‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 85

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 4

அவை புகுந்த கிருஷ்ணன் கைகூப்பியபடி சென்று பீஷ்மரை அணுகி அவரது கால்களில் எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து வணங்கினான். அவன் அருகே வருவதை அறியாதவர் போல அமர்ந்திருந்தவர் அவன் கால்களில் விழுந்ததும் துடித்து எழுந்துகொண்டார். அவரது நீண்ட கைகள் பதறின. “என்ன, என்ன இது?” என்று உதடுகள் அதிர சொல்லி “நான் என்ன வாழ்த்துவது? நீ…” என்றார். “வாழ்த்துங்கள் பிதாமகரே” என்றார் விதுரர். “மண்ணுலகம் உன்னுடையது… அதை பேணுக” என்றார் பீஷ்மர். கிருஷ்ணன் எழுந்து மீண்டும் ஒருமுறை தலைவணங்கிவிட்டு தன் இருக்கை நோக்கி சென்றான்.

பீஷ்மர் முதியவர்களுக்குரியவகையில் முகவாயை சற்றே தூக்கி உதடுகளை உள்ளே மடித்து ஓசையின்றி அழுதுகொண்டிருப்பதை பூரிசிரவஸ் கண்டான். அவரை அவரது மாணவர் ஹரிசேனர் மெல்ல பற்றி அமரச்செய்தார். அவர் மேலும் அழுதுகொண்டிருக்க ஒரு சிறிய மரவுரியை அளித்து துடைத்துக்கொள்ளும்படி சொன்னார். பீஷ்மர் மூக்கை உறிஞ்சி துடைத்துக்கொண்டு தலைநடுங்க அமர்ந்திருந்தார். அவர் அழுவதை எவரும் நோக்கவில்லை. அனைவரும் கிருஷ்ணனையே பார்த்தனர். அவன் உள்ளே நுழைந்த கணம் முதல் அவனையன்றி எவர்மேலும் எவர் விழியும் நிலைக்கவில்லை. அவன் தன்னைச்சுற்றி எவருமில்லாததுபோல இயல்பாக இருந்தான். இளமையிலேயே நீரலைகளில் மீன் என பிறர்நோக்குகளில் நீந்தி வாழப்பழகியவன்.

கிருஷ்ணன் தன் பீடத்தில் சென்று அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டான். அவையில் எவரும் அப்படி அமர்வதில்லை என்பதை பூரிசிரவஸ் அப்போதுதான் உணர்ந்தான். அரியணை அமர்பவர்கள் இருகைகளையும் சிம்மத்தலைமேல் வைத்து நிமிர்ந்து அமர்வார்கள். அமைச்சர்கள் ஒருபக்கம் சற்றே சாய்ந்து தலைசரித்து அமர்வார்கள். அது கூர்ந்து கேட்பதான தோற்றத்தை அளிக்கும். குலத்தலைவர்கள் மடிமேல் கைகளை வைத்துக்கொள்வார்கள். எவரும் கைகட்டி அமர்வதில்லை. அது ஒதுங்கிக்கொள்வதுபோல தோன்றவைக்கிறது. எதுநிகழ்ந்தாலும் பேசப்போவதில்லை என்ற அறிவிப்பு போலிருக்கிறது. அவன் ஏன் அப்படி செய்கிறான் என்று பூரிசிரவஸ்ஸுக்கு புரியவில்லை. அவன் இயல்பா அது? இல்லை இந்த அவைக்காக அப்படி செய்கிறானா?

அவன் திரும்பி நோக்கினான். துரியோதனன் எப்போதும் எந்தப்பீடத்திலும் அரியணையில் என்பதுபோலவே அமர்பவன். எனவே அரியணைக்கு நிகரான பெரிய பீடமே அவனுக்கு போடப்படும். ஆனால் கர்ணனும் எந்தச்சிறிய பீடத்திலும் அரியணையில் போல்தான் அமர்கிறான் என்பதை அப்போது உணர்ந்து வியப்புடன் மீண்டும் பார்த்தான். அந்த அவையே தன் முன் சொல்கேட்க நிரைவகுத்திருப்பது என்னும் தோரணையில் அவன் செருக்கி நிமிர்ந்த முகத்துடன் நேரான தோள்களுடன் இரு கைகளையும் விரித்து கைப்பிடி மேல் வைத்து கால்மேல் காலிட்டு அமர்ந்திருந்தான்.

கரிய தோள்வளைவு இரும்புப்பரப்பென மின்னியது. அதில் கூந்தல்சுருள்கள் விழுந்துகிடந்தன. மெழுகிட்டு முறுக்கிய கூரிய மீசையில் இடக்கை நெருடிக்கொண்டிருக்க விழிகள் சற்றே சரிந்து தன்னுள் ஆழ்ந்தவன் போல தெரிந்தான். அவன் விழிகள் பெரியவை என்பதனால் அந்தத் தோற்றம் ஏற்படுகிறது என்று பூரிசிரவஸ் எண்ணினான். அவனும் கிருஷ்ணனைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை உடலில் இருந்தே உய்த்துணர முடிந்தது. எங்கோ ஓர் ஆழத்தில் கர்ணனுக்கு கிருஷ்ணன் அன்றி எவருமே ஒரு பொருட்டல்ல என்று தோன்றியது.

முரசுகள் முழங்கின. கொம்புகள் பிளிறி இணைந்துகொண்டன. கனகர் ஓடிவந்து கையசைத்தார். பீஷ்மர் துரோணர் கிருபர் தவிர்த்து அவையினர் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்தொலி எழுப்பினர். மங்கல இசைக்குழு முன்னால் வந்து வலப்பக்கமாக செல்ல வேதியர் வந்து நீர்தெளித்து அவையை வாழ்த்தி இடப்பக்கமாக சென்றனர். அணிப்பரத்தையர் முன்னால் வந்து மலரிட்டு நீட்டிய பாதை வழியாக திருதராஷ்டிரர் ஓங்கிய கரிய உடலுடன் சற்றே சரித்த தலையுடன் மெல்ல நடந்து வந்தார். அவரது கைகளைப் பற்றியபடி இடப்பக்கம் இளைஞனாகிய சஞ்சயன் வந்தான். அவருக்கு வலப்பக்கம் சௌனகர் வந்தார்.

விதுரர் அவரை எதிர்கொண்டு தலைவணங்கினார். அவர் முகத்தைச்சுளித்து ஏதோ சொன்னார். திரும்பி தன்னை வாழ்த்திய அவையை இருகைகூப்பி வணங்கினார். அது முறைமைச்செயல் போலிருக்கவில்லை. கூப்பிய கைகள் நடுங்க அப்படியே சற்றுநேரம் நின்றிருந்தார். வாழ்த்தொலி மேலும் எழுந்து உச்சம்கொண்டு மெல்ல அவிந்தது. அவை அவரை நோக்கி திகைத்தது போல அமைதியாக நின்றது. விதுரர் அவர் தோள் தொட்டு அழைக்க அவர் எண்ணம் கலைந்து தலையசைத்தபடி மெல்ல நடந்து வந்து பீஷ்மரை அணுகி குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினார். பீஷ்மர் எழுந்து பெருமூச்சுடன் அவரை தலைதொட்டு வாழ்த்தினார். துரோணரையும் கிருபரையும் வணங்கிவிட்டு திருதராஷ்டிரர் மேடை மேலேறி அரியணையில் அமர்ந்தார்.

பூரிசிரவஸ் பெருவியப்புடன் அவரது உடலை நோக்கிக்கொண்டிருந்தான். வேர்புடைத்து கிளைதிமிறி வானுயர்ந்து நின்றிருக்கும் தொன்மையான கருவேங்கை மரம்போலிருந்தார். நிகரற்ற பேருடல் என்று அவரைப்பற்றி சூதர்கள் பாடுவதை எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு எலும்பும் ஒவ்வொரு தசையும் முழுமைகொண்டிருந்தது. தெய்வங்கள் மனித உடலை படைப்பதில் இனிமேல் ஆர்வமிழந்துவிடக்கூடும் என நினைத்ததும் உள்ளக்கிளர்ச்சியால் முகம் சிவந்தான். அரியணையில் அமர்ந்து இரு கைகளையும் சிம்மங்கள் மேல் வைத்தார். அங்கு உண்மையான சிம்மங்கள் இருந்தால் அவை அஞ்சியிருக்கும். மிகப்பெரிய கைகள். ஐந்து தலைகொண்ட கருநாகங்கள்.

திருதராஷ்டிரர் தலையை சற்று திருப்பியபடி ஏதோ கேட்க சஞ்சயன் அதற்கு மறுமொழி சொன்னான். அவன் திரும்பி கிருஷ்ணனை நோக்கினான். அவனும் அகஎழுச்சியுடன் அஸ்தினபுரியின் மதவேழத்தை நோக்குவதைக் கண்டான். அவர் காடேகியபின் மெலிந்திருக்கலாம் என்று அரண்மனையில் பேச்சிருந்தது. இரவில் அரண்மனைக்கு வந்தவர் எவரையும் சந்திக்க விழையவில்லை என்றபோது நோயுற்றிருக்கலாமென்றும் சொல்லப்பட்டது. ஆனால் காடு அவரை மேலும் உரம் கொண்டவராக்கியிருந்தது. அதை அவையினரெல்லாம் உணர்ந்தது அவர்களின் விழிகளில் தெரிந்தது.

இரண்டு வருடங்களுக்கொருமுறை போர்யானைகளை ஆறுமாதம் காட்டுவாழ்க்கைக்கு விட்டுவிடுவார்கள் என்று அவன் கேட்டிருந்தான். நோயுற்ற யானையை குணப்படுத்தியபின் ஓராண்டு காட்டுக்கு அனுப்புவார்கள். காட்டில் அவை அன்னைமடியில் பாலுண்டு வாழும் சேய்களென இருக்கும். உடல்நலம் மீண்டு கருங்குன்றுகளென ஆகும். மீண்டும் பிடிக்கச்செல்லும்போது அங்கிருப்பது நகரையும் மானுடரையும் முற்றிலும் மறந்த காட்டுயானையாக இருக்கும். அவற்றை பிடித்துக்கொண்டுவந்து சுவையான உணவுகள் வழியாக மீண்டும் நகரத்துயானையாக்குவார்கள்.

அவை முறைமைகள் நடந்தன. வைதிகர் திருதராஷ்டிரரின் வெண்குடையையும் செங்கோலையும் கங்கைநீரூற்றி மஞ்சளரிசியிட்டு வாழ்த்தினர். ஐவகை நிலங்களைச்சேர்ந்த ஏழு குடித்தலைவர்கள் சேர்ந்து செங்கோலை மலரிட்டு வணங்கி எடுத்து திருதராஷ்டிரர் கையில் அளித்தனர். அவர் அதை வாங்கிகொண்டதும் வாழ்த்தொலிகள் எழுந்து அவையின் காற்றுவெளியில் செறிந்தடர்ந்து நின்றன. ஆனால் திருதராஷ்டிரர் மணிமுடி சூடவில்லை. முறைமைப்படி அவர் முடிசூடும் அரசர் அல்ல என்று பூரிசிரவஸ் அறிந்திருந்தான். ஹஸ்தியின் மணிமுடியைப்பற்றி இளமையிலேயே கேட்ட கதைகளை எண்ணிக்கொண்டான். பாரதவர்ஷத்தின் நிகரற்ற வைரங்கள் அனைத்துமே அந்த ஒரு முடியில்தான் உள்ளன என்று சூதர்கள் பாடுவதுண்டு.

செங்கோல் ஏந்தி அமர்ந்திருந்த திருதராஷ்டிரர் மேல் பீஷ்மர் மலர்களையும் மஞ்சளரிசியையும் மும்முறை தூவி வாழ்த்தினார். துரோணரும் கிருபரும் வாழ்த்தியபின் அவை “வெற்றியும் புகழும் விழுச்செல்வமும் விளைக!” என்று வாழ்த்தி அரிமலர் தூவியது. பொன்மழை மெல்ல ஓய்ந்ததும் அவைக்களமெங்கும் கொன்றைமலர் உதிர்ந்த காடுபோல தெரிந்தது. சௌனகர் எழுந்து கையசைக்க சிற்றமைச்சர் பிரமோதர் ஓடிச்சென்று கன்றுத்தோலால் ஆன பெரிய அடுக்கேடுடன் வந்தார். அது அரசச்செய்திகளைப்பற்றிய அழியாநூல் என்று அவன் புரிந்துகொண்டான். பெரிய அரசுகளில் அத்தகைய நூல்களில் ஒவ்வொருநாளும் செய்திகள் சுருக்கமாக பதிவுசெய்யப்படும் என்றும் வருடத்திற்கொருமுறை அந்நூல்களின் சுருக்கம் ஒரு செப்பேடாக பதிவுசெய்யப்பட்டு இன்னொரு நூலில் கோக்கப்படும் என்றும் அவன் கேட்டிருந்தான்.

பிரமோதர் எடுத்துக்கொடுக்க சௌனகர் செய்திகளை வாசித்தார். அது ஒரு வெறும் சடங்குதான் என்பது தெரிந்தது. அவர் சொல்வது முடிவதற்குள் திருதராஷ்டிரர் நன்று என்று கையசைத்தார். திருதராஷ்டிரர் முந்தைய அவையில் கேட்ட செய்தியிலிருந்து அன்றையநாள் வரை வாசிக்கப்பட்டதும் அவர் கையசைக்க பிரமோதர் அவரிடம் தந்தத்தால் ஆன முத்திரை ஒன்றை கொடுத்தார். அதை உருகிய அரக்கில் முக்கி அந்தத் தோலேட்டில் அழுத்தியபின் கைகூப்பி முன்னோர்களை வணங்கினார். முரசு ஓம் ஓம் ஓம் என முழங்கியது. சௌனகர் அந்த நூலை தூக்கி அவைக்குக் காட்டிவிட்டு தன் இருக்கையில் சென்றமர்ந்தார்.

முரசுகள் முழங்கி அமைந்ததும் நிமித்திகன் தன் வெள்ளிக்கோலுடன் அவைமுன் எழுந்து நின்று “ஓம் ஓம் ஓம்” என்று விழிமூடிச் சொல்லி குருகுலத்து குலவரிசையை சொன்னான் “அனைத்துமாக விஷ்ணு இருந்தார். அவரே பிரம்மன் என தோன்றினார். அத்ரியானார். சந்திரனாக பிறந்தார். புதன் என மலர்ந்தார். சந்திரகுலத்தோன்றல் புரூரவஸ் விழியறியும் விண்ணுருவோனே என அறிந்த என் மூதாதையருக்கு வணக்கம். அவர்கள் நாவில் எழுந்த கலைமகளுக்கு வணக்கம். அவர்கள்தொட்டு எழுதும் எழுத்தாணியின் தலைவனாகிய ஆனைமுகத்தவனுக்கு வணக்கம். அன்னையருக்கு வணக்கம்.” அவன் குரல் அவைமுழுக்க பரவியது. “ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன் என நீளும் குலமூத்தார் மலைநிரை வந்து நின்ற ஹஸ்தி என்னும் பொன்முடியில் உதித்த சூரியனுக்கு வணக்கம்.”

“ஹஸ்தியின் மைந்தன் அஜமீடனின் வழிவந்த ருக்‌ஷன், சம்வரணன் ஆகியோர் வாழ்க! அவர்களின் சொல் எழுந்து அனலென பெருகியதே மாமன்னர் குரு என்க!. குருகுலம் என்றும் வாழ்க! என் குலம் காக்கும் செங்கோலுடன் அமைக!” ”ஓம் ஓம் ஓம்” என்று அவை அதை ஏற்று ஒலித்தது. “குருவின் மைந்தர்நிரை வாழ்க. ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்‌ஷன், பீமன் என மாமன்னர்கள் அலையென எழுந்த கடல் வாழ்க. பிரதீபரை சந்தனுவை விசித்திரவீரியரை வணங்குவோம். அவர்கள் அஸ்தினபுரியெனும் எரிகுளத்தில் எழுந்த தழல்கள். அவர்களுக்கு அவியாகுக எங்கள் புகழ்மொழிகள்.” அவையின் ஓங்காரத்தை மீறி எழுந்தது அவன் குரல். “விசித்திரவீரியரின் மைந்தர் அரியணை அமர்ந்த வேழம் திருதராஷ்டிரரின் புகழ் என்றும் வாழ்க! அவர் நெஞ்சில் என்றும் வாழும் மாமன்னர் பாண்டுவின் பெயர் வாழ்க! அஸ்தினபுரியின் கோலும் முடியும் கொடியும் குடையும் வாழ்க! ஓம் அவ்வாறே ஆகுக!”

அவையை நோக்கி நிமித்திகன் சொன்னான் “சான்றோரே, இன்று நாம் வாழ்த்தப்பட்டவர்களானோம். நம் மூதாதையர் நம்மீது கருணைகொண்டிருக்கிறார்கள். நம் குலதெய்வங்கள் நமக்கு அருள்புரிகின்றன. ஐந்துபருப்பெருக்காகச் சூழ்ந்திருக்கும் பிரம்மம் நம்மை நோக்கி புன்னகைசெய்கிறது.” தலைவணங்கி “அஸ்தினபுரியின் வரலாற்றில் இந்த மாதம் போல உவகை நிறைந்த மாதம் நிகழ்ந்ததில்லை. மாமன்னரின் குருதியில் பிறந்த நூற்றுவரும் இந்த ஒருமாதத்திலேயே மணம் கொண்டுவிட்டனர். மாமன்னரின் மைந்தரும் பட்டத்து இளவரசருமான துரியோதனர் காசிநாட்டு இளவரசி பானுமதியை மணந்தார். இளையவர் துச்சாதனர் காசி நாட்டு இளவரசி அசலையை மணந்தார்” என்றான்.

“துச்சகர், துச்சலர், ஜலகந்தர், சமர், சகர், விந்தர், அனுவிந்தர், துர்தர்ஷர், சுபாகு, துஷ்பிரதர்ஷணர், துர்மர்ஷணர், துர்முகர், துர்கர்ணர், கர்ணர், விகர்ணர் ஆகியோர் மணந்த காந்தாரத்து இளவரசியரான ஸ்வாதா, துஷ்டி, புஷ்டி, ஸ்வஸ்தி, ஸ்வாகா, காமிகை, காளிகை, ஸதி, க்ரியை, சித்தை, சாந்தி, மேதா, பிரீதி, தத்ரி, மித்யா ஆகியவர்களை இந்த அவையினர் வாழ்த்தவேண்டுமென்று கோருகிறேன்.” அவையினர் “பதினாறு பேறுகளுக்குரியவராகுக!” என்று கூறி கைதூக்கி வாழ்த்த இளவரசிகள் கைகூப்பியபடி அவைக்கு முன் வந்து நின்றனர்.

“இளையகௌரவர்கள் சலன், சத்வர், சுலோசனர், சித்ரர், உபசித்ரர், சித்ராக்‌ஷர், சாருசித்ரர் ஆகியோரால் மணக்கப்பட்ட கோசலநாட்டின் காமிகை, கௌசிகை, கேதுமதி, வசுதை, பத்ரை, சிம்ஹிகை, சுகிர்தை ஆகிய இளவரசிகளை அவை வாழ்த்தட்டும். சராசனனர், துர்மதர், துர்விகாகர், விகடானனர், விவித்ஸு, ஊர்ணநாபர், சுநாபர், நந்தர், உபநந்தர், சித்ரபாணர், சித்ரவர்மர், சுவர்மர் ஆகியோர் மணந்த அவந்தி நாட்டு இளவரசிகளான அபயை, கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை, கிருதை, மாயை, வரதை, சிவை, முத்ரை, வித்யை, சித்ரை ஆகியோரை அவை வாழ்த்தட்டும்.” கைதூக்கி வாழ்த்திய அவையில் அந்த இளவரசியரின் நாடுகளிலிருந்து வந்த அரசகுடியினரும் தூதர்களும் இருந்தனர் என்று பூரிசிரவஸ் கண்டான். அவர்களின் முகங்களை தெளிவாக அடையாளம் காணமுடிந்தது.

”இளவரசர்கள் துர்விமோசர், அயோபாகு, மகாபாகு, சித்ராங்கர், சித்ரகுண்டலர், பீமவேகர், பீமபலர், வாலகி, பலவர்தனர், உக்ராயுதர், சுஷேணர், குந்ததாரர் மணந்த மகாநிஷாதகுலத்து இளவரசியரான பூஜ்யை, ஸுரை, விமலை, நிர்மலை, நவ்யை, விஸ்வகை, பாரதி, பாக்யை, பாமினி, ஜடிலை, சந்திரிகை, சந்திரகலை ஆகியோர் இங்கு அவைபுகுக! இளவரசர்கள் மகாதரரும் சித்ராயுதரும் நிஷங்கியும் பாசியும் விருந்தாரகரும் மணந்த வேசரநாட்டு இளவரசியரான குமுதை, கௌமாரி, கௌரி, ரம்பை, ஜயந்தி ஆகியோர் அவையினரின் அருள் பெறுக!”

ஒவ்வொரு இளவரசியாக வந்து அவைமுன் வணங்கி நின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அழகியர் என்று தோன்றியது. ஓர் அழகியை இன்னொருத்தியுடன் ஒப்பிட்டுக்கொள்வதுதான் ஆண்களின் உள்ளம் என அவன் எண்ணியிருந்தான். ஆனால் அதெல்லாம் ஓரிரு அழகிகள் முன்னால் வரும்போது மட்டுமே என்று தோன்றியது. நிரைநிரையென அவர்கள் வரும்போது ஒட்டுமொத்தமாக அங்கே அழகு மட்டுமே நிறைந்திருந்தது. அவைநிறைத்த அந்த அழகின் ஒளியில் ஒவ்வொருத்தியும் மேலும் அழகியானாள். மணிகள் கோத்த மாலையின் ஒவ்வொரு மணியும் அனைத்துமணிகளின் ஒளியை பெறுவதைப்போல. ஆம், அழகிய வரி. அதை ஒரு சூதன் பாட உறுதியான வாய்ப்புள்ளது. அவன் அவையை நோக்கியபோது அத்தனை முகங்களும் மலர்ந்திருப்பதை கண்டான். எவரும் எந்தப்பெண்ணையும் குறிப்பிட்டு நோக்கவில்லை. பெண்களென பூத்த அழகை மட்டும் விழிவிரித்து அறிந்துகொண்டிருந்தனர்.

“அனூதரர், திருதசந்தர், ஜராசந்தர், சத்யசந்தர், சதாசுவாக், உக்ரசிரவஸ் ஆகியோரின் துணைவிகளான ஒட்டர நாட்டுக் கன்னியர் விஸ்வை, பத்ரை, கீர்த்திமதி, பவானி, வில்வபத்ரிகை, மாதவி ஆகியோரை இந்த அவை வாழ்த்தட்டும். மூஷிகநாட்டு இளவரசியர் கமலை, ருத்ராணி, மங்கலை, விமலை, பாடலை, உல்பலாக்‌ஷி, விபுலை ஆகியோர் திருடவர்மர், திருதக்ஷத்ரர், சோமகீர்த்தி எனும் கௌரவ இளவரசர்களை மணந்து அவைபுகுந்துள்ளனர். அவர்கள் மங்கலம் கொள்க! இளவரசர்கள் உக்ரசேனன், சேனானி, துஷ்பராஜயன், அபராஜிதன், குண்டசாயி, விசாலாக்ஷன் ஆகியோர் மணந்த காமரூபத்து இளவரசியர் ஏகவீரை, சந்திரிகை, ரமணை, நந்தினி, ருக்மிணி, அபயை, மாண்டவி, சண்டிகை ஆகியோர் அவை பொலிக!”

“துராதாரர், திருதஹஸ்தர், சுஹஸ்தர், வாதவேகர், சுவர்ச்சஸ், ஆதித்யகேது, பகுயாசி ஆகியோர் மணந்த மச்சநாட்டு இளவரசியர் சிம்ஹிகி, தாரை, புஷ்டி, அனங்கை, கலை, ஊர்வசி, அமிர்தை ஆகியோர் வருக! நாகதத்தன், உக்ரசாயி, கவசீ, கிருதனன், கண்டி, பீமவிக்ரமன், தனுர்த்தரன், வீரபாகு என்னும் வீரமைந்தரால் மணக்கப்பட்ட ஔஷதி, இந்திராணி, பிரபை, அருந்ததி, சக்தி, திருதி, நிதி, காயத்ரி என்னும் திரிகர்த்தர்குலத்து இளவரசியர் வாழ்த்துபெறுக! அலோலுபர், அபயர், திருதகர்மர், திருதரதாசிரயர், அனாதிருஷ்யர், குண்டபேதி, விராவீ, சித்ரகுண்டலர் ஆகியோர் மணந்த உத்கலத்தின் இளவரசியர் திதி, சுரசை, பானு, சந்திரை, யாமி, லம்பை, சுரபி, தாம்ரை ஆகியோரை வாழ்த்துக இந்த அவை!”

”இளைய கௌரவர்கள் பிரமதர், அப்ரமாதி, தீர்க்கரோமர், சுவீரியவான் மணந்த விதேகநாட்டு இளவரசியர் துஷ்டி, வபுஸ், சாந்தி, ஸித்தி ஆகியோர் வாழ்த்துபெறுக! சிறியவர்களான தீர்க்கபாகு, சுவர்மா, காஞ்சனதுவஜர், குண்டாசி, விரஜஸ் ஆகியோரின் தேவியரான மல்லநாட்டு இளவரசியர் தேவமித்ரை, தேவபிரபை, தேவகாந்தி, தேவமாயை, தேவகி ஆகியோர் அவைக்கு வந்து வாழ்த்துபெறுக!” நிமித்திகன் கோலைச் சுழற்றித்தாழ்த்தி “நூற்றுவர் மணந்த நூறு இளவரசியரால் பொலிக இந்த அவை!” என்றான்.

விதுரர் வணங்கி “அவையோரே, தெய்வங்கள் கனியும் தருணம் இது. வான்திகழும் அன்னையர் அருள் சுரக்கும் நேரம். நாம் விழி நிறைந்தோம். நம் அகம் நிறைவதாக!” என்றார். “இந்த அவையில் குருகுலத்து இளவரசியரை வாழ்த்த யாதவப்பேரரசி அவைக்கு வந்திருப்பதை அன்னையரின் அருள், நமது பேறு என்றே சொல்லவேண்டும். அரியணை அமர்ந்திருக்கும் குருகுலத்துப் பேரரசரின் கோல் அன்னையின் கால்நோக்கி தாழ்கிறது” என்றார். அவையிலிருந்து வாழ்த்தொலிகள் எழுந்தன. முரசுகளும் கொம்புகளும் இணைந்து பேரொலி எழுப்ப திருதராஷ்டிரர் எழுந்து சஞ்சயன் கைபற்றி வலக்கையில் செங்கோலுடன் பீடம் விட்டிறங்கிச்சென்றார். வெண்குடை ஏந்திய இருவீரர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர்.

குந்தி அமர்ந்திருந்த வெண்திரைக்கு முன் வந்ததும் திருதராஷ்டிரர் நின்று தன் கோலை மும்முறை நிலம் நோக்கித்தாழ்த்தி வணங்கினார். திரைக்கு அப்பால் குந்தி எழுந்து நிற்பதை நிழலுருவாக காணமுடிந்தது. அங்கிருந்து சேடியரின் குரவையொலி எழுந்தது. தலைவணங்கியபின் திருதராஷ்டிரர் பின்னால் விலகி மீண்டும் அரியணைக்கு வந்தார். குலத்தலைவர் எழுவர் சென்று அதேபோல தங்கள் கோல்களை மும்முறை தாழ்த்தி வணங்கினர். மங்கல இசை ஓய்ந்ததும் விதுரர் மீண்டும் எழுந்து “யாதவப்பேரரசி தன் கைகளால் மணமக்களை வாழ்த்தவேண்டுமென இந்த அவை கோருகிறது. மணமைந்தர்களுக்கு நீள்வாழ்வும் மணமகள்களுக்கு அழியாத மங்கலமும் அரசியின் அருளால் அமைவதாக!” என்றார். ஓம் ஓம் ஓம் என்று அவை முழக்கமிட்டது.

துரியோதனன் இருக்கையில் கையூன்றி எழுந்து சென்று பானுமதியின் அருகே நின்றான். துச்சலனால் தூக்கி நிறுத்தப்பட்ட துச்சாதனன் அவன் தோள்பற்றி நடந்து அசலையின் அருகே நின்றான். கௌரவர் ஒவ்வொருவரும் தங்கள் இளவரசியரின் அருகே நின்றனர். பானுமதியும் துரியோதனனும் பட்டுத்திரைக்குள் சென்று குந்தியைப் பணிந்து மறுபக்கம் வெளிவந்தனர். பானுமதியின் வகிட்டில் குங்குமமும் நெற்றியில் மஞ்சளும் இட்டு குந்தி வாழ்த்தியிருந்தாள். துரியோதனனின் தலையில் மஞ்சளரிசியிட்டு வாழ்த்தியது தெரிந்தது. கௌரவர் தங்கள் துணைவியருடன் உள்ளே சென்று வெளிவந்தனர்.

அவை வாழ்த்திக்கொண்டே இருந்தது. இளவரசியர் அவையை வணங்கியபின் நிரையாக நின்றனர். குண்டாசி அழுதுகொண்டே காஞ்சனத்துவஜனின் தோள்பற்றி வருவதை பூரிசிரவஸ் கண்டான். அவன் கள்மயக்கில் இருந்தான் என்று தோன்றியது. ஆனால் அழுகை உண்மையாகவும் இருந்தது. களிமகன்களின் அனைத்து முகஅசைவுகளும் கள்ளுண்டவைபோலவே மாறிவிடுகின்றன. கௌரவர் அனைவரும் தங்கள் துணைவியருடன் சென்று பீஷ்மரையும் துரோணரையும் கிருபரையும் வணங்கி வந்து நின்றனர். அவர்களின் நெற்றியிலும் குழலிலும் இருந்த மங்கலக் குறிகளுடன் அனைவருமே இனிய சிறுவர்களாக ஆகிவிட்டதாத் தோன்றியது.

முழவுகளும் கொம்புகளும் முழங்க அவையினர் வாழ்த்தி மலரும் மஞ்சளரிசியும் பொழிந்தனர். நெடுநேரம் ஒரு கனவில் இருந்துகொண்டிருப்பதைப்போல உணர்ந்து பூரிசிரவஸ் அசைந்து அமர்ந்தான். திரும்பி கர்ணனை நோக்கினான். அவன் முகம் மலர்ந்து கௌரவர்களை நோக்கிக்கொண்டிருந்தான். விண்ணில் ஒரு பீடத்தில் அமர்ந்து கீழே பார்ப்பவன் போல தெரிந்தான். பூரிசிரவஸ் திரும்பி கிருஷ்ணனை நோக்கியதும் நெஞ்சு படபடக்க “என்ன இது?” என்ற சொல்லாக தன் அகத்தை அறிந்தான். மீண்டும் நோக்கினான். அதிலிருந்த உணர்ச்சி என்ன என்பதை தெரிந்துகொள்ள முடியவில்லை.

மங்கல இசை நடைமாறியது. இளவரசியர் ஒவ்வொருவராக மறுவாயிலுக்குள் சென்று மறையலாயினர். அவன் மீண்டும் கிருஷ்ணன் விழிகளை நோக்கினான். சற்று முன் அவன் கண்டது உண்மையா என்ற திகைப்பு ஏற்பட்டது. மென்முறுவலுடன் கிருஷ்ணன் சென்றுமறையும் பெண்களை நோக்கிக்கொண்டிருந்தான். இளவரசியர் அனைவரும் சென்றதும் கௌரவர் தங்கள் இருக்கைக்கு திரும்பினர். அவன் மீண்டும் கிருஷ்ணனை பார்த்தான். இயல்பான பார்வை, இனிய மென்னகை விரிந்த இதழ்கள். ஆனால் வந்தது முதல் கைகளைக் கட்டியபடியேதான் இருக்கிறான் என்பதை உணர்ந்தான்.

விதுரர் எழுந்ததும் அவை மீண்டும் அமைதிகொண்டது. “அவையீரே, நூற்றுவரின் தங்கையும் அஸ்தினபுரியின் இளவரசியுமான துச்சளை தேவியின் மணநிகழ்வு வரும் முழுநிலவுநாளன்று நிகழவிருக்கிறது. வேதப்புகைபடிந்து தூய்மைகொண்ட நிலம் ஏழுசிந்து. அதன் கொடிவழியோ தொன்மையானது. மூன்று ராஜசூயங்கள் செய்தவர் அதன் மன்னராகிய பிருஹத்காயர். அவரது மைந்தராகிய ஜயத்ரதரோ பாரதவர்ஷத்தின் பெருவீரர்களில் ஒருவர். அவர் நம் இளவரசியை மணக்கும் செய்தி அறிந்து நாம் மகிழ்ந்திருக்கிறோம்.”

“அந்த மணநிகழ்வு குருகுலத்தின் நற்தருணங்களில் ஒன்று. அதில் பங்கெடுத்து இளவரசியை வாழ்த்தும்பொருட்டே யாதவப்பேரரசி மீண்டும் நகர்புகுந்துள்ளார். அவரது கருணைக்கு முன் குருகுலம் தலைவணங்குகிறது. யாதவப்பேரரசியின் மருகனாக துவாரகையின் அரசர் இளைய யாதவர் கிருஷ்ணர் இங்கு எழுந்தருளியிருப்பதை அஸ்தினபுரி பெருமிதத்துடன் ஏற்கிறது. சிந்துநாடும் துவாரகையும் எதிரிகள் என எண்ணுபவர்களுக்கான விடையே இளையயாதவரின் இவ்வருகை. அவரை அஸ்தினபுரி பேரரசருக்குரிய முறைமையை அளித்து வணங்குகிறது. இந்த அவையில் விஸ்வாமித்திரருக்கு முன்பு அளிக்கப்பட்ட முறைமை இது என்றறிக!”

அவையினரின் வாழ்த்தொலி அடங்குவதற்காக காத்துநின்றபின் விதுரர் தொடர்ந்தார். “அஸ்தினபுரியின் பெருமதிப்பை அறிவிக்கும் முகமாக யாதவ அரசரை குருகுலத்தில் ஒருவராக ஏற்கும் குருதிமுத்திரை கொண்ட கணையாழியை பேரரசர் அளிப்பார். அருள்க தொல்மூதாதையர்!” அவையின் வாழ்த்தொலி நடுவே கிருஷ்ணன் எழுந்து கைகூப்பி தலைவணங்கினான். சஞ்சயன் கைபற்றி நின்ற திருதராஷ்டிரர் தலையை அசைத்துக்கொண்டிருந்தார். கிருஷ்ணன் மேலேறிச்சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்க அவர் அவனை அள்ளி தன் மார்புடன் அணைத்துக்கொண்டார். பின்னர் நீட்டப்பட்ட தாலத்திலிருந்து குருதிநிறமான வைரம் பதிக்கப்பட்ட குருகுலத்தின் இலச்சினைக் கணையாழியை எடுத்து அவன் கைகளில் அணிவித்தார். முரசுகளும் கொம்புகளும் அதிர்ந்தன. வாழ்த்தொலிகளும் குரவையொலிகளும் சூழ்ந்தன.

கிருஷ்ணன் தலைவணங்கியபின் திரும்பி மீண்டும் அவையை மும்முறை வணங்கினான். துரியோதனன் எழுந்து சென்று கிருஷ்ணனை மார்புறத் தழுவிக்கொண்டான். அதன்பின் துச்சலன் தோளைப்பற்றியபடி துச்சாதனன் வர கிருஷ்ணன் அவனை நோக்கிச்சென்று தழுவிக்கொண்டான். கௌரவர் நூற்றுவரும் நிரையாக வந்து அவனைத் தழுவி வாழ்த்தினர். அவை வாழ்த்தொலி எழுப்பிக்கொண்டே இருந்தது. கிருஷ்ணன் விதுரரை வணங்கிவிட்டு அவை மேடையில் நின்றான்.

“ஹஸ்தியின் கொடிவழி சிறக்கட்டும். அஸ்தினபுரியின் கொடிசிறக்கட்டும். அதன் மணிமுடி ஒளிரட்டும்” என்றான். “ஓம் ஓம் ஓம்” என்றது அவை. “குருகுலத்து இளவரசியின் மணநிகழ்வு அஸ்தினபுரியின் வரலாற்றுத்தருணம். நூற்றைந்துபேரின் இளையோள் என எவருமில்லை இந்த பாரதவர்ஷத்தில். அவள் மணநிகழ்வில் உடன்பிறந்தார் அனைவரும் கலந்துகொண்டாகவேண்டுமென்பதே முறையாகும்” என அவன் சொன்னதும் அவையினர் முகம் மாறியது. “ஆகவே பாண்டவர் ஐவரும் நாளைமறுநாள் அஸ்தினபுரிக்கு வருவார்கள். பட்டத்து இளவரசர் யுதிஷ்டிரரும் இளையவர்கள் அர்ஜுனனும் சகதேவனும் மதுராவுக்கு நான்குநாட்களுக்கு முன்னரே வந்துவிட்டனர். இன்றுகாலை கிளம்பியிருக்கின்றனர். நாளை மாலை அவர்கள் அஸ்தினபுரிக்குள் நுழைவார்கள்.”

திகைத்து அமர்ந்திருந்த அவையை நோக்கி சௌனகர் கைதூக்கியதும் அவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். “அதற்கு மறுநாள் காம்பில்யத்திலிருந்து இளவரசர்கள் பீமசேனரும் நகுலனும் அஸ்தினபுரிக்குள் நுழைவார்கள். அவர்களுடன் அஸ்தினபுரியின் மூத்த பட்டத்து இளவரசி திரௌபதியும் நகர்நுழைவார்.” எதிர்பாராதபடி மொத்த அவையும் வாழ்த்தொலியெழுப்பி வெடித்தது. பின்னிருக்கைகளில் அமர்ந்த பலர் எழுந்து விட்டனர். “மணநிகழ்வுக்கு முந்தையநாளே திரௌபதி நகர்நுழைவது மறுநாள் குருகுலத்து இளவரசியின் மணநிகழ்வில் பங்குகொண்டு வாழ்த்தளிக்கவே. அனல்வடிவம் கொண்ட கொற்றவை என அன்னைவிறலியர் பாடும் இளவரசியின் வருகையால் இந்நகர் பொலிவுறுக!”

கிருஷ்ணன் சொன்ன இறுதிச்சொற்களை அவை கேட்கவே இல்லை. சுவர்களும் கூரைக்குவையும் அதிர அது கொந்தளித்துக்கொண்டிருந்தது. பூரிசிரவஸ் இருகைகளையும் கூட்டி மார்பில் வைத்தபடி அவைமேடையில் புன்னகையுடன் நின்ற கிருஷ்ணனை நோக்கிக்கொண்டிருந்தான்.

முந்தைய கட்டுரைஃபோர்டு ஃபவுண்டேஷனும் அமெரிக்காவும்
அடுத்த கட்டுரைபிச்சை- கடிதங்கள்