இருக்கியளா?

பயந்துகொண்டே இருந்த அழைப்பு இன்று காலை வந்துவிட்டது.

“ஜெயமோகன் தானே?”

“ஆமா” “நான் – பேசுதேன். பாலசங்கருக்க கூட்டாளியாக்கும். பாத்திருக்கேள்லா?”

“ஆமா, தெரியுமே…”

“ சொவமா இருக்கியளா?”

“நல்லா இருக்கேன். நீங்க எப்டி இருக்கிய?”

“நமக்கென்ன, புள்ள குட்டி படிப்புண்ணு போய்ட்டிருக்கு. குட்டிக்கு தரம்பாக்குதேன். நல்லா இருக்கியளா?”

“ஆமா, பெறவு என்ன விசேசங்க?”

“இல்ல, இப்டியே போவுது. அண்ணன பாக்கியதுண்டா?’

“கொறே நாளாச்சு… நீங்க இப்பமும் அங்கதான் இல்லியா?” எங்கே என்று நினைவுக்கு வரவில்லை. ஆளே மசமசவென்றுதான் மனதில் தோன்றினார்

“இங்கதான். நமக்கு எங்க? நீங்க எப்டி, சௌக்கியமா இருக்கியள்லா?”

“ஆமா, ஒண்ணுமில்ல. பையன் எப்டி இருக்கான்?”

“நமக்கு பையன் இல்ல. ரெண்டும் குட்டியாக்கும். மூத்தவளுக்காக்கும் தரம் பாக்கியது”

“ஓகோ…குட்டி என்ன படிச்சா?”

“ஓ, அவ படிச்சா. பத்தாம்கிளாஸு தோத்துட்டு தையலு படிச்சா. நீங்க எப்டி இருக்கிய?”

“நல்லா இருக்கேன்.”

“வீட்லயா?”

“ஆமா”

“ஓ, சரீரசொகமொக்கே உண்டுல்லா?”

“ஆமா. ஒண்ணும் பிரச்சினை இல்ல”

“ஆஸ்பத்திரியில இருந்தியளோ?”

“இல்லியே” தெரிசனங்கோப்பு போனதைக் கேட்கிறாரோ “நம்ம வீட்டுல ஒரு மூட்டுவலி. அதுக்காக போனது…எனக்கு ஒண்ணுமில்ல”

“கர்த்தர் அருளால நல்லா இருங்க…”

“என்ன் சங்கதி?’

”ஒண்ணுமில்ல நம்ம சொக்காரப்பய ஒருத்தன் பேப்பரில என்னமோ படிச்சுட்டு விளிச்சான். மாமா இந்தமாதிரி பாலசங்கருக்க தம்பி இருக்காரே ஜெபமோகன்னுட்டு…அவரு தவறிட்டாருன்னு சொன்னான். கதை எளுதப்பட்ட ஆளுன்னதும் எனக்கு அடடான்னு ஆயிப்போச்சு”

“நான் இல்ல அது வேற”

“நீங்க இல்லேன்னு சொல்லண்டாம்லா… சொல்லாம தெரியுமே ஹெஹெஹெ”

“ஏதானாலும் விளிச்சதுக்கு உபகாரம். இருக்கேன்.”

“நல்லா இரியுங்க. வைச்சட்டுமா. அண்ணன கண்டா சொல்லுங்க. நாரோயில் வாறப்ப பாக்கேன்”

எஞ்சியிருப்பதன் பேரின்பம்!

முந்தைய கட்டுரைகனவுகளை விட்டுச்சென்றவர்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 73