நினைவின் நதியில்- மோனிகா மாறன்

images

அன்புள்ள ஜெ,

ஜனவரி புத்தகக் கண்காட்சியில் சுரா நினைவின் நதியில் வாங்கினேன்.உங்களின் படைப்புகள் தொண்ணூறு சதவீதம் வாசித்திருந்தாலும் இப்புத்தகத்தை தவிர்த்து வந்தேன்.சுராவின் புளிய மரத்தின் கதை மட்டுமே எனக்குப் பிடித்திருந்தது.

ஜேஜே சில குறிப்புகள் அதைப் பற்றி கூறப்பட்ட அளவிற்கு எனக்கு தாக்கத்தை உண்டாக்கவில்லை.காரணம் நான் அதற்கு முன்பே விஷ்ணுபுரமெல்லாம் வாசித்துவிட்டதாக இருக்கலாம்.மேலும் அவரவர் உளம் சார்ந்த ரசனை ஒன்று இருக்கிறதல்லவா?

உங்கள் தளத்தில் தான் 8ம் தேததி இரவு ஜெயகாந்தனின் மறைவை வாசித்தேன்.என் மனநிலையை நீங்கள் நன்று உணர்வீர்கள்.நிலையற்றிருந்தேன்.

மனதிடமிருந்து தப்பிக்கவே பிரிக்கப்படாமலிருந்த புத்தகத்தை எடுத்தேன்.நேற்று முழுவதும் சுரா நினைவின் நதியில் வாசித்தேன்.ஒரு படைப்பாளியைப் பற்றிய மிக நுட்பமான அற்புதமான எழுத்து.எனக்கு அதிகம் இலக்கியச் சூழல்கள் ,சிற்றிதழ் அரசியல்கள் பற்றியெல்லாம் தெரியாது.நிறைய வாசித்துக்கொண்டேயிருப்பேன்.அது தான் என் இலக்கிய அனுபவம்.

இப்படைப்பின் மூலம் மார்க்சியம்,இறுத்தலியல்,காந்தி,தஸ்தயேவ்ஸ்கி,தால்ஸ்தொய்,காம்யூ,காஃபா பற்றியெல்லாம் சுராவுக்கும் உங்களுக்குமான புரிதல்களை ,முரண்களை எழுதியிருக்கிறீர்கள்.நான் இதன்மூலம் என் புரிதல்களை அறிகிறேன்.

ஸேன் சொசைட்டி பற்றி நீங்கள் எழுதியிருப்பது நான் எப்பொழுதும் உணர்வதே.”சமூகத்திற்கு ஒரு சராசரித்தனம் உண்டு.பெரும்பான்மையால் ஏற்கப்பட்ட அறிவுத்தளமே அதிகாரம்.சமூகத்தின் தேவைகளைத் தீர்மானிப்பது யார்?”

மிக ஆழமான வரிகள்.தர்க்கங்களை மீறிய உளத்தேடல்களைப் புரிந்து கொள்பவர்கள் இங்கு குறைவு.”மனசு”பற்றிய உருவகங்கள் அனைத்துமே பெரும்பாலும் இங்கு ஏற்கனவே சமூகத்தால் உருவாக்கப்பட்டவையே.அவற்றை மீறி சிந்திப்பவர்களை மூடர்களாகவேச் சமூகம் எண்ணுகிறது.

இத்தகைய ஆன்மீகத் தேடல்களும்,தருக்கங்களும் என்னை உரசிய காலங்களில் இலக்கியம் எனக்கு விவாதிக்கும் தெளிவைத் தந்தது.விஷ்ணுபுரம் எனக்கு இத்தகைய பல வினாக்களுக்கு விடையாய் நின்றது.நடைமுறை வாழ்வில் இவ்வாறு கூர்ந்து விவாதிப்பவர்களை பலரும் விரும்புவதில்லை.

உங்களை வாசிக்க ஆரம்பித்த பிறகே நான் தேவையற்ற இடங்களில் விவாதிப்பதை தவிர்க்கத் தொடங்கினேன்.என் தேடல்கள் எனக்கு முழுமையான பதில்களைத் தந்தால் போதும் என நிறுத்திக் கொண்டேன்.

அதுவரை ஒற்றைப்படையான குதிரைக்குக் கடிவாளம் போட்டது போன்ற வழியில் சென்ற இலக்கியங்களைப் பெரும்பாலும் வாசித்த எனக்கு பன்முகச் சிந்தை கொண்ட விஷ்ணுபுரம் கொண்டாட்டத்தை அளித்தது என்றே கூறலாம்.தேடலும்,சிந்தனைச் சிதறல்களும் கொண்ட என்போன்ற ஒரு தீவிர வாசிப்பு கொண்ட வாசகியின் அறிவுத் தாகத்திற்கு சரியான சவாலாகவே விஷ்ணுபுரம் இருந்தது,இருக்கிறது.

அது போன்றதே நினைவின் நதியிலும்.எப்படி படைப்பூக்கம் கொண்டவர்கள் எழுதலாம் என்பது வரைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.அவருடனான உங்கள் முரண்களை மிக நேர்மையாக எழுதியிருக்கிறீர்கள்.
ஒரு படைப்பாளிக்கு மிகச் சிறந்த அஞ்சலி.

ஜெகெயின் மறைவின் மனநிலையில் இந்நூல் எனக்குச் சரியான துணையாய் இருந்தது.
நன்றி

மோனிகா மாறன்.

மாறன் மோனிகா பதிவு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 73
அடுத்த கட்டுரைஏன் நம்மிடம் காகிதம் இருக்கவில்லை?