்குமிடம் உள்ளது. அதிகமான வசதிகள் இருக்காதென்றாலும் வசதிக்குறைவும் இருக்காது. உணவுப்பொருட்களுக்கான செலவன்றி வேறேதும் இல்லை. அதை நானே ஏற்றுக்கொள்ள முடியும். பிற ஏற்பாடுகளை நிர்மால்யா செய்வார். வருபவர்கள் சொந்தச் செலவில் வரவேண்டும்.

சந்திப்பு நிகழ்ச்சியை வழக்கம்போல மூன்றுநாட்கள் நிகழ்த்தலாம். வெள்ளி காலை 10 மணி முதல் ஞாயிறு மதியம் வரை. தத்துவம் குறித்து ஒருநாளும், தமிழ் மரபிலக்கியம் குறித்து ஒருநாளும், நவீனக்கவிதை ரசனை குறித்து ஒருநாளும் பேசலாம் என்பது இப்போதைய திட்டம். எப்படி அதை நிகழ்த்துவதென இனிமேல்தான் முடிவுசெய்யவேண்டும்.

எப்போதும்போல அந்த ஐந்து நிபந்தனைகள் உண்டு.

1. வரக்கூடியவர்கள் எல்லா அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.

2 தனிப்பட்ட முறையில் விமரிசனம்செய்து பேசக்கூடாது.கடுமையான நேரடி விமரிசனங்களும் கூடாது.

3 சந்திப்பு நிகழும் மூன்று நாட்களிலும் அரங்கிலும் வெளியிலும் மது அருந்தக்கூடாது.

4 சந்திப்புகளின்போது விவாதத்தின் பொதுவான எல்லைக்கு வெளியே அதிகம் செல்லக்கூடாது. மட்டுறுத்தல் உண்டு.

5 வரவிரும்புகிறவர்கள் தகவல் தெரிவித்தால் அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படாதவர்களுக்கு அனுமதி இல்லை. அனுமதி இல்லாமல் எவரையும் கூட்டி வரக்கூடாது.

சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் தெரிவிக்கலாம்

தொடர்புக்கு [email protected]

ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=4808 இருகவிஞர்கள்

http://pesalaam.blogspot.com/2008/05/1.html
ஊட்டி நித்யா க‌விதை அர‌ங்கு – 1

ஊட்டி-கவிதையரங்கு http://www.jeyamohan.in/?p=416

நித்யா கவிதை அரங்கு http://www.jeyamohan.in/?p=329

முந்தைய கட்டுரைஎந்த அடையாளம்?
அடுத்த கட்டுரைபூக்கள் பூக்கும் தருணம்