‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 84

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 3

அவைமுரசின் பேரொலி எழுந்ததும் அரண்மனைச்சுவர்கள் அன்னைப்பசுவின் உடலென சிலிர்த்துக்கொள்வதை பூரிசிரவஸ் கண்டான். இடியுருள்வதுபோல முரசு இயம்பி அமைந்ததும் ஒருகணம் ஆழ்ந்த அமைதி. பின் எங்கும் மானுடக்குரல்கள் முழக்கமாக எழுந்தன. பலநூறு குரல்கள் தாழ்ந்த ஒலியில் பேசியவை இணைந்த கார்வை கூரையை நிரப்பியது. முரசுக்குடத்திற்குள் நின்றிருப்பதுபோல செவிகளை மூடி சித்தம் மயங்கச்செய்தது. கனகர் அவனைக்கடந்து மூச்சிரைக்க ஓடி ஒரு கணம் நின்று “இளவரசே, அவை தொடங்கவிருக்கிறது. குலச்சபையினர் அமர்ந்துவிட்டனர்…” என்றார்.

“நான் அங்குதான் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “இன்று யாதவ அரசி அவைபுகுகிறார்கள். ஆலவட்டம் வெண்சாமரத்துடன் அரசமுறை வரவேற்பு. அறிந்திருப்பீர்கள். பேரரசரே எழுந்து வரவேற்பளிக்கிறார். முன்னர் இங்கே அவைக்குவந்த விஸ்வாமித்திர முனிவருக்கு மட்டுமே இத்தகைய வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.” பூரிசிரவஸ் ஒரு கணம் கழித்து “பேரரசரா?” என்றான். “ஆம், நேற்றிரவே அவரும் விப்ரரும் வந்துவிட்டனர். அவர்கள் வந்தால் நல்லது என்று காந்தார இளவரசர் விரும்பினார். முறைப்படி செய்தியனுப்பினால் போதும் என்றனர். நான் சொன்னேன், பீஷ்மபிதாமகரிடமிருந்து செய்தி வாங்கி அனுப்பலாம், அதை அரசர் மீறமாட்டார் என்று. செய்தி சென்றதுமே கிளம்பிவிட்டனர்.”

பூரிசிரவஸ் புன்னகைத்து “நன்று” என்றான். கனகர் “பொறுத்தருளவேண்டும்… பணிகள்” என்று சொல்லிக்கொண்டே ஓடினார். பூரிசிரவஸ் அதே புன்னகையுடன் இடைநாழியில் நடந்தான். கணிகரைப்போன்ற பல்லாயிரம் பேர் இணைந்து அந்தச்சதிவலையை முன்னெடுக்கிறார்கள். அரண்மனையை அலங்கரிப்பவர்களில் இருந்து வேதமோதி குந்தியை அவையேற்றுபவர்கள் வரை. என்ன நிகழ்கிறது என்றே அவர்கள் அறியமாட்டார்கள். அவர்களெல்லாம் வெறும் நாற்களக் கருக்கள். தானும் அப்படித்தானா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. தானறிந்ததுதானா உண்மையில் நிகழ்வது?

இடைநாழியே பூத்த காடு என வண்ணம் பொலிந்தது. தோரணங்களும் பாவட்டாக்களும் சுருள்திரைகளும் தூண்தழுவிச்சென்ற பட்டு உறைகளும் புதியவையாக அமைக்கப்பட்டிருந்தன. அஸ்தினபுரியின் அரண்மனையில் அலங்கரிப்பது என்பது பழைய அலங்காரங்களைக் களைந்து புதியனவற்றை அமைப்பது மட்டுமே என்ற மிகைச்சொல் சூதரிடையே உண்டு. அவன் வந்தபோதெல்லாம் விழவுக்காலமாக இருந்தமையால் உண்மையிலேயே அப்படித்தான் இருந்தது. தரையிலிட்ட மரவுரிக்கம்பளம் அப்போதுதான் செய்யப்பட்டு கொண்டுவந்தது போலிருந்தது. மரத்தூண்களும் மரச்சுவர்களும் புதிய மெழுகரக்கு பூசப்பட்டு மெருகிடப்பட்டு நீர்ப்பரப்பென பாவை காட்டின. கதவுக்குமிழ்களின் பித்தளை வளைவுகள் பொன்னாக மின்னின. சுவர்களில் சீராக கட்டப்பட்டிருந்த மயிற்பீலிகளின் மிரண்ட மான்விழிகள். துவளும் சாளரத்திரைச்சீலைகளின் தழல். எங்கும் ஒரு துளி அழுக்கில்லை. ஒரு சிறு பிசகில்லை. அங்கே நேற்றென ஏதும் எஞ்சியிருக்கவில்லை. அஸ்தினபுரி கங்கைப் பெரும்படகு போல காலத்தில் சென்றுகொண்டே இருந்தது.

ஆனால் இத்தகைய முற்றொழுங்குக்குப்பின் சவுக்குகள் உள்ளன. ஏனென்றால் மானுட மனம் ஒருங்கிணையும் தன்மை கொண்டது அல்ல. ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்களின் செயல்களின் தனிப்பாதையில் செல்லவிழைபவர்களே. அவர்களின் கைகளும் கண்களும் சித்தமும் ஆன்மாவும் கட்டுப்படுத்தப்படவேண்டும். ஒடித்து மடித்து ஒடுக்கி உருவாக்கப்படுவதே மானுட ஒழுங்கென்பது. முற்றொழுங்கு. ஆயினும் எங்கோ ஒரு பிழை இருக்கும். அப்பிழையில்தான் மானுடத்தின் உண்மையான வேட்கை இருக்கிறது. படைப்பதற்கும் வென்றுசெல்வதற்குமான துடிப்பு இருக்கிறது. எங்கோ ஒரு பிழை. அவன் அதைத்தேடியபடியே சென்றான். ஒவ்வொரு மடிப்பிலும் இடுக்கிலும் விழிதுழாவினான். சற்றுநேரத்திலேயே அவன் அலங்காரங்களை மறந்துவிட்டான். அவற்றின் மறைவிடங்களை மட்டுமே தேடிச்சென்றது அவன் சித்தம் எழுந்த விழி.

இடைநாழிகள், பெருங்கூடங்கள், காத்திருப்பறைகள், குதிரைமுற்றத்தை நோக்கித் திறக்கும் புறத்திண்ணைகள். எங்கும் மானுடத்திரள். வண்ணத்தலைப்பாகையும் கச்சையும் அணிந்த அரண்மனை ஊழியர்கள். பதறிக்கொண்டே இருக்கும் நடிப்புக்கு அடியில் எதையும் ஒருபொருட்டென எண்ணாத அரண்மனைப் பணியாளர். பட்டு மேலாடைசுற்றி குண்டலங்கள் அணிந்த ஏவல்நாயகங்கள். தலைப்பாகையில் வெள்ளி இலச்சினைகள் அணிந்து கச்சையில் தந்தப்பிடியிட்ட குறுவாட்கள் செருகிய நூற்றுவர்கள். பொன்னூல் சுற்றிய தலைப்பாகையும் மணிக்குண்டலங்களும் அணிந்த ஆயிரத்தவர். குடவயிறு அசைய வியர்வை சொட்ட மூச்சுவாங்கி நடந்த அமைச்சர்கள். பட்டாடையும் அணிகளும் மின்ன கூந்தலணிந்த பொற்சரங்கள் துவண்டு துவண்டசைய மேலாடை காற்றில் இறகெனப் பறக்க கழுத்தொசித்து கடைவிழிகளால் நோக்கி இளமுறுவல் காட்டியும் ஏளனச்சிரிப்பளித்தும் தங்களுக்குள் குறுமொழி பேசி கிளுகிளுத்தும் செல்லும் அணிப்பரத்தையர். எங்கிருந்தோ எங்கோ விரையும்போதும் ஓடும் நாகமென இடைநெளிந்து முலை நெளிந்து செல்லும் அரண்மனைச் சேடியர்.

சலித்து நின்று தன் மேலாடையை சீரமைப்பது போல சுற்றி நோக்கினான். ஒரு பிசிறுகூட இல்லாத முழுமை. அது மானுடருக்கு இயல்வதுதானா? அப்படியென்றால் இது உயிரற்ற வெளி. இங்கு தெய்வங்களுக்கு இடமில்லை. முன்நிகழாத கணத்தில், எதிர்நோக்கா திசையில் எழுந்தருள்பவை தெய்வங்கள். ஆகவே அவை பிழையில் வாழ்பவை. அவனைப்போல பிழைகளைத்தான் அவையும் நோக்கியிருக்கின்றன. நாகம் சுவர்விரிசலைத் தேடுவதுபோல மானுடத்தின் செயல்களை முத்தமிட்டு முத்தமிட்டு தவிக்கின்றன. அவன் பெருமூச்சுவிட்டான். அவைக்குச்செல்லாமல் அரண்மனையை சுற்றிவந்துவிட்டான். எங்கும் பிழை ஏதும் தெரியவில்லை.

அப்போதுதான் தெரிந்தது அங்கு அத்தனைபேர் பரபரத்துக்கொண்டிருப்பதே பிழைகளைக் கண்டடைந்து சீரமைப்பதற்காகத்தான் என்று. அனைத்துப்பணிகளும் முன்னரே முடிந்துவிட்டன. முந்தைய நாளிரவு முதல் ஒவ்வொருவரும் பிழைகளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கண்டடைந்து கண்டடைந்து சீரமைக்கிறார்கள். அதற்குள் பலநூறுமுறை ஒவ்வொன்றும் சீரமைக்கப்பட்டிருக்கும். ஒரு பிழையேனும் இருக்க வாய்ப்பில்லை. அந்த உணர்வு அவனுக்கு சோர்வளித்தது. ஏவலர் வினைவலர் காவலர் நூற்றுவர் ஆயிரத்தவர் அமைச்சர் என விழிகளை நோக்கிக்கொண்டே சென்றான். அத்தனைபேரும் இடுக்குகளையும் கரவிடங்களையும்தான் கண் துழாவிச்சென்றனர். விதுரரும் அதைத்தான் நோக்குவார். துரியோதனன்கூட அதைத்தான் நோக்குவார். அப்படியென்றால் அத்தனை அணிகளும் எவருக்காக? அவற்றின் அழகை எவரேனும் பார்க்கிறார்களா? அதில் உவகை கொண்ட ஒருவிழியேனும் தென்படுகிறதா?

எவருமில்லை என்பதை விரைவிலேயே கண்டுகொண்டான். குலத்தலைவர்கள் தங்களுக்குரிய முறைமை மதிப்பு அளிக்கப்படுகிறதா என்றும் அது பிறருக்கு எப்படி அளிக்கப்படுகிறது என்றும் மட்டுமே நோக்கினர். வணிகர்கள் தங்கள் ஆடையணிகளை பிறர் நோக்குவதை மட்டுமே உளம்கொண்டனர். ஒவ்வொருவரையும் முறைமைசெய்து அவையழைத்து அமரச்செய்த அலுவல்நாயகங்களும் சிற்றமைச்சர்களும் அனலை கையாள்பவர்களென எச்சரிக்கையுடன் இருந்தனர். அப்படியென்றால் இவை எவரும் நோக்கி மகிழ்வதற்கானவை அல்ல. இங்கு பேரவை கூடுகிறது என்ற செய்தியை அறிவிப்பவை மட்டும்தான். நெடுங்காலமாக இவை செய்யப்படுகின்றன. மீண்டும் மீண்டும் செம்மைசெய்யப்பட்டு பிழையற்றவையாக ஆக்கப்படுகின்றன. இவை செய்யப்படுவதே அந்த உச்சத்தை எட்டுவதற்காகத்தான்.

அவைக்குள் முரசுகளும் கொம்புகளும் ஒலித்தன. அவையினர் ஒவ்வொருவராக வந்து அமர்ந்துகொண்டிருந்தார்கள். அவன் பெருந்தூண் ஒன்றின் மறைவில் நின்று முற்றத்தைப்பார்த்தான். காந்தாரத்தின் ஈச்ச இலைக் கொடியுடன் சகுனியின் தேர் வந்து நின்றது. கனகர் அதை நோக்கி ஓடினார். நூற்றுவர்களும் ஆயிரத்தவர்களும் இருபக்கமும் நிரைவகுத்து நின்றனர். சகுனி தேரிலிருந்து இறங்க துச்சலனும் ஜலகந்தனும் விகர்ணனும் சமனும் அவரை நோக்கிச் சென்று தலைவணங்கி வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர். துரோணரும் கிருபரும் வந்திறங்க சுபாகுவும் துர்முகனும் சித்ரனும் உபசித்ரனும் அவர்களை வணங்கி உள்ளே அழைத்துச்சென்றனர்.

முதலில் அவன் அது உளமயக்கு என்றே எண்ணினான். இயல்பாகத் திரும்பிய அவன் முன் முட்டையோடென, பட்டென, தந்தமென தெளிந்த வெண்ணிறச்சுவரில் ஒரு ஐவிரல் கைக்கறை இருந்தது. விழிதிருப்பி அதை எவரேனும் பார்க்கிறார்களா என்று நோக்கினான். அனைவரும் விழிகளால் இண்டு இடுக்குகளைத்தான் நோக்கிச் சென்றனர். சற்று முன்பு வரை அவனும் அதைத்தான் செய்துகொண்டிருந்தான். பிழை என்பது மறைவான இடங்களில்தான் இருக்கும் என்ற நம்பிக்கை. தெரியுமிடத்தில் இருந்திருந்தால் அதை உடனே கண்டு சீரமைத்திருப்பார்கள் என்ற எண்ணம். அவன் அதை மீண்டும் பார்த்தான். வேண்டுமென்றே செய்ததுபோலத் தோன்றியது. ஓர் இளைஞனாக இருக்கவேண்டும். அங்கே அலங்கரிக்கும் வேலையை அவன் செய்துகொண்டிருந்திருப்பான். மூத்தவரும் மேலவரும் நோக்காத ஒரு கணத்தில் எண்ணைபடிந்த கையை ஓர் அழுத்து அழுத்திவிட்டுச் சென்றிருப்பான்.

அதை அவன் அழிக்க முயன்றிருக்கிறானா என்று பார்த்தான். இல்லை என்று தெரிந்தது. புன்னகையுடன் இன்னொரு எண்ணம் வந்தது. அங்கே தன்னை பிறர் கண்டுபிடிப்பதற்கான ஒரு அடையாளத்தையும் அவன் விட்டுச்சென்றிருப்பான். மிக அரிதான ஓர் அடையாளம். மறுகணமே அப்படி எண்ணக்கூடாது என்று தோன்றியது. அது எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் வழக்கமான பாதையில் செல்லும் உள்ளத்தை சிதறடிப்பது எளிதல்ல. சற்றுநேரத்திலேயே சித்தம் குவிந்து ஒரே வகையில் தேடத்தொடங்கிவிடுகிறது. அதை வெல்வதற்கான வழி என்பது வேறெவற்றிலாவது உள்ளத்தைத் திருப்பியபின் மீண்டுவருவது.

பீஷ்மபிதாமகர் ஹரிசேனருடன் தேரில்வந்திறங்கி சௌனகராலும் விதுரராலும் அழைத்துச்செல்லப்படுவதை கண்டான். அவர் மெலிந்து மேலும் உயரமானவர் போலிருந்தார். நீண்ட கால்களும் கைகளும் வெட்டுக்கிளி போல காற்றில் துழாவிச் சென்றன. நரைகுழல் தோல்வாரால் கட்டப்பட்டு முதுகில் தொங்கியது. எளிய மரவுரியாடை. மரவுரி மேலாடை. அணிகளேதும் இல்லை. தோலாலான இடைக்கச்சையில் இரும்புப்பிடியும் எருமைக்கொம்பு உறையும் கொண்ட எளிய குத்துவாள் மட்டும் இருந்தது. கர்ணன் உள்ளிருந்து வெளியே வந்து கனகரிடம் ஏதோ கேட்டு மீசையை முறுக்கி இருபக்கமும் நோக்கிவிட்டு உள்ளே சென்றான். திருதராஷ்டிரர் தவிர அனைவரும் வந்துவிட்டனர் என்று தோன்றியது. எவரும் அவனைப்பற்றி கேட்கவில்லை என எண்ணியதும் சற்று தனிமையுணர்வு கொண்டான்.

மீண்டும் விழிகளை ஓட்டினான். ஒரு குவளை சூடான இன்னீர் அருந்தவேண்டுமென எண்ணிக்கொண்டான். அங்கே ஒளிந்து நிற்பது அவன் எளிய மலைமகன் என்பதனாலா? அவைகளிலும் விருந்துகளிலும்தான் ஒருவனுக்குரிய உண்மையான இடமென்ன என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது. அவன் துரியோதனனுக்கு எத்தனை அணுக்கமானவன் என்றாலும் அவையில் அவனுக்கான முறைமைசார்ந்த இடம் இன்னும் உருவாகவில்லை. சிற்றரசர்களின் வரிசையிலேயே பின் நிரையில்தான் அவனுக்கு இடமளிக்கப்படும். அந்த இடத்தில் அமர அவனுடைய ஆணவம் மறுக்கிறது. ஆனால் வேறுவழியே இல்லை. ஆகவே முடிந்தவரை அதை தவிர்க்க நினைக்கிறது. அவன் செய்யப்போவதென்ன என்று அவனுக்கே நன்றாகத் தெரிந்தது. கிருஷ்ணன் அவைநுழையும்போது உருவாகும் சந்தடியில் கலந்து உள்ளே சென்று தனக்கான பீடத்தில் எவருமறியாது அமர்ந்திருப்பான். அவை கலையும்போது வந்தது தெரியாமல் திரும்புவான்.

அதை அவன் பார்த்துவிட்டான். அந்தக் கையடையாளத்திற்கு மிக அருகே தூணுக்கு அப்பால் அசைந்த பாவட்டாவின் அடியில் ஒரு கச்சைத்துணி கிடந்தது. அவிழ்ந்து விழுந்ததை அப்படியே தூக்கிப் போட்டதுபோல. அவன் பலமுறை அந்தப் பாவட்டாவை நோக்கியிருந்தான். ஆனால் அப்போது பாவட்டாவின் செம்பொன்னிறத்துடன் இணைந்திருந்தது அதன் செந்நிறம். அதைப்பார்த்தபின்னர் அதுமட்டும் விழிகளை உறுத்தியது. அதை எடுத்துப்போடலாமா என எண்ணி முன்னால் சென்றபின் தயங்கி நின்றான். எவரேனும் தன்னை நோக்குகிறார்களா என்று பார்த்தான். மீண்டும் அதை பார்த்துக்கொண்டு நின்றான்.

இளைஞனுடையது என்று தெளிவாகவே தெரிந்தது. காவல்பணியில் கீழ்மட்டத்தில் உள்ளவன். இன்னமும் உலோக இலச்சினை ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. நெடுநேரம் உழைத்திருக்கிறான். கச்சையைக் கழற்றி முகத்தைத் துடைத்துவிட்டு அப்படியே போட்டுவிட்டான். திட்டமிட்டே போட்டிருக்கிறான் என்பதில் ஐயமில்லை. ஓர் உள்ளுணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அவன் எங்கோ நின்று பார்த்துக்கொண்டிருக்கிறான். உடனே திரும்பினால் அவனை பார்க்க முடியாது. அவன் விழிகளால் மட்டுமே பார்ப்பான். ஒருவேளை ஆடியில். சுவர்மெழுகின் ஒளிப்பரப்பில். ஆனால் அவன் விழிகளை நோக்கினால் கண்டுபிடித்துவிடமுடியும்.

உள்ளிருந்து சராசனன் வெளியே ஓடிவந்தான். அவனைத் தொடர்ந்து சித்ராயுதன் வந்தான். சித்ராயுதன்தான் முதலில் அவனை கண்டான். “பால்ஹிகரே, இங்கிருக்கிறீர்களா? உங்களை மூத்தவர் பலமுறை கேட்டுவிட்டார்.” பூரிசிரவஸ் உள்ளம் படபடக்க “என்னையா?” என்றான். “ஆம், எங்கிருந்தாலும் அழைத்துவரச்சொன்னார். நாங்கள் உங்கள் அறைவரைக்கும்கூட சென்று பார்த்தோம். தந்தை அரியணைக்கு வரப்போகிறார்… வாருங்கள்.” சராசனன் “இங்கே என்ன செய்கிறீர்கள் பால்ஹிகரே? எங்கெல்லாம் தேடுவது?” என்றான். “நான் சற்று பிந்திவிட்டேன்” என்றான் பூரிசிரவஸ்.

”வாருங்கள்” என்று சராசனன் அவன் கையைப்பற்றி அழைத்துச்சென்றான். திரும்பும்போது பூரிசிரவஸ் அந்த இளம்காவலனின் கண்களை பார்த்துவிட்டான். அவன் உடனே பார்வையைத் திருப்பிக்கொண்டு தன் வேலை கைமாற்றினான். பார்த்ததுமே தெரிந்துவிட்டது அவன்தான் என்று. ஐயமே இல்லை. அவனுக்குத் தெரிந்துவிட்டதா? தெரியாமலிருக்காது. அவன் அந்தக் கச்சையைக் கண்டதுமே அவனும் கண்டிருப்பான். அவன் உள்ளம் துள்ளி எழுந்திருக்கும். அவன் வாழ்க்கையின் உச்சதருணங்களில் ஒன்று.

அவனை அழைத்து அந்தக் கச்சையையும் கைக்கறையையும் சுட்டிக்காட்டி விசாரித்தாலென்ன என்று நினைத்தான். அவன் சில கணங்களுக்குக் கூட தாக்குப்பிடிக்கமாட்டான் என்பதில் ஐயமில்லை. ஆனால் உடைந்து அழமாட்டான். கெஞ்சமாட்டான். வன்மத்துடன் தண்டனையை பெற்றுக்கொள்வான். எத்தனை தண்டித்தபின்னரும் அவன் உள்ளம் முழுமையாக பணிந்திருக்காது. அவனை தண்டிப்பவர்கள் அவனுடைய விழிகளை நினைவில் மீட்டெடுத்து அமைதியிழந்துகொண்டே இருப்பார்கள். அவனை கொன்றுவிட்டால் அவன் அந்த ஒளிவிடும் கண்களுடன் தெய்வமாகிவிடுவான். தெய்வம்தான். அதுதான் அவனை கண்டடைந்தது. அவன் சித்தத்தையும் கைகளையும் எடுத்துக்கொண்டது. அவனை பகடையாக்கி ஆடுகிறது.

“நெடுநாட்களாகின்றன பால்ஹிகரே, இப்படி ஒரு அணிப்பெரும் சபை இங்கே அமைந்து. தந்தை மட்டும்தான் மிகவும் சோர்ந்திருக்கிறார். நேற்று வந்தது முதலே அவர் எவரையும் சந்திக்கவில்லை. சற்றுமுன்னர்தான் துயிலில் இருந்து எழுந்தார். அவை அவருக்காகக் காத்திருக்கிறது. சௌனகர் அவரை அழைத்துவரச்சென்றிருக்கிறார்.” மீண்டும் அந்த இளைஞனின் விழிகளை பூரிசிரவஸ் சந்தித்தான். அவன் ஒரு மெல்லிய புன்னகையுடன் திரும்பிக்கொண்டான். புன்னகைக்கிறான்! அப்படியென்றால்… முழுக்குருதியும் தலையில் ஏற பூரிசிரவஸ் ஒருகணம் அவனை அறியாமலேயே திரும்பிவிட்டான். பற்களை இறுகக்கடித்து ஏதோ சொல்ல முற்பட்டான். ஆனால் அவை எதுவும் அவன் உடலில் நிகழவில்லை. அவன் ஏதும் செய்யப்போவதில்லை என அவனும் அறிந்திருக்கிறான். மூடனல்ல அவன். மூடர்களை தெய்வங்கள் தேர்ந்தெடுப்பதில்லை.

உள்ளிருந்து துரியோதனன் வெளியே வந்தான். “என்ன செய்கிறீர்கள் இங்கே?” என்று கேட்டபடி அருகே வந்து “இளையோனே, உம்மைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். கர்ணன் வந்து நோக்கியபோது உம்மைக் காணவில்லை என்றான்… வருக!” என்று அவன் தோளை தன் பெரிய கைகளால் வளைத்துக்கொண்டான். சராசனனிடம் “சௌனகர் வந்ததும் அவை தொடங்கும். இளைய யாதவன் வந்துவிட்டானா?” என்றான். “இல்லை, அவர் அவைகூடியபின்னர் வருவதாகத்தானே சொன்னார்கள்?” துரியோதனன் “ஆம்” என்றான். “யாதவ அரசி வந்துவிட்டார். மகளிர்கோட்டத்திலிருந்து அன்னையும் பானுமதியும் அவரை அழைத்துவந்து மகளிர் அவையில் அமரச்செய்துவிட்டனர்” என்றான் சராசனன். “வாரும்” என்று சொல்லி பூரிசிரவஸ் தோளைப்பற்றியபடி மெல்ல நடந்தான்

“வலிக்கிறதா?” என்றான் பூரிசிரவஸ். “ஆம், நேற்று முழுக்க நின்றுகொண்டே இருந்தேன். நான் நெடுநேரம் நிற்கலாகாது என்பது மருத்துவர் விலக்கு” என்று துரியோதனன் அவனை தழுவியபடி நடந்தான். அவன் கைகளின் எடையால் பூரிசிரவஸ் நடக்கத் தடுமாறினான். “ஆனால் வேறுவழியில்லை. யாதவஅன்னை பூசலை எதிர்நோக்கியிருக்கிறார். என் பிழையால் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் அனைத்தும் சிதறிவிடும்.” பூரிசிரவஸ் “நாம் என்ன செய்யவிருக்கிறோம்?” என்றான். “அன்னை இங்கே அரச விருந்தினராகவே வந்திருக்கிறார். அவர் விரும்பும்படிதான் அனைத்தும் நிகழ்கிறது என இந்நகருக்கும் பாரதவர்ஷத்துக்கும் அறிவிக்கிறோம்” என்று துரியோதனன் சிரித்தான். “அது யாதவனுக்கும் தெரியும். ஆனால் வேறுவழியில்லை அவனுக்கு.”

“பீஷ்மபிதாமகரை நான் இன்றுதான் பார்க்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “எங்களூருக்கு வந்த ஓவியரிடமிருந்து பட்டுத்திரையில் வரைந்த அவரது படத்தை பார்த்திருக்கிறேன். அதில் அவர் நரையோடிய இளைஞர் போலிருந்தார்.” துரியோதனன் “இன்றும் அவரிடம் மற்போரிட்டு வெல்லும் வல்லமை பாரதவர்ஷத்தில் எந்த ஷத்ரியனுக்கும் இல்லை. பலாஹாஸ்வ முனிவரும் பரசுராமரும் பால்ஹிகபிதாமகரும் மட்டுமே அவருக்கு நிகர் நிற்க முடியும் என்கிறார்கள். தந்தையும் நானும் பீமனும் ஜராசந்தனும் கீசகனும் அவருடன் ஒருநாழிகை நேரம் மல்லிட்டு நிற்க முடியும்…”

பூரிசிரவஸ் வியப்புடன் “புராணங்களில் வரும் மூதாதையர் போலிருக்கிறார்” என்றான். “இளையோனே, அவர் இப்போது வாழ்வதே புராணங்களில்தான். வானிலிருந்து குனிந்து நம்மைப்பார்க்கிறார். அவரது விழிகளை நோக்கும்போது என்னை அவருக்குத் தெரியுமா என்றே ஐயுறுகிறேன். நேற்று அவரை நானும் கர்ணனும் இளையோனுமாக சென்று பணிந்து நிகழவிருப்பதை சொன்னோம். இளையோன் வலிமிகுதியால் நத்தைபோல வந்தான். அவர் என்ன நிகழ்ந்தது என்று கேட்கவில்லை. அவ்வினா அவர் உள்ளத்தில் எழவே இல்லை. அனைத்தையும் சொன்னதும் கைதூக்கி அவ்வாறே ஆகுக என வாழ்த்தினார்.”

அவர்கள் உள்ளே நுழைந்தனர். பூரிசிரவஸ் “நான் என் இருக்கைக்குச் செல்கிறேன்…” என்று விலக “என் அருகே உமக்கு இருக்கையிடச் சொல்லியிருக்கிறேன். வாரும்” என்றான் துரியோதனன். “பிதாமகர் இவ்வுலகில் இல்லை. அவர் செல்லவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று விழியிழந்த சூதன் தீர்க்கதமஸ் சொன்னான். குழந்தை மண்ணுக்கு வந்தபின்னரும் தொப்புள் கொடி அதை கருவறையுடன் பிணைக்கிறது. அதுபோல அவர் மூதாதையர் உலகுக்கு சென்றுவிட்டபின்னரும் குருதிச்சரடு ஒன்றால் இம்மண்ணுடன் பிணைக்கப்பட்டிருக்கிறார். அது என்ன என்று அவரே அறிவார். அது அறுபடும் வரை அவர் இங்கிருப்பார்.”

பூரிசிரவஸ் துரியோதனனுடன் சென்று அவனுக்கு இடப்பட்டிருந்த பெரிய பீடத்தில் அமரும்போது கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தான். எவர் விழிகளையும் ஏறிட்டுப்பார்க்காமல் அமர்ந்தான். கால்களை நீட்டலாமா என்ற எண்ணம் வந்ததுமே உடல் ஒடுங்கியது. கர்ணன் அவனிடம் திரும்பி “எங்கு சென்றாய் மூடா? உன்னைத்தேடி நான் வரவேண்டுமா?” என்றான். பூரிசிரவஸ் விழிகளில் நீர்நிறைந்தது. அதை மறைக்க முகத்தை திருப்பியபடி “பொறுத்தருள்க மூத்தவரே” என்றான். துரியோதனன் அமர்ந்துகொண்டு “அவன் வெளியே நின்றிருந்தான். முறைமைகளை கண்காணித்துக்கொண்டிருந்தான் என நினைக்கிறேன். அவர்கள் ஊரில் அனைத்தையும் இவனேதான் செய்யவேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது” என்றான்.

கர்ணன் “நேற்று எங்கு போனாய்? நான் பிதாமகரைப்பார்க்க உன்னை அழைத்துச்செல்லவேண்டுமென்று நினைத்தேன்” என்றான். “நேற்று அரண்மனை ஆலயத்தில்…” கர்ணன் திரும்பி துரியோதனனிடம் “இவன் என்ன மழலைபேசிக்கொண்டிருக்கிறான்? மூடன். இவனுக்கு ஏதேனும் ஒரு நிலப்பகுதியைக் கொடுத்து நீயே பார்த்துக்கொள், எதற்காகவாவது இங்கே வந்தால் மண்டை உடையும் என்று சொல்லவேண்டும்” என்றான். துரியோதனன் திரும்பிப்பார்த்து சிரித்தபடி “வலுவான ஓர் அரசியை தேடிவைப்போம். திருந்திவிடுவான்” என்றான். “பெண் போல இருக்கிறான்” என்றபடி கர்ணன் திரும்பி அவனிடம் “அவையை நோக்கு. இங்கே பேசப்பட்ட ஒவ்வொன்றையும் நீ திரும்ப என்னிடம் சொல்லவேண்டும். இல்லையேல் மண்டை உடையும். புரிகிறதா?” என்றான். பூரிசிரவஸ் தலையை அசைத்தான்.

அவை நிறைந்திருந்தது. தொல்குடியினர் ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய குலக்குறிகளுடனும் ஆடைகளுடனும் முறைப்படி நிரைவகுத்து அமர்ந்திருந்தனர். விதுரர் எழுந்து மறுபக்கச் சிறுவாயிலை நோக்கியபடி நின்றிருந்தார். கனகர் ஓடிவந்து அவரிடம் ஏதோ சொல்ல அவர் கைகளை அசைத்து பதற்றமாக எதிர்வினையாற்றினார். அவரது ஆணைகளைப்பெற்றுக்கொண்டு கனகர் திரும்பிச்சென்றார். துரோணரும் கிருபரும் தங்களுக்குள் மெல்லியகுரலில் பேசிக்கொண்டிருக்க பீஷ்மர் தன் இருக்கையில் நிமிர்ந்த தலையுடன், அசைவற்ற விழிகளுடன் அமர்ந்திருந்தார். அவருக்குப்பின்னால் அமர்ந்திருந்த ஹரிசேனரும் பீஷ்மரைப்போலவே சிலைபோலிருந்தார்.

மேலே ஆடிய தூக்குவிசிறிகளின் காற்றில் திரைச்சீலைகள் சீராக அசைந்தன. பாவட்டாக்கள் திரும்பின. மயிற்பீலிகள் தேவதாரு இலைகள் போல சிலுசிலுத்தன. அவையில் மெல்லிய பேச்சொலிகளால் ஆன ஓங்காரம் நிறைந்திருந்தது. வெண்பட்டுத்திரைச்சீலைக்கு அப்பால் குந்தி அமர்ந்திருப்பதை பூரிசிரவஸ் அகத்தே கண்டான். அருகே காந்தார அரசியர். மணமுடித்துவந்த இளவரசிகள் அவைபுகுவதற்காக அப்பாலுள்ள சிற்றவையில் காத்திருக்கிறார்கள் போலும். அவைநடுவே எழுந்த அரசமேடையில் ஒழிந்த அரியணை இருந்தது.

வெளியே பெருமுற்றத்தில் முரசொலியும் மங்கலப்பேரிசையும் எழுந்தன. ”யாதவனா?” என்றான் துரியோதனன். “ஆம், அவனுக்கான இசைதான். சக்கரவர்த்திகளையும் மாமுனிவர்களையும் வரவேற்பதற்குரியது” என்று சொன்ன கர்ணன் புன்னகையுடன் “சென்றமுறை அவன் வந்தபோது நாம் அவனை வேண்டுமென்றே காக்க வைத்தோம்” என்றான். துரியோதனன் “இதுவும் நம்முடைய ஆட்டம்தான்” என்றான். “ஆம், ஆனால் நம்மை ஆடவைத்தே அவன் வெல்கிறானோ என்ற ஐயம் எனக்கு வந்தபடியே இருக்கிறது” என்றான் கர்ணன். மங்கல இசை வலுத்தது. விதுரர் துரியோதனன் அருகே வந்து “முறைப்படி தாங்கள் வந்து இளைய யாதவரை வரவேற்று அவைக்குக் கொண்டுவரவேண்டும் இளவரசே” என்றார். துரியோதனன் “ஆம்” என்றபடி எழுந்து “இளையோனே, நீரும் வருக!” என பூரிசிரவஸ்ஸிடம் சொல்லிவிட்டு நடந்தான்.

அவனுடன் துச்சலன், துச்சகன், ஜலகந்தன், சமன், சகன், விந்தன், அனுவிந்தன் என ஏழு கௌரவர்கள் சென்றனர். பூரிசிரவஸ் துரியோதனனின் வலப்பக்கம் சென்றான். இடப்பக்கம் விதுரரும் கனகரும் நடந்தனர். அவர்கள் அவையை விட்டு வெளியே சென்று அகன்ற பாதையாகச் சென்று தேர்முற்றத்தில் இறங்கிய இடைநாழியின் தொடக்கத்தில் நின்றனர். அங்கு முன்னரே பொற்கலத்தில் கங்கைநீருடன் நின்றிருந்த வைதிகரும் மங்கலத்தாலம் ஏந்திய அணிப்பரத்தையரும் இசைச்சூதர்களும் இயல்பாக அணிவகுத்தனர். துரியோதனன் திரும்பி பூரிசிரவஸ்ஸை நோக்கிவிட்டு சால்வையை சீராக்கினான். அவன் இடக்கை மீசையை நீவிக்கொண்டே இருந்ததைக் கண்டு அவன் அகம் நிலையழிந்திருப்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான்.

மறுபக்கம் இடைநாழியின் எல்லையில் வெட்டி வைத்த வானம் எனத் தெரிந்த ஒளிமிக்க நீள்சதுரத்தில் வண்ணங்கள் அசைந்தன. அங்கே கேட்ட ஓசைகள் நீண்ட குகைப்பாதைக்குள் என புகுந்து உருவற்ற முழக்கமாக வந்துசேர்ந்தன. சில கணங்களுக்குப்பின்னர் சித்தம் அவற்றை வாழ்த்தொலிகளும் முழவோசைகளும் கொம்போசைகளும் என பிரித்து எடுத்துக்கொண்டது. பூரிசிரவஸ் அந்த நீள்சதுரத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அதனுள் பக்கவாட்டிலிருந்து ஒரு வெண்மணிக்குடை அசைந்து தொங்கல்கள் குலுங்கியபடி நுழைந்தது. வாழ்த்தொலிகள் ஓடைவெள்ளமெனப் பெருகி அவர்களை நோக்கி வந்து அலையாக அறைந்தன.

முழவுகளும் கொம்புகளும் முழக்கிய இசைச்சூதர்களும் உருவிய வாள்களுடன் காவலர்களும் நுழைந்தனர். அவர்களுக்கு அப்பால் அணிப்பரத்தையரின் பட்டாடைகளின் ஒளியசைவு தெரிந்தது. பின்னர் வெண்குடைக்குக் கீழே கிருஷ்ணனை பூரிசிரவஸ் கண்டான். அவன் இருபக்கமும் சாமரங்களை வீசியபடி காவலர் வந்தனர். இளமஞ்சள் பட்டாடை அணிந்து தோளில் செம்பட்டுச் சால்வை போர்த்தி நீலமணிக்குண்டலங்களும் நெஞ்சில் செம்மலர் முத்துக்கள் என ஒளிர்ந்த மணிகளால் ஆன ஆரமும் அணிந்து அவன் நடந்து வந்தான். சத்ரமும் சாமரமும் அமைந்த அந்த வரவேற்பை அவன் அறியாதவன் போலிருந்தான்.

அவன் தன்னுடன் வந்தவர்களிடம் இயல்பாக பேசிக்கொண்டுவந்ததை பூரிசிரவஸ் கண்டான். அசைந்த தலைகளும் எழுந்த கொம்புகளும் முரசுகளை அறையும் கைகளும் காட்சியை மறைத்தன. ஒவ்வொருமுறை தோன்றும்போதும் ஒவ்வொரு தோற்றமாக அவன் தெரிந்தான். அத்தோற்றங்கள் ஒவ்வொன்றும் ஒரு நீலமணி. அவற்றைக் கோத்து உருவாக்கப்பட்ட சரம்தான் அவன். அதுவரை அவனைப்பற்றி அறிந்தவையும் நேரில் கண்ட ஒவ்வொரு தருணமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற கிருஷ்ணன்களையே அவனுக்குக் காட்டின. காந்தாரியின் மஞ்சத்தில் அவள் மடிமீது கால்வைத்தமர்ந்து குழலூதிய அவனை நினைத்துக்கொண்டான். அவன் ஒரு மனிதன் அல்ல. ஒவ்வொருவரும் பார்க்கும் சித்திரங்களை அவன் ஒவ்வொரு முறையில் நிறைத்துக்கொண்டிருக்கிறான்.

அவனுடன் வந்தவர்கள் கிருஷ்ணனின் தோழர்களோ அமைச்சர்களோ என்றுதான் முதலில் நினைத்தான். அவர்கள் நெருங்கியபோது ஒரு கணத்தில் இரு தலைகளின் இடைவெளியில் அந்த முகத்தைக் கண்டபோது எங்கே பார்த்தோம் என எண்ணினான். எளிய காவலன். அவன் ஒரு குதிரைச்சவுக்கை கையில் வைத்திருந்தான். விதுரர் கைகாட்ட அவர்களுடன் நின்றிருந்த சூதர் மங்கலப்பேரிசை எழுப்பியபடி முன்னால் சென்றனர். அடுத்து வேதியர் செல்ல அணிப்பரத்தையர் தொடர்ந்தனர். துரியோதனன் திரும்பி பூரிசிரவஸ்ஸை நோக்கிவிட்டு மீசையை முறுக்கியபடி கைவீசி மெல்ல நடந்து சென்றான்.

இடைநாழியில் கிருஷ்ணனை எதிர்கொண்ட இசைச்சூதர் இசைமுழக்கியபடி இடப்பக்கம் விலகினர். வேதியர் கங்கை நீர் தெளித்து வேதமோதி வாழ்த்திவிட்டு வலப்பக்கம் சென்றனர். அணிப்பரத்தையர் மங்கலத்தாலம் காட்டி வரவேற்று முகமன் சொல்லி வாழ்த்துப்பாடி வணங்கிவிட்டு பின்னால் நகர்ந்து துரியோதனனை கடந்து சென்றனர். துரியோதனன் மெல்லநடந்து அருகே சென்று இரு கைகளையும் கூப்பியபடி “வருக யாதவரே. அஸ்தினபுரி தங்கள் பொன்னடிகள் பட்டு பெருமைகொண்டது. தங்கள் வருகையால் என் மூதாதையர் உவகைகொள்கிறார்கள். என்குடிகள் வாழ்த்தப்பட்டனர்” என்றான்.

கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே “அஸ்தினபுரி என் அத்தையின் மண். என் மூதாதையரின் வணக்கமாக அவள் இங்கிருக்கிறாள் இளவரசே. இந்த வரவேற்பை நான் என் குடிக்கு அஸ்தினபுரி அளிக்கும் மதிப்பாகவே கொள்கிறேன்” என்றான். துரியோதனன் தாலத்திலிருந்து மலரையும் பொன்னையும் அள்ளி கிருஷ்ணன் கையில் அளித்து “பொன்னொளிர்தருணம்” என்றான். “அவ்வாறே“ என்றான் கிருஷ்ணன். “வருக” என்று சொல்லி துரியோதனன் அவனை அழைத்துச்சென்றான். விதுரர் “அஸ்தினபுரியின் பேரவை தங்களை வணங்குகிறது இளையயாதவரே” என்றார். அவர்கள் அவை நோக்கி சென்றனர்.

பூரிசிரவஸ் அந்த இளைஞனை அடையாளம் கண்டான். அவனும் பூரிசிரவஸ்ஸை கண்டு விழிதாழ்த்தி சற்று விலகிக்கொண்டான். கிருஷ்ணன் திரும்பி அவனிடம் “நீலரே, அதை வைத்திரும். நான் செல்லும்போது வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லி பூரிசிரவஸ்ஸை நோக்கி புன்னகை செய்தபின் அவைக்குள் நுழைந்தான். பூரிசிரவஸ் அந்த இளைஞனை நோக்க அவன் “யாதவ அரசர் தேரை அவரே ஓட்டிவந்தார். இறங்கியதும் காவல் நின்ற என்னை கைசுட்டி அழைத்து இதை அளித்து வைத்திருக்கும்படி சொன்னார்” என்றான். உன் கைத்தடத்தை அவர் பார்த்துவிட்டார் என்று சொல்ல எழுந்த நாவை பூரிசிரவஸ் அடக்கிக்கொண்டான்.

கிருஷ்ணன் பெருவாயிலைக் கடந்து அவைக்கூடத்தில் நுழைந்தபோது ஒட்டுமொத்த அவையும் எழுந்து வாழ்த்தொலி முழக்கியது. அவன் கைகூப்பி தலைவணங்கியபடி சென்றான். துரியோதனனும் விதுரரும் அவனுக்காக போடப்பட்டிருந்த அரியணை நோக்கி கொண்டுசென்றனர். வாழ்த்தொலிகள் எழுந்து அதிர்ந்து சுவர்களில் இருந்தும் கூரையிலிருந்தும் திரும்ப வந்தன. அவன் பின்னால் சென்ற பூரிசிரவஸ் அவன் நீலத்தோள்களும் புயங்களும் முதுகும் புன்னகைசெய்வதுபோல உணர்ந்தான்.

முந்தைய கட்டுரைசுஜாதா விருதுகள் கடிதம் 7
அடுத்த கட்டுரைஃபோர்டு பவுண்டேஷனும் மத்திய அரசும்