தார்டப்பாவில்

stephen_leacock

ஸ்டீவன் லீகாக்கின் Nonsense novels ஐ நேற்றுமுதல் வாசிக்க ஆரம்பித்தேன். 8 நக்கல் கதைகள். பேய்க்கதை, கடல்கதை, துப்பறியும் கதை, அறிவியல் புனைகதை என விதவிதமாகப்பிரித்து மேய்ந்திருக்கிறார். மூளைக்குள் இருந்த ஆராய்ச்சித்தகவல்கள், ஜெயகாந்தன் நினைவுகள், வெண்முரசுச் சிடுக்குகள் எல்லாவற்றையும் ஹோஸ்பைப்பில் தண்ணீர் பீய்ச்சி கழுவுவதுபோலக் கழுவி சுத்தம் செய்தபின் இலகுவாக நடமாட முடிந்தது.

இப்போதெல்லாம் இதையெல்லாம் யாராவது படிக்கிறார்களா என்று தெரியவில்லை. நானே கொஞ்சநாள் முன்னர் ஒரு பகடி எழுத்தாளரைப்பற்றிக் கட்டுரை எழுதப்போய்தான் இந்த நாவல்களை நினைவுகூர்ந்து என் நூலகத்திலிருந்து அகழ்ந்து எடுத்தேன்

ஆங்கில புனைவெழுத்து உருவாகிவந்த காலத்தைய மனநிலைகளை, கூறுமுறைகளை அறிந்தவர்கள்தான் இந்தப் பகடிகளுக்குச் சிரிக்கமுடியும். Soaked in Seaweed என்னும் ‘பழையபாணி கடல்சாகசக்கதை’யில் கதாநாயகன் கப்பலுக்குள் நுழைகிறான். அவனை அறிமுகம் செய்யவேண்டுமே. அவனே அவனை பிரதிபலித்துப் பார்த்துக்கொள்கிறான்

‘நான் உயரமான அழகான இளைஞன். கட்டுக்கோப்பான திடமான உடலமைப்பு. சூரியனாலும் சந்திரனாலும் வெண்கலநிறம் அடைந்தவன். [நட்சத்திரங்களின் பாதிப்பால் ஆங்காங்கே செம்புநிறமான புள்ளிகளும் உள்ளன] என் முகத்தில் நேர்மை, புத்திசாலித்தனம், அசாதாரணமான அறிவுத்திறன் ஆகியவை கிறித்தவத்தன்மை எளிமை அடக்கம் ஆகியவற்றுடன் கலந்து தெரிந்ததன’ மேற்கண்டவை தெரிவது ஒரு தார்டப்பாவில்

இணையத்தில் முழுமையாகவே கிடைக்கிறது. ஆனால் பழுப்புக்காகிதத்தில் தோல் அட்டையிட்ட [ஒய் எம் சி ஏ நூலகத்தில் கொள்முதல் செய்த] புத்தகமாக வாசித்தபோது அபாரமான ஒரு மன எழுச்சி வந்தது. லீகாக் அவரது காலத்தில் தோலட்டை போடப்பட்ட தடித்த நூல்களாக மாறிவிட்டவற்றை நையாண்டி செய்கிறார். அவரையே அப்படித்தான் நான் வாசிக்கிறேன்!

http://www.gutenberg.org/cache/epub/4682/pg4682.html

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 77
அடுத்த கட்டுரைமுத்திரைகள்