எம்டிஎம்மின் பதில்

எம் டி எம் அவரது நாவல் ரசனைபற்றிய என் கருத்துக்குப் பதிலளித்திருக்கிறார். அவரது பாணியில் கச்சிதமான பதில்.

நான் சொல்வது ஒரு சிறிய, ஆனால் முக்கியமான பிரச்சினை. வாசிப்பில் தகுதியின்மை போலவே தகுதிமிகையும் ஒரு சிக்கலாக ஆகும் என நான் நினைப்பதுண்டு. அதிகமான வாசிப்பு என்பது எப்படியோ புனைவின் மேல்மட்டத்தை முடிந்தவரை சிக்கலாக ஆக்கி தன் மூளை நுழைவதற்கான இண்டு இடுக்குகளைத் தேடகூடியதாக ஆக்கலாம். புனைவு ஒரு ரூபிக் கியூப் ஆக மாறும் நிலை நோக்கிக் கொண்டு செல்லலாம். அது உண்மையிலே நவீன வாசகனுக்குரிய ஒரு சமகாலப் பிரச்சினை

என்னதான் சொன்னாலும் கடைசியில் இலக்கியம் என்பது கதைசொல்லல்தான். கதைகேட்டு கண்விரியும் ஒரு குழந்தை உள்ளே இல்லாமல் இலக்கியத்தை அதன் முழுவீச்சுடன் வாசிக்கமுடியாதென்றே நான் நினைக்கிறேன். புனைவு ஆடலாக மாறும்போது இல்லாமலாவது அதுதான். நான் கொண்டுள்ள எச்சரிக்கையும் அதுவே. அப்படி புனைவாடலாக நான் கண்ட பல ஆக்கங்கள் அந்த ஆடலை நான் கடந்ததுமே பின்னுக்குசெல்லும்போது வாழ்க்கையின் முடிவில்லாத உண்மையான சிக்கலைச் சொல்லும் படைப்புகள் என்னை இன்னமும் துரத்துகின்றன.

அத்துடன் புனைவெழுத்தாளனுக்கும் அது ஒரு சிக்கல். எந்த மேஜிஷியனும் மேடைக்கு முன்னால் மேஜிக் பற்றி ஆராய்ச்சி செய்பவன் அமர்ந்திருந்தால் கைதடுமாறக்கூடும்.

http://mdmuthukumaraswamy.blogspot.in/2015/04/10-jerzy-kosinski-steps.html

முந்தைய கட்டுரைஏன் நம்மிடம் காகிதம் இருக்கவில்லை?
அடுத்த கட்டுரைவாழ்த்துக்கள் எஸ்ரா