அ.மார்க்ஸின் ஆசி

a_marx_401

ஜெ,

பேராசிரியர் அ.மார்க்ஸ் உங்களை அவன் இவன் என்று ஒருமையில் எழுதி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். நீங்கள் இஸ்லாமிய, கிறித்தவ மக்கள் மேல் காழ்ப்பை வளர்ப்பதாகவும் உங்கள் படைப்புகளை வாசித்தால் எவருக்கும் சிறுபான்மையினர் மீது வெறுப்பே உருவாகும் என்றும் சொல்லியிருந்தார். நான் உங்கள் படைப்புகள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன்.

உண்மையில் பின் தொடரும் நிழலின் குரல் வாசித்தபின்னர்தான் ஏசு என்ற வடிவம் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. தொடர்ந்து கிறிஸ்துவம் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் தீவிரமாக எழுதிவரக்கூடியவர் என்றுதான் உங்களை நான் எண்ணியிருக்கிறேன்.. சமீபத்தில் வாசித்த வெறும்முள் என்னை பரவசப்படுத்திய ஒரு சிறுகதை. ஆகவே எனக்கு அந்த வரி ஆச்சரியத்தை அளித்தது.

அதோடு நீங்கள் இஸ்லாம் பற்றியும் இஸ்லாமிய இலக்கியம் பற்றியும் எழுதிய கட்டுரைகளையும், இஸ்லாமியப் பண்பாட்டைக் கூறும் கதைகளையும் வாசித்திருக்கிறேன். கெத்தேல் சாகிப்பையும் அலை அறிந்தது போன்ற கதைகளையும் இஸ்லாமிய இதழ்களிலேயே கண்டிருக்கிறேன்.

இப்படிப்பட்ட பிரச்சாரங்களை உங்கள் எழுத்துக்களை வாசிக்காதவர்களை உத்தேசித்துச் செய்துகொண்டே இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்

அருண்

அன்புள்ள அருண்,

சென்ற இருபத்தைந்து வருடமாக தமிழிலக்கியத் தளத்தில் எனக்கு நிகராக அவதூறு செய்யப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட இன்னொரு எழுத்தாளர் இல்லை என்றே சொல்லமுடியும். என் படைப்புலகம் அளவுக்கு திரிக்கப்பட்ட, முத்திரைகுத்தப்பட்ட புனைவுலகமும் பிறிதில்லை. அது நான் உருவாக்கும் பாதிப்பு என்றே எடுத்துக்கொள்கிறேன். ஆகவே வருந்துவதற்கேதுமில்லை.

ஆனால் உறுதியாக என்னால் ஒன்று சொல்லமுடியும், என் படைப்புகளுக்கு சிறுபான்மைச் சமூகத்து வாசகர்கள் பிற எந்தத் தீவிர இலக்கிய எழுத்தாளர்களை விடவும் அதிகம். வெண்முரசுக்கு முன்பணம் கட்டும் வாசகர்களிலேயே இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் கணிசமாக உண்டு.

இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த அவதூறுகள் வழியாகவே ஆர்வம் கொண்டு உள்ளே வருகிறார்கள். என் புனைவுலகில் ஓரிரு ஆக்கங்களை வாசித்தபின் மெல்ல உள்ளே வந்துவிடுகிறார்கள். இறுதிவரை வாசகர்களாகவும் நீடிக்கிறார்கள்.நண்பர்களாகவும்.

என்னுடைய புனைவுலகில் ஒருபோதும் நான் முன்னரே இப்படியிப்படி ஒரு சித்திரத்தை அளிக்கவேண்டுமென எண்ணிக்கொள்வதில்லை. எது வருகிறதோ அதுதான். அதில் இன்றுவரை எந்த ஒரு சமூகத்தின்மீதும் காழ்ப்போ கசப்போ வெளிப்பட்டதில்லை என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். கடும் விமர்சனம் என்றால் அது நான் சார்ந்த சமூகம் மீது மட்டுமே முன்வைக்கப்பட்டிருக்கும்.

இஸ்லாம் குறித்த கருத்துக்களைச் சொல்லும்போது, ஒரு பிரிவினையை தெளிவாக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இஸ்லாம் இன்று மதமாகவும், சமூகமாகவும் இயங்குவது ஒரு பக்கம். இன்னொருபக்கம் மிகச்சிறுபான்மையினரான அதிகார அரசியல்வாதிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் தரப்பாகவும் செயல்படுகின்றது.

நான் விமர்சனம் எதையாவது முன்வைப்பேன் என்றால் அந்த அரசியல் இஸ்லாமியக் கருத்துக்கள் மீதுதான். அதிலும் ஒற்றைப்படையான தீவிரவாத வெறியைக் கக்கும் அமைப்புகள் மீது மட்டும்தான். அவை உருவாக்கும் அழிவு சிறுபான்மைச்சமூகத்திற்கே அதிகம். அவர்களை அது பழைமைவாதத்தில், அச்சத்தில், அவநம்பிக்கையில் கட்டிப்போடுகிறது. பொருளியல் தேக்கத்தில் நிறுத்துகிறது

மாறாக அ.மார்க்ஸ் அவர்கள் அந்தத் தீவிரவாதத்தின் குரலாக இன்று மேடைகளில் ஒலிப்பவர். அவர் என்னுடைய அந்த விமர்சனத்தை இஸ்லாமிய எதிர்ப்பாக மாற்றிக்காட்டித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அவரிடம் கோரப்பட்டுள்ள பணியே அதுதான்

என் விமர்சனங்களை ஒரு நியாயமான இஸ்லாமியர் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மட்டும். முன்வைக்கவேண்டும் என்ற எச்சரிக்கை எப்போதும் எனக்குண்டு. ஆகவே ஒருபோதும் இஸ்லாமிய அரசியலைப்பற்றிக்கூட வன்மையான கருத்துக்களை முன்வைப்பதில்லை. ஏனென்றால் இஸ்லாமியர் தங்களை இன்று பாதிக்கப்பட்டவர்களாக எண்ணும் மனநிலையில் உள்ளனர். விமர்சனங்களை அவர்கள் தாக்குதல்களாகவே கொள்கிறார்கள்.

ஆகவேதான் இஸ்லாமிய நம்பிக்கைகள், ஆசாரங்கள் ஆகிய எதைப்பற்றியும் எப்போதும் எதுவும் நான் சொன்னதில்லை. முக்கியமான தருணங்களில்கூட அமைதியையே மேற்கொள்கிறேன். பர்தாமுறை உட்பட இஸ்லாமியப் பண்பாடு பற்றி வாரம் ஒருவர் என்னிடம் கேட்பதுண்டு. பலமுறை நான் ‘கள்ளமௌனம்’ சாதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் என் கருத்துக்களை இஸ்லாமியர் ஏற்று விவாதிக்கும் நிலையில் இல்லாதபோது சொல்வதில் பொருளில்லை என்பதே என் நிலைபாடு.

அதேசமயம் இஸ்லாமிய வரலாறு, இஸ்லாமியக் கலாச்சாரம் பற்றிய என் மதிப்பை எப்போதும் பதிவுசெய்தும் வருகிறேன். அவை என் நண்பர் சதக்கத்துல்லா ஹசநீயின் இஸ்லாமிய இதழ்களில் ஏராளமாக வெளிவந்துள்ளன.

இந்த எச்சரிக்கையை கிறிஸ்தவர்களிடம் நான் கொள்வதில்லை. ஏனென்றால் கிறிஸ்தவ சமூகம் இன்னும் சற்று அதிகமாக விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும்நிலையில் உள்ளது என்பது என் எண்ணம். கிறிஸ்தவர்கள் எனக்கு மேலும் அணுக்கமானவர்களும் கூட

ஆயினும்கூட அது வெளியே உள்ள விமர்சனம் என்பதனால் நட்புநிலைக்கு அப்பால் சென்று விமர்சிப்பதில்லை. கிறிஸ்தவ வாழ்க்கைமுறை, நம்பிக்கை சார்ந்த மாற்றுக்கருத்துக்களை முன்வைப்பதில்லை. கிறிஸ்தவ அமைப்புகளை அவற்றின் அமைப்புசார்ந்த செயல்பாடுகளுக்காக மட்டுமே விமர்சனம் செய்திருக்கிறேன். ஆனால் மதமாற்றத்தடைச்சட்டம் உட்பட அனைத்து விஷயங்களிலும் நான் கிறிஸ்தவர்களின் குரலுடன் இணைந்தே ஒலித்திருக்கிறேன்.

கிறிஸ்து என் ஆன்மாவின் வெளிச்சம். நான் எந்நிலையிலும் மண்டியிட்டு பிரார்த்தனைசெய்யும் இறைவடிவமும்கூட. மிகமிக அண்மையில் கிறிஸ்துவை உணர்ந்த தருணம் ஒன்று பின் தொடரும் நிழலின் குரலில் நிகழ்ந்துள்ளது. ஓர் அளவுக்கு மேல் அதை பிறரிடம் பகிர முடியாது. ஆகவே அந்தத் தளத்தில் எவருடனும் விவாதிப்பதில்லை. என் புனைவுகளில் அதைக் காணலாம்.

அதேபோல இங்குள்ள சூஃபி ஞானியருடனும் எனக்கு அந்தரங்கமான ஓர் ஆன்மிக உறவுண்டு. அவர்களின் தர்காக்கள் அனைத்திற்கும் சென்றிருக்கிறேன். சென்றுகொண்டும் இருக்கிறேன். அந்த அனுபவங்களை இந்துக்களிடம் பகிர முடியாது. நவீன வஹாபியருடன் கொஞ்சமும் பகிரமுடியாது.

அ.மார்க்ஸ் போன்றவர்கள் இந்தியச்சிறுபான்மையினரின் குரல் அல்ல. சிறுபான்மையினரை கொந்தளிப்பான அரசியலுக்கும் பாதுகாப்பின்மை உணர்வுக்கும் தள்ளிவிடக்கூடிய, அதைக்கொண்டு அரசியல் லாபம் ஈட்டக்கூடிய மிகச்சிறிய அரசியல்குழுக்களின் குரலாக ஒலிப்பவர்கள்.அவர் சொல்லும் வெறுப்பரசியலை நான் சொல்லமுடியாது.

இந்துமதம் அழியவேண்டும் என விழையும் அ.மார்க்ஸ் என்ற கிறிஸ்தவப் பின்னணி கொண்ட சிந்தனையாளர் இஸ்லாமிய மேடையில் முழங்குவது இந்தியாவில் மதநல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக அல்ல என்பதை உணர்ந்த இஸ்லாமியர் ஏராளம் உண்டு. அதன் மூலம் பலன் பெறுவது இஸ்லாமியரல்ல, அவர்களின் எதிர்தரப்பினர்தான் என அவர்கள் அறிவார்கள்

அத்தகைய வாசகர்களை நான் கண்டுகொண்டேதான் இருக்கிரேன். அவர்கள் இவர்களுடன் வந்து கூச்சலிட்டு பேசாததனாலேயே அவர்கள் இல்லை என்று ஆகிவிடுவதில்லை. அவர்கள் சமூக நல்லிணக்கத்தை விழைபவர்கள். ஒற்றுமையின் மூலம் முன்னேற எண்ணுபவர்கள். நாளை இந்திய இஸ்லாமின் முகம் அவர்களிடமிருந்து வரவேண்டுமென விழைகிறேன்.

என் தேசம் என்பது காந்தியால் உருவகிக்கப்பட்டது. அது இறந்தகாலத்தில் இருந்து உருவாக்கப்பட்டது அல்ல. எதிர்காலம் குறித்த கனவிலிருந்து உருவாவது. அதில் இந்துக்களும் இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் சீக்கியரும் அவர்களின் அரசியலை மதங்களுக்கு அப்பால் வாழ்க்கைத்தேவைகளில் இருந்தும் எதிர்காலக்கனவுகளில் இருந்தும் உருவாக்கிக்கொள்ளவேண்டும். எப்போதும் அத்தகைய அரசியலை மட்டுமே நான் முன்வைத்துமிருக்கிறேன்.

நான் இந்தத் தேசம் ஒன்றாகவே வாழமுடியும் என என் நேரடி அனுபவங்களால் உணர்ந்தவன். ஏனென்றால் உலகிலேயே மிக அதிகமான இனக்குழுக்கள், மொழிக்குழுக்கள், சாதிகள், மதங்கள் இணைந்து வாழும் நிலம் இதுதான். இது ஒரு வெப்பநாடாக இருந்தமையால் இப்படி ஆகிவிட்டிருக்கிறது. எந்தப்பகுதியில் எந்த பிரிவினைவாதம் எழுந்தாலும் விளைவு அகதிப்பெருக்காகவே இருக்கும்.

அதை நான் ஏற்கமுடியாது. அது காந்தி-நேரு-அம்பேத்கரின் தரிசனம். அதற்கு எதிரான அனைத்துக்குரல்களையும் எதிர்ப்பது என் பொறுப்பு என நினைக்கிறேன்.

இங்கே சென்ற காலமாக தொடர்ந்து கருத்துக்களை வெளியே இருந்து இயக்கும் சக்திகளால் , இங்குள்ள சுரண்டலமைப்புகளால் பிரிவினைவாதம் விதைக்கப்படுகிறது. பிரிவினையின் காழ்ப்பை எளிதில் உருவாக்கலாம். அதன்பின் உருவாகும் அழிவை எவராலும் தடுக்கமுடியாது. நான் முன்வைக்கும் விமர்சனங்கள் அந்த அச்சம் அல்லது பதற்றத்தில் இருந்து எழுபவை மட்டுமே. அந்தக் கோணத்தில் எழுதுவதனால் நான் தேசியவாதி என்று வசைபாடப்படுகிறேன்.

இந்த தேசத்தின் ஞானமும் பண்பாடும் இந்து, பௌத்த, சமண மரபுகளில் உள்ளன என்பது என் எண்ணம். அவை ஒட்டுமொத்தமாக அழியவேண்டும் எனக் கூவும் குரல்களில் எனக்கு உடன்பாடில்லை. அவற்றில் காலத்தின் களைகளும் குப்பைகளும் உண்டு என எனக்குத்தெரியும். அவற்றை கூரிய விமர்சன நோக்குடன் களைந்து மரபை மீட்பதே நம் பணி என நினைக்கிறேன்.

இந்துமதம் சார்ந்த என் அணுகுமுறை எப்போதுமே கறாரான .புறவயமான, வரலாற்று நோக்குள்ள விமர்சனப்பார்வை கொண்டது என்பதை என் வாசகர் எவரும் காணலாம். ஒரு தருணத்திலும் நான் நம்பிக்கைகளை முன்வைப்பதில்லை. உணர்ச்சிகளை மட்டும் முன்வைப்பதில்லை. மரபின் மீதான என் ஏற்பையும் மறுப்பையும் திட்டவட்டமாக முன்வைக்கிறேன்

இந்துமதமும் பண்பாடும் முழுமையாக அழிந்தாகவேண்டும் என்ற இவர்களின் கூக்குரலுடன் இணைந்துகொள்வதில்லை என்பதனால், அதன் தத்துவச்சிறப்பைம் பண்பாட்டுவிரிவை சுட்டிக்காட்டுகிறேன் என்பதனால் நான் இவர்களால் அடிப்படைவாதி என பழிக்கப்படுகிறேன்.

ஆனால் இவர்களின் இந்த பொருளற்ற எதிர்ப்பே என்னை நோக்கி வாசகர்களைக் கொண்டுவருகிறது. இவர்களின் வாதங்களை கடந்து அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளச்செய்கிறது. அவர்களுக்கு அதற்காக நன்றியே சொல்லவேண்டும்.

நெடுங்காலமாக என்னை உயர்குடியினர் என்றும் உயர்சாதியினர் என்றும் வசைபாடினர். ஏழாம் உலகத்திற்கும் வெள்ளையானைக்கும் பின் அந்தக்குரல் மட்டுப்பட்டிருக்கிறது. இப்போது இது மட்டும் எஞ்சியிருக்கிறது. எனக்கு இதில் பதிலென ஒன்றுமில்லை, நான் எழுதுவதை வாசியுங்கள் என்பது மட்டுமே.

மற்றபடி அவர் ஒருமையில் அழைப்பதோ அவமதிப்பாகப் பேசுவதோ பெரிய பிழை ஒன்றுமில்லை. அவர் என்னைவிட மூத்தவர், பேராசிரியர். ஒரு ஆசிரியரின் கசப்பை பெற்றுக்கொண்டிருக்கிறேன் என்று எடுத்துக்கொள்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைவெள்ளை யானையும் வரலாறும்
அடுத்த கட்டுரைஜெயகாந்தன் நினைவஞ்சலி