ஆலமர்ந்த ஆசிரியன் வாசித்தேன் ஜெ.
ஒரு முப்பது நாற்பதாண்டுகள் முன் எழுதப்பட்ட கதைகள் படிக்க நேரும் போது dated style என்று இடது கையால் புறந்தள்ளி நான் வேற மாதிரி சராசரி இல்லை என்று நிரூபித்துக்கொள்ள முயலும் சராசரித்தனம் அவ்வப்போது வருவதுண்டு. யுகசந்தி படித்தபோது, நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் படித்த போது – இரண்டு குழந்தைகள் படித்தபோது, ஏன் அவள் அப்படித்தான் பார்த்தபோது கூட … மஞ்சுவும் அருணும் தியாகுவும் இன்னும் நிஜங்களாய் இருக்கும் போது கூட
கீழ்மையும் அச்சமும் இயல்பாய் தோன்றுகிற உணர்ச்சிகளாகவும் அச்சமற்ற சமரசம் தவிர்த்த கருணை பொங்கும் கணங்கள் வலிந்து கொள்ள வேண்டியவையாகவும் வாழ்க்கை இருக்கும் பட்சத்தில் – dated என்ற சொல்லாடலுக்கு அர்த்தம் இல்லை. இது content versus form syndrome எல்லை மீறி போகும் தருணம். ஏதோ ஒரு எழுத்தை புத்தகத்தை படிக்கும் போது வரும் கர்வம் தனிமையில் யோசிக்கும் போது அவ்வளவு உவப்பானதாக இல்லை.
அன்புடன்
மங்கை
பிகு
சென்ற மாதத்தில் ஒரு நாள் ஹிக்கின்போதம்ஸ் சென்றால் என்ன என்று தோன்றி (அமேசானிலும் இன்ன பிற இணைய வர்த்தக தளங்களில் மட்டுமே புத்தகம் வாங்கி கொண்டு இருக்கும் என் சோம்பேறித்தனத்தில் எரிச்சல் வந்து இது அவ்வபோது பிடிக்கும் கிறுக்கு), தமிழ் புத்தக பகுதியில் எதையும் குறிப்பாகத்தேடாமல் எதையோ தேடி ஜெயகாந்தனின் கதைத்தொகுப்பை வாங்கி வந்தேன்.
அந்தத்தொகுப்பில் இருந்த ஜெயகாந்தனின் வார்த்தைகள் …
“எழுத்தாளன் ஒரு சட்டத்தின் துணைகொண்டு, ‘இது சரி… இது தப்பு…’ என்று தீர்ப்பும் தண்டனையும் அளிக்கும் சாதாரண ஒரு நீதிபதி அல்ல. வஞ்சிக்கப்பட்டவர்களிடமும், தண்டிக்கப்பட்டவர்களிடமும், சபிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள மனித ஆத்மாவையே நாடிச்செல்ல வேண்டும்”
====================================================================================
ஆசிரியருக்கு,
வணக்கம். தங்கள் உரை அற்புதமாக இருந்தது.
ஜெயகாந்தனை பார்ப்பதை காத்திருப்பதில் ஆரம்பித்தீர்கள். பின்னர் அவருடனான சந்திப்பு. ஆலமர்ந்த ஆசிரியனை தரிசிக்கும் காட்சியாகவே இருந்தது. அவரது அறையில் புகைப்படத்தில் ஒரு ஜெயகாந்தன், அறைக்குள் நேரடியாக உங்கள் பார்வையில் இருக்கும் ஜெயகாந்தன். அவருடைய நூல்களில் இந்திய மரபுக்குள் நவீன சிந்தனைகளை சொன்ன விதம்.
இந்திய மரபை நவீனத்துவத்தை நோக்கி நகர்த்தியதில் ஜெயகாந்தனின் பாதையின் நுட்பம். ஜெயகாந்தனின் அறைந்து சொல்லும் மொழியின் தேவை பற்றிய அவர் கருத்தின் சாராம்சம். பாரதியை அவர் தன்னுள் நிறைத்துக் கொண்ட விதம் பற்றிய சொல்லாடல். தாயுமானவர், வள்ளலார் , சித்தர் பாடல்களை பற்றிய அவரது பார்வை போன்றவை மனதை தொடும் வகையில் இருந்தது.
ஜெயகாந்தன் வாசகர்களிடத்து உருவாக்கிய தாக்கம் குறித்து உங்கள் நண்பர் வழியாக உருவாக்கிய சித்திரம் நிறைய நண்பர்களின் தனி அனுபவமாகவே இருந்தது.
மரபைப்பாதுகாத்தல் என்பது பழைய காலத்தில் வாழுதல் என்ற புரிதல் உள்ள உலகத்தில் மரபை பாதுகாத்தல் என்பது மரபில் தொடர்ச்சியாக புது மானுட சிந்தனைகளை உருவாக்கி கொள்ளுதல் என்பதையே ஜெயகாந்தன் தன் எழுத்தில் சொல்லியிருக்கின்றார்.
அன்புடன்
நிர்மல்.
===================================================================================================
அன்புள்ள ஜெமோ
ஜெகே பற்றிய உரை சிறப்பாக இருந்தது. பல செய்திகள் வழியாகச் செல்கிறது. ‘யாமறிந்த சித்தரெல்லாம் செங்கொடி ஏந்தியவர்கள்’ என்று அவர் சொல்லும் இடம் முக்கியமானது. அதில் சொல்லப்படும் வி பி சித்தன் யார்? கம்யூனிஸ்டுத்தலைவர் என்று ஊகிக்கிறேன்
ஜெயராம்
அன்புள்ள ஜெயராம்
வி பி சிந்தன் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி [மார்க்ஸிஸ்ட்]ன் முக்கியமான தலைவர். மலையாளத்தில் சிண்டன் என்று உச்சரிப்பு. தொழிற்சங்கவாதி. அவரது நூல்கள் சில இப்போதும் வாசிக்கக் கிடைக்கின்ரன