«

»


Print this Post

அலைகளென்பவை….


1997 முதல் 2000 வரை நான் தக்கலைக்கு அருகில் உள்ள பழைய கேரளத்தலைநகரமான பத்மநாபபுரத்தில் வாழ்ந்தேன். அப்போது பத்மநாபபுரத்தின் கோட்டைவாசலில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் முன்னால் ஒரு வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் சிறிய பீடத்தைக் கண்டிருக்கிறேன். அதில் ‘இங்குதான் குரு ஆத்மானந்தா தன் குருவைக் கண்டடைந்தார்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதில் அந்த வீட்டுக்காரர்கள் தினமும் விளக்கேற்றி வழிபடுவதுண்டு

km

கிட்டத்தட்ட நான்குவருடம் அனேகமாக தினமும் இருமுறை அந்த நினைவுச்சின்னத்தைப் பார்த்தபடி நான் கடந்துசென்றிருந்தேன். பலமுறை போகிறபோக்கில் அதைப்பற்றிச் சிந்தனை செய்ததுண்டு என்றாலும் ஆத்மானந்தா யாரென அறியமுற்பட்டதில்லை.அந்த வீட்டு உரிமையாளரின் ஏதோ மூதாதையாக இருக்கும் என்ற எண்ணம்தான் என்னிடம் இருந்தது. அது நம்மூரில் வழக்கம்தானே. நமது குடும்பங்களில் எல்லாம் யாரோ சிலர் சாமியாராகச் சென்றபடியேதான் இருந்திருக்கிறார்கள். அவர்களின் நினைவு மெல்லமெல்ல ஒரு நினைவுச்சின்னமாக சுருங்கிவிடுகிறது. என் குடும்பத்தில் பல துறவிகள் உண்டு.

அதற்கு பன்னிரண்டு வருடம் முன்பு நான் என் வாழ்க்கையின் விதியை தீர்மானித்த அகத்திருப்புமுனையை அடைந்தேன். அப்போது கேரளத்தில் காசர்கோடு நகரில் தற்காலிகத் தொலைபேசி ஊழியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். பெற்றோரின் அவமரணம், ஆன்மீகமான நம்பிக்கை இழப்பு ஆகியவற்றுடன் நுண்மையான நரம்புச்சிக்கல்களும் சேர்ந்துகொள்ள நாட்கள் ஒவ்வொன்றும் லாரியில் அடிபட்டுச் சதைந்த பாம்புபோல இழுத்து இழுத்து நெளிந்து நகர, என் வாழ்க்கையின் துயரம் கப்பிய இருண்ட காலகட்டம் அது.

ஒருநாள் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்துடன் காசர்கோட்டுக்கு அருகே உள்ள கும்பளா என்ற ஊருக்குச் சென்றேன். காலையின் முதல் ரயிலில் விழுவதற்காக ரயில்பாதையோரமாக சென்றுகொண்டிருந்தேன். அந்தத் தருணத்தை நான் என் உக்கிரமான இலக்கியப்படைப்பு ஒன்றிலேயே மீண்டும் சொல்லில் நிகழ்த்திக்காட்ட முடியும். விடிகாலையின் பேரழகில் தற்செயலாக , அல்லது மிக இயல்பாக ஈடுபட்டேன் என்று சொல்லவேண்டும். காலையொளியில் வைரம்போலச் சுடர்விட்டு இலைநுனியில் அமர்ந்திருந்த புழு ஒன்றைக் கண்டேன். வாழ்க்கை என்பது மாபெரும் வரம் என்று அப்போது என் அகம் அறிந்தது. இந்த உலகின் ஒவ்வொரு துளியும் பேரழகு கொண்டது, மகத்தானது. இதன் ஒவ்வொரு கணமும் அமுதம்.
Atmananda
வாழ்க்கைக்கு அப்பால் ஏதுமில்லை, வாழ்க்கை வழியாகச் சென்றடையக்கூடியதென்றும் ஏதுமில்லை. வாழ்க்கையே தன்னளவில் முழுமையானது. நேற்றிலாது நாளையிலாது இன்றில் வாழமுடிந்தால் அதுவே வீடுபேறு. அதுவே அத்வைதம். இச்சொற்களை இன்று சொல்கிறேன். அப்போது அந்த தரிசனத்தின் அனுபவம் மட்டுமே இருந்தது. சொற்களில்லாமலிருப்பதே உண்மையான பேரனுபவம். இனி என் வாழ்க்கையில் துயரம் இல்லை என அப்போது முடிவெடுத்தேன்.

அன்றிலிருந்து இன்று வரை இருபத்திரண்டு வருடங்கள் தாண்டிச்சென்றுவிட்டிருக்கின்றன. நான் உண்மையில் வாழ்ந்தேனா என்றறிய விடாது நாட்குறிப்புகள் எழுதி வருகிறேன். நான் சோர்ந்திருந்த நாட்கள் மிக அபூர்வம். நம்பிக்கையிழந்த கணங்களே இல்லை. துயரமடைந்த பொழுதுகள் மிகமிகச்சில. அவற்றை உடனே என் எழுத்தின் கலை மூலம் உவகையாக ஆக்கிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இயற்கையுடனான உறவைக் கொண்டாடுகிறேன். ஒவ்வொரு கணமும் என் உள்ளப்படியே வாழ்கிறேன்.

என் திருப்புமுனை நிகழ்ந்த சிலநாட்களில் எனக்கு ஒரு சோதனை நிகழ்ந்தது. என் வேலையை நான் இழக்க நேர்ந்தது. கையில் ஒரு பைசாகூட சேமிப்பு இல்லை. என் அண்ணாவும் வேலையில்லாமலிருந்தமையால் அவருக்கும் நான் பணம் அனுப்ப வேண்டிய நிலைமை. மோசமான அவமதிப்புகளையும் சந்தித்தேன். ‘இல்லை, துயரமில்லை’ என்று சொல்லிக்கொண்டேன். ஆனால் மனதின் ஒரு பகுதி அதை ஏற்காமல் தவித்தது. அப்போது மிக இயல்பாக ஒரு வரி நினைவில் எழுந்தது. ‘Waves are nothing but water, so is the sea’

சிலமாதங்கள் முன்பு ஒரு மலையாள வார இதழின் கட்டுரையில் கவனக்குறைவாக வாசித்த வரி அது. திடீரென அது எனக்குள் பேருருவம் கொண்டுவிட்டது. சில வரிகள் அப்படி நம்மை ஆக்ரமித்து பித்துப்பிடிக்க வைத்துவிடும். நாட்கணக்கில் அந்த வரியைச் சொல்லிக்கொண்டு அலைந்தேன். அது என் ஆன்மாவின் வரியாக ஆகியது. எனக்கான ஆப்த வாக்கியம் அதுவே ‘அலைகளென்பவை நீரன்றி வேறல்ல — கடலும்தான்’

பலவருடங்கள் கழித்து சுந்தர ராமசாமியிடம் அந்தவரியைச் சொன்னேன். சுந்தர ராமசாமி உற்சாகத்துடன் கிட்ட்டத்தட்ட குதித்தெழுந்து ‘என்னை சின்ன வயசில ரொம்ப கவர்ந்த வரி அது. கிருஷ்ணமேனன் சொன்னது… இங்கதான் திருவனந்தபுரத்தில் இருந்தார்… க.நா.சுவுக்கு அவர்தான் பிடித்தமான குரு. அவர்கிட்ட இருந்துதான் க.நா.சு அத்வைதத்தைக் கத்துக்கிட்டார்னு சொல்லணும். ‘பொய்த்தேவு’ ‘ஒருநாள்’ ‘வாழ்ந்தவர் கெட்டால்’ எல்லாத்திலயும் உள்ளோட்டமா இருக்கிற அத்வைதம்கிறது கிருஷ்ண மேனன் சொல்லிக்குடுத்ததுதான்’ என்றார். இந்திய-ஆங்கில எழுத்தாளரான ராஜாராவின் ‘கயிற்றரவு’ ‘காந்தபுரா’ இருநாவல்களும் கிருஷ்ணமேனனின் தத்துவத்தாக்கம் கொண்டவை.

கிருஷ்ண மேனனைப் பார்க்க வரும்போதுதான் க.நா.சு முதன்முறையாக நாகர்கோயிலுக்கு வந்து இளைஞர்களான சுந்தர ராமசாமியையும் கிருஷ்ணன் நம்பியையும் பார்த்திருக்கிறார். கிருஷ்ண மேனன் தன் வீட்டு திண்ணையில் தினமும் ஒருமணி நேரம் வேதாந்த வகுப்புகள் எடுப்பார். அதைக்கேட்க உலகின் பலநாடுகளில் இருந்து அறிஞர்கள் வருவார்கள். ஆல்டஸ் ஹக்ஸ்லி, ஜூலியன் ஹக்ஸ்லி, சாமர்செட் மாம், பால் பிரண்டன், ஹென்ரிச் சிம்மர், ஏ.என்.வைட்ஹெட் என அவரது மாணவர்களில் பல ஐரோப்பிய அறிஞர்கள் உண்டு. அவரைக்காண சி.ஜி.யுங் திருவனந்தபுரம் வந்திருக்கிறார்.

கிருஷ்ண மேனனின் ‘சபையை’ காணச்சென்ற கிருஷ்ணன் நம்பி ‘ஐநா சபை மாதிரி இருக்கு’ என்றார் என்று சுந்தர ராமசாமி சொன்னார். கிருஷ்ண மேனனைப்பற்றிய நினைவுகளை நெடுநாட்கள் கழித்து மீட்டெடுத்து உவகையுடன் பேசிக்கொண்டிருந்தார் சுந்தர ராமசாமி. அவரை நான் அப்படி பார்த்த நாட்கள் குறைவு. கிருஷ்ண மேனன் ஒரு துறவி அல்ல, இல்லறத்தில் இருந்தபடி இயல்பாக ஞானி என்ற இடத்தையும் வகித்தார் என்பது தன்னை எப்படி கவர்ந்தது என்று சொன்னார்.

கிருஷ்ணமேனனை பற்றி மேலும் அறிய நான் முயலவில்லை. ஒரு கட்டுரையை பவன்ஸ் ஜர்னலில் வாசித்தேன். அத்வைத சொல்லாடல்களை விட இலக்கியம் தலைக்கேறியிருந்த வருடங்கள். அந்த ஒரே ஒரு சொற்றொடர் வழியாக எனக்கான அனைத்தையும் அவர் அளித்துவிட்டதாக தோன்றியது.

க.நா.சு அக்காலத்தில் ஒரு கருத்தரங்குக்காக திருவனந்தபுரம் வந்தார். க.நா.சுவுக்கும் சுந்தர ராமசாமிக்கும் அப்போது ஆழமான மன வருத்தம் இருந்தது. திருவனந்தபுரத்தில் க.நா.சுவை சந்தித்த சுந்தர ராமசாமி ’கிருஷ்ணமேனனை பாக்க வருவீங்களே…’ என்று கேட்டதும் க.நா.சு மகிழ்ச்சியில் சுந்தர ராமசாமியின் கைகளைப் பற்றிக்கொண்டார் என்றார் சுந்தர ராமசாமி. ‘வீட்டுக்கு வாங்கோ’ என்று சுந்தர ராமசாமி அழைத்ததும் க.நா.சு கூடவே வந்து விட்டார். அவர் முன்பு தங்கிய அதே விடுதியில் தங்க விரும்பினார். அதை இடித்துவிட்டிருந்தார்கள். ஆகவே சுந்தர ராமசாமி வீட்டு மாடியிலேயே தங்கினார்

நான் காசர்கோட்டில் இருந்து தொலைபேசியில் அழைத்தேன். ’க.நா.சு கிட்ட பேசறீங்களா?’ என்றார் சுந்தர ராமசாமி. தொலைபேசியில் சரளமாகப் பேசமுடியவில்லை. க.நா.சுவுக்கு சரியாக காது கேட்கவில்லை. ’நலமா?’ என்றபின் முடித்துக்கொண்டேன். ‘கிருஷ்ண மேனனைப்பத்தித்தான் பேச்சு’ என்றார் சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமியை அத்தனை உற்சாகமாக நான் அபூர்வமாகவே கண்டிருந்தேன். தனக்கும் க.நா.சுவுக்குமான மனக்கசப்புகளைப்பற்றி சுந்தர ராமசாமிக்கே ஆழமான கண்டனம் இருந்திருக்கலாம். ‘சிறுமை தீண்டாத மனிதர்’ என்றுதான் எப்போதும் க.நா.சு பற்றி சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார்

சில மாதங்கள் கழித்து க.நா.சு மரணமடைந்தார். காலச்சுவடில் சுந்தர ராமசாமி உணர்ச்சிகரமான ஓர் அஞ்சலிக்கட்டுரை எழுதினார். ‘க.நா.சு நட்பும் மதிப்பும்’ என்ற அக்கட்டுரை தமிழின் அஞ்சலிக்கட்டுரைகளில் மிக முக்கியமானது. மிக வெளிப்படையாக, தெளிவான இலக்கிய மதிப்பீடுகளுடன் எழுதப்பட்ட அக்கட்டுரையை வியந்துபாராட்டி உணர்ச்சிகரமாக எஸ்.வி.ராஜதுரை ஒரு கடிதம் எழுதியிருந்ததை சுந்தர ராமசாமி காட்டினார்.

ஆனால் வழக்கம்போல அஞ்சலிக்கட்டுரை என்றால் பட்டையான புகழ்பாடலாக மட்டுமே இருக்கவேண்டும், விமரிசனம் இருக்கக்கூடாது என்ற நோக்கில் அக்கட்டுரை க.நா.சுவை அவதூறு செய்கிறது என்று தஞ்சை பிரகாஷ் போன்றவர்கள் வசைபாடினார்கள். எனக்கு அக்கட்டுரை ஒரு முக்கியமான முன்னுதாரணம். அக்கட்டுரையை போன்றே நான் சுந்தர ராமசாமிக்கான அஞ்சலி நூலை எழுதினேன். சுந்தர ராமசாமியின் கட்டுரை எப்படி க.நா.சுவை கண்ணெதிரே நிறுத்துகிறதோ அப்படியே சுந்தர ராமசாமியை கண்ணெதிரே நிறுத்தும் நூல் ’சுரா நினைவின் நதியில்’ அதற்கும் அதே போல விமரிசனங்கள் வந்தன.

சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரையை நான் தட்டச்சுப்பிரதியில்தான் வாசித்தேன். என் கருத்துக்களைச் சொன்னேன். அச்சான பின் வாசிக்கவில்லை. மேலும் பத்து வருடங்கள் கழித்து சுந்தர ராமசாமி அந்தக்கட்டுரையை விரிவாக்கம் செய்து ‘நினைவோடை’ வரிசையில் ‘க.நா.சு’ என்ற நூலாக வெளியிட்டார். அந்நூலில் எனக்கு ஒரு ஆச்சரியம் இருந்தது. சுந்தர ராமசாமி கிருஷ்ண மேனனை பற்றிச் சொல்லும்போது அடைப்புகுறிக்குள் ஆத்மானந்தா என்று சொல்லியிருந்தார்.

அதே ஆத்மானந்தாவா? நான் உடனே பத்மநாபபுரம் சென்று விசாரித்தேன். ஆமாம், அவரேதான். அவர் பலவருடம் பத்மநாபபுரத்தில் பணியாற்றியிருக்கிறார். ஒருவகையில் அவர் என் மானசீக குரு. அவரது நினைவுச்சின்னம் வழியாகத்தான் அவரது ஆப்தவாக்கியத்தை மனதுக்குள் ஓடவிட்டபடி அவரை அறியாமல் நான்குவருடம் சென்றுகொண்டிருந்திருக்கிறேன்.

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் 2010

http://skknair.tripod.com/philo.htm

http://encyclopediatamilcriticism.com/subira.php க.நா.சு -வேதசகாயகுமாரின் அறிமுகம்

க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்:சுகுமாரன் http://www.thinnai.com/?module=displaystory&story_id=60506305&format=html&edition_id=20050630

பார்வதிபுரம் மணி http://www.jeyamohan.in/?p=979

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7409

16 comments

2 pings

Skip to comment form

 1. bala

  ஜெ..
  இது போன்ற கட்டுரைகளை வாசிக்கும் போது எனக்கு விவியன் ரிச்சர்ட்சின் கம்பீரமான ஆளுமையும், ஆடுதிறனும் நினைவுக்கு வரும்.. உங்களிடம் நான் விரும்புவது இதை மட்டுமே.. குறை கூறுவோரை புறந்தள்ளி, அவரோஹனங்கள் தவிர்த்த பாடல் மட்டுமே கேட்க ஆசை..

 2. rajmohanbabu

  “வாழ்க்கைக்கு அப்பால் ஏதுமில்லை, வாழ்க்கை வழியாகச் சென்றடையக்கூடியதென்றும் ஏதுமில்லை. வாழ்க்கையே தன்னளவில் முழுமையானது. நேற்றிலாது நாளையிலாது இன்றில் வாழமுடிந்தால் அதுவே வீடுபேறு. அதுவே அத்வைதம்”. ஒவ்வொருவரும் உணர வேண்டிய வரிகள். வாழ்க்கையை நல்ல விதமாக வாழ கற்றுக் கொடுக்கும் அப்த வாக்கியம். நன்றி ஜெ.
  அன்புடன்,
  ராஜ்மோகன்

 3. KannanV

  இந்த வீச்சு !! தட்டி எழுப்பும் தன்னம்பிக்கை !! காலத்துடன் உண்மையும் சேர்ந்து பிரதிபலிக்கும் கட்டுரை !! இதற்காகத்தானே காத்திருக்கிறோம் !! நன்றி திரு ஜெயமோகன் !!

 4. Ramachandra Sarma

  //அவரோஹனங்கள் தவிர்த்த பாடல் மட்டுமே கேட்க ஆசை

  என்ன கொடும சார் இது?

 5. ramji_yahoo

  பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல ஜெமோ.

  பத்மநாப புரம், அருவிக்கரை(திருவட்டார் அருகில்) , நாகர்கோயில்(குறிப்பாக நாகராஜா திடல்) அருகில் செல்லும்போது எனக்கும் பல நேரங்களில் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம், வேகம், நம்பிக்கை ஏற்படும்.

  ஒருவேளை ஆதாமானந்த, சுந்தர ராமசாமி போன்ற நன்மக்களின் நல்ல எண்ணங்கள் அந்த மண்ணில், அந்த காற்றில் புதைந்து இருக்கிறதோ

  பாலாவின் பின்னூட்டமும் அருமை. ஆம் ரிச்சர்ட்ஸ் இப்படிதானே, அவர் நோக்கம் குறி எல்லாம் விளையாட்டில் மட்டும் தானே.

 6. Dondu1946

  @ராமசந்திர ஷர்மா
  இதில் என்ன கொடுமை? ஆரோகணத்திலேயே ஒரு பாடலை இங்கே கேளுங்களேன்.

  http://www.youtube.com/watch?v=irKcJ8dg69Q

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 7. Ramachandra Sarma

  ஆரோஹனத்தில் மட்டுமே பாட்டு என்பதெல்லாம் சரிதான். ஆரோஹனத்தில் மட்டுமே அமைந்ததால் எந்த ஒரு பாட்டும் தனி சுவையோ, தனி சிறப்போ பெறுவதில்லை. சங்கீத சாஸ்த்திரம் இப்படிச் சொல்கிறது.

  Yoyam dhwani viseshastu swara varna vibhushitah
  Ranjako jana chittanam saragaha kashyate budhaihi.

  (பொருளை நீங்களே தெரிந்துகொள்ளலாம்)

  கலைவாணியே இளையராஜாவின் ஒரு விளையாட்டு முயற்சி அதை வைத்து விளம்பரமும் வியாபாரமும் செய்தது பாலசந்தரின் திறமை. அந்தப்பாடல் ஆரோஹனத்தில் மட்டுமேஅமைந்திருக்கிறது என்று அறியாதபோதும் அதை ரசிக்கமுடியும்.

  ஆரோஹனத்தில் மட்டுமே பாடல் என்பதெல்லாம் மேலே கயிறு கட்டி நடப்பதுபோல, வித்தை காட்டலாம், அதெல்லாம் சங்கீதத்தின் அவசியமே கிடையாது. உதாரணமாக, பஞ்சமம் இல்லாத பாடல், ஷட்ஜமம் பயன்படுத்தாமல் பாடுதல், போன்ற பல பாடல்கள் இருக்கின்றன. நான்கு ஸ்வரங்கள் மட்டுமே கொண்ட ராகங்களில் கூட பாடல்கள் இருக்கின்றன (மஹதி).

  ராகங்களுக்கான வரையரையில் ராகம் என்றால் ஆரோஹனம், அவரோஹனம் இரண்டும் கட்டாயமாக இருக்கவேண்டும் என்று விதியும் இருக்கிறது.

  என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயமாக சொல்வதென்றால் ராகத்தின் அழகு அவரோஹனங்களைச் சரியாகப் பயன்படுத்துவதிலேயே உள்ளது. அருவிக்கு உள்ள அழகு நீரூற்றுகளுக்கு இருப்பதில்லை என்பது என்னுடைய நிலைப்பாடு.
  (இளமையெனும் பூங்காற்று பாடல் கேட்டதுண்டா? அதில் கங்கை நதிக்கு மண்ணில் அணையா என்றொரு வரி வரும் அந்த இடம், இதுபோல பல சொல்லலாம்)

  அவரோஹனம் தவிர்த்த பாடல் என்பது காமடியாக இருக்குமே ஒழிய கேட்க சகிக்காது என்பது என் விளக்கம்.

 8. Moderator

  //விவாதத்தின் பொதுவான எல்லைக்கு வெளியே அதிகம் செல்லக்கூடாது. மட்டுறுத்தல் உண்டு.//

 9. ஜெயமோகன்

  ஆனால் சுவாரசியமாகவே இருக்கிறது…
  ஜெயமோகன்

 10. kanpal

  அன்புள்ள ஜெயமோகன்,

  திருப்புமுனை போன்ற ஆழ்தருணங்களை, அனுபவங்களை அழகான கருத்துகளுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் கருத்துகள்.

  பழ. கந்தசாமி

 11. bala

  நெம்ப டென்ஷனாகாதீங்க சர்மாஜி.. அவரோகணங்கள் தவிர்த்தல் ஒரு உவமை மட்டுமே.. அந்தப் படத்திலும் அது அவ்வாறே பயன்படுத்தப் பட்டிருக்கிறது.. அதைத் தாண்டி கர்நாடக இசையயை சோதிக்கும் எண்ணமும் திறமையும் எனக்கில்லை.. ஜெ – சுவராசியமா இருக்கு என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை.. அதுக்கு நான் அந்துமணி படிச்சுக்கலாமே?

 12. down under

  ‘Waves are nothing but water, so is the sea
  பொட்டில் அறைந்தது போலவும் அதே சமயம் தடவியும் கொடுத்தது போன்ற ஒரு உணர்வு .

  What does not kill me, makes me ச்ற்றோங்கேர் :)

 13. sundaravadivelan

  “வாழ்க்கைக்கு அப்பால் ஏதுமில்லை, வாழ்க்கை வழியாகச் சென்றடையக்கூடியதென்றும் ஏதுமில்லை. வாழ்க்கையே தன்னளவில் முழுமையானது. நேற்றிலாது நாளையிலாது இன்றில் வாழமுடிந்தால் அதுவே வீடுபேறு. அதுவே அத்வைதம். இச்சொற்களை இன்று சொல்கிறேன். அப்போது அந்த தரிசனத்தின் அனுபவம் மட்டுமே இருந்தது. சொற்களில்லாமலிருப்பதே உண்மையான பேரனுபவம். இனி என் வாழ்க்கையில் துயரம் இல்லை என அப்போது முடிவெடுத்தேன்.”////

  இப்படித்தான் நானும் வாழ்க்கையை எதிர்கொள்ள விழைகிறேன். இதை பல முறை வார்தைபடுத்தி கட்டுரையாக்க முயற்சித்திருக்கிறேன். எழுத்து தவம் எனக்கு அத்தனை இயல்பாக கூடுவதில்லை. இன்று இப்பகுதியை வாசித்தபோது என் உணர்வையே வாசிததுபோல உணர்கிறேன். இதற்கடுதுள்ள பகுதிகளை வாசிக்கும் முன்னரே இப்பின்னூட்டம் இடுகின்றேன்.
  நேரம் கிடைத்தால் பின்வரும் சுட்டியை அழுத்தி இதை போன்றதொரு என் சிறிய பதிவினை வாசியுங்கள். என்னை அற்றுபடுத்துங்கள்.

  http://suzhiyam0.blogspot.com/2010/07/blog-post.html

  http://suzhiyam0.blogspot.com/2010/07/2.html

 14. எம்.ஏ.சுசீலா

  அன்பு ஜெ.எம்.,.
  விடிகாலைப் பேரழகில் தற்செயலாக ஈடுபட்டதும்,இலை நுனியில் வைரம் போலச் சுடர் விட்ட புழுவில் உங்கள் கவனம் திரும்பியதுமாகக் குறிப்பிட்ட அந்தத் தற்கொலைக் கணம் உங்களிடமிருந்து நழுவிப் போயிருக்கிறது.
  (அந்தப் புலர்காலை விடியலுக்கும்,புழுவுக்கும்கூடத் தமிழ் இலக்கிய உலகம் இதனால் நன்றிக்கடன் பட்டிருக்கிறது)
  அந்த ஒரு கண வேகத்தின் ஆட்படலைக் கடந்து போக முடியாமல்தான் நானறிந்த தற்கொலைச் சம்பவங்கள் எல்லாமே நிகழ்ந்திருக்கின்றன
  .
  அந்த ஒரு கணம் ,.அதை மட்டும் கடந்து போய்விட்டால் பிறகு மனம் தற்கொலை வலையில் சிக்கிக் கொள்ளாது.
  .
  வாழ்க்கையின் மகத்துவம்,அதன் மேன்மை…ஒவ்வொரு நொடியும் நமக்குவழங்கும் அற்புதங்கள் இவற்றை அனுபவ பூர்வமாக உணர்ந்திருப்பதாலேயே வாழ்வை நேசிக்கவும்,கொண்டாடவும் முடிகிறது உங்களால்.
  எம்.ஏ.சுசீலா

 15. வேணு

  அன்பு ஜெ,

  எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு சிந்தனை. உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நம் இந்திய ஞான மரபுக்கு அருகில் வந்து விட்டது.

  ”இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பது ’அணுக்களும் வெற்றிடமும் மட்டுமே; மீதி அனைத்தும் நம் கருத்துக்களே “.
  “Nothing exists except atoms and empty space; everything else is opinion” (Democritus, 460-370bc)

 16. Hariharan

  எனது இனிய ஆசிரியர்க்கு,
  நிங்களது வாசகனாக அறிமுகம் ஆவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன் இதுவரை பல ஆசிரியர்களின் நூல்கலை படித்திருக்கிறேன் என்பதைவிட பார்த்திருக்கிறேன் என்றே சொல்லலாம், பல முரை நூலகங்களில் உங்கள் பெயர் உள்ள நூல்களை அட்டைபடத்தில் பார்த்ததோடு சரி ஏனென்றால் Balakumaran, Kalki இவர்களின் ரசனை என்னிடத்தில் இருந்து மாறிப்போய்விடும் என்ற அறியாமை அதுகொண்டு இலக்கியம் ஏதும் அறியாமல் வாசிப்பதோடு ஒரு மயக்கதில் இருந்துவந்துள்ளேன் எனலாம் இப்பொழுது நிங்களது கட்டுரைகளும் கதைகளும் ஒரு மறுமலர்ச்சி என்பதைவிட ஒரு புரட்சியை, தாக்கத்தை என்னிடத்தில் ஏற்படுத்தியுள்ளது
  நன்றியை எவ்வாறு உரைப்பது என அறியவில்லை

  தொடரும்

 1. ராதையின் உள்ளம்

  […] அலைகள் என்பவை […]

Comments have been disabled.