பகுதி 16 : தொலைமுரசு – 2
சாத்யகி படகில் வேனில்மாளிகையை அடைந்தபோது பின்மதியம் ஆகியிருந்தது. குளிர்காலக்காற்று சூழ்ந்திருந்தாலும் படகின் அடியிலிருந்து கங்கையின் இளவெம்மை கலந்த ஆவி எழுந்துகொண்டிருந்தது. அவன் படகின் விளிம்பில் கால்வைத்து நின்றபடி நீரை நோக்கிக்கொண்டிருந்தான். ”நீந்துகிறீர்களா இளவரசே?” என்றான் குகன். “நீந்துவதா? படகிலேயே குளிர்தாளவில்லை.” “நீர் வெதுமை கொண்டிருக்கும். இப்போது நீந்துவதை வீரர் விரும்புவதுண்டு.” சாத்யகி “கங்கை எனக்கு பழக்கமில்லை” என்றான். குகன் சிரித்து “பழக்கமில்லை என்பதனாலேயே நீந்தும் வீரர்களும் உண்டு” என்றான்.
தொலைவில் காம்பில்யத்தின் ஒலிகள் ஒரு முழக்கமென கேட்டுக்கொண்டிருந்தன. குளிர்காலத்தில் பின்காலை நேரத்தில்தான் கங்காவர்த்தத்தில் உள்ள நகரங்கள் விழித்தெழுகின்றன. மெல்லமெல்ல ஓசைகள் சூடேறி முன்மதியத்தில் உச்சம் கொள்கின்றன. பின்மதியத்திலேயே நகரம் அடங்கத்தொடங்கிவிடும். மாலையில் நகரத்தெருக்கள் ஓய்ந்து விடும். வானிலிருந்து திரையிறங்கியதுபோல மூடுபனி தெருக்களை மூடியிருக்க அப்பால் மழைக்குள் தெரிவதுபோல விளக்குகள் செவ்வொளி கரைந்துவழிய தென்படும்.
“குளிர்காலம் முழுக்க இங்கே இசைகேட்பதுதான் வழக்கம்” என்றார் கருணர். “வணிகர்கள் பெரிய இசைநிகழ்வுகளை அமைப்பார்கள். குலச்சபைக்கூடங்களில் அவர்களின் குலப்பாடகர்கள் பாடுவார்கள். சிறிய இல்லங்களில்கூட இசைதான் நிறைந்திருக்கும். ஆனால் சென்ற சில ஆண்டுகளாக இசையும் கலையும் குறைந்தபடியே வருகின்றன. ஒவ்வொரு இடத்திலும் மக்கள் கூடியமர்ந்து அரசியலைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தவருடம் சொல்லும்படி ஓர் இசைநிகழ்ச்சிகூட நடக்கவில்லை. யயாதியின் வீழ்ச்சியை ராவணனின் அழிவை பரசுராமரின் எழுச்சியை கேட்க எவருக்கும் பொறுமை இல்லை.”
“அவர்கள் அறியவிழைவதெல்லாம் எந்த நாடு எவருடன் உறவுகொண்டுள்ளது, எந்த இளவரசியை யார் கவர்ந்துசென்று மணந்துள்ளனர் என்பதைப்பற்றி மட்டுமே. எளிய குதிரைக்காரனிடம் பேசினால்கூட பாரதவர்ஷத்தின் இன்றைய அரசியல் குறித்து அவனுக்கு ஒரு உளச்சித்திரம் இருப்பது தெரிகிறது. என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அவனுக்கும் சில கருத்துக்கள் உள்ளன.” கருணர் சிரித்து “குறைவாக அறிந்திருப்பதனால் அவன் சொல்வது நாம் நினைப்பதைவிட தெளிவுடன் இருக்கவும் வாய்ப்புண்டு” என்றார். “மக்கள் முழுமையாகவே மாறிவிட்டிருக்கிறார்கள்.”
“ஏன்?” என்றான் சாத்யகி. “ஏனென்றால் அங்கே அஸ்தினபுரி மாறிவிட்டது. அங்கு பேரரசர் அன்றி பிறர் இசைகேட்பதில்லை. அங்கே கலைநிகழ்ச்சிகளே இல்லை. அங்கே ஒவ்வொருநாளும் அரசியல் சூழ்ச்சிகளே நடந்துகொண்டிருக்கின்றன. பறவைக்கூட்டத்தை அழைத்துச்செல்வது ஒரேயொரு முதல்பறவைதான். அஸ்தினபுரியையே பாரதவர்ஷமும் நடிக்கிறது.” மீண்டும் புன்னகையுடன் “ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டிருப்பது போரின் கதைகளை. விவாதிப்பது போருக்கான சூழ்ச்சிகளை. கோடைகாலத்தில் அனைத்து உயிர்களும் மழைக்காக ஏங்குவதுபோல பாரதவர்ஷமே ஒரு பெரும்போருக்காக காத்திருக்கிறது. பல்லாயிரம் நெஞ்சங்கள் விண்ணை நோக்கி போரை கோருகின்றன. தெய்வங்கள்தான் மானுடர்மேல் கொண்ட கருணையால் சற்று தயங்கிக்கொண்டிருக்கின்றன என்று தோன்றுகிறது” என்றார்.
வேனில்மாளிகையின் படித்துறையில் படகுகள் ஏதும் இருக்கவில்லை. அவன் படகு அணுகியதும் காவலன் ஒருவன் வந்து கொடியசைத்தான். அவன் இறங்கிக்கொண்டதும் உள்ளிருந்து மாளிகைச்செயலன் சிசிரன் வெளியே வந்து காத்து நின்றான். சாத்யகி இறங்கியதும் சிசிரன் அருகே வந்து வணங்கி “வருக இளவரசே” என்றான். முறைமைச் சொற்களை சொல்லி வரவேற்று அழைத்துச்சென்றான். உள் கூடத்தில் அவனை அமரச்செய்து “தங்களுக்கு விடாய் தீர…” என்று குரல் தழைத்தான். அப்போதுதான் அங்கே பீமன் இல்லை என்பதை சாத்யகி உணர்ந்துகொண்டான். “இளையபாண்டவர் இங்கில்லையா?” என்றான்.
சிசிரன் “இல்லை” என்று குரல்தாழ்த்தி சொல்லி “பொறுத்தருளவேண்டும்…” என்றான். “எப்போது மீள்வார்? என்ன சொல்லி சென்றார்?” என்றான். சிசிரன் “இளவரசே, அவர் இன்றுகாலை கங்கையில் பாய்ந்ததை காவலர் பார்த்திருக்கிறார்கள். இதுவரை மீளவில்லை. எப்போது மீள்வார் என்று தெரியாது. சென்றமுறை கங்கையில் சென்றவர் இரண்டு நாட்களுக்குப்பின்புதான் திரும்பி வந்தார்” என்றான். சாத்யகி புன்னகையுடன் “இளவரசிகள் இங்குதான் இருக்கிறார்களா?” என்றான். சிசிரன் புன்னகைத்து “ஆம், அவர்கள் முதலில் அடைந்த திகைப்பும் துயரும் இப்போது மறைந்துவிட்டன. அவர்கள் இருவரும் தங்களுக்குள் பகடையாடியும் பாடல்பாடியும் மகிழ்வுடன் இருக்கிறார்கள்” என்றான்.
“நான் வருவது இளவரசருக்கு தெரியும் அல்லவா?” என்றான் சாத்யகி. “தெரியும். நேற்றே சொல்லிவிட்டேன்” என்றான் சிசிரன். சாத்யகி சற்று ஏமாற்றம் அடைந்தான். பாண்டவர்களுக்குத்தான் முதன்மைச்செய்தி வந்திருக்கும் என்று திரௌபதி சொன்னதை நினைவு கூர்ந்துமெல்ல அசைந்து அமர்ந்து “நான் காத்திருக்கிறேன்” என்றான். “இன்னீர் கொண்டுவரச்சொல்லலாமா?” சாத்யகி தலையசைத்தான். சிசிரன் சென்றபின் சாளரம் வழியாக தெரிந்த மரத்தின் இலையசைவை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். இன்னீர் வந்தது. அதை அருந்தியபின் அமர்ந்திருந்தபோது எத்தனைநேரம் அப்படி அமர்வது என்ற எண்ணம் வந்தது. சற்றுநேரம் அமர்ந்திருந்ததை பதிவுசெய்தபின் கிளம்பிவிடலாம் என எண்ணினான். கிளம்பிவிடலாமென எண்ணியதுமே நேரம் அழுத்தத் தொடங்கியது.
அவன் எழப்போகும்போது படிகளில் யாரோ இறங்கிவரும் ஒலி கேட்டது. வளையல்களும் சிலம்புகளும் ஓசையிட பட்டாடை சரசரக்க அணுகி வரும் இளவரசிகளை உணர்ந்து அவன் எழுந்து நின்றான். முதலில் வந்தவள் நீண்ட முகமும் நீளமான கைகளும் கொண்டிருந்தாள். அவள் புருவங்கள் நன்றாக மேலெழுந்து வளைந்திருந்தன. மேலுதடும் சற்று தடித்து மேலே குவிந்திருந்தது. விரியாமல் ஒடுங்கிச்சரிந்த தோள்கள். புடைத்த கழுத்தெலும்புகள் மேல் மணியாரம் கிடந்தது. உயரமான உடல் வளைவுகளில்லாமல் இருந்தாலும் நடக்கும்போது அவள் வளைந்து வளைந்து வருவதுபோல தோன்றியது.
பின்னால் வந்தவள் அவளுடைய தோளுக்குக் கீழேதான் உயரமிருந்தாள். பால்வெண்ணிறமும் கரியநுரை போன்ற சுருண்டகூந்தலும் பளிங்குநீலக் கண்களும் கொண்டிருந்தாள். அகன்ற பெரிய இதழ்களும் தடித்த தோள்களும் தயக்கமான அசைவுகளுமாக காமரூபத்து வெண்பசுக்களை நினைவுபடுத்தினாள். அப்படியென்றால் முதலில் வந்தவள் குதிரை என சாத்யகி எண்ணிக்கொண்டான். முதலில் வந்தவளின் நிழலில் இரண்டாமவள் வந்ததுபோல தோன்றியது.
சாத்யகி “இளவரசிகளை வணங்குகிறேன். நான் யாதவனாகிய சாத்யகி. துவாரகையின் தூதன். தங்கள் அழகிய பாதங்கள் தொட்ட மண்ணை நோக்கும் பேறுபெற்றேன்” என்றான். “நான் காசிநாட்டு இளவரசி பலந்தரை” என்றாள் நீண்ட முகமுடையவள். நீளமான விரல்கள் கொண்ட கைகளால் காற்றில் பறந்த மேலாடையைப் பற்றி சுழற்றி இடையில் அமைத்தபடி “யாதவ இளவரசரை சந்தித்தது எனக்கும் நிறைவளிக்கிறது. அமர்க!” என்றாள். “இவள் சேதிநாட்டு இளவரசி பிந்துமதி.” சாத்யகி அவளை மீண்டும் வணங்கினான். அவர்கள் அமர்ந்தபின் தானும் அமர்ந்துகொண்டான்.
பலந்தரை தன் நீளமான கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டாள். அதை இடக்கையால் சுழற்றிக்கொண்டிருந்தது அவள் பதற்றம் கொண்டிருப்பதை காட்டியது. அவர்கள் அமர்ந்த முறையிலேயே வேறுபாடிருந்தது. பலந்தரை இருக்கையின் கைப்பீடத்தில் இரு கைகளையும் வைத்து நிமிர்ந்து அமர்ந்தாள். பிந்துமதி இருக்கையின் ஒருபக்கமாக வலது கைப்பீடத்தில் இரு கைகளையும் வைத்து உடலை ஒடுக்கி அமர்ந்தாள்.
பலந்தரை “துவாரகையிலிருந்து யாதவ இளவரசரின் தூதராக வந்தீர்கள் என்றார்கள்” என்றாள். “ஆம், இளவரசி” என்றான் சாத்யகி. “நீங்கள் காலையிலேயே இங்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.” சாத்யகி அவள் என்ன சொல்ல வருகிறாள் என ஒரு கணம் எண்ணியபின் சொற்களை தொகுத்துக்கொண்டு ”முறைமைப்படி நான் அமைச்சரைத்தான் முதலில் சந்திக்கவேண்டும். அவரது சொற்படி இளவரசியை சந்தித்தேன்…” என்றான்.
பலந்தரை இடைமறித்து “எந்த முறைமைப்படி?” என்றாள். சாத்யகி திகைத்து “அரசிளங்குமரி…” என தொடங்க “இளவரசே, முறைமைப்படி என்றால் நீங்கள் அமைச்சரை சந்தித்தபின்னர் பட்டத்து இளவரசரையோ அல்லது இணையமைச்சரையோ சந்தித்திருக்கவேண்டும்…” என்றாள். சாத்யகி “ஆம், ஆனால் அவர்களை இன்று மாலையில் அரசவைக்கூட்டத்தில்…” என்று சொல்லத்தொடங்க அவள் மீண்டும் இடைவெட்டி “மகளிரை சந்திப்பதற்கு எந்த முறைமையும் இல்லை” என்றாள்.
சாத்யகி ஒன்றும் சொல்லவில்லை. அது அவளுக்கு தன்னம்பிக்கையை அளிக்க குரலை உயர்த்தி அரசவையில் பேசுவதுபோல “ஆகவே அது முறைமைச்சந்திப்பு இல்லை. அதை மறுத்துவிட்டு நீங்கள் இங்கு வந்து இளையபாண்டவரையோ அல்லது யாதவ அரசியையோ சந்தித்திருக்கவேண்டும். அதுவே முறை” என்றாள்.
சாத்யகி “பொறுத்தருள்க!” என்றான். “வந்திருந்தால் இளையபாண்டவரை சந்தித்திருக்கலாம். இப்போது அவர் இங்கில்லை. எப்போது வருவார் என்றும் தெரியாது. காலையில் உங்களை அவர் எதிர்பார்த்தார்… இல்லையாடி?” சாத்யகி திரும்பி பிந்துமதியின் விழிகளை நோக்கியதுமே அது பொய் என அறிந்துகொண்டான். பிந்துமதி ஆம் என்று தலையசைத்தாள். “அவர் கிளம்பிச்சென்றதேகூட சினத்தால் இருக்கலாம். பெரும்பாலும் அவர் திரும்பி வரப்போவதில்லை.”
சாத்யகி சோர்வுடன் “நான்…” என்று மீண்டும் தொடங்க “நான் ஒன்றும் சொல்லவிழையவில்லை. இது அரசியல். எங்களுக்கு அதில் எந்தப்பங்கும் இல்லை” என்றாள். “நீங்கள் இளையபாண்டவரின் சினத்திற்கு ஆளாகாமலிருக்க என்ன செய்திருக்கலாமென்று மட்டும்தான் சொன்னேன்.” சாத்யகி பெருமூச்சுவிட்டு “பொறுத்தருள்க!” என்றான்.
பலந்தரை விழிகளை விலக்கி இயல்பாக “என்ன சொன்னாள்?” என்றாள். சாத்யகி “யார்?” என்றான். “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி” என்றாள். “இளவரசியை நான் அரசமுறையாக சந்திக்கவில்லை. தனிப்பட்ட சந்திப்புதான். சந்திப்பின் நிகழ்வுகளை வெளியே சொல்ல எனக்கு ஆணையில்லை.” பலந்தரை சீற்றத்துடன் “சொல்லும்படி நான் ஆணையிடுகிறேன்” என்றாள். சாத்யகி பேசாமல் அமர்ந்திருந்தான். “சொல்லும்.”
சாத்யகி தலைவணங்கி “இளவரசி, நான் தங்கள் ஆணைகளை ஏற்கும் நிலையில் இல்லை” என்றான். “அப்படியென்றால் நீர் யார்? நீர் இளையபாண்டவருக்காக வந்த தூதன் அல்லவா?” சாத்யகி மீண்டும் தலைவணங்கி “நான் துவாரகையின் தூதன். இளையபாண்டவருக்கும் இளவரசிக்கும் செய்திகொண்டுவந்தவன். அச்செய்திகளை மாறிமாறிச் சொல்ல இளைய யாதவரின் ஒப்புதல் இல்லை. என்னை பொறுத்தருள வேண்டும்” என்றான்.
பலந்தரை உரக்க “நீர் அவளை சந்தித்தபோது என்ன நடந்தது என்று எனக்குத்தெரியும்… அவள் மாயையில் விழுந்துவிட்டீர்” என்று சொல்ல சாத்யகி திகைத்து விழிதூக்கி அவளை நோக்கினான். அவள் முகத்தில் இருந்த சினத்திற்குமாறாக அவளுடைய கொடிபோன்ற கைகள் பதைப்புடன் ஒன்றை ஒன்று பற்றிக்கொண்டு நெளிந்தன. அவன் பணிவும் உறுதியும் கலந்த குரலில் “இளவரசி, தாங்கள் இளவரசிக்குரிய முறையில் பேசவில்லை” என்றான்.
“ஆம், பேசவில்லை. ஆனால் நான் உண்மையை பேசுகிறேன்” என்று அவள் மூச்சிரைக்க கூவினாள். “உண்மையைப் பேசவில்லை. உங்கள் உணர்வுகளை பேசுகிறீர்கள். உணர்வுகளைப் பேசுவதற்கு அரசு சூழ்தலில் இடமேதும் இல்லை” என்றான் சாத்யகி. “தாங்கள் சொல்வது தாங்களே எண்ணிக்கொள்ளும் வெறும் கற்பனைகள்தான் இளவரசி. நீங்கள் இளையபாண்டவரால் பாஞ்சால இளவரசிக்கு நிகராக எண்ணப்படவில்லை என்ற சினத்தில் பேசுகிறீர்கள் என்று நான் சொன்னால் எப்படியிருக்குமோ அதுபோல” என்றான்.
“என்ன?” என்றபடி பலந்தரை எழுந்துவிட்டாள். “நான் அப்படி சொல்ல துணியமாட்டேன். ஏனென்றால் இளையபாண்டவரின் அரசி என் அரசி அல்ல என்றாலும் மதிப்பிற்குரியவர். நான் துவாரகையின் அரசருக்கு மட்டுமே கட்டுப்பட்டவன்” என்று சொல்லி சாத்யகி தலைவணங்கினான்.
“நான் யார் தெரியுமா? யாருடன் பேசுகிறீர் தெரியுமா?” என்று பலந்தரை கைநீட்டி கூச்சலிட்டாள். “அக்கா வேண்டாம், அக்கா” என்று பிந்துமதி அவள் புயத்தைப்பற்றி அசைத்தாள். அவள் கையை உதறி “என்னை யாரென்று நினைத்தீர்?” என்றாள். அவள் குரல் உடைந்து உலோக ஒலி எழுப்பியது. “ஆம், நீங்கள் காசிநாட்டு இளவரசி. அஸ்தினபுரியின் பேரரசியாக ஆகப்போகிறவரின் தங்கை.”
பலந்தரை உடல் அனைத்து விசையையும் இழப்பது தெரிந்தது. இடையில் ஊன்றிய கை விழுந்து வளையல் ஒலித்தது. விழிகளில் நீர் நிறைந்திருக்க பற்களைக் கடித்தமையால் தாடை அசைய “நீர் இதற்காக கண்ணீர் வடிப்பீர். இப்போது சொல்கிறேன், இதற்காக கண்ணீர் வடிப்பீர்” என்று கூவியபின் திரும்பி படிகளில் ஏறி ஓடினாள். பிந்துமதி அவனை ஒருகணம் தயங்கி நோக்கியபின் திரும்பி தொடர்ந்து ஓடினாள்.
சாத்யகி பெருமூச்சுடன் மீண்டும் அமர்ந்துகொண்டான். தன்னை எளிதாக்கிக்கொள்ள அவனுக்கு மேலும் நேரம் தேவைப்பட்டது. சிலகணங்கள் உடைந்த எண்ணங்கள் அவன் வழியாக கடந்துசென்றபின் அதை சொல்லியிருக்கக் கூடாதென்று உணர்ந்தான். மெல்ல மெல்ல அந்த இரு இளவரசிகள் மீதும் ஆழ்ந்த இரக்கம் ஏற்பட்டது. எளிய பெண்கள். கிளம்பி சென்றுவிடவேண்டும் என்று நினைத்தான். ஆனால் அதுவும் உடனடியாக சரி என்று தோன்றவில்லை. சினத்துடன் சென்றதாக ஆகிவிடலாம். சிசிரனை அழைத்து சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத்தான் செல்லவேண்டும். ஆம், அதுதான் முறையானது.
அவன் எழுந்தபோது படகு வந்து படித்துறையில் நிற்பதை சாளரம் வழியாகக் கண்டான். அதிலிருந்து குந்தியும் ஓர் இளவரசியும் இறங்க சிசிரன் சென்று வரவேற்று முகமன் சொல்லிக்கொண்டிருந்தான். சாத்யகி வெளியே சென்று கை கூப்பியபடி சிசிரனுடன் வந்த குந்தியை அணுகினான். “வணங்குகிறேன் அரசி” என்றான்.
குந்தி புன்னகைத்தபடி அருகே வந்து அவன் தலையில் கைவைத்து “இங்கு வந்துவிட்டாய் என்றார்கள். இங்கிருந்தே நீ அரசவைக்கு சென்றுவிடக்கூடும் என்று நினைத்தேன். ஆகவேதான் வந்தேன்” என்றாள். அவன் சிரித்து “அன்னையே, என்னிடம் என்ன அரசு சூழ்தல்? நீங்கள் இளையபாண்டவர் இங்கில்லை என்று அறிந்துதான் வந்தீர்கள்” என்றான்.
“மூடா” என்று அவன் தோளில் அடித்து சிரித்து குந்தி “இவள் சேதிநாட்டு இளவரசி, கரேணுமதி. நகுலனின் துணைவி” என்றாள். சாத்யகி தலைவணங்கி “இளவரசியை சந்திப்பதனால் வாழ்த்தப்பட்டவன் ஆனேன்” என்றாள். அவள் அவனையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பதுபோல தோன்றியது.
அவன் பார்வையை விலக்கிக்கொள்ளும்போது அவள் “பிந்து மேலேதான் இருக்கிறாளா?” என்றாள். அவள் தன் முகத்திலிருந்தே எதையோ உய்த்துக்கொண்டதை சாத்யகி உணர்ந்தான். “ஆம், முறைமைப்பேச்சுக்குப்பின் மேலே சென்றுவிட்டார்கள். நான் கிளம்புவதற்காக வெளியே வந்தேன்” என்றான். அவள் அதற்கு எப்பொருளும் தோன்றாமல் தலையசைத்தாள்.
“அவர்கள் ஏன் கீழே வரவில்லை?” என்றபடி குந்தி நடந்தாள். ”முறைமுரசு ஒலிக்கவில்லை அல்லவா? அறிந்திருக்க மாட்டார்கள்” என்றான் சாத்யகி. “ஆம், சிசிரரே , இளவரசிகளுக்கு என் வரவை அறிவியும்” என்றபடி அவள் மேலேறி கூடத்திற்குச் சென்று அமர்ந்தாள். “துவாரகையில் இருந்து இங்கு வந்தபின்னர் ஒருநாள்கூட நான் அந்நகரை எண்ணாமல் இருந்ததில்லை. இன்று என் உள்ளத்தில் அஸ்தினபுரியைவிட துவாரகையே எனது நகர் என்று தோன்றுகிறது.” குந்தி சாத்யகியிடம் அமரும்படி கைகாட்டினாள். கரேணுமதி விலகிநின்று அவனை நோக்கிக்கொண்டிருந்தாள்.
“என்ன செய்தி?” என்று குந்தி இயல்பாக கேட்டாள். “ஓலை என ஏதுமில்லை அரசி. வழக்கமான வாழ்த்துச்செய்திதான். அதை தங்களிடம் சொல்லும்படி சொன்னார்.” சற்று நிமிர்ந்து அமர்ந்துகொண்டு குந்தி “ம்” என்றாள்.
சாத்யகி கரேணுமதியை ஏறிட்டுப்பார்த்தான். குந்தி “சொல், அவர்களும் தெரிந்துகொள்ளட்டுமே” என்றாள். சாத்யகி “தங்கள் நலனையும் பாஞ்சால இளவரசி நலனையும் பிற இளவரசியர் நலன்களையும் இளைய யாதவர் நாடுகிறார். தாங்கள் அஸ்தினபுரிக்கு செல்லும்போது அவரும் அங்கிருப்பார் என்றும் அங்கே தங்களை சந்தித்து அடிபணியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் சொன்னார். அவ்வளவுதான்.”
அவன் சொல்வதற்குள்ளாகவே அவள் விழிகள் மாறிவிட்டன. தலையை அசைத்து “ஆணையிடுகிறானா?” என்றாள் புன்னகைடன். “சிறுமூடன்” என்று சொல்லி அசைந்து அமர்ந்து “ஆம், அதுதான் முறையாக இருக்கும்” என்றாள்.
“எனக்குப்புரியவில்லை” என்றான். “என்னை உடனே அஸ்தினபுரிக்கு செல்லும்படி சொல்கிறான். அவனும் கிளம்பி அங்கே வருவான். என் மைந்தர் தங்கள் இளவரசிகளுடன் நகர்நுழையும்போது அவனும் நானும் அங்கே இருக்கவேண்டும் என்பது அவன் திட்டம்.”
சாத்யகி வியந்து “நீங்கள் என்ன எண்ணியிருந்தீர்கள்?” என்றான். “நான் இவர்களுடன் சேர்ந்து அங்கே நகர்நுழைவதாகதான் எண்ணிக்கொண்டிருந்தேன்.” சாத்யகி நெஞ்சில் ஓடிய எண்ணத்தை உய்த்தறிந்து “என்னை அவன் அங்கே செல்லச்சொல்கிறான் என்றால் உன்னையும் என்னுடன் வரச்சொல்கிறான் என்றே பொருள்” என்றாள். சாத்யகி தலைவணங்கினான்.
குந்தி தன் முகவாயை வருடியபடி ”அங்கே மூத்த அரசர் இப்போது இல்லை. அவர் எதற்காக காட்டுக்குச் சென்றார் என்ற ஐயம் எனக்கு அப்போதிருந்தே இருந்தது. அது இப்போது மேலும் உறுதியாகிறது” என்றாள். சாத்யகி “ஏன்?” என்றான். குந்தி திரும்பி நோக்க சிசிரன் வந்து நின்று “இளவரசியருக்கு சற்று உடல்நலமில்லை என்றார்கள். மூத்தவருக்கு…” என்று சொல்ல குந்தியின் விழிகள் மாறின. ”இருவீரர்களை அழைத்துச்சென்று அவர்களின் கைகளைக் கட்டி இழுத்துக்கொண்டு வாரும்” என்றபின் திரும்பி “மைந்தா, எதற்காக விழியிழந்த அரசர் காடுபுகவேண்டும்? அதைத்தான் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். அதற்கான எந்தச்சூழலும் அங்கில்லை” என்றாள்.
மிக இயல்பாக தொடர்ந்தாள் “ஏனென்றால் அஸ்தினபுரியில் இந்நாட்களில் ஏதோ அரச அறிவிப்புகள் வரப்போகின்றன. அவை அவரது பெயரால் வெளிவருமென்பதனால் அரசாணைகளேதான். ஆனால் அவருக்கு அதில் பங்கில்லை என்றும் ஊரார் நினைக்கவேண்டும்.” சிசிரன் தவிப்புடன் “அரசி” என்றான். திரும்பி அவனிடம் “அது என் ஆணை” என்ற குந்தி உடனே விழிதிருப்பி சாத்யகியிடம் “நிலப்பகுதிகளை எப்படிப்பிரிப்பது என்பது முடிவாகிவிட்டது. முழு வரைபடத்தையும் எனக்கு அனுப்பிவிட்டனர். நான் துவாரகைக்கும் அதன் மெய்ப்பை அனுப்பியிருக்கிறேன். விதுரர் அமர்ந்து அமைத்த பங்கீடு அது. அதில் இனி ஏதும் செய்யமுடியாது” என்றாள்.
சிசிரன் அவளிடம் மேலும் சில சொற்கள் பேச விழைந்து அவள் அவனை நோக்கித்திரும்பாதது கண்டு திரும்பிச்சென்றான். கரேணுமதியின் உடல் தவிப்பதையும் உதடுகளை இறுக்கிக்கொண்டு ஆடையை கையால் பின்னியபடி அவள் வாயிலையும் குந்தியையும் மாறி மாறி நோக்குவதையும் சாத்யகி கண்டான். அவள் கைகள் கீழே சரிந்தபோது எழுந்த வளையலோசை கேட்டு சாத்யகி விழிதூக்க அவள் நின்ற இடத்திலிருந்து விலகாமலேயே பின்னடைந்ததுபோன்று உடலசைந்தாள். “ஆனால் படைகள் இருக்கின்றன. அவற்றை பிரிப்பதில்தான் பெரிய விளையாட்டுகள் இருக்கும்” என்றாள் குந்தி.
“படைகளை இப்போது பிரிக்கவேண்டியதில்லை என்பது மூத்த அரசரின் விருப்பம். அஸ்தினபுரியின் எல்லைக்காவல்படைகள் அப்படியே நீடிக்கவேண்டும். அவை பேரரசரின் ஆணையில் இருக்கும். இரு தலைநகர்களின் காவல்படைகள் மட்டும்தான் தனித்தனியாக இருக்கும். இருநாடுகளும் தனித்தனியாக படைவல்லமையை பெருக்கிக்கொள்ளக்கூடாது என்பதும் பொதுப்புரிதல்…” படிகளில் இளவரசிகள் இறங்கி ஓடிவரும் ஒலி கேட்டது. கதவு திறந்து இருவரும் வந்து மூச்சிரைக்க நின்றனர். பிந்துமதி உதடுகளை மடித்து அழுதுகொண்டிருந்தாள். அவர்களை நோக்கிய விழிகளை அவன் திருப்பிக்கொண்டான்.
குந்தி அவர்களை அணுவிடைகூட திரும்பிநோக்காமல் இயல்பாக பேச்சைத் தொடர்ந்தாள். “ஆனால் எப்படியோ படைவல்லமை இருதரப்பிலும் பெருகும் என்பதுதான் உண்மை. விதுரர் அரசுமேலாண்மையை சிறப்புறச் செய்வார். ஆனால் படைநீக்கங்களை அறிந்தவரல்ல. அஸ்தினபுரியின் படைகள் இன்னமும் காந்தாரர் ஆணையிலேயே உள்ளன. படைநடத்தத் தெரிந்த பெருந்தலைவனாகிய அங்கநாட்டரசனும் அவர்களுடன் இருக்கிறான்.” சாத்யகி இளவரசிகளை நோக்கி அறியாமல் சென்ற விழியை கட்டுப்படுத்தியபடி “ஆம்” என்றான். அவன் நெஞ்சு படபடத்தது.
“அத்துடன் மிகப்பெரிய ஒரு வினாவும் உள்ளது. அஸ்தினபுரியின் படைகளில் பெரும்பகுதி காந்தாரர்கள். நாற்பத்து ஏழு வருடங்களுக்கு முன்னர் காந்தாரருடன் வந்து குடியேறியவர்களின் குருதி முளைத்துப்பெருகி உருவான படை அது. அவர்கள் இன்றும் காந்தாரர் சொல்லுக்கே கட்டுப்பட்டவர்கள். அவர்களை தவிர்த்தால் அஸ்தினபுரியின் படை என்பது மூன்றில் ஒரு பங்கே.” சாத்யகி “அதில் பாதியைத்தான் நாம் பெறுவோமா?” என்றான். “அதெப்படி?” என்று குந்தி புன்னகைசெய்தாள். “காந்தாரப்படை என ஒன்று இன்று தனியாக இல்லை. அவர்கள் அஸ்தினபுரியின் படைகளுக்குள் கலந்து உள்ளனர்.”
சாத்யகி பெருமூச்சுவிட்டான். உண்மையிலேயே மிகச்சிக்கலான நிலைமை அது என்று தோன்றியது. “எல்லைக்காவல்பொறுப்பு அஸ்தினபுரியின் பேரரசரிடம் இருக்கும் என்பதற்கான உண்மையான பொருள் பெரும்படை சகுனியின் கையில் இருக்கும் என்பதுதான். அவர் தன் படைகளை இந்திரப்பிரஸ்தத்தைச் சுற்றி நிறுத்தமுடியும். எல்லைக்காவல் என்பது நம்மை சிறைவைப்பதாக ஆகக்கூடும்.” சாத்யகி ஒருகணம் கரேணுமதியை நோக்கிவிட்டு “நாம் என்னசெய்யமுடியும் அன்னையே?” என்றான். அவளுடைய கைவளை ஒலிதான் இயல்பாக தன்னை அவளை நோக்கச்செய்தது என உணர்ந்து இனி அவ்வொலியை தவிர்ப்பது என முடிவுசெய்தான்.
“என்ன செய்யமுடியும் என்று இப்போது சொல்லமுடியாது. அங்கே படைநகர்வு மற்றும் பிரிப்பு தொடர்பாக ஏதேனும் ஆணைகள் வெளியாகுமென நினைக்கிறேன். விதுரரின் பொதுப்பார்வைக்கு மிக இயல்பானவை என்றோ நமக்கு நலன்புரிபவை என்றோகூட தோன்றக்கூடியவை. ஆனால் உண்மையில் நம்மை சிறைவைப்பவை. நாம் எழமுடியாது தடுப்பவை. அந்த ஆணைகள் வெளியாகும்போது மூத்த அரசர் அங்கிருக்கமாட்டார். அப்படியென்றால் அவை சகுனியின் ஆணைகளே. நாம் அங்கிருந்தால் நாம் என்ன செய்யக்கூடுமென பார்க்கலாம். கண்ணனும் அங்கு வருகிறான் என்றால் நம்மை எளிதில் அவர்கள் வென்றுசெல்லமுடியாது.”
சாத்யகி “அன்னையே, திருதராஷ்டிர மாமன்னர் தன் மைந்தர்களை கொல்ல முயன்றதாகவும் அவர்கள் உடல் உடைந்து மருத்துவசாலைகளில் இருந்ததாகவும் உளவுச்செய்திகள் வந்தன. இளையவர் இன்னமும்கூட படுக்கையில் இருந்து எழவில்லை என்றார்கள்” என்றான். குந்தி “நானும் அதை அறிந்தேன். ஆனால் என்ன நடந்தது என்று இப்போது சொல்லமுடியாது. ஒருவேளை அவரை இவர்கள் கொல்லமுயன்றிருக்கலாம். அவர் அதைத்தடுக்க போராடியிருக்கலாம்” என்றாள்.
சாத்யகி திகைத்து “தந்தையையா?” என்றான். “ஏன்? உடன்பிறந்தவர்களை கொல்லத்துணிபவர்கள் அதைச் செய்ய தயங்குவார்களா என்ன?” என்றாள் குந்தி. “கொல்லத் திட்டமிட்டிருக்கமாட்டார்கள். ஒரு சொல்மோதலின் முடிவில் சினம்கொண்டு தாக்கியிருக்கலாம்… அது மற்போர் என்று நினைக்கிறேன். மூத்த அரசரை நானறிவேன். அவரை மற்போரில் வெல்ல பீமனாலும் இயலாது. நின்று போர்புரிவதற்கே பலராமர் ஒருவரால்தான் முடியும். இவர்கள் இருவர் இருந்தமையாலும் அவர் முதியவர் என்பதனாலும் துணிவுகொண்டிருக்கிறார்கள். அவரால் நசுக்கப்பட்டார்கள்.”
சாத்யகி “இல்லை… ஆனால்” என தயங்க “என்ன நடந்திருக்குமென்றே தெரியவில்லை. அது ஒரு நாடகமா இல்லை உண்மையிலேயே ஒரு பூசல் நிகழ்ந்ததா? மூத்த அரசர் அஸ்தினபுரியில் இருக்கும் வரை முழுமையான கட்டுப்பாடு காந்தாரர் கைக்கு வராது. ஆகவே அரசரை காடேகும்படி சொல்லியிருக்கலாம். அது அவரை சினம் கொள்ளசெய்ததில் மைந்தர்களை தாக்கியிருக்கலாம். ஆனால் பின்னர் அவரை அச்சுறுத்தி காடேக ஒப்புக்கொள்ள வைத்திருக்கலாம். அவர் இல்லாதபோது அஸ்தினபுரி என்பது காந்தார அரசேயாகும். இந்தத் தருணத்தை பயன்படுத்திக்கொண்டு சில முடிவுகளை அவர்கள் அறிவிக்கக் கூடும்” என்றாள் குந்தி.
சாத்யகி சிலகணங்கள் தயங்கிவிட்டு “அப்படி ஒரு போர் நிகழ்ந்திருக்குமா அன்னையே? அங்கர் வேறு அங்கிருந்திருக்கிறார்” என்றான். குந்தி அதுவரை அவளிடம் இல்லாத விரைவுடன் “அவன் அவர்களை தடுக்கமுயன்றிருப்பான். அதில் அவனுக்கும் புண்பட்டிருக்கலாம்” என்றாள். சாத்யகி “நீங்கள் அவரை அறிவீர்களா?” என்றான். “இல்லை, ஏன்?” என்று குந்தி கேட்டாள். “நீங்கள் எவரையும் முறைமைமீறி சொல்வதில்லை. அங்கரை மட்டும் அவன் என்றீர்கள்.” குந்தி “அவன் சூதன், அவனுக்கென்ன முறைமை?” என்றபடி எழுந்துகொண்டாள். “நீ இன்றுமாலை அரசரை சந்திக்கவேண்டும் அல்லவா?”
“ஆம்” என்றபடி சாத்யகி எழுந்து ”வெறும் முறைமை சந்திப்புதான்” என்றான். “அவையில் நாம் அஸ்தினபுரிக்கு செல்லவிருப்பதை நீயே சொல்லிவிடு. நாம் நாளை மாலையே செல்கிறோம்.” சாத்யகி “நான் இன்னமும் இளையபாண்டவரை சந்திக்கவில்லை” என்றான். “அவனுக்காகக் காத்திருப்பதில் பொருளில்லை” என்ற குந்தி “அவன் இங்கே அரண்மனையில் இருப்பது குறைவு” என்றாள். அறியாமல் ஒருகணம் பலந்தரையை நோக்கிய சாத்யகி விழிகளை திருப்பிக்கொண்டான். “இவர்கள் இருவர் இருந்தாலும் அவன் உணர்வது ஏதோ ஒரு குறையை மட்டுமே.” சாத்யகி எந்த எதிர்வினையும் முகத்தில் தெரியாமலிருக்க முயன்றான்.
குந்தி திரும்பி பலந்தரையை நோக்கி அவள் முகத்திலிருந்த பதைப்பை அறியாதவள் போல “நானும் இவனும் நாளையே அஸ்தினபுரிக்கு செல்கிறோம். நீங்கள் என்னசெய்யவேண்டும் என்பதை நான் அங்கிருந்து அறிவிக்கிறேன்” என்று புன்னகையுடன் சொன்னாள். பிந்துமதி உதட்டை இறுக்கியபடி தலையை அசைத்தாள். பலந்தரை நீர்பரவிய விழிகளும் இறுகிய முகமுமாக அசைவற்று நின்றாள். “யாதவனுக்கு உங்கள் முறைமைவணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்… அவன் அரசரை சந்திக்கச் செல்கிறான்” என்றாள் குந்தி.
பலந்தரை பேச முயன்றபோது தொண்டை அடைத்திருந்தது. அதை சீர்செய்தபடி “தங்கள் வரவால் நாங்கள் பெருமைபடுத்தப்பட்டோம் யாதவ இளவரசே. தங்களை வணங்கி வாழ்த்துகிறோம்” என்றாள். சாத்யகி “பெருமை என்னுடையது இளவரசி” என்றான். பின்னால் நின்ற பிந்துமதி மேலும் பலந்தரையின் பின்னால் மறைந்து அவள் சொன்ன அதே சொற்களை உச்சரிப்பு விளங்காமல் முணுமுணுக்க சாத்யகி தலை வணங்கி “இளவரசியின் சொற்களால் பெருமைக்குள்ளானேன்” என்றான்.
அவன் திரும்பி கரேணுமதியின் சினம் நிறைந்த விழிகளை சந்தித்தான். “இளவரசர் இங்கு வந்தமை எங்களை பேரரசிகளாக உணரச்செய்கிறது” என்று அவள் சொல்ல அவன் மெல்லிய திடுக்கிடலுடன் அவள் விழிகளை சந்தித்தான். “தொன்மையான யாதவப்பேரரசின் வாழ்த்தாகவே தங்கள் சொற்களை கொள்கிறோம்.”
சாத்யகி குந்தியை நோக்காமலிருக்க கழுத்தை இறுக்கிக்கொண்டு “சேதிநாட்டுக்கும் யாதவர்களுக்கும் உள்ள உறவென்பது முறைமையால் ஆனதல்ல, குருதியால் ஆனது” என்றான். “அன்னை சுருததேவி அல்லவா யாதவர்களுக்கு முதல் கொடி?” அவள் சொல்லிழந்து அறியாமல் அரைக்கணம் குந்தியை நோக்கிவிட்டு “ஆம், அது மகிழ்வூட்டுகிறது” என்று பொருளில்லாமல் சொன்னாள். சாத்யகி குந்திக்கு மீண்டும் ஒருமுறை தலைவணங்கி விடைபெற்றான்.