தூரன்:மேலும் சில கடிதங்கள்

ஆசிரியருக்கு,

பெரியசாமிதூரனின் கலைக்களஞ்சியத்தைப் பற்றி வந்த கட்டுரைகளையும் கடிதங்களையும் படித்தேன். பெரியசாமிதூரன் அவர்களுக்கு இழைக்கப்படும் ஓர் அநீதியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பல்கலைக் கழக பேராசிரியர்களால் இது இழைக்கப்படுகிறது என்னும்போது இங்கே நெறிகள் எந்த லக்ஷணத்தில் இருக்கின்றன என்று புரிந்துகொள்ள முடிகிறது. தூரனவர்களின் கலைக்களஞ்சியம் மிக முக்கியமான ஒரு தமிழ்ச் சாதனை. ஆனால் அது  நாற்பது வருடம் பழமை கொண்டது. அதில் உள்ள தகவல்கள் பல மேலதிக ஆராய்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டும் காலமாறுதல்களினாலும் திருத்தம்செய்யப்பட்டிருக்க வேண்டும். உலகளவிலே பார்த்தால் நல்ல கலைக்களஞ்சியங்கள் ஒருவகையான நிரந்தரமான அமைப்புகளாகும். அவை ஓயாமல் வேலைசெய்துகொண்டே இருக்கும். காலம் தோறும் அவை புதுப்பிக்கப்பட்டபடியே இருக்கும். ஆனால் மூலத்தின் அதே பெயரில்தான் அவை இருக்கும்.  தூரனின் கலைக்களஞ்சியத்தையும் நாம் அப்படித்தான் செய்திருக்க வேண்டும். தமிழனுக்கு என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா, என்சைக்ளோபீடியா அமெரிக்கானா ,பங்க்ளாபீடியா போன்ற ஒரு நல்ல கலைக்களஞ்சியம் இருந்திருக்கும். இப்போது அதை டிஸ்குகளிலும் கொண்டுவந்திருக்கலாம். தமிழ்மாநாடுகளும் கருத்தரங்குகளும் நடத்தி கொளுத்தி விட்ட பணத்தில் நூறில் ஒருபங்கு இருந்தாலே அதையெல்லாம் செய்திருக்கலாம்.

ஆனால் அதை நாம் மறந்துவிட்டோம். ஆனால் அதைவிட பெரிய பிழையென்னவென்றால் தூரனின் முன்னோடி முயற்சிகளைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் புதிதாக மீண்டும் கலைக்களஞ்சிய வேலைகளை ஆரம்பித்தோம். அதிலே தூரனின் கலைக்களஞ்சியத்தையே போலிசெய்து கட்டுரைகள் எழுதிச் சேர்த்தோம். தூரனின் கலைக்களஞ்சியம் அவரது பெயருடனும் அவரது குழுவின் பெயருடனும் எல்லா தகவல்களுடனும் மீண்டும் மீண்டும் மறு பதிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே ஆய்வுலக தர்மம் ஆகும். அப்படி மறுபதிப்பு செய்யும்போது அந்த மறுபதிப்புக் குழுவின் ஆசிரியர்கள் தங்கள் பெயரையும் சேர்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் வாழ்வியல் களஞ்சியம் அப்படி செய்யவில்லை. அது ஒரு மோசடி. பிழைமலிந்ததும் அரைகுறையாக நின்றுவிட்டதுமான ஒரு மோசடி. அதை நாம் இப்போது நினைத்துக்கொள்ள வேண்டும். தமிழுக்காக வாழ்ந்த ஒரு முன்னோடிக்கு நாம் செய்த பெரிய அவமானம் இது

தமிழ்வேள்

**

அன்புள்ள ஜெ,

பெரியசாமிதூரனை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. தமிழுக்கு மிக அதிகமாக தொண்டாற்றிய அரசு தி.சு.அவினாசிலிங்கம் கல்வியமைச்சராக இருந்த ஆரம்பகால காங்கிரஸ் அரசு என்ற வரி ஆணித்தரமான ஒரு உண்மை. அதை உங்களைப்போன்ற சிலராவது நினைத்திருப்பதும் சொல்வதும் மிகமிக ஆச்சரியமான விஷயங்கள்.
சுப்பிரமணியம்

**
தூரன் அவர்களை பற்றிய பதிவுக்கு நன்றி ஜெயமோகன் அவர்களே.

சி சுப்பிரமணியம் அவர்கள் பத்மஸ்ரீ பட்டம் கொடுக்கவேண்டும் என்று சவான் அவர்களுக்கு பரிந்துரைத்த போது ,தூரனின் சாதனைகளை படித்த சவான் பத்மஸ்ரீ என்று எழுதியதை அடித்துவிட்டு பத்மபூஷன் என்று எழுதினாராம் 
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று வசனம் பேசியவர்கள் செய்யாத தமிழ் கலை களஞ்சியத்தை சாதித்து காட்டியவருக்கு தமிழ் நாடு ஒரு டாக்டர் பட்டம் கூட கொடுக்கவில்லை .

நஞ்சினை உண்டுமே, வானுளோர் நலமுற
நாடிடும் வள்ளலே,

என்று பாடுவதை தவிர நாம்  என்ன செய்யமுடியும்.

எங்கு நான் செல்வேன் ஐயா 

இராகம் : த்வஜவந்தி

எடுப்பு
எங்கு நான் செல்வேன் ஐயா – நீர் தள்ளினால்
எங்கு நான் செல்வேன் ஐயா?

தொடுப்பு
திங்கள் வெண் பிஞ்சினை செஞ்சடை
தாங்கிடும் சங்கராம்பிகை தாய் வளர்மேனியா!

முடிப்பு
அஞ்சினோர் இடரெல்லாம் அழிய ஓர் கையினால்
அபயமே காட்டிடும் அருட்பெரும் அண்ணலே!
நஞ்சினை உண்டுமே, வானுளோர் நலமுற
நாடிடும் வள்ளலே, நான்மறை நாதனே!

ரவீந்திரன்
கோவை  
அன்புள்ள ரவீந்திரன் சார்

நலமா?

தங்கள் கடிதம் கண்டேன். நன்றி. தூரன் பற்றி எழுதும்போது முற்றிலும் உண்மையாக எளிமையாக எழுதவேண்டும் என்று எண்ணினேன். சிலருக்காவது அவரது மகத்தான உழைப்பு நூலகங்களில் தூசு பிடித்து கிடப்பது என்ற எண்ணம் உள்ளது. கலைக்களஞ்சியங்கள் போன்றவை நேரடியாக சமூகத்தைச் சென்றுசேர்வன அல்ல. அவை மறைமுகமாக அறிஞர்கள் வழியாக சமூகத்தைச் சென்று சேர்பவை. ஒரு வெகுஜன எழுத்தை அல்லது கலையை உருவாக்குகிறவனுக்கு கிடைக்கும் புகழும் கௌரவமும் மக்களிடம் தூரனைப்போன்ற அறிஞர்களுக்கு அறிஞருக்குக் கிடைக்க வழ்யில்லை. ஆரோக்கியமான சமூகங்கள் இந்த உண்மையை அறிந்து தன் கலாச்சார அமைப்புகள் மூலம் அத்தகைய அறிஞர்களைக் கண்டடைந்து அங்கீகரிக்கும். அதுதான் இங்கே நிகழவில்லை

ஜெயமோகன்

மூணு நாளா ரொம்ப பிஸி தீபாவளிக் கொண்டாட்டங்களில் தொல் தமிழர் குலவழக்கப்படி தொலைக்காட்சியில் ஒரு சினிமாவும் பாத்தாச்சு மும்பை எக்ஸ்பிரஸ்

தூரன் பற்றிய கட்டுரை ரொம்ப நல்லா இருந்துச்சு கொங்கு வேளாளச் சாதி, கூட்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது அதில் இவர் தூரன் கூட்டத்தை சார்ந்தவர் என்பதால், தூரன்

அதற்கு வந்த கடிதங்களையும் பார்த்தேன் அதுவும் குமரனையும் தூரனையும் ஒப்பிட்ட கருத்தை என்னால் ஒத்துக் கொள்ள முடிகிறது சாதனை என்றால், அது வெற்றி அல்லது வீர மரணம் என்ற நோக்கில் தான் பார்க்கப் படுகிறதென்பது உண்மையே.

சுந்தரராமசாமியுடனான சந்திப்பு வாழ்க்கை எப்படியெல்லாம் இணைக்கப் பட்டிருக்கிறது

பாலா

முந்தைய கட்டுரைதீபாவளி கடிதங்கள்
அடுத்த கட்டுரைதீபாவளி:கடிதங்கள்