ஆலமர்ந்த ஆசிரியன்

4

1991இல் நான் விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்த நாட்கள். நானும் சென்னை நண்பர்கள் சிலரும் ஜெயகாந்தனைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். மடம் என நண்பர்களால் அழைக்கப்பட்ட அந்த மூன்றாவது மாடிக்கொட்டகையில் ஜெயகாந்தன் வருவதை எதிர்பார்த்து ஏற்கனவே நால்வர் காத்திருந்தனர். சாம்பல் படிந்த பழைய நீண்ட மேஜைக்கு முன் ஜெகெ அமரும் பழைய மரநாற்காலி. அதில் அவரது பிரதிநிதி போல ஒரு பழைய துண்டு கிடந்தது. அவர் முந்தையநாள் போட்டுவிட்டு போனது.

அங்கிருந்தவர்கள் அவரது இன்மையையே ஓர் இருப்பாக உணர்ந்துகொண்டிருந்தனர். நாங்கள் அமர்ந்துகொண்டோம். எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொள்ளவோ பேசவோ தோன்றவில்லை. ஜெயகாந்தன் மட்டும்தான் அங்கே முக்கியமானவர் என்பது போல. விசித்திரமாக இருந்தது அது. ஆனால் உண்மையில் கோயிலில் வரிசையில் நின்றிருக்கும்போது நாம் ஒருவரை ஒருவர் அறிமுகம்செய்துகொள்கிறோமா என்ன? தெரிந்தவரே என்றாலும் ஒரு மெல்லிய புன்னகை தலையாட்டல், அவ்வளவுதானே?

ஜெயகாந்தன் வந்தார். சட்டை போடாத உடம்பு தோளில் ஒரு துவைத்த துண்டை நீளமாகப் போட்டிருந்தார். அவரைக்காத்து அமர்ந்திருந்தவர்கள் என்றாலும் எவருமே அவரைக்கண்டு எழுந்து நிற்கவில்லை. முகமன் ஏதும் சொல்லவில்லை. நானும் நண்பரும் மட்டும் எழுந்தோம். நண்பர் என்னை அறிமுகம் செய்துகொண்டார். ஜெயகாந்தன் நெருக்கமான ஒருவரைப்போல புன்னகைத்து “ரொம்ப சந்தோஷம். கே.எஸ் உங்களைப்பத்தி அடிக்கடி சொல்லிட்டிரு ப்பார்” என்றார். அவர் தன் இருக்கையில் அமர்ந்ததும் நானும் அமர்ந்தேன். கொஞ்சநேரம் எவரும் எதுவும் பேசவில்லை. ஒருவர் தும்மி வேட்டியால் மூக்கைத் துடைத்துக்கொண்டார்.

ஜெயகாந்தன் “சென்னையிலே எங்க தங்கியிருக்கீங்க?” என்று சாதாரணமாகப் பேச்சை ஆரம்பித்தார். அந்த அமைதியைக் கலைப்பதற்காக மட்டும்தான் என எனக்கும் தெரிந்தது. நானும் சென்னைக்கு வந்தது, நண்பர்களுடன் தங்கியிருப்பது, என் வேலை, குழந்தைகள் என்று பேசிக்கொண்டிருந்தேன். என் நண்பர் அன்பு நான் சுந்தர ராமசாமிக்கு நெருக்கமானவன் என்று சொன்னார் . ஜெகே முகம் மலர்ந்து “ஆம் நாகர்கோயில். இவரோட உச்சரிப்பை கேட்டதுமே அவரை நினைச்சேன்” என்றார். “இல்லியே, அவரோட உச்சரிப்பு வேறமாதிரில்ல இருக்கு” என்றேன். “அது உங்களுக்கு. எங்களுக்கு எல்லா கன்யாகுமரிமாவட்டத்துக்காரங்களும் ஒரே மாதிரித்தான் பேசுறதா தோணும். ஒரு மென்மை. கொஞ்சம் நாணத்தோட பேசுறது போல”

ஜெயகாந்தன் சிரித்தார் “தமிழ் இயல்பிலேயே ஆண்மையான மொழி. அழகான ஒரு ஆணுக்கு மகள் அவன் சாயலில் இருந்தால் பேரழகியாக இருப்பாள். அதுதான் மலையாளம்” என்றார். ஓடும் குதிரையுடன் ஊடவே ஓடிச்சென்று அதன் சேணத்தை மிதித்து வேகத்திலேயே தொற்றி ஆரோகணிப்பது போல உரையாடலில் ஏறிக்கொண்டார்.

“மலையாளத்தை நான் விரும்புறதுக்கு எவ்ளவோ காரணங்கள். நாங்கள் ஆசானாகக் கொண்ட எத்தனையோ மாமனிதர்கள் அங்கிருந்து வந்திருக்காங்க. முக்கியமா வி பி சிந்தன். யார் எங்க மலையாளம் பேசினாலும் அவரோட முகம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு மனமே முகமா சிரிக்கணும்னா மனம் சுத்தமா இருக்கணும். பாருங்க முகமும் உடம்பும் அழகில்லாத சிந்தனையாளர்கள் உண்டு. ஞானிகள் உண்டு. கண்ணும் சிரிப்பும் அழகா இல்லாத சிந்தனையாளர்களே கிடையாது. ஏன்னா சிரிப்புங்கிறது என்ன? சிந்துறது. சிந்துறதுக்குப்பதிலா ஒரு துளிகூட மிச்சமில்லாம மொத்தமா கவுத்து ஊத்தினா அதான் சிந்தனையாளனோட ஞானியோட சிரிப்பு”

“வி பி சிந்தனை ஒரு ஞானின்னு சொல்லலாமா? சொல்லலாம். ஏன்னா மக்கள்சேவைங்கறது யோகம். கர்ம யோகம். யோகம் கனிந்தால்தான் ஞானம்.” அந்த இடம் வந்ததும் அவரது உரைநடை மாறியது. அதுவரை எங்களிடம் பேசிக்கொண்டிருந்தவர் காலத்திடம் பேசத்தொடங்கினார் “ஞானம் என்பது அறிவதற்குரியது அல்ல. அடைவதற்குரியது. ஞானம் எய்துதல் என்றுதான் நம் மரபு சொல்கிறது. அறிவுடையோர் ஆவதறிவார். ஆவது என்றால் என்ன? எது இங்கே இவற்றையெல்லாம் ஆட்டிவைக்கிறதோ அது. அதுவே இதுவாக இங்கு திகழ்கிறது.அனைத்தும் ஆவது அது.அதை அறிந்தவன்அறிவுடையோன். அவனை அறிஞன் என்று நம் மரபு சொல்லவில்லை. படிவன் என்றும் முனிவன் என்றும் சொன்னது”

பருந்து வானிலேறுவதன் அழகு. அது சிறகையே அசைப்பதில்லை. அதை விண்ணில் ஒரு கண்ணுக்குத் தெரியாத சரடு கட்டிச்சுழற்றிக்கொண்டிருப்பதுபோலத் தெரியும். அது பறப்பதில்லை மிதக்கிறது. சுழற்சியின் ஒரு புள்ளியில் மிக இயல்பாக மேலேறுகிறது. மேலேறுவதற்காக அது எதையும் செய்வதில்லை. பறப்பதற்காகக்கூட அது எதையும் செய்வதில்லை. அதை மேலேற்றுவது விண்ணகமாக மாறிநின்றிருக்கும் காற்று ஒளி. சின்னஞ்சிறு பறவைகள் எவ்வளவு சிறகடிக்கின்றன. எவ்வளவு பரிதவிக்கின்றன. சிறகசைக்காத பறவையின் உயரத்தை அவை அறிவதேயில்லை.i

அவரது பேச்சைக்கேட்டுக்கொண்டே இருந்தேன். நான்ஒருபோதும் சொற்களை மறப்பவன் அல்ல. காலத்தில் எங்கோ அச்சொற்கள் பதிவாகப்போகின்றன என்று நான் அறிவேன். ஆனால் ஜெகெ அதை அறியமாட்டார். ஏனென்றால் அவருக்கு என்னைத்தெரியாது. என் எழுத்துக்களில் ஒருவரியைக்கூட அவர் அதற்கு முன்னர் வாசித்ததில்லை. என்னைப்பற்றிய கருத்துக்களை மட்டும் அவர் கேட்டு அறிந்திருக்கிறார். ஓர் எளிய மதிப்பு மட்டும் என்மேல் இருந்தது என நினைக்கிறேன். அது அவரது நண்பர்கள் வழியாக வந்தது. அங்கு அவர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கவில்லை. தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு எவரும் கேட்கவேண்டிய தேவை உண்டு என்று தோன்றவில்லை.

ஜெயகாந்தன் எழுத்தை நிறுத்தி அப்போது பத்தாண்டுகளாகிவிட்டன. 86 வாக்கில் வந்த காற்றுவெளியினிலே தான் அவரது கடைசிப் புனைகதை என்று நினைக்கிறேன். அவரிடம் ஏன் எழுதவில்லை என்று கேட்டதற்கு எழுதவில்லை என்று யார் சொன்னது? முன்பு தாளில் எழுதினேன். இப்போது அதை விட்டுவிட்டேன் என்று சொன்னார் என்பார்கள். உள்ளத்தால் இசையை பாடியதுமே நிறைவுகொள்கிற பாடகன் போல ஆகிவிட்டிருந்தார். அவருக்கு பொதுவாக, எங்குமெனச் சொல்ல ஏதுமில்லை என்று ஆகிவிட்டிருந்தது. ஆனால் ஒவ்வொருநாளும் அவர் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். .

எப்போதும் அவர் மானுடத்திரளுடன் பேசிக்கொண்டிருந்தார். அவரது புனைவுலகின் கலைக்குறைபாடாக இன்று சொல்லப்படுவதே அதன் அறைதலோசைதான். ஆனால் அந்தக் குறைபாடு அல்லது சிறப்பியல்பு மானுடத்துடன் பேசிய அத்தனை கலைஞர்களுக்கும் உண்டு. அந்தரங்கம் நோக்கிப் பேசிய பெருங்கலைஞர்கள் இலக்கியத்தில் உண்டு. வெளியே தன் விழிதொடும் தொலைவுவரை பெருகியிருக்கும் சமகாலப் பெருந்திரளை நோக்கி பேசிய பெருங்கலைஞர்களும் உண்டு. தஸ்தயெவ்ஸ்கி தன்னுடன் பேசிக்கொண்டவன். கார்க்கி மக்களுடன் பேசியவன். ஷெல்லியை, வால்ட் விட்மனை, பாப்லோ நெரூதாவை அந்த ஓசையை ஏற்றுக்கொண்டுதான் நாம் மதிப்பிடுகிறோம்

ஜெயகாந்தன் தன் வாழ்நாளில் ஒரு பேரியக்கமாக இருந்தார். அவர் பெயர்சொல்லி சிந்தனை என்றால் என்னவென்று அறிந்த ஒரு தலைமுறை இருந்தது, அவர்களை அவர் சீண்டினார். கொந்தளிக்கச் செய்தார். ஆழ்ந்துபோகவைத்தார். பெருந்திரளாக அவர் முன் கூடி நின்ற ஒவ்வொருவரும் அவரை அந்தரங்கமாகவே அறிந்துகொண்டனர். அவருடன் தனிப்பட்ட உரையாடலையே நிகழ்த்தினர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் வந்து அவருக்கு இந்தப்பெருக்கு அளித்த பாணியை செய்துமீள்கிறார். பாரதிக்குத் தொடங்கிவைத்த பணி. ஜெயகாந்தனுக்கு அதை மக்களிடம் கொண்டுசெல்லும் பணி.

தன்னுள் என, தான் மட்டுமே என அமர்ந்து பேசும் ஜெயகாந்தனை நோக்கிக்கொண்டிருந்தேன். மிகப்பெரிய போஸ்டர் பாணி ஓவியம் அவருக்குப்பின்னால் இருந்தது. அதில் ஜெயகாந்தன் தடித்த கொம்புச்சட்ட கண்ணாடி அணிந்து தலைகீழ் ப வடிவ மீசையுடன் கிருதாவுடன் பைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார். அதன்முன் அவரது மிகச்சிறிய உண்மைமுகம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது. அது ஒரு குறியீடு என்று தோன்றியது. நான் அதைப்பார்ப்பதைக் கண்டு “அது பலவருஷம் முன்னாடி கொஞ்சம் நண்பர்கள் கொண்டுவந்து தந்தது. நல்ல கெட்டியான அட்டை. சுவருக்கு ஆகுமே என்று வைத்தேன்’ என்றார்.

அந்த ஜெயகாந்தன் தமிழகம் அறிந்த முகம். வங்கச்சாயல் கொண்டது அது.. ஐரோப்பியச்சாயல் என்றும் சொல்லலாம்.. செருக்கும் சீற்றமும் கொண்ட தோரணை.. எங்கோ இருந்து இங்கு நோக்கும் பார்வை. அதன் அருகே அமர்ந்திருக்கும் முகம் முற்றிலும் வேறு. அது ஒரு தமிழ் முதியவரின் கனிந்த முகம். அந்தக்காலத்தின் பகைப்புலத்தில் அவரை பார்த்துக்கொண்டிருந்தேன்.

அந்த ஜெயகாந்தன் தான் நான் 1976இல் என் பத்து வயதில் அறிமுகம் செய்துகொண்ட ஆசிரியன் முழுக்கோட்டில் எங்கள் ஆரம்பப்பள்ளி வளாகத்தில் அன்று பேட்மிண்டன் விளையட்டு நிகழும். சென்னையில் இருந்து வந்த ஓர் இளைஞர் அதில் பங்குகொண்டார். ரூபன் என்று பெயர். ஆசிரியர் பயிற்சி முடித்து வேலைக்குச் சேர்ந்திருந்தார். அவரிடமிருந்துதான் நான் ஜெகெ என்ற பெயரை கேட்டறிந்தேன். ஜெயகாந்தனை அவர் அப்படித்தான் சொல்வார். ஜெயகாந்தன் அவருக்கு ஒரு மனிதன் அல்ல. அவர் வாழவிரும்பிய உலகத்தின் பிரச்சாரகன்.. அவர் புகுந்து வெளியேற விரும்பிய வாயில். “வெளியே போன்னுதான் அவரு சொல்றார், வெளியே போய் காத்தும்மழையும் அடிச்சு செத்தாலும் சரிதான். உள்ள உக்காந்திருக்காதேன்னு சொல்றார்”

ஜெயகாந்தனின் அனைத்து நூல்களையும் அவர் பலமுறை வாசித்திருந்தார். ”வெள்ளம் வந்தபின்னால் ஊர் மாறிவிடும். அதேபோலத்தான் ஜெயகாந்தனை வாசிப்பது” என்று சொன்னார். அவரிடமிருந்து நான் ஜெயகாந்தனின் முதல் நாவலை வாங்கி வாசித்தேன். பாரிஸுக்குப்போ. அதன் கதாநாயகன் என்னை முழுமையாக ஆட்கொண்டான். என்ன ஒரு வசீகரமான ஆளுமை. சாரங்கன். சாரங்கம் என்றால் ஒரு பறவை. இனிய குரலுடையது. அவன் பாரீஸிலிருந்து பறந்துவந்திருந்தான்.

பாரீஸ் அதில் ஒரு குறியீடு. ஜெயகாந்தனை வெற்று இடதுசாரி என்பவர்கள் அந்த நாவலை சரியாகப்புரிந்துகொள்ளாதவர்கள். அந்த நாவலை இன்றுவரை தமிழில் யார்தான் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்? அது பிரபல இதழ்களின் வாசகர்களுக்கானது என்பதனாலேயே அதை சிற்றிதழாளர்கள் கூர்ந்து வாசிக்கவில்லை. பிரபல இதழ்களின் வாசகர்களோ எதையுமே கூர்ந்து வாசிப்பவர்கள் அல்ல. ஜெயகாந்தனின் புனைவுகளின் மீது ஓர் ஒருங்கிணைந்த பார்வை விழுவதற்கு இனியாவது தருணங்கள் அமையவேண்டும்.

பாரீஸுக்குப்போ நாவலில் பாரீஸ் என்பது நவ ஐரோப்பாவின் குறியீடு. உலகத்துக்கே தனிமனித சுதந்திரத்தையும் மகிழ்ச்சி என்ற மானுட இலட்சியத்தையும் அறைகூவிய ஒரு பெரும்பண்பாட்டின் அடையாளம் அது. அமெரிக்காவுக்கு சுதந்திரதேவி சிலையை அளித்த நாகரீகம் அது. உண்மையில் ஜெயகாந்தன் தவபூமியாக கண்ட சோவியத் ருஷ்யாவின் முன்னோடிச்சிந்தனையாளர் அனைவருக்குமே பாரீஸ்தான் கனவுநிலம். அங்கிருந்தே அவர்கள் தங்கள் மிகச்சிறந்த விதைகளை பெற்றுக்கொண்டனர். மார்க்ஸியத்தின் சாராம்சமாக உள்ளது ஐரோப்பாவின் பண்பாட்டு மறுமலர்ச்சி. அந்த வசந்தத்தின் இறுதி மலர் மார்க்ஸியம். அதன் மடித்தொட்டில் பாரீஸ்தான். “நாங்களெல்லாம் பாரீஸ் என்றதுமே பாரீஸ் கம்யூன் என்று நினைக்க பயிற்றுவிக்கப்பட்டவர்கள்” என்றார் ஜெயகாந்தன் பெருமிதத்துடன் “அங்கேதான் இந்தநூற்றாண்டின் ஞானம் மூன்று சொற்களாக பிறந்தது. சமத்துவம் சுதந்திரம் சகோதரத்துவம். மார்க்ஸ் லண்டனில் இறந்திருக்கக் கூடாது. அவரது கல்லறை பாரீஸில் அமைந்திருக்கவேண்டும்”.

அங்கிருந்து வருகிறான் சாரங்கன். ஆனால் அவன் ஓர் இசைக்கலைஞன். ரோமெய்ன் ரோலந்தை, விக்தர் யூகோவை, சார்த்ரை உருவாக்கியது பிரெஞ்சு கலாச்சாரம், செசானை, வான்காவை உருவாக்கியது பிரெஞ்சுக்கலாச்சாரம். ஆனால் ஜெயகாந்தன் அதன் பண்பாட்டின் உச்சமாக, அதன் முதன்மை அடையாளமாகக் கண்டது மேற்கத்திய இசையை. உண்மையில் பிரான்ஸ் இசையின் விளைநிலம் அல்ல. ஜெர்மனிதான் மேற்கத்திய இசையின் விளைநிலம். ஆனால் சாரங்கன் இசையின் வழியாகத்தான் பிரான்ஸை அறிந்தான்.

அது ஏன் என்று அந்நாவலே சொல்கிறது. இலக்கியத்தைவிட நுண்மையானது ஓவியம். அதைவிட நுண்மையானது இசை. பாரீஸ் இசையின் நிலம். நளினமானது. பாரீஸ் ஒரு பெண் என்று ஜெயகாந்தன் சொன்னார். நடனமாடத்தகுந்த இடையும் செந்நிறமான கூந்தலும் நீலக்கண்களும் கொண்ட பெண்ணாக. இல்லாவிட்டால் ஒயினாக.அந்த பெண்ணின் மொழி இசையாகவே இருக்கமுடியும். ஒயின் இசையின் திரவம். இசைவழியாக ஒயின்வழியாக மட்டுமே பாரிஸை அறியமுடியும்.அல்லது ஜெயகாந்தன் பாரீஸ் என்று கண்டது அதுதான்

அந்த நுண்ணுணர்வுதான் சாரங்கன் கற்றுக்கொண்டது. அது அவனுக்குள் கனிந்திருக்கிறது. நீரூற்றுபோல அந்த கனிவின் இசை அவனுக்குள் ஊறிக்கொண்டிருக்கிறது. அவன் இந்தியா திரும்புகிறான். இங்கே அவன் பார்ப்பது எதை? மிக அற்புதமாக அதை வடிவமைத்திருக்கிறார் ஜெகே. தொன்மையான ஒரு பாரம்பரியம். அதன் மகத்துவம் மிக்க கலை. அதன் மதம் நம்பிக்கை உணர்ச்சிநிலை அனைத்துமே சென்று குவிந்தது என்றால் இசையில்தான். நம் இசை என்பது ஒலிவடிவமான கோயில்.

ஆனால் ஆசாரமாக மாறி அது இறுகியிருக்கிறது.. களிமண் நிலத்துக்கு ஒரு தன்மை உண்டு. எங்களூர் வயல்கள் களிமண் நிலம்தான். வேறெந்த மண்ணைவிடவும் அதுதான் நீரில்லாமலானால் இறுகும். அப்படியே பாறை போல ஆகிவிடும். வெட்டினால் மண்வெட்டி திருப்பியடிக்கும். மழை பலவருடங்களாகப் பெய்யாவிட்டால் பாறையாகவே ஆகிவிடும். களிமண்ணில் பல லட்சம் வருடங்களுக்கு முன் சிக்கிய மரங்களும் பறவைகளும் எல்லாம் அதனுடன் சேர்ந்து பாறையாகிவிட்டிருக்கின்றன. நம் பண்பாட்டில் சிக்கிக்கொண்ட கலையும் இலக்கியமும் தத்துவமும் அனைத்தும் அப்படி ஆகிவிட்டிருக்கின்றன. வெறும் தடங்கள். விழிக்கு உயிருள்ளவை. தொட்டால் கல்லாகிவிட்டவை.

சாரங்கனின் தந்தை களிமண் இறுகிய பாறை. அவருடைய இசைக்கும் சாரங்கனின் இசைக்கும் என்ன வேறுபாடு? பாரிஸுக்குப்போ என்றநாவலை அந்தக் கேள்விகளை எழுப்பாமல் வாசித்து உள்வாங்க முடியாது. சாரங்கனின் இசைக்குப்பின்னால் ஒரு கனிவு உள்ளது, நவ ஐரோப்பாவின் கனிவு. மனிதாபிமானம் என்றும் விடுதலை என்றும் சமத்துவம் என்றும் அது விதவிதமாக அர்த்தம் கொண்டது. அடிப்படையில் மனிதனை பலவீனங்கள் கொண்டவனாக கண்டு அவனை மன்னிப்பது அது. இன்பத்தை நாடுவதும் அதில் திளைப்பதும் மனித இயல்பு என்று புரிந்துகொண்டு அதை அனுமதித்தது அது.

அதைவிட முக்கியமாக இந்த மானுட வாழ்க்கை என்பது பிறப்பு முதல் இறப்பு வரையிலான காலத்தை இனிதாகவும் பயனுடையதாகவும் ஆக்குவதன் மூலம் மட்டுமே நிறைவடையக்கூடியது என்று புரிந்துகொண்டது. கொள்கைகளின், கனவுகளின், மதங்களின், பேரரசுகளின் பலிபீடத்தில் கொண்டு வைக்கப்படுவதற்கானது அல்ல என்ற தெளிவை அடைந்தது. ஆகவே அது நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி திரும்பி நின்றிருக்கிறது. தன்னை ஒவ்வொரு கணமும் மாற்றிக்கொள்ளத் துடிக்கிறது.துணிவுடன் சாகசத்துக்கான ஆர்வத்துடன் வாழ்க்கையை நோக்குகிறது.

மறுபக்கம் அவன் தந்தை சேஷையாவின் இசை எத்தகைய மனநிலைகளில் இருந்து எழுகிறது? அது எதிர்காலத்தை அச்சத்துடன் நோக்குகிறது. ஆகவே நிகழ்காலத்தில் பதற்றம் கொள்கிறது. ஏக்கத்துடன் இறந்தகாலத்தை நோக்கித் திரும்பி அமர்ந்திருக்கிறது. மாறாமலிருக்க முயல்கிறது .மனித உள்ளத்தின் இயல்பான காமகுரோதமோகங்களை பாவம் என்று பார்க்கிறது. அறுத்தாகவேண்டிய மலம் அது. மானுடவாழ்க்கையின் இலக்கு என்பது அத்தனை விழைவுகளையும் கனவுகளையும் ஒறுத்து தன்னை தூய்மையாக அவித்துக்கொண்டு சென்றடையவேண்டிய ஒரு மலையுச்சி மட்டுமே. இருத்தலென்பது அந்த சுயகட்டுப்பாடு மட்டுமே.

சாரங்கனின் இசை கொண்டாட்டம். சேஷையாவின் இசை விரதம்,. சாரங்கனின் இசை கோட்டைக்குமேல் காற்றில் துடிக்கும் கொடி. அவன் தந்தையின் இசை மூடியவாயிலில் முகம் உறைந்து தெரியும் சிலை. எத்தகைய வீழ்ச்சி! அம்பா என்றும் தாயே என்றும் ஒவ்வொருநாளும் பாடுபவர். சௌந்தரிய லகரியை பாடிய ஒரு மரபின் நீட்சி. ஆனால் மனைவி முதியபருவத்தில் கருவுற்றமைக்காக கூசி நாணுகிறார். அவர் மைந்தர்களோ அவரது நம்பிக்கையில் ஊறி வளர்ந்தவர்கள். அத்தனை இழிவும் அந்த அன்னைமேல் சுமத்தப்படுகிறது.

கருவுறுதல் என்ற இனிய நிகழ்வின் பொருட்டு ஒரு பெண் பழிக்கப்படுவதை எண்ணி சாரங்கன் திகைக்கும் இடம்தான் நம் பண்பாட்டின் முக்கியமான இக்கட்டைச் சுட்டிக்காட்டி நிற்கிறது எதை நீ அனுதினமும் பாடிப்பரவுகிறாயோ அதை உன் அன்றாடவாழ்க்கையாகக் கொள்ளமுடியாதென்றால் உன் வாழ்க்கைக்கு என்ன பொருள் என்று கேட்கிறது பாரீஸுக்குப் போ. காமம் புனிதமானது உன் மரபுக்கு. ஆனால் உனக்கு காமம் இருண்ட அறைக்குள் செய்தாகவேண்டிய ஒரு பாவம் மட்டுமே. அந்த முரண்பாட்டிலிருந்து தொடங்குகிறது பாரீஸுக்குப்போ.

சாரங்கன் மெல்லமெல்ல கண்டுகொள்கிறான். இங்கு மானுட உறவுகள் இயல்பாக மலர்வதற்கு இடமே இல்லை என்று. அன்பு தன் வெளிப்பாட்டை கண்டுகொள்ளும் அனைத்து வாயில்களும் ஆசாரங்களால் மூடிவைக்கப்படும் என்றால் அங்கே பாவத்திற்கும் இழிவுக்குமான ரகசியச்சுரங்கப்பாதைகள்தான் திறக்கும் என்று. அவனால் அது முடியவில்லை. அவனிடமிருக்கும் இசை அப்படிப்பட்டது அல்ல. அது வாழ்வு வாழ்வு என நடனமிடுவது. மேடையில் ஆடைகளையும் அணிகளையும் களைந்து முழுவிடுதலைகொண்டு ஆட அது தயாராக இருக்கிறது. ஆனால் இருளில் சோரம்போவது அதற்கு அருவருப்பூட்டுகிறது.

நான் விரும்பி வாசித்த கதை ஒன்றுண்டு. பாரிஸின் நடனஅரங்கு ஒன்றில் ஒருபெண் நிர்வாணநடனமிடுகிறாள். ஆனால் அவள் ஆடைமாற்றும்போது ஒளிந்து நோக்கிய ஏவலனை அவளால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அவனைப்பற்றி புகார் சொல்கிறார். அவளுடைய புகார் அவர்களுக்குப் புரியவில்லை. அவள் கண்ணீர் ததும்பச் சொல்கிறாள். இப்படிப்பார்ப்பதில் ஒரு கீழ்மை இருக்கிறது, அது என்னை வதைக்கிறது என்று. அந்தக்கீழ்மையில் உழலமுடியாத சாரங்கன் பாரீஸுக்கே திரும்பிச்செல்கிறான்.

நம்முடைய பண்பாட்டின் மையமான ஒரு இடத்தை ஐரோப்பாவின் பண்பாட்டின் சாரமான ஒரு புள்ளியுடன் உரையாடவைக்கும் பாரீஸுக்குப்போ எந்தெந்த கோணத்தில் எல்லாம் பேசப்பட்டிருக்க வேண்டிய நாவல். உண்மையிலேயே தெரியாமல் கேட்கிறேன் நண்பர்களே, நாம் பெரிதும் கொண்டாடிக்கொண்டிருக்கும் தமிழ் சிற்றிதழ் இலக்கியச்சூழலில் இத்தனை ஆணித்தரமான ஒரு பண்பாட்டுப் பிரச்சினையைப் பேசிய இன்னொருநாவல் எது? வேறெந்த நாவலில் நவ ஐரோப்பாவின் இந்த பண்பாட்டு முகம் வெளிப்பட்டிருக்கிறது? நெடுங்காலம் கடந்து ரமேஷ் பிரேம் எழுதிய சிலகதைகளையே நாம் சிற்றிதழ்ச்சூழலில் இருந்து சற்றேனும் உதாரணம் காட்டமுடியும்.

நாம் பாரீஸுக்குப்போ நாவலில் உள்ள பண்பாட்டு அவதானிப்புகளை இன்னமும்கூட வாசிக்கவில்லை. அதில் ஜெயகாந்தன் இசைகுறித்துச் சொல்லும் நுண்ணிய வரிகளை இந்த பண்பாட்டு மோதலின் அல்லது உரையாடலின் வெளிப்பாடுகளாக வாசிக்கமுடிந்தால் நாம் அடைவது முக்கியமான ஒர் இலக்கியப்பிரதியை. ஆனால் நாம் அதன் மேல்தளமான எளிய மொழிநடையை மட்டுமே பார்க்கிறோம். நாம் படைப்புகளை வாசிக்காமலே நிராகரிப்பதற்கான எளிய வழிகளாக முத்திரைகளை கையாள்கிறோம்.

ஆனால் ஜெயகாந்தன் நமது மரபை தூற்றவில்லை. அதன் உறைதலை எள்ளிநகையாடவில்லை. அங்குதான் அவர் வழக்கமான இடதுசாரி எழுத்துக்களில் இருந்து மேலெழுகிறார். இந்தமரபின் உறைநிலையை சரிவை அளக்க அவர் ஒரு மார்க்ஸிய அரசியலாளனை உருவாக்கவில்லை. ஒரு விமர்சகனை. துடுக்குக்காரனை உருவாக்கவில்லை. ஓர் நவநாகரீக ஐரோப்பியக் கனவானை உருவாக்கவில்லை. அவர் மானுடப் பண்பாட்டின் உச்சம் என அவர் எண்ணும் ஒரு தளத்தில் இருந்து அந்த தேன்கூடு ததும்பி ஊறிச் சொட்டும் துளி போல ஒருவனைக் கொண்டுவந்து நிறுத்துகிறார். அதில் உண்மையில் இருப்பது இந்த மரபின் மீதான பெரும் மதிப்புதான்.

நீ இருந்திருக்கக்கூடிய இடம் அது அல்லவா என்கிறார். நீ செல்லமுடியும் உச்சம் அதுதானே என்கிறார். அந்த பெருமதிப்புடனேயே அவர் மரபைபற்றிப் பேசுகிறார். நெஞ்சில் எரியும் இரக்கத்துடன் கனிவுடன் அவர் மரபை நோக்குகிறார். பாரீஸுக்குப்போ நாவலில் சாரங்கன் தந்தையை வெறுப்பதில்லை. புரிந்துகொள்கிறான். முரண்படும்போதும் பேரன்பு கொண்டிருக்கிறான். அந்த ஈரமே அந்நாவலை ஒரு செவ்வியல் படைப்பின் தளம் நோக்கிக் கொண்டுசெல்கிறது.

பாரீஸ் பற்றிச் சொல்வதுபோலவே ஜெயகாந்தன் கேரளம் பற்றியும் சொன்னார். “கேரளம் ஒரு பெண் அப்டீன்னுதான் எனக்குத் தோணும். அந்தக்காலத்திலே கேரளத்தில் நிறைய பயணம் பண்ணியிருக்கேன். தோழர்கள்கூட. கேரளம் எனக்கு பிடிச்சிருக்கிறதுக்கான காரணம் இன்னொண்ணு உண்டு. இங்க உள்ள பெரும்பாலான ஓட்டல்களிலே அந்தக்காலத்திலே மலையாளசர்வர்கள்தான். எல்லாருமே நாயர்கள்னு சொல்லிக்குவாங்க. எல்லாருக்குமே கம்யூனிச அனுதாபம் உண்டு. அந்தக்காலத்திலே நாங்க ஓட்டலுக்குப்போனா தெரிஞ்ச சர்வரிட்டதன் போவோம். பசியாற அள்ளிக்குடுப்பான். குறைஞ்ச பில்தான் போடுவான். முதலாளிகளுக்கும் தெரியும். ஒண்ணும் செய்யமுடியாது. கேரளத்துக்குப் போறப்ப அந்த தெரிஞ்ச முகங்களையா பாத்துட்டே போவோம்”

“நான் கேரளம் போனப்ப எல்லாம் மழை. மெல்லிசா மழை பெய்யாம என்னால கேரளத்தை நினைச்சே பாக்க முடியாது நீரோடைகள். பெரிய ஆறுகள். எங்கபாத்தாலும் மலைகள் பசுமை. வானம் முழுக்க மேகம். கேரளம் ஒரு ரொமாண்டிக்கான பெண். அந்த இமேஜை விடவே முடியாது. அதனாலத்தான் அங்க ஒரு ஆயுதப்புரட்சி வரும்னு சொன்னப்ப நாங்க நம்பலை. நினைச்ச மாதிரியே அங்க இடதுசாரி ஜனநாயகம்தான் வந்தது. நம்பூதிரிப்பாடு அச்சுதமேனன் ரெண்டுபேரையுமே எனக்குத்தெரியும். ரெண்டுபேருமே நளினமானவங்க. மெல்லப்பேசுறவங்க. அவங்களோட கல்வி அவங்களை மேலும் மேலும் மென்மையானவனா ஆக்கிட்டே போச்சு”

“இதை நீங்க எழுதியிருக்கீங்க. முரட்டுத்தனமானவனா நீங்க இருந்தகாலங்களை அப்றம் நண்பர்கள் கிட்ட போட்டி வச்சுகிட்டு கையிலே குண்டூசியாலே குத்த முயற்சி பண்ணினீங்க. முடியலை. நீங்க மென்மையானவனா ஆயிட்டதை உணர்ந்ததாச் சொன்னீங்க” ஜெயகாந்தன் சிரித்துக்கொண்டார். “அது கல்வியால வந்ததா இல்லை காலத்தால வந்ததான்னு சொல்லமுடியாது. நேற்றிருந்தோம் அந்த வீட்டில்”

ஜெயகாந்தனில் பாரதி நிகழ்வது ஓர் அற்புதம். எதிரர்பாராமல் சொடுக்கப்படும் சாட்டையின் ஒலி. பாரதியின் வரிகளை அவர் ஒவ்வொருமுறையும் புதியதாகக் கண்டடைகிறார் என்று கண்டிருக்கிறேன். அவர் தடுமாறிச் சென்று பாரதியை பற்றிக்கொள்வதாகத் தோன்றும். அல்லது பொங்கி எழுந்து பாரதியில் முட்டிக்கொள்வதாகத் தோன்றும் ”நேற்றிருந்தோம் அந்த வீட்டில். புயல் வந்து தொட்டு உலுக்கிய புன்மைச்சிறு வீட்டில். இந்த வீட்டுக்கு இன்று வந்து சேர்ந்தோம். இங்கே விளக்கு ஏற்றி வைத்தோம். நறுமணமலர்கள் வைத்தோம். இனிய இசையைக்கூட்டி வைத்தோம். இங்கு எழுந்தருளவேண்டும் பராசக்தி” . மறுகணமே அவர் பாரதியை பிடித்து சற்று அப்பால் தள்ளினார் “ருஷ்யநாட்டில் கடைக்கண் வைத்த அந்த மாகாளி, பராசக்தி. நாம் வணங்கும் தெய்வம் அவள்தான்”

பாரதியிடம் அவருக்கு ஓர் ஐக்கிய உணர்வு இருந்தது என நினைக்கிறேன். அவரது நெருக்கமான நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவருடைய சொல்லில் நிகழ்ந்துகொண்டே இருக்கும் பெருங்கவிஞர் சிலர் உண்டு. வள்ளுவர், கம்பன், தாயுமானவர், சிவவாக்கியர், பட்டினத்தார், வள்ளலார் . ஆனால் அவர்கள் எல்லாம் அவரை தங்கள் சொல்லால் எடுத்துக்கொண்டார்கள். பாரதியை அவர் எடுத்துக்கொண்டார். “பாரதி பாரதி என்கிறீர்களே, பாரதி எழுதியிருக்காவிட்டால் என்ன செய்திருப்பீர்கள்?” என்று யாரோ  கேட்டபோது “நான் எழுதியிருப்பேன்” என அவர் சொன்னதாகச் சொல்வார்கள்.

நானே அவரிடம் சொல்லியிருக்கிறேன். பாரதி பாடல்களை அவர் பாடும்போது அவரது சொந்தக்கவிதைகளை பாடுவது போலிருக்கிறது என்று, “ஆம், அவை என் சொந்தக்கவிதைகள். அவை நாமனைவருக்குமே சொந்தமானவை என்றாலும் எனக்கு ஒரு தனியுரிமை உண்டு. தந்தை ஊருக்குத்தானமாககொடுத்த நிலத்தில் நின்றபடி என் தந்தை கொடுத்த நிலம் இது என்று உணரும் மகனைப்போன்று நான் உணர்கிறேன்” என்றார் ஜெயகாந்தன்

பாரதியின் வாழ்க்கையைப்பற்றி நான் கேட்டேன் “பாரதியின் வாழ்க்கையைப்பற்றி நாம் இன்று உருவாக்கிக் கொண்டிருக்கும் கதைகள் எல்லாமே அவர் இறந்து இருபதாண்டுகள் கழித்து பலரால் சொல்லிச் சொல்லி கட்டப்பட்டவை. அவர் பெருமிதம் ததும்பும் கவிஞனாக வாழவில்லை. வறுமையும் அவமதிப்பும் நிராசையும் கொண்டுதான் தன் பெரும்பாலான காலத்தைக் கழித்தார். குடும்பத்தால் அவர் உதாசீனம் செய்யப்பட்டார். நண்பர்களாலும் சமூகத்தாலும் கைவிடப்பட்டார். அவரது வாழ்க்கை ஒரு துயரமான கதை”

”இருக்கட்டும் அதனால் என்ன? அவர் எப்படி வாழ்ந்தால் நமக்கென்ன? அதை ஆய்வாளர்கள் பார்த்துக்கொள்ளட்டும். அவர்கள் பாரதியின் வாழ்விலிருந்து கவிதை நோக்கிச் செல்கிறார்கள். நாம் பாரதியின் கவிதைகளில் இருந்து அவன் வாழ்வு நோக்கி செல்கிறோம். இலக்கியவாதி என்றமுறையில் அதுவே சரியான பாதையாகும். கேவலம் ஊனுடம்பு குருதி கொண்ட அந்த உடலா நமக்கு முக்கியம்? அதில் திகழ்ந்த ஊழிச்சுழலின் ஆற்றல் அல்லவா? அதிலிருந்து நாம் கொள்ளும் எழுச்சி அல்லவா? இது நாம் கற்பித்துக்கொள்ளும் உருவமாகவே இருக்கட்டும். ஆனால் அவனிலிருந்து இந்த எழுச்சிமிக்க உருவத்தை அடைந்தோம் என்பதே நமக்கு பெருமைசேர்ப்பதாக அமையட்டும்”

“புளியம் விதை நாற்றமடிக்கும் சேற்றுக்குள் புதைந்து கிடக்கும். மட்கி அழியும். ஆனால் தளிர் எழுந்து மேலே வரும்போது அதேபோல இரண்டு பசுமையான விதைகள் வந்து நின்றிருக்கும் பார்த்திருக்கிறீர்களா? அது போல இது அந்த விதைபாரதியில் இருந்து நாம் உருவாக்கிக்கொண்ட விதையிலை பாரதி. அவன் மட்கிய மண்ணின் சாராம்சத்தையும் அவனுடைய உயிரையும் குழைத்து இதை உருவாக்கியிருக்கிறோம். இதற்காக நாம் நாணவேண்டியதில்லை. அப்படிப்பார்த்தால் கம்பனுக்கோ வள்ளுவனுக்கோ இருக்கும் கதைகள் எல்லாம் அவர்களுடையவை என்று யார் சொன்னது? ஷேக்ஸ்பியருக்கு ஷெல்லிக்கும் உள்ள கதைகள் எல்லாம் அவர்களுடையவை என யார் சொன்னது? அக்கதைகளை உருவாக்குபவர்களும் அவர்களே. அவர்கள் எழுதிய கவிதைகளுக்கு நிகரானவைதான் அவர்கள் உருவாக்கிச்சென்ற அந்த பிம்பங்களும்.

நாம் புராணங்களை நம்புகிறவர்கள் அல்லவா? கதைகதையாக பொய்யை விரித்து சாராம்சமாக உண்மையை நிறுத்தியவர்கள் அல்லவா? இந்த எளிய உலகியலுக்கு அப்பால் செல்லும் ஓர் உண்மையை அந்த கட்டற்ற கற்பனைகள் வழியாக சொல்லிவிட முடிந்தவர்கள் அல்லவா? வாழ்ந்து செத்த பாரதி என்ற பலவீனமான உடல் எனக்குத்தேவை இல்லை. நின்று எரியும் அணையாநெருப்பு போன்ற அவனுடைய புகழுடல் எனக்குப்போதும். அவனுடைய புராணங்களே எனக்கு போதும். ராமனையும் கண்ணனையும் வள்ளுவனையும் கம்பனையும்போல அவன் புராணங்களும் இங்கு வாழட்டும்”

ஜெயகாந்தன் பேசும்போது மேலும் மேலும் குரல் தாழ்ந்துகொண்டே சென்றது. அரைக்கண் மூடியது. கை மீசையை வருடியது. தோள்கள் பொங்கிப்பொங்கி அடங்கின. சிம்மம் என பிடரி பறக்கத் திரும்பிக்கொண்டார். அவரது குரலை முழக்கம் என்பார்கள். ஆனால் அடங்கி அடங்கிச்செல்லும் குரலையே உரையாடலில் காணமுடியும். திருவட்டார் ஆலயத்தில் உருட்டுகொட்டு என்று நாங்கள் சொல்லும் பெருமுரசம் ஒன்றிருந்தது. அதை உருட்டித்தான் கொண்டு செல்லமுடியும். இரு குண்டுக்கோல்களால் முழக்கும்போது ஆலயம் இடிமுழக்கத்தால் நிறையும். ஆனால் பள்ளியுறக்கத்திற்காக பெருமாள் நடைசாத்தும்போது அந்தத் தோல்பரப்பில் மெல்ல கோலால் வருடுவார்கள். அது ஓம் ஓம் ஓம் என்று தியானிக்கும்

பாண்டிச்சேரிக்கு வந்ததனால் பாரதி சித்தனானான் என்றார் ஜெயகாந்தன். ”இங்கே குயில்தோப்பு இருந்தது. குள்ளச்சாமி இருந்தது. அரவிந்தர் இருந்தார் இங்கிருந்தார்கள் கவிஞனை ஞானியாக்கியவர்கள். அவனில் ஊறத்தொடங்கிய கிறுக்கை நதிப்பிரவாகமாக ஆக்கியவர்கள்” நான் அவரிடம் கேட்டேன், “ஜெகே, ஒருமனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலின் ஹென்றியில் பாரதி இல்லையா” என்று. புன்னகையுடன் “எல்லா கிறுக்கர்களிலும் பாரதி இருப்பான்” என்றார்.

ஹென்றி கிருஷ்ணராஜபுரத்திற்கு வரும் காலகட்டம் முக்கியமானது. இரண்டாம் உலகப்போர் முடிந்து தேசியவாதம் என்ற கருத்தின் பேரழிவை உலகம் உணர்ந்தது. சர்வதேசியம் பற்றிய பெருங்கனவுகள் உலகமெங்கும் உருவாயின. தேசமற்றவர்களின் பட்டாளம் ஒன்று கிளம்பி உலகை நிறைத்தது. அவர்களை ஹிப்பிகள் என்றனர். கையில் கித்தாரும் புகையும் கஞ்சாவுமாக அவர்கள் போர் வேண்டாம் அன்பு வேண்டும் என கூவினர்

அந்தப்பெருங்கனவு மிகவிரைவிலேயே கலைந்தது. புதியதாக உருவாகி வந்த ஏகாதிபத்தியத்தை தடுக்க தேசியவாதமே சிறந்த கருவி என மீண்டும் நாடுகள் கண்டுகொண்டன. ஆனால் அந்த இலட்சியம் இந்தியாவிலேயே ஓர் இடத்தில்தான் முளைத்தது. அரவிந்த அன்னையின் ஆரோவில். அது இன்றும் அந்த சென்றகால இலட்சியத்தின் பொற்கோளமாக நின்றுகொண்டிருக்கிறது

அங்கு வந்திறங்குகிறான் சர்வதேசியவாதியாகிய ஹென்றி. கிருஷ்ணராஜபுரத்துக்கு. உலகக்குடிமகன் தன் வேர்களை கானவருகிறான். பாரதிக்கு பித்து நிறைத்த அந்த மண்ணில் எளிய மக்களுடன் வாழ்கிறான். அன்பை பகிர்ந்து அன்பைக்கொள்கிறான். அவன் மீண்டும் வந்திறங்கிய பாரதி
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானிழல் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்.

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியிலுள்ள உயிரெலாம் நான்.

என்று கண்டறிந்தவன் விண்ணில் தெரியும் மீனிலிருந்து மண்ணில்தெரியும் புழுவாகத் தன்னை உணரும் அகவிரிவுகொண்டவன். பித்தன் என்பதனால் அவன் பித்தெடுத்த பெண்ணை புரிந்துகொள்கிறான். இப்புவியில் எங்கும் நிலைகொள்ளாத பித்திக்காக திறந்த வாசலும் விரிந்த கைகளும் கொண்டிருக்கிறான்.

எப்படி இருந்திருப்பான் ஹென்றி? பாரதி போல பித்து கனிந்த விழிகளுடனா? இல்லை கனவு மயங்கும் விழிகளா? சிலசமயம் எனக்கு ஒரு ஹென்றி பாப்மார்லியாகத் தெரிகிறான். நோ வுமன் நோ க்ரை என்று அவன் பாடுவதாகத் தோன்றுகிறது.

இன்னமும் நாம் வாசிக்காத நாவல்களில் ஒன்று ஒருமனிதன் ஒரு வீடு ஒரு உலகம். அதை நாம் நம் சிறு கிராமத்திலிருந்துகொண்டு, எளிய அரசியலில் காலூன்றி நின்று வாசித்தோம். நேர்மாறாக ஹென்றி வந்தவழியினூடாக வாசிக்கவேண்டியிருக்கிறது. பாப் மார்லி வழியாக ஒரு வாசிப்பு. டைலன் தாமஸ் வழியாக ஒரு வாசிப்பு. அந்த வாசிப்பில் அந்நாவல் பெருகுவதைக் காணலாம். குறுகியகாலமாக இருந்தாலும் அன்று இம்மானுடம் நானே உலகம் என உணர்ந்திருக்கிறது. நாம் நாம்நாம் என கைவிரித்திருக்கிறது. அந்தப்பொற்கனவின் இலக்கியச்சின்னமாக , இந்தியாவிலிருந்து பாப்மார்லிக்கும் டைலன் தாமஸுக்கும் அளிக்கப்பட்ட எதிர்வினையாக உள்ளது அந்நாவல். ஒருமனிதன் வீடாகி உலகமாகும் பாதை

இலக்கியம் என்கிறோம். நுட்பம் என்கிறோம், நண்பர்களே அறுபது எழுபதுகளில் உலகை தழுவி நிறைத்த அந்த எழுச்சிக்கு வேறெந்த தமிழிலக்கியப் பதிவாவது நமக்கு உண்டா? வேறுவேறு வகையில் ஆண்பெண் உறவைப் பேசியதல்லாமல் நாம் நமது சிற்றிதழ் சார் இலக்கியத்தில் அடைந்தது என்ன? ஆம்,அதன் வெற்றிகளை நாம் அறிவோம். அதன் நுட்பங்களை, அதற்காக அது கொடுத்த விலையை அறிவோம். ஆனால் அதன் எல்லைகளை அறியாமல் போனால் நாம் உலகை அறியாதவர்களாவோம்.

நமது சிற்றிதழ்சார் இலக்கியம் மேலே கலங்கி அடியில் தெளிந்திருக்கிறது. மேலே நுட்பங்களின் உலகம். அடியில் மிகமிக எளிய அன்றாட உறவுச்சிக்கல்கள். ஓ அவளுக்கும் இவனுக்கும் இதுவா அது சரி என புரிந்துகொள்வதற்கு அப்பால் நம் கணிசமான அந்தக்கதைகளில் ஆழ்பிரதி என என்ன உள்ளது? ஜெயகாந்தனின் ஆக்கங்கள் மேலே தெளிந்தவை. இவ்வளவுதான் ஆழம் என தோன்றவைப்பவை. மலைச்சுனைகள் அப்படித்தான். இறங்காதவரை அவற்றின் ஆழத்தை நம்மால் உணர முடியாது

ஆழ்பிரதிகளைப்பற்றி ஒருமுறை ஜெயகாந்தனிடம் கேட்டேன். “ஜே கே உங்கள் படைப்புகளில் ஆழத்து நுட்பங்களென ஏதுமில்லை என்று சொல்கிறார்களே?” ஆனால் அப்போது அவர் தன் படைப்புகளில் இருந்து முழுமையாகவே விலகிவிட்டிருந்தார். “தாகமுள்ளவர் அருந்தட்டும்” என்று சொல்லி மீசையை முறுக்கினார் “என்றும் இங்கிருக்கவேண்டும் என்பதற்காக எழுதவந்தவன் அல்ல நான். நான் வாழவேண்டும் என நான் எழுதவில்லை. என் மக்கள் வாழவேண்டுமென நான் எழுதினேன். அவர்கள் வாழத்தொடங்கிய பின் இவ்வெழுத்துக்கள் பொருளிழந்து போகும் என்றால் அதுவே அவற்றின் சிறப்பு என்றே சொல்வேன்”

“ஆனால் நான் உங்க படைப்புகளிலே தொடர்ந்து பல அடுக்குகளை பாத்திட்டே இருக்கேனே ஜேகே. ஒவ்வொரு கதைக்குள்ளும் யாரும் வாசிக்காத ஒரு கதை இருக்கு. பாரீஸுக்குப்போ நாவலில் சாரங்கன் தன் அம்மாவை பூட்டிய இருட்டறையில் பார்க்கிற இடம் கருவறைக்குள் இருளுக்குள் இருக்கும் தெய்வத்தைப்பார்ப்பதுபோலத் தெரிகிறது எனக்கு” என்றேன்

ஜெகே புன்னகைசெய்தார். “ஆம், அந்த அர்த்தம் அதற்குண்டு. அதன் செவ்வி தலைப்படுவோர் சிலர். அவர்கள் வரட்டும்” என்றார் “நான் எதையும் ஒளித்துவைக்க நினைப்பதில்லை. எல்லாத்தையும் சொல்லி ஒண்ணும் மிச்சமில்லாம ஆயிடணும்னு நினைக்கக்கூடியவன் நான். அப்படிச் சொன்னதுக்கு அப்பாலும் ஏதாவது மிஞ்சியிருக்குமென்றால்தான் அது உண்மையான மறைபொருள். மறைபொருள் என்பது மறைந்திருப்பது. மறைக்கப்படுவது அல்ல. கதையில் மறைத்துவிளையாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாசகனுடன் சீட்டாடுவதற்காக நான் இங்கு வரவில்லை”

“மறை என்பது வேதம்.வேதமென்றால் என்ன? வேதிக்கப்படுவது. படைக்கப்படுவது. இந்த மானுடம் என்ற தேவகணங்களுக்கு முன் எவையெல்லாம் படைக்கப்படுகின்றனவோ அவையெல்லாம் வேதமே. வேதத்தை எழுதாக்கிளவி என்கின்றனர் தமிழ் மூதாதையர். எழுதாக்கிளவி என்றால் எழுதாத சொல். எழுத தவறிய சொல் அல்ல. எழுதப்படாத சொல். எழுதிப்புரியவைக்கமுடியாத சொல். எழுதாமலேயே எஞ்சி நின்றிருக்கும் சொல்”

“இலக்கியம் வேதமாவது அதில் எழுதப்படாதது வாழும்போதுதான். அதை ஆசிரியன் அமைக்கக்கூடாது. அதை அமைக்கவேண்டியவர்கள் தேவர்கள். ஞானத்தின் அதிபர்களான தேவர்கள். என் சொல்லில் தெய்வம் குடியேறுமென்றால் அதுவேதமாகிறது. அங்கு அதில் மறைபொருள் குடியேறுகிறது. அதைத்தான் நான் விரும்பினேன். குடியேறவில்லை என்றால் அது என் பிழை இல்லை. குடியேறியதென்றால் அது என் படைப்பும் அல்ல”

மீசை முறுக்கி தோள் பொங்கி ஜெயகாந்தன் பாடினார் “தேவர் வருகவென்று சொல்வதோ? – ஒரு செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால் ஆவலறிந்து வருவீர்கொலோ? ஆம், நமக்குத்தொழில் செம்மைத்தமிழ் மொழியை நாட்டுதல். அறிந்து வருவது அவர்தம் கடமை”.

மீண்டும் மீண்டும் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஜெயகாந்தன் படைப்புகள் தங்களுக்கு ‘போதவில்லை’ என்று சொல்லும் வாசகர்களை. உங்களுக்கு உண்மையில் என்ன கிடைத்தது, என்ன கிடைக்கவில்லை என எழுதுங்கள் என நூற்றுக்கணக்கானவர்களிடம் சொல்லியிருக்கிறேன். எவரும் ஒரு நல்ல கட்டுரை இன்றுவரை எழுதியதில்லை. நீங்கள் ஒரு வாசிப்புக்குப் பழகியிருக்கிறீர்கள். படைப்பில் பூடகமாக உள்ள ஒன்றை கண்டறிவது மட்டும்தான் வாசிப்பு என நினைக்கிறீர்கள். அந்தக் கண்டடைவதன் எளியபரவசத்துக்கு அப்பால் இலக்கியத்தில் எதையும் எண்ணி எடுக்க திராணியற்றவர்களாக இருக்கிறீர்கள். அந்த முயற்சியில் நீங்கள் இருக்கையில் அப்படைப்பில் ஏதேனும் சொல்லப்படுமென்றால் உங்கள் வாசிப்பு ஊடுருவப்பட்டுவிட்டது என நினைக்கிறீர்கள். அதுதான் உங்கள் பிரச்சினை.

சொல்லும் கலை என ஒன்றுண்டு. சொல்லப்பட்டவற்றை கோர்த்து சொல்லப்படாதவற்றுக்கு போகத்தெரிந்தவன் அதை வாசிக்கமுடியும். உளவியல் நுட்பங்களை எழுதும் எழுத்துக்களை நீங்கள் உங்கள் அந்தரங்கத்தால் மட்டும் வாசித்துவிடமுடியும். பண்பாட்டுச் சிக்கல்களைப் பேசும் படைப்புகளை அப்படி வாசித்துவிடமுடியாது. அவற்றை வாசிப்பதற்கொரு பயிற்சி வேண்டும். அந்தப்பண்பாட்டுச் சந்திகளை உருவாக்கிய அனைத்து கூறுகளையும் படைப்புக்கு வெளியே நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அந்தப் பண்பாட்டுமுனையை சரிவர வகுத்துக்கொள்ளவேண்டும். அந்தப்படைப்பில் அறிந்தும் அறியாமலும் வெளிப்படும் அனைத்துச்சரடுகளையும் தொட்டு விரிவடையச்செய்ய அப்போதுதான் முடியும்.

அக்கினிப்பிரவேசம் ஜெயகாந்தனின் புகழ்பெற்ற சிறுகதை. கங்கா கல்லூரிக்குச் செல்லும் அறியாச்சிறுமி. அவளை ஒரு காமுகன் மழைநாளில் கல்லூரிச்சாலையில் கண்டு காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொள்கிறான். அவளுடன் பாலியல் உறவுகொள்கிறான். வீட்டுக்கு வரும் மகளை அன்னை நீரால் முழுக்காட்டி ‘உனக்கு ஒன்றுமில்லை. நீ மனசால் கெட்டுப்போகவில்லை. நீ தூய்மையானவள்’ என ஏற்றுக்கொள்கிறாள்.

வெளிவந்தகாலத்தில் கொந்தளிக்கச்செய்த கதை இது. ‘குளிப்பாட்டினால் ஆயிற்றா?’ என்பதுதான் மீண்டும் மீண்டும் எழுந்த கேள்வி. அதைச்சார்ந்துதான் அத்தனை விவாதங்களும். சரி, அது விகடன் வாசகர்களின் தளம். ஆனால் இலக்கியச்சூழலில் அந்தக்கதைபற்றி வந்த அத்தனை விவாதங்களும் அப்படித்தான் இருந்தன. அந்தக்கதை முற்றத்தில் கிடக்கும் அறியாத பறவை ஒன்றின் இறகு போல எவராலும் வாசிக்கப்படாமலேயே நின்றுவிட்டது.

நெடுங்காலம்முன்பு அக்கதையைப்பற்றி பேசும்போது நான் சுந்தர ராமசாமியிடம் கேட்டேன். ”அந்தக்கதையில் சொல்லப்படாத தளங்கள் எவற்றையும் நீங்கள் பார்க்கவில்லையா?” என்று. ”அதைத்தான் விரித்து விரித்து சொல்லி நிறைத்திருக்கிறாரே” என்றார். ”இல்லை சார், அவர் சொன்னது குறைவு. அந்தக்கதையில் சொல்லப்படாததே அதிகம். அந்த அளவுக்கு ஆழத்து மௌனம் கொண்ட தமிழ்க்கதை மிகக்குறைவு. மேல்தளத்தில் ஒரு விவாதத்தை வைத்திருக்கிறது என்பதனாலேயே, பூடகமாகச் சொல்லும் பாவனையைக் கொள்ளவில்லை என்பதனாலேயே, அது எளிமையான கதை அல்ல” என்று நான் வாதிட்டேன்.

அந்தக்கதையில் உண்மையில் பாலுறவு என்பது பெண்ணுக்கு களங்கம் ஏற்படுத்துவதில்லை என்பதைத்தான் ஜெயகாந்தன் சொல்ல நினைத்திருந்தால் அந்தப்பெண்ணை அவன் கட்டாய உறவு கொண்டான் என்று எழுதியிருக்கலாமே. அவரது வாதம் இன்னமும் வலுவாக அமைந்திருக்குமே. இந்த எளிய கேள்விகூட ஏன் எழுப்பபடவில்லை?

அவள் விரும்பித்தான் அவனுடன் செல்கிறாள். விரும்பி என்றால் நேரடியாக விரும்பி அல்ல. அவள் மேல்மனம் விரும்பவில்லை. அது பயப்படுகிறது. தவிர்க்க நினைக்கிறது. அவள் ஆழ்மனம் விரும்புகிறது. ஆழ்மன இச்சையை மேல்மனதின் எச்சரிக்கையால் கட்டுப்படுத்தும் அளவுக்கு அவளுக்கு முதிர்ச்சி இல்லை, அவ்வளவுதான். அவன் வண்டியை நிறுத்திவிட்டு கட்டாயப்படுத்தும்போது அவள் ஏறிக்கொள்கிறாள். அந்தக்கதை வாசிக்கப்படாது போனதனால் அதை மீண்டும் விரிவுபடுத்தி எழுதிய சிலநேரங்களில் சிலமனிதர்களில் ஜெயகாந்தன் அதை மேலும் விரிவாகப் பேசுகிறார்.

”எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை” என்று அவள் சொல்கிறாள். ”இந்த சர்டிபிகெட்டெல்லாம் எதுக்கு?” என்கிறான் அவன். மிகமுக்கியமான வரி அது. அவன் பெண்பித்தன். எல்லா பெண்பித்தர்களையும்போல பெண் மேல் அவனுக்கும் அன்பில்லை.வெறுப்புதான். அவர்களின் கற்பு மேல் ஒழுக்கம் மேல் நம்பிக்கை இல்லை. அதைத்தான் சொல்கிறான்

அல்லது, பெண்ணின் மேல்மனப்பாவனைகளுக்கு அப்பால் சென்று அவன் ஆழ்மனதைப்பார்த்துவிட்டானா? எது உண்மை?

அவள் திரும்பிவருகிறாள். அன்னை நீரூற்றி அவளைக் குளிப்பாட்டுகிறாள். ஆனால் அப்போது அவள் வாயில் அவன் கொடுத்த சூயிங் கம் ஒன்றை மென்றுகொண்டிருக்கிறாள். ‘சீ கருமம், அதை துப்பு’ என்கிறாள். நண்பர்களே, அவள் அசைபோடுவது எதை? எவ்வளவு பெரிய படிமம்! எந்த விமர்சகராவது அதைச் சுட்டியிருக்கிறாரா என்று நானும் பார்த்திருக்கிறேன். நான் பத்தாண்டுகளுக்கு முன் ஜெயகாந்தனைப்பற்றி எழுதிய கட்டுரையில்தான் அதை முதன்முதலாகச் சுட்டிக்காட்டினேன். வாசகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிளர்ச்சி அடைந்தனர். அந்தக்கதை இப்போதுதான் புரிகிறது என்றனர். வெளிவந்து நாற்பதாண்டுக்காலம் கழித்து. இன்னமும் வாசிக்கப்படாத ஜெயகாந்தன் கதைகளே அதிகம் என்று சொன்னால் நம்புங்கள்.

படைப்புகளின் பண்பாட்டு நுட்பங்களை தொட்டெடுக்க நமக்கு விரிவான பின்புலப்புரிதல் இல்லை என்பதும் ஓர் உண்மை. நம்முடைய செவ்வியல் மரபு, மதமரபு, சிந்தனை மரபு பற்றி ஒரு அடிப்படைப்புரிதல் இல்லாமல் இருந்தால் பல படைப்புகளின் உள்ளடக்கம் நமக்குப்புரியாமல் போய்விடும். அகப்பட்டதைக்கொண்டு நாம் கருத்துக்களை உருவாக்கிக்கொள்கிறோம். நான் சிந்திப்பதுண்டு, மீண்டும் மீண்டும் ஆண்பெண் உறவு பற்றியே நாம் எழுதி வாசிப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று நமக்கு அதுதான் பிடிகிடைக்கிறது, வேறெதையும் வாசிக்கும் பண்பாட்டுப் பயிற்சி இல்லை என்று

அக்னிப்பிரவேசத்திலேயே எத்தனை உட்குறிப்புகள். அவள் பெயர் கங்கை. பாவங்களை கரைப்பவள். ஆகவே பாவங்களுக்கு அப்பாற்பட்டவள் அவள். கங்கைக்குப் பங்கமில்லை என்ற சொல் இன்றைக்கும் நம்மிடம் உண்டு. அக்னிப்பிரவேசம் என்பது சீதை செய்தது. இங்கே அக்கினியாக நிற்பது நீர். நீரெல்லாம் கங்கை அல்லவா

அந்தக்கதை அத்தனை பெருங்கொந்தளிப்பை ஏன் உருவாக்கியது? அதிலுள்ள முக்கியமான ஒரு பண்பாட்டுக்குறிப்பால்தான். அவளை தொடர்ந்து அம்மன் என்கிறார். செப்புத்திருமேனியில் வடித்த கனியாகுமரி, மீனாட்சி, உமை போன்ற அம்மன் சிலைகளைக் கண்டிருக்கிறீர்களா? சிறிய முலைகள். சிறிய தோள்கள். அப்படியே ஒரு கையால் எடுத்துவிடக்கூடியவள் போல, அம்மன் போல அவளிருந்தாள் என்கிறாள் ஜெகே. அம்மன் நீரில் நனைந்து சாலையில் காத்திருக்கிறது.

அவளைக் கவரவந்தவன் இந்திரன் . பிரபு. இந்திரனை பிரபு என்பது நமது மரபு. “தெரிந்துதான் பெயரைப்போட்டீர்களா?” என்று கேட்டேன். “ஆமாம், இந்திரன் தேவப்பிரபு அல்லவா?” என்றார். அம்மனை இந்திரன் கவரும் ஒரு புதிய புராணம். எவ்வளவு சீண்டக்கூடிய கதை. எத்தனை அராஜகமான கதை. அம்மன் என்றும் கன்னிமை என்றும் நம் மரபு சொல்லும் அனைத்தையுமே உடைத்து முன்னால் வைத்துவிடுகிறார் ஜெகே. அதுதான் அந்தக்கதை.

அந்தக்கதை மேல் வந்த விமர்சனங்களை ஒட்டி கதையை திசைதிருப்பி அவர் எழுதிய படைப்பு சில நேரங்களில் சிலமனிதர்கள். அம்மன் முழுக்காட்டு பெறவில்லை. நகர்வலம் கிளம்புகிறது. அதன் பயணம் கங்கையின் பயணமேதான்.

ஐந்து பிரயாகைகளின் வழியாகப்பெருகி வரும் கங்கையின் சித்திரத்தை அளிக்கிறது சிலநேரங்களில்சிலமனிதர்கள். ருத்ரபிரயாகையில் அது சீறிக்கொந்தளிக்கிறது. மலையிறங்கி சமவெளியை அடைந்து தன்னை கண்டடைந்து அமைகிறது. அதில் கங்காவின் ஒவ்வொரு மாற்றமும் நுட்பமானது. முதலில் அவள் பிரபுவைத்தேடிச்செல்வது அன்பால் அல்ல. வாழ்க்கைமேல் கொண்ட ஆசையாலும் அல்ல. வீம்பால். வன்மத்தால். அவனை அவமதிக்க. சிறுமைசெய்ய. அவளை அவமதித்த வெங்குமாமாவை பழிவாங்க

ஆனால் அவள் அவனைக் கண்டுகொள்கிறாள். துயரம் கொண்ட ஒரு மனதைக் கண்டதும் சீறிவந்த கங்கை அமுதூட்டும் கங்கையாகிறது. அவனை அணைத்துக்கொள்கிறது. அந்த மாற்றம்தான் கங்கா என்ற கதாபாத்திரத்தின் உண்மையான ஆழம். பின்னர் அவனையே கணவனாக எண்ணுகிறாள். அவனால் புறக்கணிக்கப்படுகையில் துயரம் கொள்கிறாள். இறுதியில் எவரும் எவருடனும் இல்லை என அறிந்து நிறைகிறாள். தன்னை தானே நிரப்பிக்கொள்ள முடிந்தது அவளால்.

இதை நாமே காணலாம். நமது அன்னையரின் வாழ்க்கையைப்பாருங்கள். ஒருவனைப்பற்றி ஓரகத்திருத்தலை அறமெனக் கொண்டவர்கள். அன்னபூரணிகள். அமுதூட்டி வளர்ப்பவர்கள். ஆனால் எங்கோ ஒரு வயதில் அவர்கள் தங்களுக்குள் நிறைந்து தனித்துவிடுகிறார்கள். கணவனும் குழந்தையும் சென்று தொடாத ஒரு பீடத்தில் எங்கோ சென்று அமர்ந்திருக்கிறார்கள்.

90 வயதான என் பெரியம்மா இன்றுமிருக்கிறார்கள். நினைவறிந்த நாள் முதல் அவர் இடையில் குழந்தை இருந்தது. தம்பிகள். பின் மைந்தர். பின் பேரர். பின் கொள்ளுப்பேரர்..16 வயது முதல் உழைத்து தம்பிகளை ஆளாக்கினார். பிள்ளைகளை வாழச்செய்தார். ஆனால் சென்ற 20 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் இங்கிருந்து சென்றுவிட்டார். அவரது பேரன் ஒருவன் இறந்ததை அவருக்குச் சொன்னபோது எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை. என்னிடம் மட்டும் சொன்னார். ‘நான் யாருக்கும் அம்மையோ பாட்டியோ இல்லை மக்களே” என்று. அந்த இடம். கங்கா சென்றடைந்தது அந்தத்தனிமை.

கங்கையின் பயணமாக விரியும் இரண்டு நாவல்களை ஒரேநாவலாக வாசிக்கலாமென்பது என் எண்ணம். சிலநேரங்களில் சிலமனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் ஆகிய நாவல்களை ஒரே நாவலாக வாசித்தால் அது உருவாக்கும் பெருஞ்சித்திரம் எந்த இந்திய பெருநாவல்களுக்கும் நிகரானது.

இந்தியாவின் மகத்தான நாவல்கள் அனைத்துமே பெண்ணின் கதையைச் சொன்னவை. இந்திய ஆழ்படிமம் என்பது சீதை. கண்ணீரைப்பின் தொடர்ந்தவன் என்று வால்மீகியை காளிதாசன் சொல்கிறான். கிரௌஞ்சப்பறவையின் கண்ணீரை. சீதையின் கண்ணீரை. இந்தியாவின் பெரும் நாவலாசிரியர்கள் அனைவருமே பெண்ணின்கண்ணீரை பின் தொடர்ந்தவர்கள்தான். ஜெயகாந்தனின் கங்கையும் அந்த சீதைகளின் வரிசையில் நிற்கும் ஒரு கதாபாத்திரம். ஐயமில்லை.

சில நேரங்களில் சில மனிதர்களின் ஒரு முக்கியமான அம்சம் உண்டு. கருணைகொண்ட உள்ளத்துடன் இங்குவரும் சாரங்கனுக்கு முன்னால் நின்றிருப்பது இசையை இறுகவைத்த சேஷையா. இந்தியாவின் நுண்கலை மரபு. ஆனால் சீற்றம் கொண்ட புதியபெண்மையின் முன் நின்றிருப்பது வாய்வேதாந்தியான வெங்குமாமா. தர்க்கமும் இலக்கணமும் நெறிநூல்களும் கற்றுத்தேர்ந்தவர். எதையும் எதுவுமாக ஆக்கக்கூடியவர். ஆசாரத்திற்குள் புளித்துநாறும் வேட்கை கொண்டவர். சேஷையாவை விட இந்திய மரபின் மிகப்பெரிய உருவகம் வெங்குமாமாதான். துர்க்கை பலிகொள்ளும் எருமை. இருளின் வடிவம். ஆனால் அவரையும் கருணையுடன் அணைத்து செல்கிறது கங்கை.

வெங்கு மாமா ‘கெட்டவர்’ இல்லை. கருணை கொண்டவர். பெருந்தன்மையானவர். அறிஞர். மரபில் வேரூன்றியவர். ஆனால் காமத்தை ஒறுத்த ஒரு மரபில் சிக்கிக் கொண்டவர். ஆகவே அவர் ஒடுக்கிய காமம் உள்ளே புளித்து நாறி அவரை அற்பரும் அசடுமாக ஆக்கி புதிய பெண்மை முன் நிறுத்துகிறது– நண்பர்களே இந்தியாவின் மரபார்ந்த வாமனநிலையைப்பற்றி தமிழில் எழுதப்பட்ட மிகக்கூரிய விமர்சனம் இதுவே.

ஜெகே இன்றில்லை. சூரையங்காட்டிடை சுட்டு நீரில் முழுகி நினைப்பொழிந்துவிடப்போகிறோம். அந்த நீர்தான் இந்தச் சொற்கள். ஓருபிடி நீறும் இலாத உடம்பு என்றார் ஜெயகாந்தன். பட்டினத்தாரின் வரி. அவருக்குச் சித்தர் பாடல்கள் மேல் பெரும் ஈடுபாடு இருந்தது. சித்தர்வரிகள் வழியாக அவர் செல்லும் சொற்பயணங்களின் எத்தனை சித்திரங்களால் நிறைந்திருக்கின்றது என் மனம். “சோறிடும் நாடு. துணிதரும் குப்பை. உன் கருணையாலான உணவு. நீ களைந்திட்டவற்றாலான உடை. உன் முற்றத்தில் நிற்கையிலும் நான் நீயல்ல”

ஜெகேயின் குரல். “பஞ்சணையும் பூவணையும் பாயலும் வெறும் பாழ்சுடு காடதிலே பயன் பெறுமோ?. சித்தர்களுக்கு இவ்வுலகம் ஒரு சுடுகாடு. செத்தபிணங்கள் நடமாடும் வெட்டவெளி. ஞானமற்ற பிணங்கள். வெறும் சோறு துணி யோனி என்று வாழும் பிணங்கள். அச்சமும் பேடிமையும் அடிமைச்சிறுமதியும் உச்சத்தில் கொண்ட வெற்றுச்சடலங்கள். அந்தச் சுடுகாட்டில் பஞ்சணையும் பூவணையும் பாயலும் எப்படி துயில் தரமுடியும்?” விழிகளில் தொலைதூர வெளிச்சம் தெரிவதுபோன்ற அசைவு “நாமறிந்த சித்தரெல்லாம் செங்கொடி ஏந்தி தெருத்தெருவாகச் சென்றவர்கள். பஞ்சணையிலும் பூவணையிலும் படுத்துறங்க முடியாமலானவர்கள்”

சித்தர்பாடல்களை அவருக்கே உரியமுறையில் ஜெகே விளக்கிச்செல்வார். விளக்குவதில்லை அவரே பிரித்து விருப்பமான முறையில் அடுக்கிக்கொள்வார்.

பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேரறியவே மெத்தவீங்கிப்
பரியார மொருமாது பார்த்தபோது
பையோடே கழன்ற தென்றாடாய் பாம்பே

உரக்கப்பாடி அந்தக் கையை அந்தரத்தில் நிறுத்தி ‘எல்லா பாம்பும் பரிகாசமாகவே கடிக்கும். அச்சமெனும் பாம்பு. ஆசையெனும் பாம்பு. அறியாமை எனும் பெரும்பாம்பு. பலபேர் அறிய வீங்கி நஞ்சாகும். ஒருமாது பரிகாரம் செய்யும்போது பையுடன் கழன்று போகும். அவளை நாமறிவோம். கோதகன்ற தொழில் உடைத்தாகி குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்இன்பமே வடிவாகிடப் பெற்றாள் ”

சித்தர்களையும் பாரதியையும் ஜெயகாந்தனைப்போல போட்டுக்கலக்கிக் குலுக்கி வைக்கும் பிறிதொருவரை நான் கண்டதில்லை. உண்மையில் அவர் அவ்வரிகளை வாசிக்கையிலேயே உள்ளுக்குள் எல்லாம் கலந்துகொண்டிருக்கும் என நினைத்துக்கொள்வேன். சொல்லிச்சென்று எதையும் தொடாமல் நின்றுவிட்டால் மீசையை முறுக்கிவிட்டு தொடர்பே இல்லாமல் ஒரு குறளுக்குச் சென்றுவிடமுடியும் “மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு” எதைச்சொல்கிறார். எங்கோ போகப்போகிறார். ஆனால் உடனே திரும்பி “என்னாது, இவ்ளோ நேரமா வச்சுக்னு பூச்சி புடிக்கிறே?” என்று சென்னைச் சேரிக்காராக மாறினார்.
.
சித்தர் மரபிலிருந்து ஜெகே ரசவாதம் வரை ஆராய்ந்து சென்றிருக்கிறார். அவரது குடும்பப்பின்னணியிலேயே அந்த ஆர்வம் இருந்திருக்கலாம். ஒருமுறை பஸ்பம் பற்றிச் சொன்னார் “மந்திரமாவது நீறு. நீறுதல் என்றால் எரிதல். இங்குள்ள எல்லாமே எரிந்துகொண்டிருக்கின்றன என்பது சித்தர் வாக்கு. எரிந்து எஞ்சுவது நீறு. சொல்லும் எண்ணமும் சித்தமும் நீறி எஞ்சுவது. சித்தர்களுக்கு அனைத்தையும் சாம்பலாக்கிப்பார்க்கும் ஆசை இருந்தது. ரசவாதமே மூன்றுதான். நிலையற்றதை கட்டுவது. பாதரசத்தை ரசமணியாக்கும் கலை அது. இரண்டாவது பஸ்பக்கலை. அனைத்தையும் நீறாக்குவது. அனைத்தையும் பொன்னாகக்குவது அதன் உச்சம்”

“ஏன் நீறாக்கவேண்டும்? ஏனென்றால் நீறுதான் நீரில் கரையும். நீரில் அனைத்தையும் கரைத்து ஓடவிட்டுவிடவேண்டும். இரும்பையும் செம்பையும் தங்கத்தையும். அது அவர்கள் கண்ட ஞானம்” அன்று நெடுநேரமாகிவிட்டிருந்தது. கஞ்சாப்புகையை பாதிக்குமேல் நானும் இழுத்து எங்கிருக்கிறேன் என்று தெரியாமலிருந்தேன். அன்பு கிளம்பலாம் என என் காலை மிதித்துக்கொண்டே இருந்தார்.ஆனால் நான் கேட்காமல் எழமுடியாது

“ஓங்கூர் சாமியை உண்மையிலேயே பார்த்திருக்கிறீர்களா ஜெகே?” மடத்தனமான கேள்வி. அவர் மீசையை நீவி “ம்” என்றார். சிலும்பியை ஆழமாக இழுத்து சாம்பலைத் தட்டியபின் நிறைப்பதற்காகக் கொடுத்தார். சிவந்த கண்கள். காசியில் கண்ட பைராகியின் கண்கள். சாரங்கனிலிருந்து ஹென்றி வழியாக ஓங்கூர்சாமிக்கு ஒரு பாதை இருக்கிறது. “அந்த ஆலமரம் இன்றும் இருக்கிறதா ஜேகே?” என்னை நோக்கி சிலகணங்கள் இருந்தபின் “தமிழ்நாடு முழுக்க ஆயிரக்கணக்கா ஆலமரங்கள் இருக்கு” என்றார்.

நூறு நூறு ஓங்கூர் சாமிகளை தன் மடியில் அமர்த்திய அந்த ஆலமரத்துக்கு வணக்கம். அதன் நிழலெனும் ஞானபீடம் அமர்ந்த ஆசானுக்கு நினைவஞ்சலி.


[12- 4- 2015 அன்று கோவையில் நிகழ்ந்த ஜெயகாந்தன் அஞ்சலிக்கூட்டத்தில் ஆற்றிய உரை, எழுத்துவடிவம்]

முந்தைய கட்டுரைகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 79