ஆலயம்:கடிதங்கள்

ஆலயம் தொழுதல் கட்டுரை வாய்விட்டு சிரிக்க வைத்தது. துவாரபாலகர்கள் ஒரு ரூபாயை உள்ளே கொடுங்கள் என்று கைகாட்டி நிற்பது அபாரமான கற்பனை. சாமிமீது பணம் விட்டெறிவது வெண்ணை பொச்சக் என்று வீசுவது எல்லாம் படித்து சிரித்து எழுந்து நின்றுவிட்டேன். வாழ்த்துக்கள் ஜெ
கோபி

***

 அன்புள்ள ஜெயமோகன்

     இன்று எங்கள் வீட்டில் நோன்பு. மிக்க பய பக்தியுடன் கொண்டாடுவார்கள். கோயிலுக்கு சென்றிருந்தோம். கோயில் மூலை முடுக்கெல்லாம் உங்கள் நகையொலி கேட்டவண்ணம் இருந்தது. குருக்கள் என் புன்முறுவலை கடிந்து நோக்கிய வண்ணம் இருந்தார்.  நம் மக்கள் மத விஷயத்தில் முதிரா குழந்தைகள்.  படிக்கவந்த இடத்தில் விளையாடிக்கொண்டிருப்பர். அதட்டி திருத்த வேண்டிய ஆசான் புன்னகைத்துக்கொண்டு இருப்பார். நமக்கென்ன ஒரே பிறவியா என்ன? அடுத்த பிறவியில் பார்த்துக்கொள்ளலாம் என்ற அல்ட்சியம். படிப்பின் அருமை தெரியாத அறியாமை. எத்தனை ஜெயமோகன்கள் தேவையோ.


அன்புடன்

த.துரைவேல்

அன்புள்ள துரைவேல் அவர்களுக்கு,

ஒருமுறை ஒரே பயணமாக நான் வசந்தகுமார்[ தமிழினி] எல்லாரும் திருச்செந்தூர் மற்றும் மணப்பாடு போயிருந்தோம். க்கோயிலுக்கு உள்ளேயே மலம் கழித்திருந்தார்கள். கோயிலை ஒட்டிய அழகிய கடற்கரை மலக்காடு. கோயிலுக்குள் ஈரம் அழுக்கு எச்சில் துப்பிய கொழகொழப்பு.  அர்ச்சகர்களின் காட்டுக்கத்தல்கள். அன்றே மணப்பாடு. மிக மிகச் சுத்தமான கடற்கரை. அழகிய பேராலயங்கள் இரண்டு. இரண்டுமே சுத்தமாக பேணபட்டிருந்தன. அந்த சுத்தமும் அமைதியும் உருவாக்கிய தெய்வீக உணர்வு அபாரமானது. நாம் இன்னும் காட்டுமிராண்டிக்காலத்தில் இருந்து மீளவில்லையா என்ற எண்ணம் ஏற்பட்டது

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,ஆனந்த விகடனில் வந்த சங்க சித்திரங்கள் மூலமாக மட்டுமே நான் உங்கள் எழுத்துக்களை படித்திருந்தேன். அதன் பின் அதே விகடனில் வந்த உங்கள் blog பற்றிய விமர்சனத்தை கண்டு நானும் ஆர்குட்டில் பலமாக விமர்சித்தேன். ஆனால் அதன் பின் உங்கள் blog – என்னையுமறியாமல் என் favorite  ஆகி விட்டது. அதே போல தீராநதியல் வரும் உக்கார்ந்து யோசிக்கும் தொடரும் ரசிக்கும் படி உள்ளது.ஆலயம் தொழுதல் கட்டுரை நல்ல நகைச்சுவை திறனோடு எழுதப்பட்டுள்ளது. படிக்கும் போதே வாய் விட்டு சிரித்தேன்.

நன்றி…

அன்புடன்,

(உங்கள் புதிய வாசகன்)
R.Kaliprasadh

அன்புள்ள நண்பருக்குநீங்கள் என்னைப்பற்றி மதிப்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. இவ்விணையதளம் என்னுடைய நாவல்கள் சார்ந்து உங்கள் கவனத்தை ஈர்க்கும் என்றால் மேலும் மகிழ்ச்சி. பொதுவாக எனக்கு விவாதங்கள் பத்து எதிரிகளுக்கு ஒரு வாசகர் என்ற முறையில் வாசகர்களை ஈட்டித்தருவது வழக்கம். எதிரிகள் பெருகினாலும் வாசகர்களும் பெருகுவது மகிழ்ச்சியளிக்கும். எதிரிகள் எப்படியானாலும் என் வாசகர்களாக ஆக வாய்ப்பில்லை அல்லவா?

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்
//‘ஒருரூபாய்’ என்று ஒரு சிலையும் ‘உள்ளே கொடுங்கள்’ என்று இன்னொரு சிலையும் கைகாட்டி மிரட்டி உறுத்து நோக்கி நம்மிடம் சொல்கின்றன.//
இந்த வார்த்தைகளைக் கடுமையாக கண்டிக்கிறேன். 1980களில் இது சரியாக இருந்திருக்கலாம். இன்றைக்கும் பணவீக்கம் பங்கு சந்தை வீழ்ச்சி இத்யாதி இருக்கையில் தூக்கிய ஒரு விரலுக்கு எப்படி ஒரு ரூபாய் என பொருள் இருக்கமுடியும்? குறைந்த பட்சம் ஒரு பத்துரூபாய் நோட்டு என்றாவது பொருள் கொள்ள வேண்டும். அதைப் போல உள்ளே கொடுங்கள் என்று மொட்டையாக சொன்னால் எப்படி அது உண்டியலா அல்லது அர்ச்சனை தட்டிலா என்பதை சொல்லாமலா நம் முன்னோர்கள் கோவில்களை கட்டியிருப்பார்கள்? பழமையான நாம் கோவில்களில் வாஸ்து மட்டுமல்ல நாஸ்ட்ரடாமஸ் ‘செஞ்சுரீஸ்’ போல வருங்கால பங்குசந்தை வீழ்ச்சியையும் எழுச்சியையும் கோவில் சிற்பங்களின் மூலம் தெரியமுடியும் என்கிற உண்மைகளையெல்லாம் மறைத்து எழுதியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அரவிந்தன் நீலகண்டன்

முந்தைய கட்டுரைஇஸ்லாம்: மிரட்டல்கள், அவதூறுகள்
அடுத்த கட்டுரைகோடுகளை மீறி…ஆழியாளின் கவிதைகள்