ஜெகெ -சில கட்டுரைகள்

ஜெயகாந்தன் பற்றி எழுதப்பட்ட அஞ்சலி, நினைவுகூர்தல் கட்டுரைகளில் இவற்றை தொகுத்துப்பதிவு செய்யவேண்டுமென்று தோன்றியது. பிரபலமானவர்கள், அறியப்பட்டவர்களின் குறிப்புகளில் இல்லாத ஒரு நேர்மையான உணர்வெழுச்சி இவற்றில் உள்ளது

ஆர்வியின் பதிவு

ஆர்வி என் தலைமுறையைச் சேர்ந்தவர். ஆகவே ஜெயகாந்தனின் பெரும்பாலான படைப்புகளை வாசித்திருக்கிறார். அவரது குறிப்பு ஜெகேவின் படைப்புகளை ஒட்டுமொத்தமாக நினைவுகூர்வதாக உள்ளது

ரெங்கசுப்ரமணி பதிவு

ரெங்கசுப்ரமணி அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர். ஜெகே அவருக்கு அறிமுகமான விதத்தையும் அவரது புனைவுகளில் எது அவரைக் கவர்ந்தது என்றும் சொல்கிறார்

சாரதாவின் பதிவு

பலவகையிலும் இப்பதிவு முக்கியமானது. ஏனென்றால் ஜெகே மறைவை ஒட்டி வெளிவந்த எந்த நினைவுகூரலிலும் தமிழின் கலைப்பட இயக்கத்துக்கு ஜெயகாந்தனின் பங்களிப்பு பெரிதாகப் பதிவுசெய்யப்படவில்லை. இந்தியமொழிகளில் கலைப்பட இயக்கம் என்பது 1955 ல் வெளிவந்த சத்யஜித்ரேயின் படத்துடன் ஆரம்பிக்கிறது. ஆனால் 1972ல் அடூர் கோபாலகிருஷ்ணனின் சுயம்வரம் வழியாகத்தான் மலையாளக் கலைப்பட இயக்கம் தொடங்கியது. 1973 ல் வெளிவந்த கிரீஷ் கர்நாடின் காடு தான் கன்னட கலைபப்ட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி.

ஆனால் 1964ல் ஒரு லட்சம் ரூபாய் திரட்டி ஜெயகாந்தன் தமிழ் கலைப்பட இயக்கத்தைத் தொடங்கிவைத்தார். உன்னைப்போல் ஒருவன் தான் தமிழில் எடுக்கப்பட்ட முதல் கலைப்படம் என்று சொல்லலாம். தேசியவிருதுக்குச் சென்று ரேயின் சாருலதாவிடம் போட்டியிட்டு இரண்டாமிடத்திற்கு வந்தது அது. ஒரு புதிய அலையின் தொடக்கம் என உணரும் பக்குவம் அன்றைய வங்க லாபிக்கு இருந்திருந்தால் உன்னைப்போல் ஒருவன் தேசியவிருது பெற்றிருக்கும்.

வங்க,கன்னட, மலையாள கலைப்பட இயக்கம் முன்னால் சென்றபோது தமிழில் ஆதரிப்பாரில்லாமல் ஜெயகாந்தனின் கலைப்பட இயக்கம் அழிந்தது. அவரது ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், யாருக்காக அழுதான் போன்றவை கவனிப்பைப் பெறவில்லை. சிலபடங்கள் வெளியாகவே இல்லை. அவற்றின் பிரதிகள் கூட புறக்கணிக்கப்பட்டன. எஸ்.ராமகிருஷ்ணன் அவற்றைப்பற்றி எழுதியிருக்கிறார்

ஜெயகாந்தனின் திரைப்பட முயற்சிகள் இருவகையிலும் தோல்வியடைந்தன. தமிழில் அன்று ஓங்கியிருந்த எம்ஜிஆர் சிவாஜி சினிமா அலையில் அவை பெருவாரியானவர்களால் புறக்கணிக்கப்பட்டன. தீவிரமான அறிவியக்கச் செயல்பாடு அன்று மிகச்சிலரால் வாசிக்கப்பட்ட சிற்றிதழ்ச்சூழலில் மட்டுமே இருந்தது. அவர்கள் பொதுவாகவே சினிமாவை ஒரு இரண்டாம்பட்சமான கலையாக, அறிவுத்தகுதி அற்றதாக எண்ணியவர்கள்.

வெங்கட் சாமிநாதன் அந்த மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவந்தவர். ஆனால் ஜெயகாந்தன் மீது அவருக்கும் அன்றைய சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கும் இருந்த காழ்ப்பு காரணமாக மிகச்சாதாரணமான வங்கப்படங்களைப்பற்றி எழுதியவர்கள் கூட ஜெயகாந்தனின் படைப்புகளைப்பற்றி ஒன்றுமே பேசவில்லை.

நான் திருவனந்தபுரம் பிலிம் சொசைட்டியில் பார்த்த உன்னைப்போல் ஒருவனைப்பற்றி சுந்தர ராமசாமி வெங்கட் சாமிநாதன் ஆகியோருடன் பேசியிருக்கிறேன். அவர்கள் அதைப் பார்த்ததில்லை என்பதுடன் பொருட்படுத்தக்கூடாது என்ற முன்முடிவுடன் இருந்ததையும் உணர்ந்தேன். இரு தரப்பிலும் இருந்த பொறுப்பற்ற தன்மையால் தமிழ் கலைப்பட இயக்கம் ஜெயகாந்தனில் தொடங்கி அவரில் முடிந்தது. பீம்சிங் இயக்கத்தில் பின்னர் ஜெயகாந்தனின் சில கதைகள் இடைநிலை சினிமாக்களாக வெளிவந்தன.

சாரதா ஒருநடிகை நாடகம்பார்க்கிறாள் பற்றி சிலநேரங்களில் சிலமனிதர்கள் பற்றி எழுதியிருக்கிறார்

ஜெயகாந்தன் இயக்கிய சினிமாக்கள் பாகம் 1, பாகம் 2 அம்ஷன்குமார்

முந்தைய கட்டுரைசிறியார்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 81