எஞ்சியிருப்பதன் பேரின்பம்!

அன்புள்ள ஜெ,

இத் துன்பியல் சம்பவம் எனக்குத் தான் நடந்தது என்று நினைத்தேன். “எனக்கே நடந்திருந்தால்” என்பது இப்போது தான் உறைக்கிறது. நேற்று ஓர் நண்பரின் மகனுக்கு பிறந்தநாள். இந்தியாவை விட்டு வெளியில் வந்துவிட்டால் இத்தகைய தினங்கள் பேருருவம் கொண்டு விடும். 20 குடும்பங்கள் ஓர் வீட்டுக்குள் சந்திப்பது என்பது பேரின்பம். உண்மையாகவே நாம் அனைவரும் இவ்வளவு இனியவர்களா என்று நம்மை நாமே கிள்ளிப் பார்க்கத்தோன்றும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஏதாவது ஓர் உணவை சமைத்து வந்திருப்பார்கள். சிலர் சீக்கிரமாக வந்து அந்த வீட்டிலேயே செய்யத் துவங்கி விடுவார்கள். ருசிக்கு குறைவே இருக்காது. எல்லாரும் சந்தையில் கூடிப் பேசுவது போன்று இரைந்தே பேசுவோம். சட்டென்று காம்பில்யச் சந்தையில் கிருஷ்ணனுக்குக் கிடைத்த அனுபவம் சித்தித்தது.

அந்த மகிழ்வை அணு அணுவாக அசை போட்டுக்கொண்டிருந்த அந்த வேளையில் தான் ஒருவர் என்னைப் பார்த்து அந்த கேள்வியைக் கேட்டார். “என்ன உங்க ஆளு போய்ட்டாராம்ல… அப்போ இனி blog எல்லாம் படிக்க முடியாதா?”, என்னைக் கிண்டல் அடிப்பதற்காகச் சொன்னது தான் அது. இது போன்ற சமயங்களில் மையமாக சிரித்து வைப்பதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருந்த நான், என்னையே அறியாமல் கடுப்பாகி விட்டேன். பிறகு அவருக்கு பொறுமையாக ‘யாரு என்ன’ என்று வகுப்பெடுக்க வேண்டியதாகிவிட்டது. அவரின் நோக்கம் என்னைக் கேலி பண்ணுவது தானே ஒழிய வேறு எதுவும் இல்லை. எனினும் ஏன் இவ்வளவு கவனக் குறைவு மனிதர்களிடம்? சராசரிகளை எழுத்தாளன் அச்சுறுத்துவதைப் போல் வாசகனும் அச்சுறுத்துகிறானா?

எதற்கும் அக்காவிடம் சொல்லி ஒருமுறை சுத்திப் போடச் சொல்லுங்கள்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.

‘இருக்கியளா?,

மரிச்சவன் மடங்கினா மார்க்கண்டேயன் தான்னு சொல்வாங்க.
தீர்க்காயுசா கனகாலம் இருந்து எழுதுங்க… எழுதிகிட்டே இருங்க..
கைவலி,முதுகுவலி இல்லாம…..

நல்ல கண்ணு,கொள்ளி கண்ணு, நாய்க்கண்ணு,பேய்க்கண்ணு, ஊர் கண்ணு,உறவு கண்ணு, இணையக் கண்ணு, கேணையக்கண்ணு ஏதும் அண்டாம ஏத்துமொகத்தோட இருங்கப்பு….

‘ஜெபமோகன்’ நல்லாத் தானே இருக்கு பேரு’?!

மோகன்ஜி

‘இருக்கியளா?,

முந்தைய கட்டுரைஅச்சுதனும் ஜானகியும்
அடுத்த கட்டுரைநுழைவாயிலில்…