ஜெகே- கடிதங்கள் 2

images

கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடந்த ஜெயகாந்தன் அஞ்சலிக் கூட்டத்தில் ஜெயமோகன் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் https://soundcloud.com/tags/jayamohan%20on%20jayakandhan

மரபின் மைந்தன் முத்தையா

======================================================
அன்புள்ள ஜெயமோகன்,

ஆலமர்ந்த ஆசிரியன் உரை படித்தேன். அற்புதம்..மனம் மிகுந்த நெகிழ்ச்சிக்குள்ளாகிறது ஜெ.மோ. இதைவிட வேறு என்ன சொல்லிவிட முடியும் என்கிற துயரம் கலந்த வெறுமைக்கு எடுத்து செல்கிறது. ஜெயகாந்தனை அந்தரங்கமாகவே உணர்ந்திட முடியும் என்பது எத்தனை சத்தியமான வார்த்தைகள்?. நான் ஜே.கேவை உணர்ந்தது அப்படி ஒரு தருணத்தில்தான். அப்படி ஒவ்வொரு வாசகனுடனும் அந்தரங்கமாக உரையாட ஒரு தருணத்தை தனது படைப்புகளில் விட்டுவைத்து சென்றிருக்கிறார் ஜே.கே.

அதே சமயத்தில், பெரும்பான்மை நடுத்தரவர்க்க ஜனத்திரளின் ஒட்டுமொத்த சிந்தனைமுறையையே அசைத்துப் பார்த்தவர் ஜே.கே. தனிப்பட்ட அந்தரங்கம் மீதான மதிப்பு, விளிம்புநிலைமக்கள் மீதான பார்வை மாற்றம், யவருக்கும் கட்டுபாடாது தன்னுடைய வழியை தேர்ந்தெடுப்பதற்க்கான உரிமை, இனம் மொழி குறித்த வழிபாட்டு உணர்வுகளை கேள்வி கேட்டது என அந்த மாற்றங்கள் மெல்ல சமூகத்தில் ஊடுருவியது.

பாரதியின் சாவுக்கு சென்றது 11 பேராம். அதனால் என்ன? பதினொரு பேரும் திரும்பிவந்தான்லே? என்று நக்கலுடன் சிரிக்கும் ஜே.கே கலகக்காரனாக, மானுட நேசனாக இந்தமண்ணில் எப்போதும் வீற்றிருப்பார்.

செந்தில்குமார்.

=========================================================
ஜெ,

நல்ல உரை. ஜெயகாந்தனைத் தொகுத்து முழுமையாகக் காட்டும் அற்புதமான கணங்கள் இந்த உரையில் அமைந்துள்ளன.

இந்த உரையில் பாரீஸுக்குப் போ நாவலைப் பற்றி பேசியதில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு.

பாரீஸுக்குப் போ நாவலை செவ்வியல் தளத்தை நோக்கி நகர்த்தவேண்டிய கட்டாயம் இந்த விமர்சனத்தில் தெரிகிறது. முன்னர் செவ்வியல் படைப்புகளைப் பற்றிய விவாதத்தில் நாவல் எனும் அமைப்பை சரிவர கையாளாத படைப்பு இது என “நாவல்” கோட்பாட்டு நூலில் ஜெ எழுதியுள்ளார். அத்தரப்போடு நான் முழுமையாக ஒத்துப்போகிறேன். நாவலைப் படித்த எல்லோருக்கும் இது முக்கியமான முயற்சி ஆனால் முழுமை பெறாதது எனும் உணர்வைத் தரும்.

இந்த உரையில் அவர் பாரீஸுக்குப் போ நாவலை ஒற்றைப்புள்ளியில் விவாதித்து செவ்வியல் படைப்பாக நிறுவும் நோக்கம் தெரிகிறது. இதுகாறும் ஜெ கூறியுள்ள செவ்வியல் ஆக்கங்களின் தன்மைகளை எதிர்த்து செயல்படும் நாவல் பாரீஸுக்குப் போ. ஜெயின் விமர்சனத்தில் ஜெயகாந்தன் எனும் ஆளுமையை படைப்பில் போட்டுப்பார்க்கிறார்.

ஐரோப்பா கலாச்சாரத்தைக் கொண்டு நம் கலை முறைகளைப் பார்த்தாலும் அதை சாரங்கன் வெறுப்பதில்லை எனச் சொல்கிறார் – மேலும், “நீ அனுதினமும் பாடிப்பரவுகிறாயோ அதை உன் அன்றாடவாழ்க்கையாகக் கொள்ளமுடியாதென்றால் உன் வாழ்க்கைக்கு என்ன பொருள் என்று கேட்கிறது பாரீஸுக்குப் போ” இதைக்கொண்டு நாம் சாரங்கனையும் ஹென்ரியையும் ஒப்பிட்டு பார்க்க முடியும். சாரங்கன் வளர்ந்த பண்பாட்டிலும் கலைக்கும் வாழ்க்கைக்கும் அணுதினம் கைகொள்ளமுடியாத இடைவெளி உண்டு என்பதை சாரங்கன் உணரவில்லை. ஹென்ரி அதை உணர்ந்தவன். அதனால் தான் ஹென்ரியால் இரு தரப்புகளையும் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.நகரத்தையும் கிராமத்தையும் வெறுப்பில்லாமல் அதனதன் தேவைகளைக் கொண்டு அணுக முடிகிறது. சாரங்கனால் அது முடியவில்லை என்பதே நாவலின் சாரம். கனிவுப்பார்வையும், கீழ்மை/சரிவுகள் மீதான சமநிலைப் பார்வையும் ஹென்ரிக்கு இருப்பதை நாவலில் நாம் படித்து தெரிந்துகொள்வதால் தான் ஒருமனிதன் ஒருவீடு எனக்கு முழுமையான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. பாரீஸுக்குப் போ இரு பண்பாடுகளையும் ஒற்றைப்புள்ளியில் குவித்துப்பேசும் படைப்பு. செவ்வியல் தரத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய விவாதத் தரப்பை நாவலுக்குள் அது உருவாக்கவில்லை. இதனால் தான் சாரங்கனின் தரிசனம் முழுமையற்றது, ஹென்ரியுடைய வாழ்க்கைப் பார்வை முழுமையானது என எனக்குத் தோன்றுகிறது.

கிரிதரன் ராஜகோபாலன்
============================================================
அன்புள்ள கிரி,

இந்த உரையில் ஜெயகாந்தனின் நாவல்களில் உறைந்திருக்கும், விமர்சகர்கள் தவறவிட்ட, ஜேகே- வின் படைப்புகளில் இல்லை என்று சொல்லப்படுகிற ‘ஆழத்தை’ பற்றிய முக்கியமான சில உதாரணங்களை ஜே கோடிடுகிறார் .

‘பாரிசுக்கு போ’ வில் விவாதிக்கபட்டிருக்க வேண்டிய கோணங்களை மட்டுமே சுட்டிக்காட்டுகிறார். மீண்டும் மீண்டும் அவரது நுண்மையின் போதாமைகளை பற்றி பேசுபவர் முன் , அத்தனை நுன்மையான விஷயங்களை வேறு நாவல்கள் இல்லை என்கிறார். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஜெயகாந்தனை அணுகும் பார்வை.

எந்த விதத்தில் இதை ஒரு செவ்வியல் படைப்பாக நிறுவ முயல்கிறார் என நீங்கள் சொல்கிறீர்கள் என புரியவில்லை.

இப்பொழுதும் ‘பாரிசுக்கு போ’ தமிழ் நவீனத்துவத்தில் உருவாகிவந்த சிறந்த/மிகச்சிறந்த படைப்பென்று ஜெ ஒத்துக்கொள்வாரே தவிற, அதை தமிழின் செவ்வியல் வரிசையில் வைக்கலாமா என்றால் இல்லை என்று தான் சொல்லுவார். அதற்கான காரணங்கள்தான் நாவல் கோட்பாட்டில் சொல்லப்பட்டிருப்பது.

-ஆனந்த்

===============================

அன்புள்ள கிரி, ஆனந்த்,

பாரீஸுக்கு போல் செவ்வியல்பண்புகொண்ட ஒரு நாவல் என நான் நினைக்கவில்லை. நமது நாவலிலக்கியங்களில் முக்கியமானது என்ற பொருளிலேயே சொல்லியிருக்கிறேன். அதிலுள்ள ‘சமநிலை’ என்ற ஓர் அம்சம் அதைச் செவ்வியலின் தளம் நோக்கிச்செல்கிறது என்பதே என் கூற்று. மற்றபடி அது ஒரு நவீனத்துவநாவல். ஒர்ரே ஒரு முரண். அதை உச்சம் கொண்டுசென்று அங்கே முடித்துவிடும் அமைப்பு கொண்டது.

கறாரான இலக்கியவிமர்சனக் கோணத்தில் பாரீஸுக்குப் போ முழுமை பெறாத ஆக்கம். ஜெகே தான்உருவாக்கிச்சென்ற அடித்தளத்தை முழுமைசெய்யவில்லை.

ஆனால் அது புரட்டிப்பார்த்துவிட்டு சொல்லும் உதட்டுப்பிதுக்கலாக இருக்கக் கூடாது என்பதையே நான் உரையில் சொல்கிறேன். அதன் அனைத்துக்கூறுகளையும் கருத்தில்கொண்டு அதன்பின் செய்யும் ஆராய்ச்சியாக அது இருக்கவேண்டும்

ஜெ
=========================================================
அன்பின் ஜெ எம்.,

ஜே கேவுக்குப் பிறகான எத்தனையோ தீவிர, மாறுபட்ட போக்கு கொண்ட எழுத்துக்களை வாசித்த பின்னும் கூட- ஜே கே ஒருவர் மட்டுமே பாரதியைத் தொடர்ந்த என் ஆசானாக இருந்தார்;

அவரிடம் பல நேரங்களில் பல முரண்பாடுகள் கண்டாலும் அதுவும் கூட அவரது ஆளுமையின் ஒரு அம்சமே எனக்கொண்டபடி அவர் மீது கொண்ட உள்ளார்ந்த ஏதோ ஒரு நெகிழ்வுணர்வால் நான் அவற்றைப் பொருட்படுத்தியதில்லை;பொருட்படுத்தத் தோன்றியதும் இல்லை.

ஆனால் இறுதிக்காலத்தில் மு கவோடான அவரது சமரசத்தை மட்டும் ஏனோ என்னால் ஏற்க முடிந்ததே இல்லை.அது அவரது எழுத்துக்கள் மீதான என் மதிப்பீட்டுக்கு இடைஞ்சலாகி விடவில்லை என்றபோதும் அந்த மாமனிதனின் திமிர்ந்த ஞானச்செருக்குக்கு ‘மதியின் கண் மறு’ப்போல ஊறு சேர்த்ததாகவே நான் மிகுந்த மன வருத்தம் கொண்டிருந்தேன்….
இப்போது மு கவின் அந்த அஞ்சலிக் குறிப்பைப்படித்ததும் கடலூர் சீனு கலங்கியதைப்போல நான் ‘ரௌத்திரம்’ கொண்டேன்..

அந்த இலக்கிய மேதை பற்றிச்சொல்ல எவ்வளவோ இருந்தும் தான் செய்த உதவியையும் அதற்கு அவர் செலுத்திய வழக்கமான ஒரு நன்றியையும் மட்டுமே பெரிதுபடுத்தி அவர் ‘ஒரு இலக்கியவாதி இல்லை’ என்று நீங்கள் சொன்னதையும் தான் ஒரு பிண அரசியல்வாதியே என்பதையே மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார் மு க.

//கல்லறையில் மிதித்து நின்று கடைசிச்சிரிப்பைச் சிரிக்கத்தான் மு க அந்த முதலீட்டை செய்திருக்கிறார். அறுவடை செய்யாமலிருக்க அவரென்ன புனிதரா? //

என்ற உங்கள் சொற்கள் மிக மிகப் பொருத்தமானவை.

கோவையில் நிகழ்ந்த அஞ்சலிக்கூட்டத்தில் அவரது சாம்பல் அணுக்கள் கூட அரசு மரியாதையை எதிர்க்கும் என சிற்பி பேசியதாகப்படித்தேன்..
மு க வின் இந்தச்சொற்கள் மட்டும் அவரது ஆன்மாவை எட்டினால்…..!

எம் ஏ சுசீலா
=========================================================
அன்புள்ள சுசீலா,

ஜெகே அஞ்சலியில் முக சொன்னது அவர் எந்நிலையிலும் அரசியல்வாதி என்பதைக் காட்டுகிறது. ஆனால் அவர் அஞ்சலி செய்ய வந்திருந்தது ஓர் உயர்ந்த விஷயம். திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகள் வந்திருந்ததும் மதிப்பிற்குரியதே

முக மேல் நாம் விமர்சனம் வைக்கலாம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட இன்றைய முதல்வர், மக்களின் முதல்வர்களுக்கு ஜெகே இருந்ததும் இறந்ததும் தெரியவில்லை. அதை மறந்துவிடக்கூடாது

ஜெகே அவரது கடைசிக்காலத்தில் சமரசங்களுக்கு ஆளானவர் என்று நான் நினைக்கவில்லை. அவர் கேளாமல் செய்த உதவி முக- கனிமொழி செய்தது. அது அவரை நெகிழச்செய்தது. அவர் முகவைப் பார்க்கச்சென்றார். இரு முதியவர்களும் நேரில் கண்டதுமே கண்கலங்கி அழத்தொடங்கினர் என்றார் உடன் சென்ற நண்பர்

அதை நாம் வாழும் உலகில் நின்றுகொண்டு புரிந்துகொள்ள முடியாது. அது முதுமையின் உலகம். அங்கே உள்ள உணர்ச்சிகளே வேறு. ’அவரைப் பார்த்ததும் என்ன அப்பா நினைத்தீர்கள்?” என்று அன்பு கேட்டபோது ‘என்ன நெனைக்கிறதுக்கு? செத்துப்போனவங்க அத்தனைபேரும் ரெண்டுபேர் ஞாபகத்திலும் வந்தாங்க. ஒண்ணுக்கும் பெரிசா அர்த்தமில்லைன்னு தோணிச்சு’ என்றாராம் ஜெகே. அதுதான் இயல்பாக நிகழ்வது

கலைஞர் விருதை ஜெகே ஏற்றுக்கொண்ட செய்திக்கு மறுநாள் அன்பு ஜெகேவை பார்க்கும்போது ‘நான் அந்த விருதை ஏற்றுக்கொண்டது பிழை என்கிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் ஏதேனும் விரோதம் உண்டா என்ன?” என்று கேட்டபின் “நமக்கு வேறு எவருடனாவது விரோதம் உண்டா?” என்றார்.

இறுதிக்காலத்தில் அவரது மனநிலையே வேறு. ’எழுத்து பேச்சு கொள்கை எல்லாமே ரொம்பச் சின்ன விஷயம். நீரலைமேல் கொப்புளம் நீந்துவதுபோல்…’ என்று அவர் சொன்னதை நினைவுறுகிறேன்.

ஜெ

=====================================================

முந்தைய கட்டுரைவிளம்பரம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 82