‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 82

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 1

பூரிசிரவஸ் துரியோதனனின் அறைவாயிலை அடைந்து தன்னை அறிவித்துக்கொண்டான். காத்திருந்தபோது அவன் அகம் சொல்லின்றி முற்றிலும் வெறுமையாக இருந்தது. அழைப்புவந்ததும் உள்ளே நுழைந்து சொல்லின்றி தலைவணங்கினான். துரியோதனன் கை காட்டி “அமர்க இளையோனே” என்றபின் “காலையில் இளைய யாதவன் வந்துவிட்டான்” என்றான். பூரிசிரவஸ் துரியோதனனுக்கு அருகே அமர்ந்திருந்த கர்ணனை நோக்கிவிட்டு தலையசைத்தான். காலையில் கண்விழித்தபோதே அவன் அதை அறிந்திருந்தான்.

“அரச முறைமைப்படி அவன் ஒருநாட்டின் அரசன். ஆகவே நம் அழைப்பு இல்லாமல் இந்நகருக்குள் வரக்கூடாது. ஆனால் யாதவ அரசியின் மருகனாக வந்து அவரது அரண்மனைக்கு அருகிலேயே தங்கியிருக்கிறான். அவர்களை இங்கே வரச்சொன்னதே அவன்தான். அவர்களுடன் வந்திருக்கும் யாதவ இளைஞன் சாத்யகி இளைய யாதவனுக்கு மிக அணுக்கமானவன். அவர்களிடம் தெளிவான திட்டங்கள் ஏதோ உள்ளன” என்றான்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்தவற்றுக்கு ஒரு இயல்பான நீட்சியை உருவாக்குவதற்காகவே துரியோதனன் அதை சொல்கிறான் என்று உணர்ந்த பூரிசிரவஸ் காத்திருந்தான். “இங்கு இப்போது வந்து யாதவ அரசி ஆற்றும் பணி என ஒன்றுமில்லை. இளைய யாதவன் செய்வதற்கும் ஏதுமில்லை. நாட்டைப்பிரிக்கும் வரைவு சித்தமாகி அனைவருக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. துவாரகையில் பாண்டவர்கள் யாதவனுடன் அமர்ந்து ஒவ்வொரு ஊரையும் ஆற்றையும் ஓடைகளையும் கணக்கிட்டு நோக்கி அவ்வரைவை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். அவர்கள் கோரிய அனைத்துத் திருத்தங்களையும் முறைப்படி செய்துவிட்டோம். படைகளை பிரிப்பதற்கான திட்டமும் முறையாக எழுத்துவடிவில் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.”

“காந்தாரப்படைகளின் பங்கென்ன என்பதைப்பற்றி ஒரு ஐயம் அவர்களுக்கிருக்கலாம்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், ஆனால் காந்தாரப்படைகளை இனிமேல் நாம் காந்தாரத்துக்கு திருப்பியனுப்ப முடியுமா என்ன? அவை இங்கே நமது மண்ணில் முளைத்தெழுந்தவை அல்லவா?” என்றான் துரியோதனன். “அவை பேரரசரின் ஆணைப்படி அஸ்தினபுரியில் இருக்கும் என்பதே பொதுப்புரிதல். அதுவன்றி வேறுவழியே இன்றில்லை.”

“அவை எல்லைக்காவல்படையாக விளங்குமென்றால் அஸ்தினபுரியை மட்டுமல்ல இந்திரப்பிரஸ்தத்தின் எல்லையையும் அவையே காவல் காக்கும். அவர்கள் அப்படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவார்கள்” என்றான் பூரிசிரவஸ். “நாம் அவர்களுக்கு எங்கோ ஏதோ ஒரு முடிச்சை போட்டிருப்போம் என்றே அவர்கள் எண்ணுவார்கள். அனைத்துக்கோணங்களிலும் அதையே ஆராய்வார்கள். நான் அவர்களிடம் இருந்தால் காந்தாரப்படையின் இருப்பைப்பற்றியே பேசுவேன். ஏனென்றால் அவை இன்னமும் காந்தார இளவரசரின் நேரடி ஆட்சியில் உள்ளன.”

“அந்த ஐயம் அவர்களுக்கு எழுவது இயல்பானதே” என்று கர்ணன் சொன்னான். “ஆனால் அதையும் முறையாகக் களைந்துவிட்டோம். காந்தாரப்படைப்பிரிவுகள் முழுமையாகவே அஸ்தினபுரியின் மேற்கெல்லைக்காவலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். சப்தசிந்துவின் கரைகளில் இருந்து அவை விலகிச்செல்லாது. மேற்கெல்லையுடன் பாண்டவர்களுக்கு தொடர்பே இல்லை. அவர்கள் ஆளும் கிழக்கு எல்லையை அஸ்தினபுரியின் தொன்மையான படைகள்தான் காத்துநிற்கும்…”

பூரிசிரவஸ் “அஸ்தினபுரியின் படை என்பது ஷத்ரியர்களால் ஆனது. அதைப்பற்றியும் அவர்களுக்கு ஐயமிருக்கலாம்” என்றான். துரியோதனன் சினத்துடன் “என்ன பேசுகிறீர்? அப்படியென்றால் அஸ்தினபுரிக்கு படையே தேவையில்லையா? இங்குள்ள அனைத்தும் ஷத்ரியப்படைகளே. நூற்றாண்டுகளாக அஸ்தினபுரி ஷத்ரியப்படைகளால்தான் காக்கப்பட்டு வந்தது” என்றான்.

“அது ஐயமில்லாதபோது…” என்று கர்ணன் புன்னகைத்தான். ஏதோ பேச வாயெடுத்த துரியோதனனை கையமர்த்தித் தடுத்து “அந்த ஐயம் அவர்களுக்கிருக்கிறது என்றால் அவர்கள் அஸ்தினபுரியின் யாதவப்படைகளை மட்டும் கொண்டுசெல்லட்டும். அதற்கும் நாம் ஒப்புதல் அளிப்போம்” என்றான். “யாதவப்படை போதவில்லை என்றால் அங்குசென்றபின் இங்கு நாம் கொண்டுள்ள ஷத்ரியப்படைகளுக்கு நிகரான எண்ணிக்கையில் அவர்கள் யாதவர்களின் படை ஒன்றை உருவாக்கிக் கொள்ளட்டும். தெற்கெல்லைக் காவலுக்கு இங்குள்ள காந்தாரப்படைகளுக்கு நிகரான எண்ணிக்கையில் மதுராவின் யாதவப்படைகளை நிறுத்திக்கொள்ளட்டும்.”

“என்ன சொல்கிறாய் கர்ணா? நீ…” என்று சீற்றத்துடன் துரியோதனன் தொடங்க “இளவரசே, அவர்களுக்கு இன்று தேவை ஒரு பூசல். நாம் நம் நாட்டை அகமுவந்து அவர்களுக்கு பகிர்ந்துகொடுப்பதன் வழியாக மக்களிடையே நமக்கு செல்வாக்குதான் உருவாகும். அதை நானே அஸ்தினபுரியின் தெருக்களில் காண்கிறேன். அதை அழிக்க நினைக்கிறார் யாதவ அரசி” என்றான் கர்ணன். “அதை இப்போது நாம் வென்றாகவேண்டும். அதுதான் நமது உடனடித்திட்டமாக இருக்கவேண்டும்.”

துரியோதனன் தலையை நிறைவின்மையுடன் அசைத்தான். “இளவரசே, நாம் அஸ்தினபுரியின் அரசை ஆள்கிறோம். நால்வகைப்படைகளையும் கையில் வைத்திருக்கிறோம். அவர்கள் ஏதிலிகளாக அயல்நாடுகளில் வாழ்கிறார்கள். இந்நிலையில் எந்தப்பூசல் எழுந்தாலும் நாம் நம் நலனுக்காக அவர்களை ஏய்க்க முயல்வதாகவே பொதுவினர் விழிகளுக்குத் தோன்றும். அவர்கள் விழைவது அந்தச்சித்திரம்தான்…” துரியோதனன் தத்தளிப்புடன் “ஆனால் நானே மனமுவந்து கொடுத்தால்தான் நாட்டைப்பெறுவேன் என்று சொன்னவன் தருமன் அல்லவா?” என்றான்.

“ஆம், அது உண்மை. அது அவருடைய அகவிரிவைக் காட்டுகிறது. அவர் எதையும் கொடுக்காமல் கொள்ள விழையவில்லை. ஆனால் யாதவ அரசி அதிலுள்ள அரசியல் இழப்பை அறிந்துவிட்டார். இன்றுவரை தருமனின் வல்லமை என்பது அவருக்கிருக்கும் மக்களாதரவு. அதை அளிப்பது அவரது அறநிலைப்பாடு. அரசை உவந்து அளிப்பதன் வழியாக நீங்கள் ஒரு படி மேலே செல்கிறீர்கள். அது தருமனை சிறியவனாக்கிவிடும். அதைத்தான் யாதவ அரசி தடுக்க நினைக்கிறார்.”

“இப்போது அவர் தனியாக இங்கு வந்து தங்கியிருப்பதே அஸ்தினபுரியில் பேசப்படும் செய்தியாகிவிட்டது” என்று கர்ணன் தொடர்ந்தான். “அவர் தனியாக வந்திருக்கிறார். இங்கே அரசரும் இல்லை. இளைய யாதவன் அவருக்குத் துணையாக வந்திருக்கிறான். அதன் பொருளென்ன? நாம் பங்கீட்டில் பெரும் அறப்பிழைகளை செய்கிறோம், அவர் அதைத் தடுக்க வந்திருக்கிறார் என்றுதான். இன்னும் சிலநாட்களில் அவர் நம்மிடம் கண்ணீருடன் மன்றாடிய கதைகளை நீங்கள் அஸ்தினபுரியின் தெருக்களில் கேட்கலாம்.”

“சீச்சீ” என துரியோதனன் முகம் சுளித்தான். “இத்தனை சிறுமையான நாடகங்கள் வழியாகவா நாம் அரசியலாடுவது?” கர்ணன் புன்னகைத்து “எப்போதுமே அரசியல் இழிநாடகங்கள் வழியாகவே நிகழ்ந்துள்ளது. யானைகளை நரிகள் வேட்டையாடிக் கிழித்துண்ணும் கதைகளால் ஆனது வரலாறு” என்றான். “கர்ணா, என்னால் இதில் ஈடுபட முடியாது. அவருக்கு என்ன வேண்டும்? அரசா, நிலமா, படையா, கருவூலமா? எதுவானாலும் அவர் கோருவது அனைத்தையும் அளிக்கிறேன். உரையாடலே தேவையில்லை… அதை அவருக்கு சொல்” என்றான்.

“அவருக்குத் தேவை ஒரு பூசல் மட்டுமே” என்றான் கர்ணன் புன்னகையுடன். “அதைமட்டும்தான் நீங்கள் இப்போது அளிக்கமுடியும்.” துரியோதனன் தளர்ந்து “இதற்கு நான் என்ன செய்வது?” என்றான். ”முடிந்தவரை நாமும் அந்நாடகத்தை ஆடுவோம்” என்று கர்ணன் சொன்னான். “யாதவ அரசியை நாம் குலச்சபையினர் கூடிய பேரவையிலன்றி வேறெங்கும் சந்திக்கலாகாது. நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் பிழையாக பொருள் அளிக்கப்படலாம். அவையில் அவர் கோருவதை ஏற்பது நாமாகவும் மறுப்பது குலங்களாகவும் இருக்கவேண்டும்.”

“குலங்கள் மறுக்கவேண்டுமே?” என்றான் துரியோதனன். “மறுப்பார்கள்” என்று கர்ணன் சொன்னான். “நான் அவர்களின் உள்ளங்களை கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறேன். தெற்கு குருநாட்டில் யாதவர்களின் செல்வாக்கே இருக்கும் என்ற ஐயம் பிறகுடியினருக்கு உள்ளது. அத்துடன் புதியநகரில் சென்று குடியேறுவதை தொல்குடிகள் விழைவதில்லை. ஏனென்றால் ஒரு குடியின் பெருமை பழைமையிலேயே உள்ளது. புதிய இடம் எதுவாக இருந்தாலும் அதன் ஈர்ப்புக்கு நிகராகவே அச்சமும் ஐயமும் இருக்கும். ஆகவே இங்குள்ள எளியநிலை யாதவர் சிலர் மட்டுமே சென்று குடியேறுவார்கள்.”

“தொல்குடி யாதவர் அஸ்தினபுரியை விட்டு வெளியேற விழையவில்லை என்பதை நான் விசாரித்தும் அறிந்துகொண்டேன். அவர்கள் வெளியேறவில்லை என்பதற்கு பிறிதொரு பொருளும் உண்டு. வெளியேற விழையாதவர்களே தொல்குடியினர் என்னும் வரையறை உருவாகிறது. ஆகவே சற்றேனும் செல்வமோ புகழோ உடைய எவரும் அஸ்தினபுரியை விட்டு செல்ல வாய்ப்பில்லை.” கர்ணன் புன்னகைத்து “அஸ்தினபுரியைவிட்டு வெளியேற விழையவில்லை என்பதனாலேயே அவர்கள் நம்மவர்களாக ஆகிவிடுவார்கள். இதற்காக நிற்கவேண்டிய பொறுப்பை அடைகிறார்கள். நாம் சொல்வதை அவர்கள் ஆதரிப்பார்கள்” என்றான்.

“அவையில் யாதவப்பெருங்குடியினரே யாதவ அரசியை மறுத்துப்பேசட்டும். அவர் கோருவதை எல்லாம் அளிக்க நாம் சித்தமாக இருப்போம். அதற்கு யாதவக்குடிகள் மறுப்பு தெரிவிப்பார்கள். பூசலிடுவது யாதவ அரசி என்று அவையில் நிறுவப்படவேண்டும்” என்று கர்ணன் தொடர்ந்தான். துரியோதனன் சலிப்புடன் “இச்சிறுமைகள் வழியாகத்தான் நாடாளவேண்டுமா? நிமிர்ந்து நின்று நம் விழைவையும் திட்டத்தையும் சொன்னாலென்ன?” என்றான்.

கர்ணன் “பகடையாடுபவர்கள் நிமிர்ந்து அமர்ந்து ஆடி எங்காவது பார்த்திருக்கிறீர்களா? அது குனிந்தும் பிறர் விழிநோக்கியும் ஆடவேண்டிய ஒன்று” என்றான். துரியோதனன் ”அதை நீங்கள் ஆடுங்கள்” என்றான். “நான் இனி அதை ஆடுவதாக இல்லை. இதுதான் அரசு சூழ்தல் என்றால் இது என் இயல்பே இல்லை. இதிலெனக்கு உவகையும் நிறைவும் இல்லை.” கர்ணன் “அரசி வந்தபின் நீங்கள் மாறிவிட்டீர்கள் இளவரசே” என்றான்.

பூரிசிரவஸ் ”மூத்தவரே, குந்திதேவி இங்கு வந்தது இங்குள்ள மணநிகழ்வுகளில் பங்குகொள்ளத்தான் என்றுதான் விதுரர் சொன்னார். அது யாதவரின் ஆணை. அதை ஏன் நாம் நம்பக்கூடாது? மணநிகழ்வுகளில் பங்கெடுக்கும் கடமை அவர்களுக்கு உண்டல்லவா?” என்றான். அவன் துரியோதனனை நோக்கி “மேலும் இளைய யாதவர் இந்தப்பூசலை உருவாக்கும் செயலை திட்டமிட்டிருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன். இங்கே இந்தப் பங்கீட்டை உருவாக்க அவர்தான் தூதுவந்தார். இப்புரிதல்களெல்லாம் அவரது ஆக்கம்… அதை அவரே குலைக்கமாட்டார்” என்றான்.

“ஆம், உண்மை. இளைய யாதவன் ஒருபோதும் பூசலை உருவாக்க எண்ணமாட்டான்” என்றான் துரியோதனன். “கர்ணா, நீ சொல்வது ஒருவேளை யாதவ அரசியின் திட்டமாக இருக்கலாம். கிருஷ்ணனின் திட்டம் அல்ல.” கர்ணன் மீசையை நீவியபடி விழிசரித்தான். பின்னர் நிமிர்ந்து “ஆம், அப்படியும் இருக்கலாம். இளைய யாதவனின் எண்ணம் யாதவ அரசி இங்கு வந்து விழவுகளில் கலந்துகொண்டு தன் மீது ஒரு நல்லெண்ணத்தை உருவாக்கவேண்டும் என்பதாக மட்டும் இருக்கலாம்” என்றான்.

“ஏழுவருடங்களில் இங்குள்ள யாதவக்குடிகள் அவர்களை மறந்துவிட்டார்கள். கதைகளில் வாழும் மானுடராகவே யாதவ அரசியும் பாண்டவர்களும் மாறிவிட்டார்கள். திடீரென்று முடிசூட்டு விழவில் வந்து நின்றால் இங்குள்ளவர்கள் அவர்களை தமராக ஏற்கத் தயங்கலாம், உடன் கிளம்புபவர்களும் பின்வாங்கலாம். அதன்பொருட்டே யாதவ அரசியை வரச்சொல்லியிருக்கிறான் இளைய யாதவன். ஆனால் யாதவ அரசி இங்கு வந்தபின் முயல்வது பூசலுக்காகவே. அதில் ஐயமில்லை…” கர்ணனை மறித்து பூரிசிரவஸ் “ஆனால்…” என்று சொல்லத் தொடங்க அவன் “பால்ஹிகரே, யாதவ அரசி பற்றி நான் நன்கு அறிவேன். அவரது உள்ளம் செல்லும் வழியை அறிந்துதான் சொல்கிறேன்” என்றான்.

“இப்போது என்ன செய்கிறார்கள்?” என்று துரியோதனன் கேட்டான். “காலையில் இளைய யாதவர் வந்ததுமே யாதவ அரசியை அழைத்துக்கொண்டு மகளிர் மாளிகைக்கு சென்றுவிட்டார். இப்போது பேரரசியுடன் இருக்கிறார்.” துரியோதனன் மெல்ல சிரித்து ”அவனைக் கண்டாலே அரண்மனைப்பெண்களுக்கு பித்து ஏறிவிடுகிறது” என்றான். “அன்னையும் துச்சளையும் பானுமதியும் அசலையும் எல்லாம் இப்போது உவகையுடன் இருப்பார்கள். பிற பெண்களுக்கும் இந்நேரம் களிமயக்கு ஏறியிருக்கும்.”

“இளைய யாதவனுடன் யாதவ அரசி சென்றிருப்பது நமக்கு நல்லதல்ல இளவரசே. யாதவ அரசியால் நம் அரண்மனை மணக்கோலம் கொண்டிருப்பதை தாளமுடியாது. அவரது முகம் அதை காட்டிக்கொடுத்துவிடும். ஆகவே அவர் அரண்மனைக்குச் செல்லட்டும் என நான் நேற்று எண்ணினேன். அவர் செல்ல மறுத்துவிட்டார். இன்று இளைய யாதவனுடன் செல்லும்போது அவனுடன் இருப்பதனாலேயே அவர் முகம் மலர்ந்திருப்பார். அவரது ஐயத்திற்கும் அச்சத்திற்கும் அடியிலுள்ள இனிய இயல்பு வெளியே வந்துவிடும். அவர்களை அரண்மனை மகளிருக்கு விருப்பமானவராக ஆக்கிவிட இளைய யாதவனால் முடியும்” என்றான் கர்ணன்.

“இதையெல்லாம் என்னிடம் சொல்லவேண்டியதில்லை. பெண்கள் என்ன எண்ணுகிறார்கள் என்று திட்டமிடுவதெல்லாம் என் பணி அல்ல” என்று சொல்லி துரியோதனன் எழுந்தான். “இளையவனை வரச்சொன்னேன்… அவனால் மெல்ல நடக்கமுடிகிறது.” அவன் கைதட்ட ஏவலன் வந்து நின்றான். “இளையவன் வருகிறானா?” ஏவலன் “மெல்லத்தான் அவரால் வரமுடிகிறது. வந்துகொண்டிருக்கிறார்” என்றான்.

“நான் இப்போது குழம்பிவிட்டேன். இவர்களின் வரவின் நோக்கமென்ன என்று முழுதறியவே முடியவில்லை” என்றான் கர்ணன். “அதை கணிகர்தான் சொல்லமுடியும் என்று தோன்றுகிறது.” துரியோதனன் “அவரையும் வரச்சொல்லியிருக்கிறேன். இதை நீங்களே திட்டமிடுங்கள். எனக்கு இந்த ஒவ்வொரு சொல்லும் கசப்பையே அளிக்கின்றது” என்று சொல்லி சாளரத்தருகே சென்று நின்றான். கர்ணன் பூரிசிரவஸ்ஸை நோக்கி புன்னகை செய்தான். அறைக்குள் அமைதி பரவியது. வெளியே மரக்கிளைகளில் காற்று செல்லும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

துரியோதனன் திரும்பி “கர்ணா, என்னுடைய நாட்டை பகிர்ந்துகொள்ள நான் ஒப்புக்கொண்டிருக்கிறேன். அதை என் கோழைத்தனமென்றா யாதவ அரசி எண்ணுகிறார்?” என்றான். கர்ணன் “இளவரசே, அவரது நாட்டை நீங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறார். அதை முழுமையாக வென்றெடுப்பது எப்படி என்று உள்ளூர கனவுகாண்கிறார். அதற்கு அன்று சொல்லவேண்டிய அனைத்து அடிப்படைகளையும் இன்றே உருவாக்கிக்கொள்ள திட்டமிடுகிறார். ஒருநாள் இந்திரப்பிரஸ்தம் நம் மீது படைகொண்டு வரும். அதை யாதவ அரசியே தூண்டுவார்” என்றான்.

“ஆனால் இன்று அவரது திட்டமென்பது முடிந்தவரை குடிகளை தன்னுடன் தெற்கு குருநாட்டுக்கு கொண்டுசெல்வது மட்டுமே. ஒரு பூசல் நிகழ்ந்தால் குடிகள் மீண்டும் இரண்டாவார்கள். இனப்பூசல் எழுந்தால் யாதவரனைவரும் ஒரேயணியில் நிற்பார்கள். அத்துடன் ஷத்ரியரல்லா சிறுகுடியினரில் அவர்மேல் கனிவு பெருகும்.” துரியோதனன் கசப்புடன் தலையை அசைத்து “இதைவிட நேரடியான தாக்குதலே மேல். அதை தெய்வங்கள் விரும்பும்” என்றான்.

ஏவலன் வந்து தலைவணங்க துரியோதனன் கையசைத்தான். கதவு திறந்து சகுனி உள்ளே வந்தார். கர்ணனும் பூரிசிரவஸ்ஸும் எழுந்து வணங்கினர். சகுனி துரியோதனனின் வணக்கத்தை ஏற்று வாழ்த்தி கையசைத்தபின் அமர்ந்தார். எலி நுழைவது போல ஓசையில்லாமல் கணிகர் உள்ளே வந்து கைகளால் காற்றைத்துழாவி நடந்து அறைமூலையில் இருந்த தாழ்வான இருக்கையில் சென்று அமர்ந்தார். மரக்கட்டை ஒலியுடன் துச்சாதனன் உள்ளே வந்தான். அவனைப்பிடித்து கூட்டிவந்த ஏவலர்கள் இருவர் மூச்சு வாங்கினர். அவன் உடல்பெருத்து வெளுத்திருந்தான். கன்னங்கள் சற்று பழுத்து தொங்கின. கண்களும் சாம்பல்நிறமாக இருந்தன. “அமர்ந்துகொள் இளையோனே” என்றான் துரியோதனன்.

துச்சாதனன் மூச்சுவாங்கியபடி உடல் கோணலாக நடந்துசென்று இருக்கையில் மெல்ல அமர்ந்து பெருமூச்சுவிட்டு வலிமுனகலுடன் கால்களை நீட்டிக்கொண்டு ஊன்றுகோல்களை ஏவலனிடம் நீட்டினான். அவன் அவற்றை ஓரமாக சாய்த்துவைத்துவிட்டு தலையணையை எடுத்து துச்சாதனனின் முதுகுக்குப் பின்னாலும் கையின் அடியிலும் வைத்தான். வலியில் பற்களை இறுக்கி கண்மூடி முனகியபின் துச்சாதனன் தலையை அசைத்து மீண்டும் பெருமூச்சுவிட்டான். கால்களை மிகமெல்ல அணுவணுவாக அசைத்து மேலும் நீட்டிக்கொண்டபின் விழிகளைத் திறந்தான். அவன் உடல் வியர்த்துவிட்டிருந்தது.

ஓர் உள்ளுணர்வு எழவே பூரிசிரவஸ் திரும்பி கணிகரை பார்த்தான். விழிகளை இடுக்கியபடி அவர் துச்சாதனனை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். அவன் நோக்குவதையே அறியவில்லை. அவர் பிறர் நோக்கை அறியாதிருக்கும் தருணங்களே இருப்பதில்லை என்பதை எண்ணியபோது அது வியப்பளித்தது. அவன் விழிகளை விலக்கி சகுனியை நோக்கினான். அவர் சாளரத்தை பார்த்துக்கொண்டிருந்தார். தாடியில் ஒளிபரவியிருந்தது.

“நாங்கள் யாதவ அரசியின் வரவைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம் கணிகரே” என்றான் துரியோதனன். கணிகர் “வந்திருப்பது இளைய யாதவன் மட்டுமே. பிறர் அவன் கையில் களிப்பாவைகள்” என்றார். “அவனைப்பற்றி மட்டும் பேசுவோம்.” கர்ணன் “சரி. அவர்கள் இங்கு என்னசெய்வதாக இருக்கிறார்கள்?” என்றான். “ஒன்றும் செய்யப்போவதில்லை. ஒன்றும் செய்யவும் முடியாதென்று அவன் அறிவான். ஏனென்றால் பிரிவினைக்கான பணிகளனைத்தும் முடிந்துவிட்டன. ஒவ்வொரு செயலுக்கும் அவர்களிடம் எழுத்துவடிவ ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதை நான் காந்தாரரிடம் பலமுறை வலியுறுத்தியிருந்தேன்.”

“அப்படியென்றால் ஏன் அவனும் யாதவ அரசியும் முன்னரே வரவேண்டும்?” என்றான் துரியோதனன். “நான் சொன்னேனே, வெறுமனே இங்கு இருப்பதற்காக” என்றார் கணிகர். “ஆனால் பலசமயம் வெறுமனே இருப்பதே பெரிய செயல்பாடாக ஆகிவிடும்.” அவர் தன் பழுப்புநிறப் பற்களைக் காட்டி சிரித்து “நாம் இங்கு கூடியிருப்பதே ஒன்றும் செய்யாமல் அவர்களிருப்பதற்கு என்ன எதிர்வினையாற்றுவது என்பதை ஆராயத்தானே? இந்தக்குழப்பமும் அச்சமும்தான் அவர்கள் உருவாக்க எண்ணியது. இனி நாம் இயல்பாக எதையும் செய்யமுடியாது. நமது எண்ணங்களில்கூட எச்சரிக்கை எழுந்துவிடும். அவ்வெச்சரிக்கையாலேயே நாம் சூழ்ச்சிக்காரர்களின் விழிகளையும் மொழிகளையும் அடைவோம். பிழைகள் செய்வோம். அவன் எண்ணியது பாதி நிறைவேறிவிட்டது” என்றார்.

“நான் என் ஒற்றர்களிடம் இன்று பேசினேன். நேற்று யாதவ அரசி இங்கு வந்தபோது எவருமே அவரை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. ஆனால் இன்று காலை அவர் வந்த செய்தி நகரெங்கும் பரவிவிட்டது. தெருக்களில் அதைப்பற்றிய பேச்சுக்கள் தொடங்கிவிட்டன. நாளைக்குள் அவை நுரையெனப்பெருகிவிடும்” என்று கணிகர் தொடர்ந்தார். “நாட்கணக்காக இங்கே மணவிழவுகள் நிகழ்கின்றன. அந்தக் களிமயக்கு மக்களை பிடித்தாட்டுகிறது. அதை அவன் அறிந்தான். மீண்டும் நாட்டுப்பிரிவினை பற்றி மக்கள் பேசவேண்டும் என திட்டமிட்டான். அதை நிகழ்த்திவிட்டான். ஏனென்றால் களியாட்டுக்கு நிகரான கேளிக்கைதான் வம்பாடலும். அதை அவனைவிட அறிந்தவன் எவன்?”

“இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்? துச்சளையின் மணவிழா முடிந்த ஏழாவதுநாள் முடிசூட்டுவிழா அல்லவா? மணவிழவுக்கு வரும் மன்னரும் பெருங்குடியினரும் வணிகரும் முடிசூட்டு விழவு வரை இங்கிருப்பார்கள். ஆலயவழிபாடுகளும் மூத்தார் நோன்புகளும் தொடர்ந்து நடக்கும். அனைத்தும் இணைந்து ஒற்றைக் கொண்டாட்டமாகவே அமைந்துவிடும். பாண்டவர் நகர்புகுவதும் திரௌபதியின் வருகையும் அக்களியாட்டத்தின் பகுதிகளாகவே இருக்கும். அப்படியே நாடு பிரியும் நிகழ்வுக்குச் செல்லும்போது மக்கள் களைத்திருப்பார்கள். நாட்டுப்பிரிவினை குறித்த அரசரின் ஆணை இவ்விழவுகளின் எதிர்பார்த்த இறுதியாக அமையும். அது சோர்வூட்டும் ஒரு சிறு நிகழ்வுமட்டுமே. மிக எளிதாக அது நடந்துமுடியும். அதை யாதவன் விரும்பவில்லை.”

“ஏன்?” என்றான் துரியோதனன். “ஏனென்றால் அப்படி எளிதாகப்பிரிந்தால் பாண்டவர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் சிலருமன்றி எவரும் அவர்களுடன் செல்லப்போவதில்லை. யமுனைக்கரையில் இருக்கும் யாதவச்சிற்றூர்களுக்குச் சென்று குடிலமைத்துத் தங்குவதற்கு இங்குள்ள பெருங்குடியினர் செல்வார்களா என்ன?” என்றார் கணிகர். “ஆனால் அவர்கள் அங்கு ஒரு பெருநகரை அமைக்கவிருக்கிறார்கள். துவாரகைக்கு இணையான நகர்” என்றான் பூரிசிரவஸ்.

“இளையோனே, துவாரகையில் இன்றும் பாதிக்குமேல் குடிகள் அயல்நாட்டு வணிகர்களே. அது கடல்துறைநகர். இந்திரப்பிரஸ்தம் ஆற்றங்கரையில் அமையும் நகரம். அது துறைமுகமாக எழுந்தபின்னரே வணிகர்கள் வருவார்கள். அந்நகரை கட்டுவது யார்? சிற்பிகள் தச்சர்கள் கொல்லர்கள் தேவை. அனைத்தையும் விட முதன்மையான ஒன்றுண்டு, ஒரு நகர் அமைக்கப்பட்ட பின் அங்கே சென்று குடியேற முடியாது. குடியேறியபின்பு அங்குள்ள தேவைகளுக்கு ஏற்பத்தான் அதை அமைத்துக்கொள்ளவேண்டும். தேனீ கூடுகட்டுவதுபோல. அதற்கு அவர்களுக்கு குடிகள் தேவை.”

”செய்வதற்கொன்றே உள்ளது. அவர்கள் எதை தவிர்க்க நினைக்கிறார்களோ அது நிகழட்டும். இரவும் பகலும் நகரம் கொண்டாடட்டும். ஒருகணம் கூட காற்று ஓய்ந்து கொடி தொய்வடையலாகாது” என்றார் கணிகர். “ஆனால் ஏற்கெனவே யாதவ அரசியின் வருகை ஊரலரை உருவாக்கிவிட்டது என்றீர்கள்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், ஆனால் அதை அவர்களைக் கொண்டே நாம் வெல்லமுடியும். இங்கு நிகழும் களியாட்டில் அவர்களையும் ஒரு பகுதியாக ஆக்குவோம். யாதவனும் யாதவ அரசியும் இங்கு வந்ததையே ஒரு கொண்டாட்டமாக ஆக்குவோம். ஒருநாளில் இந்த அலர் மறைந்துவிடும்.”

“இதுவும் ஒரு போர் என்பதை நாம் மறக்கவேண்டியதில்லை” என்று கணிகர் தொடர்ந்தார். “இப்போரில் முதலில் நாம் வென்றிருக்கிறோம். அஸ்தினபுரியை நாம் அடைந்தோம். நம்மிடம் பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய படைகள் உள்ளன. சிந்து நாடும் நம்முடன் இணையும்போது நாம் நிகரற்றவர்கள். ஐயமே தேவையில்லை. அவர்கள் ஒரு நகரை உருவாக்கி அங்கே வணிகத்தைப்பெருக்கி படைகளை அமைத்து வலுப்பெறுவதென்பது ஒரு கனவு மட்டுமே. அதை அவர்கள் அடைவதை நம்மால் எளிதில் தடுக்கமுடியும். இப்போது நாம் செய்யவேண்டியது அவர்களுடன் செல்லும் குடிமக்களை முடிந்தவரை குறைப்பது மட்டுமே.”

”அப்படி நம்மால் குறைக்கமுடிந்தால் அவர்களுக்கு வேறுவழியில்லை. அங்கே பாஞ்சாலர்களையும் மதுராபுரி மக்களையும் குடியேற்றவேண்டும். அப்படிச்செய்தால் அதைக்கொண்டே தெற்கு குருநாடு அயலவரின் மண் என்னும் எண்ணத்தை இங்கே நம் மக்களிடம் உருவாக்கிவிடமுடியும். அந்நகரம் கட்டி முடிக்கப்படும்போது அவர்களின் முழுச்செல்வமும் செலவழிந்திருக்கும் கணத்தில் மிக எளிதாக ஒரு படையெடுப்பு மூலம் அவர்களை வென்றுவிடமுடியும். பாலூட்டும் வேங்கையைக் கொல்வது எளிது. பாலுண்ணும் குழந்தைகள் வளர்ந்து அன்னை அவற்றை உதறும் கணம் மிகமிக உகந்தது. அன்னை சலித்திருக்கும். உடல் மெலிந்திருக்கும். அன்னையைக் கொன்றபின் குழவிகளையும் நாம் அடையமுடியும்.”

அவர் முடித்தபின்னரும் அந்தச் சொற்கள் அகத்தில் நீடிப்பதாக பூரிசிரவஸ் எண்ணினான். அவர் சொன்ன விதத்தை எண்ணி வியந்துகொண்டான். ஒரு கருத்தைச் சொன்னபின் மிகச்சரியான உவமையை இறுதியில்தான் அமைக்கவேண்டும் என குறித்துக்கொண்டான். அங்கிருந்த அத்தனைபேரும் அந்த வேங்கையைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். உடனே பெண்வேங்கை என்பதில் உள்ள உட்குறிப்பு அவனுக்குத் தெரிந்தது. முதல்முறையாக அவனுக்கு ஒன்று தோன்றியது, கணிகர் உளம்திரிந்து அரசு சூழ்தலுக்குள் வந்த கவிஞர். கவிதையினூடாக ரிஷியாக ஆகியிருக்கவேண்டியவர்.

அவனால் அவரை நோக்காமலிருக்க முடியவில்லை. சொல்லி முடித்ததுமே முழுமையாக தன்னை அணைத்துக்கொண்டு ஒடுங்கிவிட்டிருந்தார் அவர். சகுனி தாடியை வருடி தன் புண்பட்ட காலை மெல்ல நீட்டி “கணிகர் சொல்வதையே செய்வோம் சுயோதனா. நாம் செல்லவேண்டிய சிறந்த பாதை அதுவே” என்றார். “பாண்டவர் நகர்புகுதலுக்கும் மணநிகழ்வுக்கும் பேரரசர் வந்தாகவேண்டுமெனச் சொல்லி செய்தி அனுப்பினேன். வர அவர் ஒப்புக்கொண்டிருப்பதாக விப்ரரின் செய்தி வந்தது” என்றார்.

பூரிசிரவஸ்ஸை நோக்கித் திரும்பி “நீர் இளைய யாதவனிடம் ஒரு செய்திகொண்டு செல்லும்” என்றார் சகுனி. “ஆணை” என்றான் பூரிசிரவஸ். “நாளை மறுநாள் சுக்லசதுர்த்தி. அவைகூட ஏற்றநாள். குலத்தலைவர்களுக்கு முறைப்படி அறிவிப்புசெல்லட்டும். அஸ்தினபுரியின் ஆட்சிப்பேரவையை கூடச்செய்வோம். அஸ்தினபுரியின் இளவரசிகளுக்கு வாழ்த்தளிக்க வந்துள்ள யாதவ அரசிக்கும் இளைய யாதவனுக்கும் அஸ்தினபுரியின் அரசவையும் குலச்சபையும் இணைந்து ஒரு பெருவரவேற்பை அளிக்கட்டும். அதையொட்டி களியாட்டு மேலும் தொடரட்டும்” என்றான். பூரிசிரவஸ் தலைவணங்கினான். “இது அவர்கள் நமக்குச்செய்ததன் மறுமொழிதான். இச்செய்தி ஒன்றும் முதன்மையானது அல்ல. நீர் அவர்களுடனேயே இரும். அது அவர்களை கொஞ்சம் இயல்பழியச்செய்யட்டும்” என்றார்.

பெருமூச்சுடன் துரியோதனன் “இன்னும் எத்தனைநாள்? இச்சிறுமைகளைக் கடந்து எப்போது இந்நாட்டை ஆளப்போகிறேன்?” என்றான். “இளையோனே, நீ மதுவருந்தலாமா?” துச்சாதனன் “அருந்தலாம் மூத்தவரே” என்றான். துரியோதனன் கைகளைத் தட்டி ஏவலனை அழைத்தான்.

முந்தைய கட்டுரைஜெகே- கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைஜேகெ- கடிதங்கள் 3