‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 76

பகுதி 16 : தொலைமுரசு – 1

புலரியின் முதற்சங்கு ஒலிக்கையில் சாத்யகி விழித்தெழுந்து தாழ்ந்து எரிந்த காம்பில்யத்தின் விளக்குகளின் ஒளியை தொலைவானில் கண்டான். படகின் உள்ளறைக்குள் தடித்த கம்பளியை உதறிவிட்டு முகத்தை சுற்றிப்பறந்த கொசுக்களை மேலாடையால் விரட்டியபடி சுற்றும் நோக்கினான். படகு பாய்சுருட்டி நின்றிருந்தது. பாய்க்கயிறுகள் தொய்ந்து அவன் தலைக்குமேல் நூற்றுக்கணக்கான விற்களை அடுக்கியதுபோல வளைந்திருந்தன. கங்கையில் காற்று வீசவில்லை. குளிர் மேலிருந்து இறங்க நீரிலிருந்து நீராவி எழுந்தது.

அவன் எழுந்ததைக் கண்ட குகன் அருகே வந்து பணிந்து “காம்பில்யத்தின் துறை நெருங்கிவிட்டது இளவரசே. அங்கு துறைமுகப்பில் வணிகப்படகுகள் சில பொதி ஏற்றிக்கொண்டிருக்கின்றன. மேலும் படகுகள் உள்ளன. நமக்கு சற்று நேரமாகும்” என்றான். ”அரசப்படகுகளுக்கும் ஒரே வரிசையா?” என்றான் சாத்யகி. “அனைத்தும் குழம்பி சிக்கலாகிக் கிடக்கின்றன. இத்தனை படகுகளை இந்தச் சிறிய துறை தாளாது” என்றான் குகன்.

சாத்யகி எழுந்து துறைமேடையை நோக்க அவர்களுக்கு முன்னால் பாய் சுருக்கிய படகுகள் நிரைநிரையாக வாத்துக்கூட்டங்கள் போல நீரில் ததும்பி ஒன்றை ஒன்று முட்டியபடி நின்றிருந்தன. வாத்துக்களைப்போலவே அவற்றில் பின்னால் நின்றவை அடிக்கடி சங்கொலி எழுப்பின. முன்னால் நின்ற ஏதோ படகிலிருந்து இன் நீர் கொதிக்கும் இனியமணம் எழுந்தது. சாத்யகி ”ஏன் இத்தனை நெரிசல்?” என்றான்.

“காம்பில்யத்தில் இளவரசிக்கு மணநிகழ்வு நடந்ததுமுதல் இப்படித்தான் ஒவ்வொருநாளும் இரவெல்லாம் படகுகள் வந்தணைகின்றன. இளவரசி அஸ்தினபுரிக்கு செல்வதுவரை இங்கே படகுகள் காத்துநின்றுதான் ஆகவேண்டும்.” சாத்யகி “நான் படகிலேயே நீராடிவிடுகிறேன்” என்றான். அவன் நீராடி ஆடைமாற்றிவந்தபோதும் படகு கங்கையிலேயே நின்றிருந்தது. “சிறுபடகு ஒன்றில் என்னை மட்டும் கரையணையச்செய்யுங்கள்” என்றான். குகன் தலைவணங்கினான்.

சிறுபடகில் கரையணைந்து காம்பில்யத்தில் காலை வைத்ததுமே அவன் உள்ளம் மலர்ந்தது. கோட்டைவாயிலில் காற்றிலாமல் துவண்டுகிடந்த கொடிகளையும் வெளிறத்தொடங்கிய வானிலெழுந்து அமைந்த புறாக்களையும் இலைகுலைத்து நின்ற மரங்களின் முகடுகளையும் புதியவிழிகளுடன் நோக்கினான். முரசுகளின் தோல்வட்டங்கள் மிளிர்ந்தன. கொம்புகளின் வெண்கலப்பூண்களில் விண்ணொளி விளக்கேற்றியிருந்தது. ஆனால் படைவீரர்கள் எவரும் தெரியவில்லை.

கோட்டைவாயிலில் அவன் காத்து நின்றான். கம்பளியால் உடல் சுற்றிய காவலன் கண்களில் அழுக்குடன் வந்து “ம்?” என்றான். அவன் தன் இலச்சினையைக் காட்டி உள்ளே சென்றான். காவலன் எதையுமே நோக்கவில்லை. திரும்ப உள்ளே சென்று கதவைமூடிக்கொண்டான். சாத்யகியின் புரவி இரவெல்லாம் படகிலேயே நின்றிருந்ததனால் கால்களை உதறிக்கொண்டு ஓடவிழைந்தது. அவன் அதன் கழுத்தைத் தட்டி அமைதிப்படுத்தினான்.

காலையின் தேனொளி நிறைந்த சாலைவழியாக சென்றபோது அவன் அகம் அறியா உவகையால் நிறைந்திருந்தது. பார்க்கும் ஒவ்வொன்றும் அழகுடனிருந்தன. காலைக்கே உரிய சருகுகளும் குப்பைகளும் விழுந்து கிடந்த தெருக்கள்கூட மங்கலமாக தோன்றின. குளிர்காலத்தில் தெருக்கள் காலையில் நெடுநேரம் துயின்றுகொண்டிருக்கின்றன. இடை வளைந்து கிடக்கும் பெண்போல என நினைத்ததுமே அவன் புன்னகைசெய்தான்.

இல்லத்துமுற்றங்களில் பெண்கள் இன்னமும் எழவில்லை என தெரிந்தது. மாளிகைமுகப்புகளில் காவலர்கள் காவல்கூண்டுகளுக்குள் துயின்றனர். காவல்மாடங்களில் கூட வெளியே எவரும் தென்படவில்லை. நகரில் வாழ்பவர்கள்தான் குளிருக்கு மிகவும் அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு மலைக்குளிர் பழக்கமில்லை. புல்வெளிக்காற்றுகள் தெரியாது. காற்றென்பதே சாளரம் கடந்து வரவேண்டும் போலும்.

காம்பில்யத்தைவிட்டு அவன் கிளம்பும்போது அந்நகரத்தில் மணக்கோலம் எஞ்சியிருந்தது. மக்களின் முகங்களிலும் இல்ல முகப்புகளிலும் எங்கும் அதையே காணமுடிந்தது. அப்போது அந்த மங்கலக்குறிகள் அனைத்தும் மறைந்திருந்தாலும் ஒவ்வொரு இடமும் அந்நிகழ்வுகளின் நினைவுகளை கொண்டிருப்பதுபோல தோன்றியது. சற்று நின்றால் அந்த கொண்டாட்டநாட்களின் ஏதேனும் ஓர் அடையாளத்தை கண்டுவிடலாமென்பதுபோல.

அவன் வேண்டுமென்றே ஓர் இடத்தில் குதிரையை நிறுத்திவிட்டு நோக்கினான். சிலமுறை விழி துழாவியபோதே சுவரில் படிந்திருந்த செங்குழம்பை கண்டுகொண்டான். விழவின்போது களியாட்டமிட்ட இளைஞர்களால் அள்ளிவீசப்பட்டது. ஒரு கணத்தில் அந்த செங்குழம்பு பட்ட பெண்ணின் உடலை அங்கே வண்ணமற்ற வெளியாக அவன் கண்டுவிட்டான். புன்னகையுடன் குதிரையை தட்டினான். அதன்பின் நகரெங்கும் அவை மட்டுமே கண்ணில்பட்டன. கூரைமேல் மட்கி காய்ந்து கிடந்த மலர்மாலைகள். மரக்கிளையில் சிக்கியிருந்த பொற்கொடி. வீடுகளின் முகப்பில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த தோரணங்கள்.

துர்க்கையின் ஆலய முகப்பில் அவன் நின்றான். உள்ளே மணியோசை கேட்டது. இறங்கி உள்ளே சென்று வணங்கலாமா என எண்ணினான். குதிரையை முன்னால் செலுத்தி உள்ளே நோக்கினான். விழிகள் விரித்து வெறிக்கோலத்தில் அமர்ந்திருந்த அன்னையை ஏறிட்டுப்பார்க்க முடியவில்லை. அவள் கைகளை நோக்கி விழிகளை தாழ்த்திக்கொண்டான். கருமலரிதழில் எழுந்த அனலென உள்ளங்கை. அவள் பாதங்களை நோக்கினான். அங்கே செம்மலரிதழ்கள் குவிக்கப்பட்டிருந்தன. அவன் கைகூப்பி வணங்கினான்.

கொம்போசையும் மணியோசையும் எழுந்தன. அவன் திடுக்கிட்டான். ஆலயத்திற்குள் ஏதோ சிறுதெய்வத்திற்கு பூசனை நிகழ்கிறது. மங்கல இசையெல்லாம் அன்னைக்கானவை என்று எண்ணிக்கொண்டான். கால்களிலிருந்து விழிதூக்கி கைகளை நோக்கினான். பதினாறு தடக்கைகளில் பதினான்கிலும் படைக்கலங்கள். அஞ்சலும் அருளலுமென இரு எழிற்கரங்கள். அவன் அவள் முகம்நோக்கி ஏறிட்ட விழிகளை தாழ்த்திக்கொண்டு இன்னொரு முறை வணங்கி புரவியை தட்டினான்.

செல்லும் வழியில் நெடுந்தொலைவுக்கு அந்த மணியோசை கேட்டுக்கொண்டிருந்தது. அது செவிகளில் ஓய்ந்தபின்னரும் உள்ளத்தில் நீடித்தது. நகரமெங்கும் மணியோசை என தோன்றியது. காலையொளியில் தோல்பரப்பென மென்மையாக எழுந்த சுவர்ச்சுதைகளில் அந்த இன்மணியோசை பரவிச்சென்றது. வளைவுகள் மிளிர்ந்த மாடக்குவைகளில் வழிந்தது. அந்த மணியோசையில் சுழன்றன சிலந்திவலைச்சரடில் சிக்கிய இலைச்சருகுகள். ஓர் கடையின் முகப்பில் இருந்த தோரணம் அந்த ஒலியாக அசைந்தது.

அரண்மனையை அடைந்ததும் உள்கோட்டை காவலர்தலைவன் அவனை அடையாளம் கண்டு வணங்கி வரவேற்புரை சொன்னான். சற்று விழிப்புடன் இருக்கிறான், சரியானவனையே தெரிவுசெய்திருக்கிறார்கள் என அவன் நினைத்துக்கொண்டான். காவலன் தானே முன்வந்து சாத்யகியை அரண்மனைக்குள் அழைத்துச்சென்றான். ஒளி வந்துவிட்டிருந்த போதும் பேரமைச்சரும் அமைச்சர்களும் வந்திருக்கவில்லை. அரண்மனை செயலகர் மித்ரர் அவனை வணங்கி தங்குதற்கு மாளிகையை அமைத்துக்கொடுத்தார். பேரமைச்சர் வந்ததும் செய்தியறிவிப்பதாக சொன்னார். ”அவர் உண்மையில் காலையில்தான் தன் மாளிகைக்கே சென்றார். அனைவரும் அவருக்காகவே காத்திருக்கிறோம்.”

“நான் இளவரசியையும் இளையபாண்டவர்களையும் யாதவ அரசியையும் சந்திக்கவேண்டும். முறைமைக்காக அரசரையும் இளையஅரசரையும் பட்டத்து இளவரசரையும் சந்திக்கவேண்டும். துவாரகையின் வணக்கச்செய்தியுடன் வந்திருக்கிறேன்” என்றான். மித்ரர் “அவர் வந்ததும் சொல்கிறேன் இளவரசே. தாங்கள் ஓய்வெடுங்கள்” என்று சொல்லி அவனை அறையில் விட்டுவிட்டு சென்றார்.

சற்று நேரம் பீடத்தில் அமர்ந்தான். இன்னும் கொஞ்சம் நகரில் சுற்றிவிட்டு வந்திருக்கலாமென தோன்றியது. எல்லா சாளரங்களும் ஒளிகொண்டுவிட்டன. ஆனால் அரண்மனையே ஓசையின்றி துயிலில் இருந்தது. அவன் எழுந்து சென்று மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். மிகத்தொலைவில் எவரோ யாழ் மீட்டினர். மஞ்சத்தில் காதமைத்துக்கிடந்தால் மட்டுமே அதை கேட்கமுடிந்தது. அந்த மெல்லிய இசை அவன் உள்ளத்தை நிறைவிலும் நிறைவுடன் இணைந்த தனிமையிலும் ஆழ்த்தியது. இனிய மயக்கம். இனிய துயரம். அவன் விழிகள் தாழ்ந்தன. காம்பில்யத்தில் அவன் காலடிவைத்தபோது எழுந்த அந்த பொருளறியா இனிமை நெஞ்சில் நிறைந்தது.

அவன் துவாரகையின் சுழல்சாலையில் ஏறி ஏறி சென்றுகொண்டிருந்தான். ஆனால் மாளிகைக்கு மாறாக அந்தப்பெருவாயிலை சென்றடைந்தான். சுற்றும் எவருமில்லை. அவனும் அப்பெருவாயிலும் மட்டும்தானிருந்தனர். பேருருக்கொண்ட அந்த வாயில் விண் நோக்கி திறந்திருந்தது. நகரம் அதன் காலடியில் சிலம்பெனச் சுருண்டு ஒலித்துக்கொண்டிருந்தது.

அவனால் அந்த நீள்சட்டகத்திற்குள் நின்ற நீலவானத்தை முழுமையாக காணமுடிந்தது. வானிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுவானம். ஒரு துண்டு நீலம். அவன் நோக்கியிருக்கவே பெருவாயில் முழுமையாக மறைந்தது. வானத்தின் தூயநீலம் மட்டும் எஞ்சியிருந்தது. நீலம் விழிகளை நிறைத்தது. அவன் அதை நோக்கிக்கொண்டே இருந்தான். ”இளவரசே” என்று ஏவலன் அழைத்த ஒலியில் எழுந்துகொண்டான். அமைச்சர் கருணர் அவனைப்பார்க்கச் சித்தமாக இருப்பதாக அவன் சொன்னான்.

அவன் எழுந்து முகத்தைமட்டும் கழுவிக்கொண்டு சிவந்த விழிகளுடன் வீங்கியதுபோல தோன்றிய முகத்துடன் நடந்து சென்றான். விழித்தகணம் அந்த இனிமை வந்து நெஞ்சில் நிறைந்திருப்பதை வியந்தான். அமைச்சுநிலையின் பெரிய மாளிகைக்குள் தன் பெருங்கூடத்தில் எழுத்துப்பீடத்திற்குப் பின்னால் கருணர் திண்டின் மேல் அமர்ந்திருந்தார். அவரைச்சூழ்ந்து பல்வேறு சிற்றமைச்சர்களும் ஓலைநாயகங்களும் நின்றிருந்தனர். ஒவ்வொருவரிடமாக பேசியபடியும் அவர்கள் அளித்த ஓலைகளை புரட்டி வாசித்து குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்த ஓலைநாயகத்திற்கு சொற்களை சொன்னபடியும் இருந்தார். ஏவலன் அவர் அருகே சென்று அவன் பெயரைச் சொன்னதும் நிமிர்ந்து “வருக இளவரசே” என்றார்.

சாத்யகி அருகே சென்று வணங்கினான். “சற்று நேரம் பொறுங்கள், இவர்களை அனுப்பிவிடுகிறேன், காலையில் துயில்களைந்து இதற்காகவே வந்தேன்” என அவர் ஓலைகளை வாசித்து கைகளால் குறிப்புகளை எழுதி பக்கத்திலிருந்த செயலகனிடம் கொடுத்துக்கொண்டே பேசினார். “இங்கே திடீரென வணிகம் பெருகிவிட்டது. என்னவென்றே தெரியவில்லை. இளவரசி ஒரு பெருநகரை அமைக்கவிருக்கிறார்கள் என்று கதைகள் உருவானதனால் இருக்கலாம். கருவூலப்பொன் முழுக்க கடைத்தெருவுக்கு வரப்போகிறது என்று உவகைகொண்டிருக்கிறார்கள் வணிகர்கள்” என்றார். “ஆனால் பொருட்கள் வந்திறங்கினாலே விற்கப்பட்டுவிடும். இன்றுவரை நாங்கள் எதையுமே வாங்கவில்லை. எங்கள் கருவூலத்திற்கு சுங்கம் வந்துகொண்டிருக்கிறது.”

சாத்யகி அமர்ந்துகொண்டு “துவாரகையிலும் இதன் எதிரொலி இருக்கிறது. அங்கும் திடீரென வணிகம் கூடியிருக்கிறது. துவாரகையின் வணிகம் இந்திரப்பிரஸ்தம் வந்தால் குறைந்துவிடும் என்று ஒருசிலர் சொன்னார்கள். ஆனால் ஒரு வணிகநகரம் இன்னொன்றை வளர்க்கவேசெய்யும் என்கிறார் யாதவர்” என்றான். கருணர் “அது எனக்குப்புரியவில்லை. துவாரகையின் கணக்குகளே வேறு. சுங்கத்தைக் குறைத்து கருவூலவரவை பெருக்கமுடியும் என்று துவாரகையின் அமைச்சர் ஒருவர் சொன்னார். பெரும் திருவிழாக்களையும் கொண்டாட்டங்களையும் நிகழ்த்தினால் அரசுக்கு வரவு கூடும் என்றார். எல்லாமே புதிய செய்திகள்” என்றார்.

சாத்யகி ”அதை துவாரகையில் காணவே முடிகிறது” என்றான். கருணர் சிரித்தபடி “நான் பழைய மனிதன். எனக்கு துவாரகை ஒரு புதிர்நகரம். துவாரகையை நன்கறிந்த ஒருவர்தான் இங்கிருக்கிறார். எங்கள் இளவரசி” என்றார். சாத்யகி “ஆம், அவர் ஒரு துவாரகையைத்தான் உருவாக்க எண்ணுகிறார் என்றார்கள்” என்றான். “இல்லை, அவர்கள் துவாரகைக்கு முற்றிலும் மாறான ஒரு நகரை உருவாக்க நினைக்கிறார்கள். உருவளவுக்கே ஆடிப்பாவையும் பெரிதானது அமைச்சரே என்று என்னிடம் சொன்னார்கள். துவாரகை செய்யாமல் விட்டவற்றால் ஆன நகரம் இந்திரப்பிரஸ்தம் என்றார்கள்.”

பேசிக்கொண்டே அவர் ஒவ்வொருவருக்கான ஆணைகளையும் சொல்லி அனுப்பியபின் “திருமகள் ஓர் இல்லத்தில் கால்வைத்தாள் என்றால் நடனமிடத்தொடங்கிவிடுவாள். இங்கு இளவரசியின் மணநிகழ்வு நடந்தபின் ஒவ்வொருநாளும் மணநிகழ்வுகளே. சேதிநாட்டு இளவரசியரின் மணநிகழ்வு சென்றவாரம்தான். ஒவ்வொரு இளவரசருக்காக மணநிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்றார்.

“இளவரசர்களுக்கு இன்னமுமா மணம் நிகழவில்லை?” என்றான் சாத்யகி வியப்புடன். “மணநிகழ்வுகள் என்றால் எளிதா என்ன? இளவரசர் சித்ரகேதுவுக்கு மட்டுமே முன்னர் மணமாகியிருந்தது. சிருஞ்சயகுலத்து எளிய குலமகள் அவள். மூத்த இளவரசர் ஐங்குலத்தலைவர்களின் மகளை மட்டுமே மணக்கவேண்டுமென இங்கு நெறியுண்டு. பிற இளவரசர்களுக்கும் இங்கேயே மணமகள்களை நோக்கியிருக்கலாம். ஆனால் அரசர் ஷத்ரிய நாடுகளிலிருந்து இளவரசிகளை தேடினார். அவர்களுக்கு பெண்கொடுக்க தயக்கம்.”

கருணர் சிரித்து ”சொல்லப்போனால் அனைவருமே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொடுப்பதற்காக பெண்களுடன் காத்திருந்தனர். இப்போது யாருக்கு என்ன அரசு என்பதும் எவருக்கு எவர் மணமகள் என்பதும் முடிவாகிவிட்டது. அத்துடன் பாண்டவர்களுடன் பாஞ்சாலம் கொண்டுள்ள உறவும் துவாரகையுடன் கொண்டுள்ள புரிதலும் இன்று பாரதவர்ஷம் முழுக்க தெரிந்துவிட்டது. அரசர்கள் பெண்களின் பட்டுச்சித்திரங்களுடன் ஒவ்வொருநாளும் தூதர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

சாத்யகி புன்னகைத்து “இன்னும் ஓரிரு மாதங்களில் பாரதவர்ஷமே இரண்டாக பிரிந்துவிடுமென நினைக்கிறேன்” என்றான். “ஆம், அதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மாளவனுக்கு மூன்றுபெண்கள். இளவரசர்கள் சுமித்ரர், ரிஷபர், யுதாமன்யு மூவருக்கும் அவர்களை முடிவுசெய்திருக்கிறோம். சால்வருக்கு ஒருமகள். அவளை விரிகருக்கு பேசிவிட்டோம். பாஞ்சால்யருக்கும் சுரதருக்கும் கோசலத்து இளவரசியரை கேட்டிருக்கிறார்கள். எங்கள் தூதர் அவர்களை நேரில்பார்ப்பதற்காக சென்றிருக்கிறார்.”

“அனைத்து மணங்களையும் ஒரே விழவாக எடுப்பீர்களா?” என்றான் சாத்யகி. “ஆம், அதுவே எண்ணம். ஆனால் உத்தமௌஜருக்கும் சத்ருஞ்ஜயருக்கும் ஜனமேஜயருக்கும் துவஜசேனருக்கும் பாஞ்சாலப் பெருங்குலங்களில் இருந்தே பெண்களைக் கொள்ளலாம் என்பது அரசரின் விருப்பம். ஏனென்றால் அரசியரவையில் பாஞ்சாலர்களே எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கவேண்டும்” என்று கருணர் சிரித்தார். சாத்யகியும் சிரித்தான்.

சாத்யகி “இளவரசர் திருஷ்டத்யும்னர் நலமடைந்துவிட்டாரா?” என்றான். “எழுந்துவிட்டார். இன்னமும் முழுமையாக நடமாடத் தொடங்கவில்லை. அவரது மணத்தைத்தான் அரசர் முதன்மையாக எண்ணிக்கொண்டிருக்கிறார். வங்கம் கலிங்கம் இரண்டில் ஒன்றிலிருந்து இளவரசியரை கொள்ளவேண்டும் என்பது அவரது எண்ணம். இந்திரப்பிரஸ்தம் அமையும்போது அதற்கு ஒரு கடல்துறைமுகம் தேவையாக இருக்கும். தாம்ரலிப்தியுடனான உறவு அதற்கு இன்றியமையாதது என நினைக்கிறார்.”

சாத்யகி “அதை அனைவரும் நினைப்பார்கள். இன்று திடீரென்று வங்கமும் கலிங்கமும் முதன்மைநாடுகளாக மாறிவிட்டிருக்கின்றன” என்றான். கருணர் “ஆம், இந்த திருமண ஆட்டம் முடிந்தபின்னர்தான் எவர் எங்கிருக்கிறார் என்பதையே சொல்லமுடியும்” என்றார். ”போர் ஒன்று நிகழுமென்று பேசிக்கொள்கிறார்களே?” என்றான் சாத்யகி. “அது மக்களின் விருப்பம் என்று சொன்னால் நம்புவீர்களா?” என்றார் கருணர். “போரினால் பேரிழப்பு வரப்போவது மக்களுக்குத்தான். அழிவு, வறுமை, அரசின்மை. ஆனால் அவர்கள் அதை விழைகிறார்கள்.”

“ஏன்?” என்றான் சாத்யகி. “அவர்களால் வரலாற்றை பார்க்கவே முடியவில்லை. நாமெல்லாம் அதை நுண்வடிவில் அன்றாடம் பார்க்கிறோம். அவர்களுக்கு அந்த விழி இல்லை. ஆகவே அவர்களுக்குத் தெரியும்படி ஏதாவது நிகழவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.” கருணர் நகைத்து “இளவரசியின் மணம் முடிந்ததுமே மீண்டும் போர்குறித்த பேச்சுக்கள் வலிமை கொண்டன. இப்போது இளவரசர்களின் மணப்பேச்சுக்கள் அதை அழுத்தி வைத்திருக்கின்றன. அரசு என்பது மக்களுக்கு கேளிக்கையூட்டுவதும்கூட. அரசகுலத்தவர் மேடைநடிகர்கள். போரே அவர்கள் விழையும் பெரும்கேளிக்கை. நாடகத்தின் உச்சம் அல்லவா அது?” என்றார்.

சாத்யகியால் அவர் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லை. “நான் இளவரசிக்கு துவாரகையின் செய்தியை அளிக்கவேண்டியிருக்கிறது. யாதவப் பேரரசியையும் இளையபாண்டவர்களையும் பார்த்து இளவரசர் தருமரின் செய்தியை அளிக்கவேண்டியிருக்கிறது” என்றான். “அரசவை இன்று மாலையில்தான் கூடுகிறது. நீங்கள் அரசரையும் இளைய அரசரையும் பட்டத்து இளவரசரையும் சந்தித்து முறைமைசெய்ய அதுவே தருணம். நேற்று இரவு நெடுநேரம் இங்கே அரசுசூழ் அவை கூடியிருந்தது. காலைப்பறவைக் குரல் கேட்டபின்னரே முடிந்தது. மணநிகழ்வுகளை பேசிப்பேசி முடியவில்லை” என்றார் கருணர்.

சாத்யகி “நான் காத்திருக்கிறேன்” என்றான். “இப்போது நீர் இளவரசியை சந்திக்கலாம். நான் செய்தி அனுப்புகிறேன். அவர் துயிலெழுந்து சித்தமானதும் செல்லலாம். அதற்கு முன் என்னுடன் உணவருந்தும்” என்றார் கருணர். சாத்யகி தலைவணங்கினான். “இதோ இந்த கூட்டத்தை அனுப்பிவிடுகிறேன். அனைத்துமே சுங்கச்செய்திகள்…” என ஓலைகளை வாங்கத் தொடங்கினார்.

அவருடன் அவன் உணவருந்திக்கொண்டிருக்கையில் பாஞ்சாலி அழைப்பதாக செய்தி வந்தது. கருணர் ஆணையிட ஒரு பணியாளன் அவனை மகளிர்மாளிகைக்கு அழைத்துச்சென்றான். அவன் அவளை நோக்கி செல்லச்செல்ல கால் தளர்ந்தான். இடைநாழியில் நடக்கும்போது திரும்பிவிடலாமென்ற எண்ணமே வந்தது. எண்ணங்கள் மயங்கி எங்கென இல்லாது சென்றவன் ஏவலன் கதவைத்திறந்து தலைவணங்கியதும் திகைத்தான். குழலையும் கச்சையையும் சீரமைத்துவிட்டு உள்ளே சென்றான்.

விருந்தினர் கூடத்தில் போடப்பட்டிருந்த பீதர்நாட்டு பீடத்தில் பாஞ்சாலி அமர்ந்திருந்தாள். அவனைக் கண்டதும் எழுந்து முகமன் சொன்னாள். “துவாரகையின் இளவரசருக்கு நல்வரவு.” அவளுடைய செம்பட்டாடையும் அணிகளும் மெல்லிய ஒலியெழுப்பி ஒளிவிட்டன. கைகள் தழைந்தபோது வளையல்கள் குலுங்கின. சாத்யகி “நான் துவாரகையின் இளவரசன் அல்ல. வெறும் யாதவன்” என்றான்.

“அதை நீங்கள் தன்னடக்கத்திற்காக சொல்லலாம். இளைய யாதவர் உள்ளத்தில் உங்களுக்கான இடமென்ன என்று பாரதவர்ஷமே அறியும்.” அவள் புன்னகைத்தபோது மலைகள் நடுவே சூரியன் எழுந்தது போலிருந்தது. “அவருக்காக அடிமைக்குறி பொறித்துக்கொண்டவர் நீங்கள் என்கிறார்கள்.” சாத்யகி தலை நிமிர்ந்து “ஆம், உண்மை. என் தகுதி அது மட்டுமே” என்றான். அவள் மீண்டும் புன்னகைத்து “அடிமைக்குறியை நெஞ்சில் பொறித்துக்கொண்ட பல்லாயிரம்பேர் இருக்கிறார்கள் அவருக்கு…” என்றபின் ”அமருங்கள்” என்றாள்.

அவள் கைநீட்டியபோது உள்ளங்கையின் செம்மையை நோக்கி அவன் உளம் அதிர்ந்தான். அவன் நன்கறிந்த கை. நன்கறிந்த விரல்கள். “துவாரகையின் செய்தி இருப்பதாக சொன்னார்கள்” என்றாள். “ஆம்” என்று அவன் தன் கச்சையிலிருந்து வெள்ளிக்குழலை எடுத்து அவளுக்களித்தான். அவள் கைநீட்டி அதன் மறுநுனியை பற்றியபோது அவன் கைகள் நடுங்கின. அக்குழாய்க்குள் இருந்த செப்புத்தகடுச்சுருளில் சிறிய புள்ளிகளாக பொறிக்கப்பட்டிருந்த மந்தண எழுத்துக்களை அவள் விரல்களால் தொட்டுத்தொட்டு வாசித்து விட்டு புன்னகையுடன் “நன்று” என்றாள்.

சாத்யகி “என்னிடம் அதுகுறித்து ஏதும் சொல்லவில்லை யாதவர்” என்றான். “இருசெய்திகள். ஒன்று, நகர் புனைய நான் கோரிய செல்வத்தை துவாரகை அளிப்பதற்கு யாதவர் ஆணையிட்டிருக்கிறார். ஆனால் அதுவல்ல முதன்மையானது” என்று புன்னகைத்து “வங்கனின் மகளை திருஷ்டத்யும்னனுக்காக பார்க்கிறோம் என்ற செய்தியை அறிந்திருக்கிறார் இளைய யாதவர். மூத்தவள் சுவர்ணையை திருஷ்டத்யும்னனுக்கு முடிவுசெய்தால் அவள் தங்கை கனகையை உங்களுக்காக பேசும்படி சொல்லியிருக்கிறார்” என்றாள்.

அவள் கைகளை மீண்டும் பார்த்த சாத்யகி உள அதிர்வுடன் விழிவிலக்கினான். அவை இளைய யாதவரின் கைகள். மேல் கை நீலம். உள்ளங்கை செந்தாமரை. அவள் புன்னகையுடன் “மணநிகழ்வு என்றதுமே தாங்கள் கனவுக்குள் சென்றுவிடவேண்டியதில்லை” என்றாள். சாத்யகி விழித்து “யாருக்கு மணம்?” என்றான். “எனக்கு, ஆறாவதாக இன்னொரு இளவரசரை மணம் செய்யலாமென்றிருக்கிறேன். பிழை உண்டா?” என்றாள். சாத்யகி திகைத்து உடனே தன்னைத் திரட்டிக்கொண்டு “நான் தங்கள் சொற்களை செவிகொள்ளவில்லை இளவரசி” என்றான்.

“வங்க இளவரசியை உங்களுக்கு பேசிமுடிக்கும்படி உங்கள் இறைவனின் ஆணை” என்றாள். சாத்யகி “வங்க இளவரசியா? திருஷ்டத்யும்னருக்கு…” என அவன் தடுமாற “வங்கம் காலம்சென்ற அமிர்தபாலரின் ஆட்சியிலேயே இரண்டாகப்பிரிந்துவிட்டது. கங்கைக்கரையின் சதுப்புகளும் வண்டல்களும் நிறைந்த கிழக்கு வங்கமான பிரக்ஜோதிஷம் சமுத்ரசேனரால் ஆளப்படுகிறது. கங்கையின் மேற்கே உள்ள புண்டர வங்கம் சந்திரசேனரால் ஆளப்படுகிறது. சமுத்ரசேனரின் மகள் சுவர்ணை. சந்திரசேனரின் மகள் கனகை. இப்போது தெளிவாக இருக்கிறதா?” என்றாள்.

அவள் புன்னகையை நோக்கியபோது மீண்டும் அவன் சொல்மறந்தான். விழிகளை விலக்கியபடி “எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நான் ஆணைகளின்படி நடப்பவன் மட்டும்தான்” என்றான். “அப்படியென்றால் என் ஆணைப்படி நடந்துகொள்ளுங்கள். அந்த உரிமையை இந்த ஓலையின்படி எனக்களித்திருக்கிறார் இளைய யாதவர்.” சாத்யகி தலைவணங்கினான். அவளை ஏறிட்டுப் பார்க்கலாகாதென்று எண்ணிக்கொண்டான். அவள் சிரிப்பு வேறுவகையானது. நாணமும் அச்சமும் ஆவலும் கொண்ட கன்னியரின் சிரிப்பு அல்ல அது. மணமான பெண்ணின் சிரிப்பு. ஆணை ஆளும் கலை பயின்ற, நாணத்தைக் கடந்த, சீண்டும் சிரிப்பு. அதை பெண்ணை அறியாதவன் எதிர்கொள்ளமுடியாது.

”சமுத்ரசேனரின் மைந்தர் பகதத்தர் பீமசேனருக்கு நிகரான தோள்வல்லமை கொண்டவர் என்று புகழ்பெற்றிருக்கிறார். பீமசேனருடன் ஒரு மற்போர் புரிவதை எதிர்நோக்கியிருப்பதாக சூதர்கள் பாடுகிறார்கள்” என்றாள் திரௌபதி. “சந்திரசேனரின் மைந்தர் கஜபாகு தன்னை இளைய யாதவருக்கு நிகரானவர் என நினைக்கிறார். தன் பெயரையே சூதர்கள் புண்டரிக வாசுதேவர் என அழைக்கவேண்டுமென ஆணையிட்டிருக்கிறார் என்றார்கள்.” சாத்யகி புன்னகைத்து “அவ்வண்ணமென்றால் அவ்விழைவுகளின் உண்மையான சுவையை நாம் அவர்களுக்கு காட்டிவிடவேண்டியதுதான்” என்றான். திரௌபதியும் “ஆம்” என்று புன்னகைத்தாள்.

”வங்கர்களுக்கு நெடுங்காலமாகவே எந்தவிதமான மதிப்பும் கங்காவர்த்தத்தில் இருந்ததில்லை” என்று திரௌபதி சொன்னாள். “அவர்கள் கங்கைக்கரையின் நாணல்மக்களிடமிருந்து உருவானவர்கள். கௌதம குலத்து முனிவரான தீர்க்கதமஸின் குருதியில் பிறந்தவர்கள் என்ற புராணத்தை ஓரிரு தலைமுறையாக சொல்லிக்கொண்டிருந்தாலும் அவர்களை ஷத்ரியர்கள் என எவரும் ஏற்றுக்கொண்டதில்லை. ஆகவே தொன்மையான பெருங்குடிகள் அவர்களுடன் மணவுறவு கொண்டதுமில்லை. ஆனால் சென்ற ஐம்பதாண்டுகளுக்குள் வங்கத்தின் தாம்ரலிப்தி பெருந்துறைமுகமாக எழுந்துவிட்டது. இன்று அவர்களை சாராமல் எந்த நாடும் நீடிக்கமுடியாதென ஆகிவிட்டிருக்கிறது.”

சாத்யகி “எனக்கு இந்தக் கணக்குகள் புரிவதில்லை” என்றான். “ஆகவே இவற்றை என் நினைவில் நிறுத்திக்கொள்வதுமில்லை.” பாஞ்சாலி “அப்படியே இருங்கள். எளிய போர்வீரராக இருக்கும்போதுதான் உங்கள் ஆற்றல் முழுமையாக வெளிப்பட முடியும்” என்றபின் “நானே கனகையைப் பற்றி விசாரிக்கிறேன். அவள் உங்களுக்கு உற்றதுணைவியாக இருப்பாள் என நினைக்கிறேன்” என்றாள். சாத்யகி அதற்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் தலையை அசைத்தான்.

“இளவரசர்களை சந்தித்தீர்களா?” என்றாள் திரௌபதி. அவள் பாஞ்சால இளவரசர்களை சொல்கிறாள் என எண்ணி சாத்யகி “இல்லை, மாலையில்தான் அரசவை கூடுகிறது என்றார்கள்” என்றான். திரௌபதி “இல்லை, நான் பாண்டவர்களை சொன்னேன்” என்றாள். அவள் அவர்களை அப்படி சொல்வாள் என்பது அவனுக்கு திகைப்பூட்டியது. “இல்லை, தங்களை சந்தித்தபின்னர்தான் அவர்களை சந்திக்கவேண்டும். அவர்களுக்கு முதன்மைச்செய்தி என ஏதுமில்லை. எளிய முறைமைச்செய்தி மட்டுமே” என்றான்.

திரௌபதி கண்களில் மெல்லிய ஒளி ஒன்று எழுந்தது. “முறைமைச்செய்தி எனக்கு வந்ததுதான். அவர்களுக்குத்தான் உண்மையான செய்தி இருக்கும்” என்றபின் நகைத்து “செய்தியை அறிந்துகொள்ளும் பறவையை எவரும் அனுப்புவதில்லை யாதவரே” என்றாள். சாத்யகி அதற்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைசெய்தான். “உங்கள் புன்னகை அழகாக இருக்கிறது” என்ற திரௌபதி “இளையபாண்டவர் பீமசேனர் இரண்டு துணைவிளுடன் கங்கைக்கரை வேனல் மாளிகையில் இருக்கிறார். நகுலன் அவரது துணைவியுடன் மறுபக்க மாளிகையில் இருக்கிறார். யாதவ அரசியின் மாளிகை நீங்கள் அறிந்ததே” என்றாள்.

“ஆம்” என்றான் சாத்யகி. அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. பெரிய வெண்கல மணியின் ரீங்கரிக்கும் வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டதுபோல இருந்தது. அந்த இசையைத்தவிர உள்ளத்தில் ஏதும் எஞ்சவில்லை. எண்ணங்களனைத்தும் அதனுடன் இணைந்துகொண்டன. “அங்கே முதற்பாண்டவர் தன் துணைவியுடன் நலமாக இருக்கிறார் அல்லவா?” சாத்யகி “ஆம், கடற்கரை ஓரமாகவே அவர்களுக்கு ஒரு மாளிகை அளிக்கப்பட்டிருக்கிறது” என்றான். “இளைய பாண்டவர் பார்த்தர் எங்கிருக்கிறார்?” சாத்யகி “அவர் துவாரகையில்தான்… எப்போதும் இளைய யாதவருடன் இருக்கிறார்” என்றான்.

“ம்” என்றாள். அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று தெரியாமல் சாத்யகி “அங்கே கோமதி ஆற்றை திருப்பி துவாரகைக்கு அருகே கொண்டுவருகிறார்கள். அந்தப்பணிகளைத்தான் இளையபாண்டவரும் செய்துவருகிறார்” என்றான். திரௌபதி அவன் விழிகளை கூர்ந்து நோக்க சாத்யகி பார்வையை திருப்பிக்கொண்டான். ”அவர் எப்போது இங்கு வரப்போகிறார் என்று சொன்னார்?” என்றாள். சாத்யகி “சொல்லவில்லையே” என்றான். அவள் விழிகளை மீண்டும் நோக்கியபோது அவை முற்றிலும் மாறிவிட்டிருப்பதை கண்டான். அவள் எண்ணுவதென்ன என்று அவனுக்கு புரியவில்லை.

“எனக்கென ஓர் உதவிசெய்ய முடியுமா?” என்று திரௌபதி கேட்டாள். சாத்யகி திகைத்து “நானா?” என்றான். உடனே “ஆணையிடுங்கள் தேவி” என்றான். “நீங்கள் அஸ்தினபுரிக்கு செல்லவேண்டும்” என்றாள். சாத்யகி “ஆணை” என்றான். “அங்கே பானுமதியை சந்திக்கவேண்டும். நான் அவளிடம் மட்டும் சொல்லவிழைவது ஒன்றுண்டு. அதை சொல்லவேண்டும்.” சாத்யகி “ஓலை அளியுங்கள், சென்று வருகிறேன்” என்றான். “ஓலையில் சொல்லக்கூடியது அல்ல” என்றாள் திரௌபதி.

அவள் விழிகள் மீண்டும் மாறின. அவன் திடுக்கிட்டு அவளை ஏறிட்டுப்பார்த்தான். அவள் பிறிதொருத்தியாக மாறியிருந்தாள். ”அவளிடம் நான் சொன்னதாக சொல்லுங்கள், பெருஞ்சுழல்பெருக்கில் எதற்கும் பொருளில்லை என்று. எது நிகழ்ந்தாலும் இங்கு நிகழும் மொத்த மானுடவாழ்க்கையையும் முழுமையாக பொறுத்தருளி விண்மீள்பவளே மூதன்னையாகி குனிந்து இங்கு பிறந்துவிழும் மைந்தரை வாழ்த்தமுடியும்.” சாத்யகி “ஆம், சொல்கிறேன்” என்றான். அச்சொற்களை அவன் மீண்டும் நினைவில் ஓட்டிக்கொண்டான்.

“அவள் என்றோ ஒருநாள் என்னுடன் தோள்தொட்டு நின்று ஏன் என்று கேட்பாள் என்று நினைக்கிறேன். அப்போது தெரியவில்லை என்றே நானும் மறுமொழி சொல்வேன். அதை இப்போதே சொல்கிறேன் என்று சொல்லுங்கள். இப்புவியில் நான் அணுக்கமாக உணரும் முதல்பெண் அவள் என்றும் தங்கை என்று நான் அகம் நெகிழ்ந்து அணைத்துக்கொள்ள விழைபவள் அவள் என்றும் சொல்லுங்கள்.” அவள் தன் கையில் இருந்து ஒரு கணையாழியை கழற்றி அவனிடம் அளித்து “அவளிடம் இதை கொடுங்கள்” என்றாள்.

“அவளுக்கு எனது திருமணப்பரிசு இது” என்றாள் திரௌபதி. அப்போது அவள் முகம் மீண்டும் பழையபடி மாறியிருந்தது. “இதிலுள்ள வெண்ணிறமான மணி ஐந்து அன்னையரில் இரண்டாமவளான லட்சுமியின் உருவம் என்கிறார்கள். எங்கள் குலத்து மூதன்னை ஒருத்தியின் கையில் இருந்து வழிவழியாக வந்தது. என் அன்னை எனக்களித்தாள். நான் அவளுக்கு அளிக்கிறேன்.” சாத்யகி அதை தலைவணங்கி பெற்றுக்கொண்டான்.

முந்தைய கட்டுரைஜெயகாந்தன் நினைவஞ்சலி
அடுத்த கட்டுரைஜெகே- ஒரு மனிதன் ஒரு வீடு ஓரு உலகம்-கிரிதரன் ராஜகோபாலன்