சிறியார்

jayakanthan

பொதுவாக இம்மாதிரி விவாதங்களுக்கு உடனடி எதிர்வினையாற்ற விரும்புவதில்லை. ஆனால் இந்தச்செய்தி ஆவணப்படுத்தப்படவேண்டும் என்பதனால் இதை எழுதுகிறேன்.

தீபா அவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. ஜெயகாந்தன் பொதுவாகவே எவரையும் வாசிக்கக்கூடியவர் அல்ல. அதிலும் சென்ற ஓராண்டுக்கும் மேலாக அவரால் எதையுமே வாசிக்கவோ நினைவில்கொள்ளவோ முடியாத நிலை இருந்தது. நான் அதை அப்போதே பதிவும் செய்திருக்கிறேன். நெருக்கமானவர்களையே அவரால் அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. சாதாரண சொந்தவேலைகளைக்கூட செய்துகொள்ளமுடியாத நிலை. அவரது நண்பர்களுக்கெல்லாம் இது தெரியும்

இந்நிலையில் குமுதம் இதழில் வந்துகொண்டிருக்கும் வைரமுத்துவின் கதைகளை வாசித்து அவர் பாராட்டி கையெழுத்துப்போட்டு கடிதம் எழுதினார் என்பது பெரிய மோசடி. அவரிடம் போய் ஒரு புகைப்படம் எடுத்து கையெழுத்தும்பெற்று வந்திருக்கிறார்கள் என்பதை எளிதில் ஊகிக்கமுடியும். அவர் இருந்த நிலை அத்தகையது.

இதன்மூலம் வைரமுத்து அடையும் லாபம் என்னவாக இருந்தாலும் எழுத்தாளன் செய்யக்கூடிய வேலை அல்ல இது. பாரதியின் சொற்களில் ஜேகேயின் உச்சரிப்பில் ‘சீச்சீ சிறியார் செய்கை’ என்றே சொல்லவேண்டியிருக்கிறது

ஜெ\

Deepalakshmi

ஃபேஸ்புக்கில் ஜெயகாந்தனின் மகள் தீபாலட்சுமி எழுதிய பதிவு

சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது: இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும்.

அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.

ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், ‘உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா’ என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே!அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று!

அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது.

செய்திகள் காம் செய்தி

முந்தைய கட்டுரைஜெகே கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜெகெ -சில கட்டுரைகள்