«

»


Print this Post

முற்போக்கு எனும் மதம்


அன்புள்ள ஜெ,

‘கறுப்பர் உளவியல்’ கட்டுரையில் அவர்கள் தாழ்வுணர்ச்சி கொண்டிருப்பதற்கான காரணங்கள் சொல்லப்படுவதில்லையே. அதையும்சேர்த்துத்தானே நாம் சிந்திக்க வேண்டும். அவர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதையும் சேர்த்துத்தானே இதைப்பற்றிச் பேசவேண்டும். உங்கள் கருத்து மொத்தையான ஒரு மனப்பதிவு போல இருக்கிறது அல்லவா? என் நண்பர்களிடம் விவாதித்தபோது இதையே சொன்னார்கள். அதே மாதிரி சாதி பற்றிய கட்டுரையிலும் பொதுவான கருத்துக்கள் தான் இருக்கின்றன.

நவீன் வைத்தியநாதன்

அன்புள்ள நவீன்,

என்னைப்பொறுத்தவரை இந்தவிஷயத்தில் வெளிபப்டையாகவும் நேர்மையாகவும் சிந்திக்கவும் பேசவும் மிகச்சிலரால்மட்டுமே முடியும். பெரும்பாலானவர்கள் , குறிப்பாக தங்களை எழுத்தாளர்களாக எண்ணிக்கொண்டிருக்கும் பதிவர்கள் மற்றும் சிற்றிதழ் அரசியலாளர்கள், இந்தமாதிரி எந்த ஒரு விஷயத்தையும் தங்களை முற்போக்கான, அறச்சீற்றம் கொண்ட கொள்கைத்தங்கங்களாகவும் மானுடநேய மாமனிதர்களாகவும் காட்டிக்கொள்வதற்கான சந்தர்ப்பமாகவே பயன்படுத்திக்கொள்வார்கள்.

அதற்குச் சிறந்த வழி பரவலாக மேடையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல்சரிநிலைகளை அப்படியே கண்கள் சிவக்க, முடிந்தவரை அடிவயிற்றை எக்கி கூச்சலிடுவதுதான். அவர்களின் சொந்தவாழ்க்கை சாதிக்குள், மதத்துக்குள் செருகிக்கிடப்பதை மறைப்பதற்கான வழி அது. தமிழகத்தில் கடந்த ஐம்பதாண்டுக்காலமாக எல்லா மேடைகளிலும் இந்த ஓங்கிக் கூச்சல்களை கண்டுவருவதனால் இவர்களை ஒருவகை சருகுப்புயலாக மட்டுமே நான் மதிப்பிடுகிறேன்

அத்துடன் ஒரு கட்டுரையின் ஒட்டுமொத்த தொனியோ, அதன் மையக்கருவோ புரியாவிட்டால் அதற்காக மெனக்கெடாமல் அந்த கட்டுரையின் ஒருவரியைப் பிடுங்கி அதற்கு மனம்போல பொருள் கொடுத்து ‘விவாதிக்க’ ஆரம்பிப்பதும் நம்முடைய ‘அறிவுச்சூழலின்’ மரபு. கணிசமான எதிர்வினைகளில் இதைக் காணலாம். இவற்றுக்கு இந்த சிக்கல்களை எல்லாம் தாண்டித்தான் தமிழ்நாட்டில் எதையாவது பேசமுடிகிறது. உண்மையில் அனைத்தையும் அபத்தமாக பொதுமைப்படுத்துபவர்கள் இந்த இருவகையினர்தான்.

நீங்கள் சொன்ன இரு கட்டுரைகளும் ஆய்வுக்கட்டுரைகள் அல்ல. அவ்வாறு அவை சொல்லிக்கொள்ளவுமில்லை. என்னுடைய சாதிகுறித்த கட்டுரை தனியனுபவ தளத்தில் மட்டுமே நின்று எழுதப்பட்டது. அதன் கருத்துக்களுக்கான ஆதாரம் என்பது தனியனுபவம் மட்டுமே. அதை வாசிக்கும் ஒருவர் நேர்மையாக தன் தனியனுபவத்துடன் அதை பொருத்திக்கொண்டு யோசித்தாரென்றால் ஒரு உரையாடல் சாத்தியமாகும்

ஒவ்வொருவரும் தங்கள் தனியனுபவங்கள் சார்ந்து நேர்மையாக இந்த விஷயங்களை பேச ஆரம்பிக்கும்போது வழக்கமான வரலாற்று, கோட்பாட்டு விவாதங்களில் விடப்படும் ஓர் இடைவெளி நிரப்பப்படும். நம் சமூகத்தில் நாம் சந்திக்கும் விஷயங்களை நாம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் ஏன் பேசக்கூடாது என்பதே என் வினா

தனியனுபவம்சார்ந்து பேசும்போது நாம் பொதுமைப்படுத்துவதில்லை. ‘இதுவே அறுதி உண்மை’ என்றல்ல ‘என் வரையில் நான் அறிந்தது இது’ என்றே அந்த பேச்சின் தொனி உள்ளது. தமிழ்ச்சூழலில் இருபதாண்டுக்காலமாகச் செயல்படும் எனக்கு எங்கும் எதிலும் சாதியே உள்ளது என்பது ஓர் அனுபவம். சாதியைப்பற்றிய கவனம் இல்லாமல் செயல்படுவது பொதுவெளியில் சாத்தியமாக இல்லை. தனிமனித உறவுகளில் அது ஒரு உட்சரடாக ஓடுகிறது.

அதேசமயம் சாதியைப்பற்றி பேசவேகூடாது என்ற இறுக்கமான இடக்கரடக்கலும் நம்மிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் பலசமயம் இறுக்கமும் அன்னியத்தன்மையும் உருவாகிறது. எல்லா விவாதங்களும் இடக்கரடக்கல்களின் மேல்தளத்திலேயே நிகழ்ந்து முடிகின்றன. அதைக்களைவதற்கு சாதியின் தோற்றம், அதன் இன்றைய செயல்பாடு ஆகியவற்றைக் குறித்த வெளிப்படையான புறவயமான சமூக,வரலாற்று ஆய்வுகள் தேவை என்பதே நான் சொல்லவந்தது.

நெருக்கமான நண்பர்களுடனான பேச்சுகளிலாவது சாதியை ஒரு வேடிக்கையாக ஆக்கிக்கொள்வது அந்த எல்லைகளை தாண்டுவதற்கு உதவும். சமூக இடைவெளிகளை தாண்டுவதற்கு உலகமெங்கும் எல்லா தளத்திலும் இயல்பாக கடைப்பிடிக்கப்படும் வழிமுறையும் அதுவே. சாதியைப் பேணுவதற்காக அல்ல, அதை சாதாரணமாக ஆக்கி சிறுமையாக்கி கடந்துசெல்லவே நான் அது சார்ந்த கிண்டலை பயன்படுத்தலாமென சொல்கிறேன்.

என் தனிவாழ்க்கையில் சாதி இல்லை. நான் சாதி மாறி மணம்செய்துகொண்டவன். என் குடும்பத்திலும் பெரும்பாலும் அப்படியே. நாளை என் குழந்தைகளும் அப்படியே. சாதியின் சமூக அந்தஸ்து எனக்கோ என் பிள்ளைகளுக்கோ தேவை இல்லை என்பதே என் கொள்கை. எதை நான் சொல்கிறேனோ அதுவே நான். ஆனால் என் சாதி சார்ந்தே என் முன்னோரின் வரலாறும் அவர்கள் உருவாக்கிய பண்பாடும் உள்ளது என்பதனால் அதன் சாதகமான அம்சங்களை மட்டும் என் குழந்தைகள் சுவீகரித்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வேன். இன்றைய அடையாளமாக அல்ல, நேற்றைய பின்புலமாக.

அதேபோலவே கறுப்பர்களைப்பற்றி சிவா எழுதியதும். அவர் அவர்களிடையே வாழ்கிறார். அவரது சொந்த அனுபவம் சார்ந்து சில அவதானிப்புகளைப் பேசுகிறார். அவை தவறா சரியா என விவாதிக்கலாம். ஆனால் அவற்றைப் பேசுவதே ‘அபச்சாரம்’ என்ற மனநிலை என்பது நாம் எப்படிப்பட்ட மூடிய சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம். எதையும் நம்மால் இப்படி மதமாக மாற்றியே பார்க்க முடிகிறது. ‘முற்போக்கு’ கூட ஒரு அடிப்படைவாத மதமாக ஆகிவிட்டிருக்கிறது இவர்களிடையே!

தன் அனுபவம் சார்ந்து சிவா எழுதிய கடிதத்துக்கு என்னுடைய அனுபவம் சார்ந்து ஒரு எதிர்வினை ஆற்றியிருக்கிறேன். காரணம் அனுபவம் சார்ந்து ஒருவர் எழுதும் ஒன்றுக்கு அனுபவம் சார்ந்தே பதில் சொல்லமுடியும். ஆதரித்தோ எதிர்த்தோ. இரு கட்டுரைகளும் சாதி அல்லது நிறம் குறித்த வரலாற்றுச் சித்திரத்தை அளிக்க முனையவில்லை. அப்படி அளித்து வேறு கட்டுரைகளை எழுதலாம், இங்கே உள்ளது அனுபவப் பதிவு மட்டுமே.

கறுப்பர்கள் தாழ்வுணர்ச்சி கொள்வது தவறு என்ற சித்திரத்தை சிவாவின் கட்டுரையிலும் சாதி தேவை என்ற குரலை என் கட்டுரையிலும் வலிந்து உருவி எடுக்க முனைவதன் நோக்கம் ஒன்றுதான், எந்த விவாதத்தையும் தாங்கள் அறிந்த ‘ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்ற எளிமையான வாய்ப்பாட்டுக்குள் கொண்டுசென்ற பின்னரே பேச முடியும் என்ற அறிவார்ந்த வறுமை அல்லது சிறுமை.

உங்களுக்கும் நண்பர்களுக்கும் இன்னும் புரியவில்லை என்றால் மீண்டும் சொல்கிறேன். சிவாவின் கடிதம் சென்றகால கட்டம் நவீன வாழ்க்கையில் உருவாக்கிய உளச்சிக்கல்கள் எப்படி முக்கியமான இடம் வகிக்கின்றன, அவற்றை எப்படி கவனமாகக் கையாளவேண்டியிருக்கிறது என்பதைப்பற்றி மட்டுமே சொல்கிறது. இத்தகைய பல்வேறு கவனங்களுடன்தான் நாம் எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறோம், இந்த கவனம் இல்லாமல் நவீன காலத்தில் வாழ்வதற்கு மிகச்சிறந்த வழி என்பது அந்த உளச்சிக்கல்களை வரலாற்று ரீதியாக ஆராய்வதும் பொதுவான வேடிக்கையாக ஆக்கிக்கொள்வதும்தான் என்று என் கட்டுரை சொல்கிறது

உண்மையை நேரடியாக விவாதித்து புரிந்துகொள்வது உங்கள் நோக்கம் என்றால் இதுவே புரியும். தமிழக வழக்கப்படி அப்பழுக்கற்ற முற்போக்குப்பிழம்பாக அச்சிலும் மேடையிலும் தோற்றமளிப்பதும் அதன் வழியாக சொந்த வாழ்க்கையின் அப்பட்டமான பிற்போக்குத்தனத்தை மூடிக்கொள்வதுமே உங்கள் இலக்கென்றால் இந்தக் கட்டுரையிலும் நீங்கள் பிற்போக்கைக் கண்டுபிடிக்கலாம். அந்த முற்போக்குப் போர்வை வெதுவெதுப்பானது, உள்ளே இருக்கும் எதையும் வெளியே விடாதது

ஜெ

http://www.jeyamohan.in/?p=1330 அரசியல்சரிநிலைகள்

http://www.jeyamohan.in/?p=4157 நாடார்,நாயர்,மிஷனரிகள்…

http://www.jeyamohan.in/?p=3482

விவாதம் என்னும் முரணியக்கம்

பண்பாட்டின் பலமுகங்கள்.. http://www.jeyamohan.in/?p=4014

http://www.jeyamohan.in/?p=5296 பசும்பொன்,கடிதம்

சாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது? http://www.jeyamohan.in/?p=5256

தெருநாயும் பிராமணியமும்:ஒருகடிதம் http://www.jeyamohan.in/?p=5173

http://www.jeyamohan.in/?p=4737
பசும்பொன்

மிஷனரி வரலாறு, வாஞ்சி, சக்கிலியர் http://www.jeyamohan.in/?p=4495

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7403/

8 comments

Skip to comment form

 1. ramji_yahoo

  நெருக்கமான நண்பர்களுடனான பேச்சுகளிலாவது சாதியை ஒரு வேடிக்கையாக ஆக்கிக்கொள்வது அந்த எல்லைகளை தாண்டுவதற்கு உதவும்.
  நடைமுறை படுத்தி பார்க்கிறேன், பல பழமொழிகள் அந்த காலத்திலேயே இருக்கிறது- சோழியன் குடுமி சும்மா ஆடாதே.

  அத்துடன் ஒரு கட்டுரையின் ஒட்டுமொத்த தொனியோ, அதன் மையக்கருவோ புரியாவிட்டால் அதற்காக மெனக்கெடாமல் அந்த கட்டுரையின் ஒருவரியைப் பிடுங்கி அதற்கு மனம்போல பொருள் கொடுத்து ‘விவாதிக்க’ ஆரம்பிப்பதும் நம்முடைய ‘அறிவுச்சூழலின்’ மரபு. கணிசமான எதிர்வினைகளில் இதைக் காணலாம்

  நான் பல நேரங்களில் இதைதான் செய்கிறேன். என் மனம் போல பொருள் கொடுத்து கொண்டு விடுவேன்.

  நாவல், ஆய்வுக்கட்டுரை போல வலை பதிவுகளில் ஒட்டு மொத்த தொனியை வாசகர்களை அடைய செய்ய முடிகிறதா தங்களால்.
  (ஒருவேளை வலை பதிவை வாசகர்களாகிய நாங்களும் அவசரமாக படிபதோ, அல்லது ஆய்வு கட்டுரைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வலைப் பதிவை படிப்பது இல்லையோ அல்லது வேறு செயல் புரிது கொண்டே வலை பதிவை படிப்பதா (multitaksing)

 2. gomathi sankar

  பிரச்சினை என்னவெனில் பெரும்பாலோனோர் எல்லா பிரச்ச்சினைகளுக்கும் டெம்ப்ளேட் எதிர்வினைகள் வைத்திருக்கிறார்கள்.இவை எதுவும் அவர்கள் சொந்த வாழ்வின் பிரதிபலிப்போ சுய சிந்தனை கொண்டுவந்து சேர்த்த இடமோ அல்ல.அரசியல் சரிநிலை என்று அந்தந்தக் காலங்களில் கருதப் படும் நிலைகளையே அவர்கள் எடுப்பார்கள்.

 3. tamilsabari

  //ஒரு கட்டுரையின் ஒட்டுமொத்த தொனியோ, அதன் மையக்கருவோ புரியாவிட்டால் அதற்காக மெனக்கெடாமல் அந்த கட்டுரையின் ஒருவரியைப் பிடுங்கி அதற்கு மனம்போல பொருள் கொடுத்து ‘விவாதிக்க’ ஆரம்பிப்பதும் நம்முடைய ‘அறிவுச்சூழலின்’ மரபு.
  கறுப்பர்கள் தாழ்வுணர்ச்சி கொள்வது தவறு என்ற சித்திரத்தை சிவாவின் கட்டுரையிலும் சாதி தேவை என்ற குரலை என் கட்டுரையிலும் வலிந்து உருவி எடுக்க முனைவதன் நோக்கம் ஒன்றுதான், எந்த விவாதத்தையும் தாங்கள் அறிந்த ‘ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்ற எளிமையான வாய்ப்பாட்டுக்குள் கொண்டுசென்ற பின்னரே பேச முடியும் என்ற அறிவார்ந்த வறுமை அல்லது சிறுமை.
  //
  :))

 4. stride

  இன்னொரு மொத்தையான தனிநபர் மனப்பதிவு இது :)

  உயர் சாதியினர் மற்றும் நகரங்களில் வசிக்கும் மத்திய வர்க்கத்தினர் மற்றும் தான் எளிதாக சாதி இல்லை என்று பேச முடிகிறது. நானே அதற்கொரு எடுத்துக்காட்டு. நகரத்தை விட்டு தென் தமிழகத்தில் உள்ள கல்லூரியில் படிக்க ஆரம்பித்த பின் தான் சாதியின் ஊடுருவல் பிடிபட ஆரம்பித்தது. பின் நண்பர்களின் கேலி கிண்டலினால் அதனை அறியவும் அதன் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவும் முடிந்தது. நட்பு இறுகுவதற்காக தங்கள் சாதியை தானே கிண்டல் செய்து கொள்ளும் பார்ப்பனர், தேவர், நாடார், வெள்ளாளர் போன்றோர் மூலம் புரிதல் கூடியது. சுய கிண்டல் செய்து கொள்பவர் தங்கள் சாதியை முழுமையாக ஏற்றுக்கொண்டு தான் அப்படி செய்தார்கள். அதில் ஒருவித தன் சாதி பெருமிதமும் தென்பட்டது. நாடார்களின் பெருமிதம் அவர்கள் ஒட்டுமொத்தமாக முன்னேறிய கூட்டு ஆக்கத்தால் உருவானது என்று இப்போது எனக்கு புரிய முடிகிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் அந்த கிண்டல்களில் பங்கேற்க மாட்டார்கள். ஒரு புன்னகையுடன் விலகி விடுவார்கள். அதற்கான காரணம் சொல்லவே தேவையில்லை. அவர்கள் புண்படும் காரணம் அனைவருக்கும் தெரியும். ஆயிரம் ஆண்டுகளாக பட்ட வடு எளிதில் ஆற முடியாது.

  சாதி இல்லை, அழிந்துவிட்டது என்று சொல்லிக்கொள்ளும் போலி முற்போக்காளர்களால் தான் அபாயம் அதிகம் என்று ஜெ சுட்டிக்காட்டுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அப்படிச்சொல்பவர்களால் தான் சாதியின் கொடுமைகள் தொடர்ந்தவண்ணமே இருக்கும். எதையும் மூடி மறைக்காத வெளிப்படையான உரையாடல் இப்போதைய சூழ்நிலையில் சாத்தியமே இல்லை. ஆனால் அதனை ஆரம்பிக்க முடிந்தால் தான் சமூகம் விழிப்புணர்வு கொள்ளும், பின் சாதி பகைமையை வென்று பலமடையும்.

  இதனையே நான் அமெரிக்க சூழலில் வைத்து பார்த்தேன். இங்கேயும் முற்போக்காளர்களாக காட்டிக்கொள்ளும் வெள்ளையர்கள் கறுப்பர்களுக்கு ஏன் தாழ்வு மனப்பான்மை இன்னமும் இருக்கிறது, இனவெறி தான் முற்றிலும் அழிந்துவிட்டதே, சட்டத்தில் தான் அது இல்லையே என்று கேட்கின்றனர். இனவெறி இப்போது இல்லவே இல்லை என்று சத்தியம் செய்யும் எவ்வளவோ வெள்ளையர்களை எனக்கு தெரியும். பேருக்கு ஒரு கருப்பினத்தவரை கூட நண்பராக கொண்டிருக்கமாட்டார்கள் அவர்கள். இங்கேயும் நேர்மையான உரையாடல் இன்னமும் நிகழவில்லை. உரையாடல் நிகழ வேண்டும் என கறுப்பினத்தவர் விரும்புகிறார்கள். அந்த உரையாடலுக்கு வெள்ளையர்கள் தயாராகவில்லை என்பது போல் தோன்றுகிறது. ஏன் ஓடி ஒளிகிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. நிறைய வெள்ளையர்கள் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட காலத்துக்கு பிறகு வந்த ஐரோப்பியர்களின் சந்ததிகள் என்பதால் அவர்கள் அடிமைக்கால வரலாற்றின் அநீதிகளுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். பெரும்பாலான வெள்ளையர்களுக்கு இருக்கும் குற்ற உணர்வே ஒபாமாவின் வெற்றிக்கு காரணம் என்று சொல்வோரும் உண்டு.

  இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் நிலை முன்னேறுவது போல் கூட அமெரிக்காவில் கறுப்பினத்தவர் நிலை முன்னேறும் என்று சொல்ல முடியவில்லை. இந்திய பெருநகரங்களில் சாதி வேறுபாடு மறைய சாத்தியங்கள் அதிகம். ஒருவர் உருவத்தை வைத்து சாதி கண்டு பிடிப்பது கடினம். கறுப்பினத்தவருக்கு அதுவும் முடியாது.

  சிவா

 5. ஜெயமோகன்

  சற்று முன் ஒரு மூத்த மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் இந்த விவாதத்தை வாசித்தவரல்ல. தற்செயலாக ஒன்று சொன்னார். தமிழகத்தில் மருத்துவர்கள் ஒரு நோயாளியை இன்னொரு மருத்துவருக்குப் பரிந்துரை செய்யும்போது தங்கள் சாதியைச் சேர்ந்த மருத்துவரிடம் மட்டுமே பரிந்துரை செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதாம் -குறிப்பாக தென் தமிழகத்தில் . அப்படிச்செய்யாவிட்டால் மனக்கசப்பும் தொழிற்சிக்கல்களும் உண்டாம். அதிர்ந்து போனேன். வழக்கறிஞர்களிடையே இது நிலைபெற்றுவிட்ட வழக்கம். சாதியடிபப்டையில் வழக்கறிஞர்-நீதிபதி கூட்டும் ஏறத்தாழ அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. முழுக்கமுழுக்க தொழில்நுட்பமாக உள்ள மருத்துவத்துறையில் இப்படி என்பது மிக கசப்பான உண்மை

  ஜெயமோகன்

 6. samyuappa

  கல்லூரி விடுதியில்- பேச்சுவாக்கில் என் ஜாதி வெளிப்பட இன்னொரு நண்பன் என்னை “பங்காளி” என்று கூப்பிட ஆரம்பித்தான். பிறகு என்ன ஆச்சு? …..ஒண்ணுமில்லை….அனைவரும் என்னை பங்காளி என்றே அழைக்க ஆரம்பித்தனர். நானும் அவர்களை பங்காளி என்றே அழைக்கிறேன்….இன்றளவும். “பங்காளி” – என் nick name ஆகிவிட்டது.

 7. ஜெயமோகன்

  வணக்கம் ஜெ..
  சிறுகதை , நீள்கதை, குறு நாவல், நாவல் என்று வடிவம், பக்கங்களை கொண்டு படைப்புகளை தீர்மானிப்பதை உங்கள் வாதம் தகர்க்கிறது. சுசீலா அம்மாவை எனக்கு நன்கு தெரியும். சொல்வனத்தில் அவர் எழுதும் முதல் கட்டுரை உங்கள் புத்தகம் பற்றி என்பதில் சந்தோஷம்.

  தொடர்கதைகளாக வந்து பின்பு நாவலாக உருமாற்றம் பெறும் பல கதைகளை நான் நாவலாக நினைப்பதில்லை. நிறைய உதாரணம் சொல்லலாம். சுந்தரராமசாமியின் ‘ புளியமரத்தின் கதை’ கூட ஒரு பத்திரிக்கைக்காக தொடராக ஆரம்பிக்கப்பட்டு பின்பு அந்த பத்திரிக்கை நின்று போனதால் பின்பு அதை முழு நாவலாக எழுதினார் என்று அவரே எழுதியிருக்கிறார். முதல் இரண்டு அத்தியாயங்கள் படிக்க அப்படிதான் தோன்றுகிறது. அதை ஒரு தொடர்கதையாக எழுதப்பட்டு பின்பு நாவலாகி இருந்தால், இந்த வடிவம் ஒருவேளை கிடைக்காமல் போயிருக்கலாம்


  Chandramohan Vetrivel,
  New Delhi.
  http://www.chandanaar.blogspot.com

 8. கெளதம்

  சிவாவின் அவதானிப்பு மிக சரி என்றே தோன்றுகிறது. அமெரிக்கா சென்ற முதல் வருடத்திலியே லண்டனுக்கு ஒரு பட்டறைக்கு போக வேண்டி இருந்தது. ஒரு நாள் உடனிருந்த அமெரிக்க நண்பர்களுடனான பேச்சு இந்திய சாதி அமைப்புகளைப் பற்றி ஆரம்பித்தது. பேச்சு வாக்கில், அதை அமெரிக்காவில் உள்ள கருபர்கள்ளோடு ஒப்பிட்டு நான் சொன்னதை யாரும் விரும்பவில்லை. பொது இடங்களிலும், பேருந்துகளிலும் உரக்க பேசுவது, வித்தியாசமாக உடை அணிவது எல்லாம் சிறுபான்மையினர் தங்களை, தங்கள் உரிமையை நிலை நாடிகொள்ளும் ஒரு குழு சார்ந்த முயற்சி என்று நான் சொன்னதை அந்த நண்பர் ஏற்றுக்கொள்ள வில்லை. நிறவெறி இன்னும் ஒரு மெல்லிய வெளிப்பாடாக இருக்கிறது என்ற என் வாதம் ஒட்டுமொத்தமாக மறுக்கப்பட்டது. அமெரிக்க கறுப்பர்களுக்கு எல்லாம் தாங்கள் கொடுத்துவிட்டதாகவும், அவர்கள் அதை பயன்படிதிகொள்ள விருப்பம் இல்லாமல் இருப்பதாகவும் சொன்னார் நண்பர்.

  பொது இடங்களில் அவர்களின் ஆர்பாட்டங்களுக்கு வெள்ளையர்களால் காண்பிக்கப்படும் அழுத்தமான மௌனம் கூட அவர்களை புண்படுத்தும் என்றே தோனுகிறது.

  அன்றாட பழக்கங்கள் மூலவும், கடுமையான சட்டங்கள் மூலவும் இனவெறி வெளிப்படையாக இல்லது போய்த்தான் இருக்கிறது. வரும் காலங்களில் அது இன்னும் மேம்படும் என்று தோனுகிறது. முக்கியமாக, பள்ளி கல்லூரி மாணவர்கள் சக கருப்பு மாணவர்களுடன் மிக சகஜமாக பழகுவது நம்பிக்கை தரும் விஷயம். 60 வருடங்களுக்கு முன் அடிமைத்தனம் இருந்த ஒரு நாட்டில் இது முக்கிய முன்னேற்றம் தான்.

  நம் ஊரிலும், இந்த முற்போக்கு போர்வை என்னதான் போலியானது என்றாலும், அது ஒரு முதல் படி என்றே நம்ம விழைகிறேன். அதை தாண்டி செல்வதும், மாட்டிக்கொள்வதும் நம் சுய சிந்தனையில் தான் உள்ளது.

Comments have been disabled.