பகுதி 16 : தொலைமுரசு – 4
பின்மாலையில் அஸ்தினபுரியின் துறைமுகப்பை அடைந்தபோது சாத்யகி எழுந்து படகின் விளிம்பில் சென்று நின்று நோக்கினான். துறைமுகப்பை பலவகையான படகுகள் மொய்த்திருந்தன. மேலும் படகுகள் கங்கைக்குள் நிரைநிரையாக நெடுந்தொலைவுக்கு நின்று அலைகளில் ஆடின. இறக்கி சுற்றிக்கட்டப்பட்ட பாய்கள் கொண்ட படகுக்கொடிமரங்கள் வள்ளிகள் சுற்றிய காட்டுமரங்கள் போல சூழச்செறிந்திருந்தன. பலபடகுகளில் அடுப்புகள் மூட்டப்பட்டிருந்தமையால் உணவுமணத்துடன் புகையெழுந்தது.
அப்பால் துறைமேடையில் நூற்றுக்கணக்கான வினைவலர்களும் அவர்களின் யானைகளும், அவற்றால் இழுக்கப்பட்ட துலாக்களும் பொதிகளை தூக்கி இறக்கிக்கொண்டிருக்க அப்பால் துறைமுற்றம் முழுக்க பொதிவண்டிகளும் அத்திரிகளும் புரவிகளும் தேர்களும் நிறைந்து அசைந்த வண்ணங்கள் கொந்தளித்தன. பெருமுழக்கமாக துறைமுகம் ஒலித்துக்கொண்டிருந்தது. தொலைவில் அஸ்தினபுரியின் அமுதகலசம் பொறிக்கப்பட்ட வளைவைக் கடந்து மேலேறிச்சென்ற பாதையில் வண்டிகள் சென்றுகொண்டே இருந்தன.
“என்ன நிகழ்கிறது? ஏதாவது விழவா?” என்றான் சாத்யகி. குகன் “இளவரசே, அஸ்தினபுரியின் இளவரசர்களின் மணநிகழ்வுகள் ஒவ்வொருநாளும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆகவே அஸ்தினபுரியில் துறையிறங்குவது கடினம் என்று வரும்போதே சொன்னார்கள்” என்றான். சாத்யகி மீண்டும் கூட்டத்தை நோக்கியபின் “அனைத்துமே அரசக்கொடி கொண்ட படகுகள்” என்றான். அப்பால் சிறிய கிண்ணப்படகில் வண்ணத்தலைப்பாகைகளும் கிணைப்பறைகளும் யாழ்களுமாக சென்றுகொண்டிருந்த சூதர்களை சுட்டிக்காட்டி “அவர்களை அழைத்துவா” என ஆணையிட்டான்.
குகன் கயிறுகளைப்பற்றி படகிலிருந்து படகுக்குத் தாவி அவர்களை நோக்கி சென்றான். அவன் அவர்களை அழைப்பதும் அவர்கள் மேலே நோக்குவதும் தெரிந்தது. மார்த்திகாவதியின் கொடியைக் கண்டதும் அவர்கள் புரிந்துகொண்டனர். அவர்களின் படகு அணுகியதும் நூலேணி இறக்கப்பட்டது. பெரிய நீலத்தலைப்பாகையும் மணிக்குண்டலங்களும் அணிந்த முதுசூதரும் இளையவர் இருவரும் நான்கு விறலியரும் மேலேறி வந்தனர்.
முதுசூதர் வணங்கி ”கடம்பநாட்டு வெண்புறாடி குலத்து முதுசூதன் நிஷங்கன் வணங்குகிறேன். இவர்கள் என் மைந்தர், மைந்தரின் விறலியர்” என்றார். ”காலையில் இன்மொழிச்சூதர் ஒருவரை சந்திக்கும் பேறுபெற்றேன்… அமர்க!” என சாத்யகி அவரை வணங்கி பீடமளித்தான். அவர்கள் அமர்ந்து இன்னீர் அருந்தினர். சாத்யகி “அஸ்தினபுரியில் என்ன நிகழ்கிறது சூதரே? உங்கள் வாயால் விரிவாக அறிந்துகொள்ளும்பொருட்டே அழைத்தேன்” என்றான்.
“அஸ்தினபுரி வசந்தம் வந்த மலர்த்தோட்டமாக ஆகிவிட்டது. வண்ணத்துப்பூச்சிகளென இளவரசிகள் சிறகடித்து வந்தமர்ந்தபடியே இருக்கிறார்கள். ரீங்கரிக்கும் வண்டுகளென சூதர். மணிதேடும் புறாக்களென வணிகர். அங்கே காகக்கூட்டங்களென ஓயாமல் கூச்சலிட்டு மொய்த்திருக்கின்றனர் களிமகன்கள்“ என்றார் முதுசூதர். “நான் கோசலநாட்டு சுதட்சிணரின் அவையிலிருந்து அவரது இளவரசியர் காமிகை, கௌசிகை, கேதுமதி, வசுதை, பத்ரை, சிம்ஹிகை, சுகிர்தை ஆகியோர் வந்த அணிநிரையுடன் இணைந்து இந்நகருக்கு வந்தேன். பத்துநாட்கள் இங்கே விழவுகொண்டாடிவிட்டு திரும்பிச்செல்கிறேன். செல்லும் வழியெல்லாம் இக்கதையை சொல்லிச்செல்வேன். இப்போது என் உள்ளம் சொல்லால் நிறைந்துள்ளது. சென்று சேரும்போது என் இல்லம் பொன்னால் நிறைந்திருக்கும்.”
சாத்யகி “கோசலநாட்டு இளவரசிகளை மணந்தவர் யார் யார்?” என்றான். முதுசூதர் திரும்பிப்பார்க்க இளைஞன் குறுமுழவை அவர் கையில் கொடுத்தான். அவர் அதை விரல்களால் தட்டியபடி கண்மூடி அமர்ந்துவிட்டு மெல்ல முனகினார். குருகுலத்தவரின் பெயர்வரிசையைப் பாடி கௌரவர்களை வந்தடைந்தார். ”கேளுங்கள் யாதவரே, பிரதீபரின் சந்தனுவின் விசித்திரவீரியரின் கொடிவழி வந்த நிகரற்ற வீரர், திருதராஷ்டிரரின் மைந்தர், குருகுலத்து மூத்தவர் துரியோதனர் காசிநாட்டுச் செல்வி பானுமதியை மணந்தார். அஸ்தினபுரியை ஆளவந்த திருமகள் போன்றவள் அவள். இளையவர் துச்சாதனர் காசிநாட்டு இளவரசி அசலையை மணந்தார். இதோ பெரும்புகழ்கொண்ட திவோதாச மாமன்னரின் குருதியால் அஸ்தினபுரி வாழ்த்தப்பட்டது.”
“பிரம்மா, அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஷ், அனேனஸ், பிரதிக்ஷத்ரர், சஞ்சயர், ஜயர், விஜயர், கிருதி, ஹரியஸ்வர், சகதேவர், நதீனர், ஜயசேனர், சம்கிருதி, க்ஷத்ரதர்மா, சுமஹோத்ரர், சலர், ஆர்ஷ்டிஷேணர், காசர், தீர்க்கதமஸ், தன்வந்திரி, கேதுமான், பீமரதர், திவோதாசர், ஜயசேனர், சஞ்சயர், சுருதசேனர், பீமகர், சஞ்சயர், பீமதேவர், ஜயர், விஜயர் என நீளும் காசிநாட்டுக் கொடிவழியில் பிறந்தவர் விருஷதர்பர். அவரது புதல்விகள் தங்கள் பொற்பாதங்களை வைத்து நிலமகளும் நீர்மகளும் என அஸ்தினபுரிக்கு வந்தபோது கங்கையும் யமுனையும் கலப்பதுபோல பாரதவர்ஷத்தின் தொன்மையான இருகுலங்கள் கலந்தன. அந்தப்பெருமையால் அஸ்தினபுரியின் கரிய கோட்டைச்சுவர் இரையுண்ட மலைப்பாம்பு போல பெருத்ததை நான் கண்டேன். என் விழிகள் வாழ்க! என் சித்தம் வாழ்க!”
“இளையவர்களாகிய பதினைந்து பேருக்கும் காந்தாரத் தொல்குடியிலிருந்து இளவரசியர் வந்துள்ளனர்” என சூதர் பாடினார். “காந்தாரத்து பட்டத்து இளவரசர் அசலரின் ஏழு மகள்களான ஸ்வாதா, துஷ்டி, புஷ்டி, ஸ்வஸ்தி, ஸ்வாகா, காமிகை, காளிகை ஆகியவர்களை துச்சகர், துச்சலர், ஜலகந்தர், சமர், சகர், விந்தர், அனுவிந்தர் ஆகியோர் மணந்தனர். இளைய காந்தாரரான விருஷகருக்கு எட்டு இலக்குமிகள் என அழகிய மகள்கள். ஸதி, க்ரியை, சித்தை, சாந்தி, மேதா, பிரீதி, தத்ரி, மித்யா ஆகிய இளவரசிகளை துர்தர்ஷரும் சுபாகுவும் துஷ்பிரதர்ஷணரும் துர்மர்ஷணரும் துர்முகரும் துர்கர்ணரும் கர்ணரும் விகர்ணரும் மணந்தனர். காந்தாரநாட்டு இளவரசியர் நேற்றுமுன்தினம் துதிக்கை கோர்த்து செல்லும் பிடியானைக்கூட்டம் என நகர்நுழைந்ததைக் கண்ட என் கண்கள் அழகுகொண்டன.”
“கௌரவர்களில் இளையவர்களான சலர், சத்வர், சுலோசனர், சித்ரர், உபசித்ரர், சித்ராக்ஷர், சாருசித்ரர் ஆகியோருக்கு கோசலநாட்டின் காமிகை, கௌசிகை, கேதுமதி, வசுதை, பத்ரை, சிம்ஹிகை, சுகிர்தை ஆகியோர் மணமகள்களாக ஆயினர். அவர்கள் தங்கள் பொற்பாதங்களை எடுத்துவைத்து ஹஸ்தியின் அரண்மனைக்குள் நுழைந்தபோது நான் என் பழைய முழவை மீட்டி அழியாத தொல்குடியின் கதையை பாடினேன். என் கைகளில் ஒளிவிடும் பொற்கங்கணத்தை பரிசாகவும் பெற்றேன். அன்றுதான் அவந்தி நாட்டு அரசர்களான விந்தர், அனுவிந்தர் இருவரின் மகள்களான அபயை, கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை, கிருதை, மாயை, வரதை, சிவை, முத்ரை, வித்யை, சித்ரை ஆகியோரை சராசனனர், துர்மதர், துர்விகாகர், விகடானனர், விவித்ஸு, ஊர்ணநாபர், சுநாபர், நந்தர் உபநந்தர் சித்ரபாணர் சித்ரவர்மர் சுவர்மர் ஆகியோர் மணந்து நகருக்குள் கொண்டுவந்தனர்.
“யாதவரே, அஸ்தினபுரியின் அரசர் பாதாளத்தை ஆளும் நாகங்களுக்கு நிகரானவர். அவரது அரசியர் அரவுக்குலங்களைப்போல மைந்தரைப்பெற்று நிரப்புகிறார்கள். துர்விமோசர், அயோபாகு, மகாபாகு, சித்ராங்கர், சித்ரகுண்டலர், பீமவேகர், பீமபலர், வாலகி, பலவர்தனர், உக்ராயுதர், சுஷேணர், குந்ததாரர் ஆகியோர் இன்று மகாநிஷாதகுலத்து மன்னர் கேதுமதனரின் இளவரசியரான பூஜ்யை, ஸுரை, விமலை, நிர்மலை, நவ்யை, விஸ்வகை, பாரதி, பாக்யை, பாமினி, ஜடிலை, சந்திரிகை, சந்திரகலை ஆகியோரை மணம் கொண்டு வந்திறங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய செந்நிறக்கொடிகளால் அஸ்தினபுரியின் துறைமுகப்பு செண்பகக் காடுபோல ஆகியிருக்கிறது.”
”பிற இளவரசர்கள் வெவ்வேறுநாடுகளில் மணமகள்களை கொள்ளும்பொருட்டு சென்றிருக்கிறார்கள். நாளை இளவரசர்கள் மகாதரரும் சித்ராயுதரும் நிஷங்கியும் பாசியும் விருந்தாரகரும் சாதகர்ணியின் மகள்களை மணம் கொள்கிறார்கள். திருடவர்மர், திருதக்ஷத்ரர், சோமகீர்த்தி ஆகியோர் மூஷிகநாட்டு இளவரசியரை நாளை மறுநாள் மணக்கிறார்கள். அனூதரர், திருதசந்தர், ஜராசந்தர், சத்யசந்தர், சதாசுவாக், உக்ரசிரவஸ் ஆகியோர் ஒட்டர நாட்டுக்கு சென்றிருக்கிறார்கள். மணமகள்களுடன் அவர்கள் திரும்பி வருவார்கள். அஸ்தினபுரி ஒரு தேன்கூடு. நாற்புறமும் சென்று தேன் கொண்டு வருகின்றன கரிய தேனீக்கள். அவர்களின் ஒளிரும் சிறகுகள் வெல்க!”
“யாதவரே கேளுங்கள், ஒவ்வொருநாளும் இளவரசியர் அவர்களின் பெண்செல்வத்துடன் வந்திறங்குவதனால் அஸ்தினபுரியின் தெருக்களில் முத்தும் மணியும் சிதறிக்கிடக்கின்றன. அவற்றை புறாக்கள் நெல்மணிகள் என எண்ணி கொத்திக்கொத்தி ஏமாற்றம் கொள்கின்றன. நீருக்குள் சிந்திய வைரமணிகளை உண்ட மீன்கள் உடல் ஒளிவிட நீந்துவதனால் கங்கை பல்லாயிரம் விழிகள் கொண்டதாக மாறிவிட்டது” முதுசூதர் பாடினார். “மங்காப்புகழ்கொண்ட அஸ்தினபுரியே, இத்தனை மகளிர் சூடிக்கழித்த மலர்மாலைகள்தான் இனி உன் காலைகளை நிறைக்கும் குப்பையா? பெருகிவரும் கங்கையே, இனி இம்மகளிர் குளித்த மஞ்சளால் நிறம் மாறுவாயா?”
”யாதவரே கேளுங்கள், இதோ நீங்கள் காணும் படகுகள் அனைத்தும் அஸ்தினபுரிக்கு மகள்கொடைச் செல்வத்துடன் வந்து காத்து நிற்கின்றன. ஏனென்றால் அங்கே களஞ்சியம் நிறைந்து செல்வத்தை அள்ளி முற்றத்தில் குவித்திருக்கிறார்கள். அவற்றில் வெண்முத்துக்களை கொக்குகளும் காக்கைகளும் கொத்திச்செல்கின்றன. கழுகுகளும் பருந்துகளும் செம்பவளங்களையே நாடுகின்றன. ஏமாற்றமடைந்த பறவைகள் வானத்தில் அவற்றை உதிர்ப்பதனால் ஊர்கள் தோறும் பொன்மணிமழை பெய்துகொண்டிருக்கிறது. குளிர்காலம் முடிந்து இளவேனில் வந்துகொண்டிருக்கிறது. சித்திரைக்கு முன் அவற்றை பொறுக்கிக்கொள்ளவில்லை என்றால் கொன்றையின் ஒளியில் அவை கூசிமறைந்துவிடும்.”
பாடிமுடித்து முதுசூதர் வணங்கி முழவைத்தாழ்த்தினார். சாத்யகி எழுந்தபடி “ஆகவே, தங்களிடம் பொன்னும் மணியும் நிறைந்துள்ளது. நான் அளிக்கவேண்டியதில்லை, அல்லவா?” என்றான். கிழவர் சிரித்து “கங்கை நிறைந்தொழுகுகிறது என்றால் அதன்பொருள் நகரின் கூரைகள் மேல் மீன் நீந்துகிறது என்று அல்ல” என்றார். மீசையை நீவியபடி “அது வேறு கங்கை. அது ஒருபோதும் வற்றுவதில்லை.” சாத்யகி “விறலியர் கண்டதை அவர்கள் பாடட்டுமே” என்றான். முதுசூதர் திரும்பி நோக்கி இளவிறலி ஒருத்தியிடம் கைகாட்ட அவள் தலையசைத்து யாழை வாங்கி தன் தொடைமேல் வைத்துக்கொண்டாள். அவளுடைய நீள்விரல்கள் தந்திகள்மேல் ஓடின. யாழ் இதழ்மேல் அமர்ந்த ஈ என முனகியது.
“நகர்களில் அரசியாகிய அஸ்தினபுரியை வாழ்த்துங்கள். அதன் நெற்றியான கோட்டைமுகப்பில் எழுந்த செவ்வண்ணப் பொட்டாகிய அமுதகலசக் கொடியை வாழ்த்துங்கள். புடைத்த படகுப்பாய்களென வெண்குவைமாடங்கள் எழுந்த மாளிகைகளுடன் எப்போதும் அது எங்கு செல்லத் துடிக்கிறது தோழிகளே? ஒளிவிடும் பெரிய வெண்குமிழிகளா அவை? தோழியரே, வெண்கள் நுரைத்த பெருங்கலமா இந்நகரம்? முகில்வெளியன்னையை நோக்கி பூஞ்சிறகு சிலிர்த்து எம்பும் வெண்குஞ்சுகளின் கூடா? சொல்லுங்கள் தோழியரே, இவ்வேளையில் எதை எண்ணி பூரித்திருக்கிறது இது?”
“சொல்லுங்கள் தோழியரே, பல்லாயிரம் கொடிகள் நாவாக இந்நகரம் சொல்லத்துடிப்பது எதை? பல்லாயிரம் அனல்கொழுந்துகள். சிக்கிக்கொண்ட பல்லாயிரம் வண்ணத்துப்பூச்சி சிறகுகள். பல்லாயிரம் பதறும் இமைகள். தோழியரே, தோழியரே, இந்நகரம் எவருடைய தோளில் அமர்ந்து படபடக்கிறது? எவரது கண்ணுக்கெட்டி, கைக்குச் சிக்காது மாயம் காட்டுகிறது?” அவளுடைய மெல்லிய குரல் பறக்கும் பொன்னூல் என நெளிந்து வளைந்தாடியது. “இந்நகரம் மீட்டுநர் எழுந்துசென்ற யாழ். விண்வடிவ பெண்ணொருத்தி என்றோ நீராடுமுன் களைந்துவைத்த நகைக்குவை. அவள் கங்கைப்பெருக்கில் இருந்து மீளவேயில்லை.”
“அஸ்தினபுரியின் தெருக்களனைத்திலும் இன்று பெண்கள் தேர்க்கோலமிடுகிறார்கள். மாளிகைமுற்றங்களில் மலர்விமானக்கோலங்கள் எழுகின்றன. ஏழடுக்கு, பதின்நான்கடுக்கு கோலங்கள். தேர்களில் குதிரைகள் தூக்கிய கால்களுடன் உறைந்திருக்கின்றன. விமானங்களில் சிறகுகள் காற்றை அறியாமலிருக்கின்றன. விழித்த கண்களுடன் பறவைகள் அவற்றில் அமர்ந்திருக்கின்றன. மலர்விரிவதை கண்டவரில்லை. மாக்கோலம் விரிவதை காணமுடியும். இதோ அவற்றில் பின்னிப்பின்னி நெளிந்து செல்கின்றன மாவு தொட்ட செந்நிற மெல்விரல்கள். தேடித்தேடி சென்று சிக்கிச் சிக்கிக் கண்டடைந்த புதிர்ப்பாதைகள்.”
”மலர்நிறைந்த நகரம். தூண்களென மாலைகளை எண்ணி சாய்ந்து விழுபவர்களின் நகரம். வசந்தகாலச் சோலையென்று எண்ணி வந்து மொய்க்கும் கருவண்டுகளின் நகரம். வண்டுகள் சென்றமரும் மலர்பூத்த குழல்கள். வண்டுகள் வழிதவறும் கனவெழுந்த விழிகள். வண்டுகள் மொழிமறக்கும் செவ்விதழ் எழுந்த பற்கள். தோழியரே, தோழியரே, ஒற்றை ஒரு வண்டை நான் கண்டேன். அது ஓசையெழுப்புவதில்லை. நிழலின் விதை என அது சுழன்று சுழன்று பறந்தது. அதன் விழிகளைக் கண்டேன். என் தோழியரே, கேளுங்கள். அவ்விழிகளிலும் சொல்லென ஏதுமில்லை. அந்த வண்டு எந்த மலரிலும் அமரவில்லை. நகரெங்கும் சுற்றிக்கொண்டிருக்கும் அவ்வண்டைக் கண்டு நான் அஞ்சினேன்.”
“பல்லாயிரம் சாளரங்களின் நகரம். திரைச்சீலை ஆடும் சாளரங்கள். இமைவிரித்து நகரத்தெருக்களை நோக்கி சிந்தையழிந்தவை. வானத்தைத் தொட்டு கனவிழந்தவை. சாளரங்கள் வழியாக வானம் இம்மாளிகைகளை நோக்குவதே இல்லையா? தோழியரே, கருவூலங்களில் சாளரங்களை அமைப்பதே இல்லையா?” அவள் என்ன பாடுகிறாள் என்று தெரியாமல் சாத்யகி நோக்கியிருந்தான். அவள் வெண்கழுத்தில் நீலநரம்பொன்று புடைத்து அதிர்ந்துகொண்டிருந்தது. மறுகணம் அவள் வலிப்பு வந்து விழுந்துவிடுவாள் என்று தோன்றியது. “கருவண்டே, நீ அமரும் மலரை கண்டுவிட்டாயா? இளையமலர். இன்றுகாலை பூத்த எழில்மலர்.”
அவள் விரல்கள் யாழைமீட்டிக்கொண்டே இருந்தன. பொருளமர்ந்த செவிச்சொற்கள் நின்றுவிட அவற்றை ஆடையெனக் கழற்றிவீசி சிந்தையறியும் சொற்கள் மட்டும் சென்றுகொண்டே இருப்பதுபோல யாழ் ரீங்கரித்தது. அவள் விழிகள் வெறித்திருந்தன. யாழுக்கும் அவளுக்கும் தொடர்பில்லை என்பது போல. அவளும் யாழைப்போல ஒரு இசைக்கருவி மட்டுமே என்பதுபோல.
முதுசூதர் தன் கையைத் தட்டி “குருகுலத்து கொடிபறக்கும் அஸ்தினபுரியை வாழ்த்துவோம். அஸ்தினபுரியை தன் கைகளில் ஏந்திய பாரதவர்ஷத்தை வாழ்த்துவோம். ஓம் ஓம் ஓம்” என்றார். அவள் திடுக்கிட்டு விழித்து அவர்களை சுற்றி நோக்கினாள். பின்னர் அஞ்சியவள் போல யாழை தன் மடியிலிருந்து விலக்கி கால்களை தழைத்தாள். முதுசூதர் விழிகாட்ட இன்னொரு விறலி அவள் தோள்தொட்டு பின்னால் அழைத்துக்கொண்டாள்.
சாத்யகி திரும்பி நோக்க ஏவலன் தாலத்தை நீட்டினான். அதில் பட்டும் பொன்நாணயங்களும் இருந்தன. அவற்றை வாங்கி தலைவைத்து வணங்கி சூதருக்கு அளித்தான். “தங்கள் சொல்வாழட்டும் சூதரே. என் குலம் வாழ நீங்கள் சொன்ன சொற்களுக்கு எளியேன் பரிசு இது.” முதுசூதர் “யாதவர் என்ற சொல்லுள்ளவரை வாழும் பெயர் கொண்டவர் நீங்கள் இளவரசே. என் விழிகள் காணும் நெடுந்தொலைவில் ஆழிமணிவண்ணன் அமர்ந்துபோகும் புள்ளரசன் என்றே உம்மை காண்கிறேன்” என்றார். அவர்கள் அதைப்பெற்றுக்கொண்டு வணங்கி பின்னகர்ந்தனர்.
சாத்யகி சற்று நேரம் படகிலேயே அமர்ந்திருந்தான். விரைந்து இருள் பரவிக்கொண்டிருந்தது. அவன் உள்ளம் ஏன் அத்தனை நிலையழிந்திருக்கிறது என்று அவனுக்குப்புரியவில்லை. மீண்டும் மீண்டும் அந்த இளம் விறலியின் விழிகள் நினைவுக்குவந்தன. அவளுக்கு பித்து இருக்கும் என்று தோன்றியது. அல்லது நகரில் பகலெல்லாம் மதுவும் ஃபாங்கமும் அருந்தியிருக்கலாம். அவள் விழிகள். அவளை நினைப்பதை ஏன் தவிர்க்கத் தோன்றுகிறது?
திரும்பி ஏவலனிடம் “அன்னை எழுந்துவிட்டார்களா?” என்றான். “ஆம், காத்திருக்கிறார்கள்.” சாத்யகி உள்ளே சென்றபோது சிறு சாளரத்தருகே குந்தி அமர்ந்திருந்தாள். வெளியே நின்றிருந்த படகுகளைத்தான் நோக்கிக்கொண்டிருக்கிறாள் என சாத்யகி அறிந்துகொண்டான். “அன்னையே, இன்னும் நூறு படகுகளுக்கு மேல் காத்திருக்கின்றன என்று தெரிகிறது. அனைத்திலும் பொருட்கள் உள்ளன. அனைத்துமே அரசகுடியினருக்குரியவை” என்றான். “நாம் சிறுபடகில் இறங்கி கரை செல்லலாம். படகின் பொருட்களை பின்னர் இறக்கி கொண்டுவந்து சேர்க்கும்படி சொல்கிறேன்.”
குந்தி அவனை அசையாத விழிகளுடன் நோக்கி “இல்லை, நான் என் முழு அகம்படி இல்லாமல் அஸ்தினபுரிக்குள் செல்வதாக இல்லை” என்றாள். “இல்லை அன்னையே, நான் சொல்லவருவதென்னவென்றால்…” என்று சாத்யகி தொடங்க “மூடா, நான் எப்படி நகர்நுழையப்போகிறேன்?” என்றாள். “சுங்கத்தலைவரிடம் தேர்…” என்ற சாத்யகி நிறுத்திக்கொண்டான். “என் அகம்படிப்படகில் மார்த்திகாவதியின் கொடி கொண்ட அரசத்தேர் இருக்கும். எனக்குமுன் கொம்பும் முழவும் கொடியுமாகச் செல்லும் வீரர்களும் என்னைத் தொடரும் அணித்தேர்களும் அப்படகில் இருக்கின்றன.” சாத்யகி தலையசைத்தான். “பொறுத்தருள்க அன்னையே” என்றான்.
“இந்த நகரிலிருந்து நான் துரத்தப்பட்டேன். வாரணவதத்தில் எரிமாளிகைக்கு என்னை அனுப்பியபோது இங்கே சிலர் புன்னகைசெய்திருக்கக் கூடும். அவர்களுக்கு முன் நான் இதோ நகர்நுழையப்போகிறேன். இந்நகரின் பேரரசியாகத்தான் நுழைவேன்” என்று குந்தி சொன்னாள். “நான் வரும் செய்தியை விதுரருக்கு முன்னரே அனுப்பியிருந்தேன். இங்கு இப்போதிருக்கும் அரசடுக்கில் அவரது இடமென்ன என்று தெரியவில்லை. அவர் என்னை முறைப்படி வரவேற்க ஒருங்கு செய்திருந்தாலும் இந்தச் சந்தடியில் அவரால் என்ன செய்யமுடியும் என்றும் தெரியவில்லை.”
அவள் உள்ளம்செல்லும் திசையை உய்த்து அவன் மெல்ல “நான் நகருக்குள் சிலவீரர்களை கொடியுடன் அனுப்பமுடியும். அவர்களைக் கண்டால் யாதவர் தங்கள் வருகையை அறிந்து…” என்றான். சினத்துடன் விழிதூக்கிய குந்தி அவன் முகத்தை நோக்கியதும் கனிந்து புன்னகைத்து “ஆம், நான் அரசியாகவே உள்ளே செல்லவிழைகிறேன். பிறிதொரு நாள் என்றால் நீ செய்வது பயனளிக்கும். ஆனால் இப்போது நகரமிருக்கும் நிலை அதுவல்ல” என்றாள்.
சாத்யகி “நகரமே களிவெறிகொண்டிருக்கிறது என்றார் சூதர்” என்றான். குந்தி “ஆம், அவரது பாடலை இங்கிருந்து கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்” என்றாள். “மக்கள் களிவெறிகொள்ள விழைபவர்கள். களிவெறியடைய ஒரு தொடக்கமாகத்தான் அரசகுடித் திருமணங்கள் அமையமுடியும். இத்தனை நாட்களாக இங்கே விழவுக்களியாட்டம் நீடிக்கிறதென்றால் இப்போது நகரம் தன்னை மறந்துவிட்டதென்று பொருள். இனி அதற்கு அரசகுலங்களும் திருமணங்களும்கூட தேவையில்லை இனி இது மீண்டும் உழைப்புக்கும் வாழ்வுக்கும் திரும்ப சற்று நாளாகும்.”
சாத்யகி அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று நோக்கிக் கொண்டிருந்தான். ”நான் காத்திருக்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை” என்றாள் குந்தி. சாத்யகி தலைவணங்கி வெளியே சென்றான். படகுகளில் பந்தங்கள் ஒவ்வொன்றாக எரியத்தொடங்கின. அலையடிக்கும் பெருநகராக கங்கைப்பரப்பு மாறியது அவர்களுக்குப்பின்னால் மேலும் மேலும் படகுகள் வந்து இணைந்துகொண்டன. அவற்றில் இருந்து அடுமனைப்புகையும் மதுவுண்டவர்களின் பாடல்களும் எழுந்தன. எங்கோ ஒரு கொம்பு ஒலித்தது. அஞ்சிய குதிரை ஒன்று கனைத்தது. பாய்களின் படபடப்பு. காற்றிலாடும் படகுகளில் தாழ்களும் கொக்கிகளும் சங்கிலிகளும் அசையும் ஒலி. காதாட்டி சங்கிலி குலுக்கி அசைந்து நின்றிருக்கும் யானைகள்.
சாத்யகி படகின் வெளிமுகப்பில் நின்றுகொண்டு துறைமேடையை நோக்கிக்கொண்டிருந்தான். துலாத்தடிகளை நீட்டி பொதிகளை எடுத்துக்கொண்டே இருந்த துறைமேடை துதிக்கையால் கவளம் பெறும் யானைக்கூட்டம் போல தோன்றியது. மீண்டும் மீண்டும் யானைகள். ஆனால் அஸ்தினபுரி அஸ்தியின் நகர். யானைகளால் கட்டப்பட்ட நகர். அந்நகரமே ஒரு யானை. அதன் பெருங்கோட்டைவாயிலை யானைநிரை என எண்ணியதை நினைவுகூர்ந்தான். அதன் அரசரை மதவேழம் என்கிறார்கள். அவர் காட்டிலிருக்கிறார். யானைகள் சாவதற்காக காட்டுக்குள் சென்றுகொண்டே இருக்கும் என்று அவன் கேட்டிருக்கிறான். அடர்காட்டுக்குள் ஒரு மரத்தை அவை இளமையிலேயே கண்டுவைத்திருக்கும். அங்கே உடலைச்சாய்த்து துதிக்கையை சுருட்டி கொம்பின்மேல் வைத்துக்கொண்டு காத்து நின்றிருக்கும். அதன் காது அசைந்து அசைந்து ஒலிகூரும். ஒலி பெற்றதும் நிலைக்கும். இறக்கும் யானையின் மத்தகத்தின்மேல் அதற்குரிய மலைத்தெய்வம் வந்து அமரும். சினமடங்காத மாதங்கன். பெருங்கருணை கொண்ட மாதங்கி. பேரன்னையாகிய கஜை. அந்த எடையால் அதன் மத்தகம் தாழ்ந்து தாழ்ந்துசெல்லும். துதிக்கை சுருண்டு மண்ணில் ஊன்றும். கொம்புகள் குத்தி ஆழ்ந்திறங்கும். வால் நிலைக்கும். யானை வலப்பக்கமாகச் சரிந்தால் அது விண்ணேறி தேவர்களின் ஊர்தியாகும். இடப்பக்கம் சரிந்தால் மண்ணில் ஒரு மன்னனாக மீண்டும் பிறக்கும். என்ன எண்ணங்கள். திருதராஷ்டிரரின் உடல்நிலை நன்றாகவே இருக்கிறது என்றுதான் உளவுச்செய்திகள் சொல்லின. அங்கே மலைக்காட்டில் தன் அணுக்கத்தொண்டர் விப்ரருடன் வேட்டையாடி உண்டும் இரவுபகலாக நீர்ப்பெருக்குகளில் நீந்தியும் அவர் உடல்நிலை மீண்டுவிட்டார். மாளிகைகளையும் அரசையும் அவர் மறந்துவிட்டார் என்றும் மீண்டும் நகருக்குத் திரும்பிவராமலேயே இருந்துவிடக்கூடும் என்றும் சொன்னார்கள். ஆனால் யானை எதையும் மறப்பதில்லை. காட்டை மட்டும் அல்ல நாட்டையும்கூடத்தான்.
அவன் அங்கேயே துயின்றுவிட்டான். அவன் கனவுக்குள் துறைமுகப்பின் ஓசைகள் கேட்டுக்கொண்டே இருந்தன. நூற்றுக்கணக்கான யானைகள் இணைந்து ஒரு நகரை கட்டுவதை அவன் கண்டான். ஆனால் மானுடரே இல்லை. அவையனைத்தும் மத்தகத்தின் மேல் மண்படிந்து செடிமுளைத்த காட்டுயானைகள். குன்றுகள் போன்ற உடல்களுக்குள் கண்கள் வேல்முனை என ஒளிவிட்டன. யானை ஒரு பாறை. பாறையிடுக்கில் ஊறித்தேங்கிய நீர்த்துளி அதன் கண். யானையின் கண்ணை பார்க்காதே என்பார்கள்.
யானை பெருந்தன்மையானது. குலம்கூடி குடிசெழித்து வாழ்வது. வளம் கொண்ட மண்ணைக்கொண்டு பிரம்மன் யானையை சமைத்தான் என்பது யாதவர்களின் மொழி. ஆகவேதான் அதன் உடலிலேயே செடிகள் முளைக்கின்றன. அந்த யானைக்கூட்டத்தின் நடுவே உயர்ந்து தெரிந்த மண்மேடும் ஒரு யானை என திகைப்புடன் கண்டான். அதன் முதுகிலும் மத்தகத்திலும் நூற்றுக்கணக்கான சிறிய பறவைகள் அமர்ந்தும் எழுந்தும் சிறகடித்தன. சிற்றொலி எழுப்பி சிற்றடி வைத்து நடந்து எழுந்து சுழன்றன. செவியசைவுடன் விளையாடின. வெண்பறவைகள். நீலப்பறவைகள். செந்நிறப்பறவைகள். பறவைகளா மலர்களா என ஐயம் வந்தது.
அதன் வெண்ணிறமான பெரிய தந்தங்கள் மேல் ஒரு சிறிய பறவை அமர்ந்திருந்தது. சிவப்பும் நீலமும் மஞ்சளும் கலந்த அழகிய சிறுபறவை. வண்ணத்துப்பூச்சி வளர்ந்து பறவையானது போல. ஆனால் அது அசையவில்லை. கிளையில் ஒரே ஒரு மலர் பூத்து நிற்பதுபோல. அல்லது அது பறவைதானா? கொம்பில் ஏதாவது சிக்கியிருக்கிறதா? அதன் சிறிய கருநிற அலகையும் நெற்றிப்பூவையும் சிறகுவரிகளையும் காணமுடிந்தது. அதன் தளிர்க்கால்கள் தந்தத்தைப் பற்றியிருந்ததையும் பின்னர் கண்டான். அதன் அசைவின்மையை கண்டபின் அவன் அறிந்தான். அதற்கு விழிகள் இருக்கவில்லை. யானை துதிக்கையைத் தூக்கி சின்னம் விளித்தது. ஏழெட்டு யானைகள் சின்னம் விளித்து அதை சூழ்ந்தன.
அவன் விழித்துக்கொண்டான். மல்லாந்து கிடந்திருந்தமையால் வானத்தையே முதலில் பார்த்தான். விடியலின் நீர்மையொளி நிறைந்திருந்த வானம் ஒரு பெரிய அசைவற்ற ஏரிபோல தோன்றியது. எழுந்து அமர்ந்து நோக்கினான். அவனுக்கு முன்னால் நின்றிருந்த பெரிய படகுகள் சங்கொலியுடன் துறைமேடை நோக்கி சென்றன. அவற்றைச் செலுத்திய குகர்கள் சேர்ந்தொலி எழுப்பி கயிறுகளை வீசினர். பெருவடங்களை அக்கயிறுகளைக் கொண்டு இழுத்து கரைக்குற்றிகளில் கட்டினர். யானைகள் இழுத்த சகடங்களால் மெல்ல மெல்ல படகுகள் கரையணைந்தன. நடைபாலம் நீண்டு கரைநோக்கி வந்தது. அடுத்த படகு அதற்குப்பின்னால் பொறுமையிழந்து நீரிலாடியது.
குகன் “நமது முறை இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடும் யாதவரே” என்றான். “விடிந்துவிட்டது. நாம் அணுகும்போது இளவெயில் இறங்கிவிடும்” என்றான் குகன். “இந்தப் பெரிய படகை பொதியிறக்கம் செய்யவே இரண்டுநாழிகைக்குமேல் ஆகலாம்.” “அன்னையை எழுப்பு. அவர்கள் சித்தமாகட்டும்” என்றான். குகன் தலைவணங்கினான். முன்னால் நின்றபடகின் மேல் பொதிகளை நோக்கி துலாவின் கொக்கி முனை இறங்கி வந்தது. விழியற்ற அரக்கனின் சுட்டுவிரல்.
சாத்யகி கீழே சென்று நீராடி உணவுண்டு மேலே வந்தான். கங்கையின் அலைகளின் வளைவுகள் காலையின் ஊமையொளியில் மிளிர்ந்தன. முதற்படகு பெரிய பொதிகளை இறக்கிவிட்டு மெல்ல முன்னால்செல்ல அடுத்த படகு அந்த இடத்தை நோக்கி சென்றது. அவனுடைய படகு துயில்கலைந்து அதை தொடர்ந்தது. குகன் வந்து வணங்கி “அன்னை நீராடுகிறார்கள்” என்றான். சாத்யகி கங்கையின் மேல் விரியத்தொடங்கிய ஒளியை நோக்கியபடி நின்றான். மரக்கூட்டங்களின் தளிர்களும் பாய்கயிறுகளில் வந்தமர்ந்த வெண்புறவுகளின் பிசிறிய இறகுகளும் ஒளிகொண்டன.
அவன் படகு மேலும் முந்திச்சென்று முதற்படகை ஒட்டியது. சிரிப்பொலி கேட்டு அவன் திரும்பிப்பார்த்தான். அந்தப்படகின் பின்பக்கம் இரு சிறுமிகள் கங்கையை நோக்கி சிரித்தபடி நின்றிருந்தனர். இருவருக்குமே பதினைந்து வயதுக்குள் இருக்கும். மூத்தவள் வட்டமான மாநிற முகமும் வைரத்துளி ஒளிவிட்ட சிறிய மூக்கும் பெரிய விழிகளும் குவிந்த இதழ்களும் கொண்டிருந்தாள். அவள் ஒரு கயிற்றை கங்கைக்குள் வீசி எறிந்து நோக்கிக்கொண்டிருந்தாள். அவளருகே நின்று படகைப்பற்றியபடி குனிந்து நோக்கி சிரித்த சிறியவள் நீளமுகமும் சுருண்ட கூந்தலும் சற்றுப்புடைத்த பெரிய மூக்கும் இரண்டு தெற்றுப்பற்கள் தெரிந்த புன்னகையும் கொண்டிருந்தாள்.
அவர்கள் தங்களுக்குத்தெரிந்தமுறையில் மீன்பிடிக்க முயல்கிறார்கள் என்று சாத்யகி எண்ணினான். புன்னகையுடன் நோக்கிக்கொண்டு நின்றான். “அதோ… அதோ அந்த மீன்” என்றாள் இளையவள். “அதுவே வந்து கொத்தவேண்டும்… துள்ளாதே” என்றாள் மூத்தவள். இளையவள் மூத்தவளின் தோளைப்பற்றி உலுக்கி “எனக்கு… நான் நான்” என்றாள். “அசைத்தால் ஓடிவிடுமடீ.” சிறியவள் கயிற்றைப்பிடித்து “நான் எடுத்த கயிறு… கொடுடீ” என்றாள். “கொக்கியை நான்தானே எடுத்தேன்…” என்றாள் மூத்தவள். சட்டென்று இளையவள் மூத்தவளை கிள்ளிவிட்டு ஓட மூத்தவள் அவளைத் தொடர்ந்து ஓட முடியாமல் கயிறுடன் நின்று தவித்து அவனை நோக்கினாள். திகைத்தபின் கயிற்றை அப்படியே விட்டுவிட்டு ஓடினாள்.
அவனருகே வந்து நின்ற குகன் “அவர்கள் மகாநிஷாதகுலத்து இளவரசிகள். அங்கே படகுகளிலிருந்து யானைத்தந்தங்களை இறக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். “அவர்களின் பெயரென்ன?” என்றான் சாத்யகி. “மூத்தவர் சந்திரிகை இளையவர் சந்திரகலை” என்றான் குகன். “நேற்றிரவு நான் அந்தப்படகுக்குச் சென்று அந்த குகர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அங்கே இந்த இரு இளவரசிகள் தவிர பிறர் துயின்றுவிட்டார்கள். இவர்கள் இருவரும் படகுகளில் இருந்து படகுக்கு வடங்கள் வழியாக செல்லவேண்டும் என்று அடம்பிடித்தார்கள். நிஷாதர்களுக்கு படகுக்கயிறுகள் பழக்கமில்லை. நான் மூன்றுமுறை அவர்களை அழைத்துச்சென்றேன்.”
முதற்படகு சங்கொலி எழுப்ப இரண்டாவது படகு ஏற்று ஒலியெழுப்பியது. ”நாம் விடியலொளியில் நகர்நுழைவோம் இளவரசே” என்றான் குகன். “நம் படைகளுக்கு சொல்லுங்கள். யாதவ அரசி முழுதணிக்கோலத்தில் அணிநிரையாகவே நகர்புக விழைகிறார்” என்றான் சாத்யகி.