நுழைவாயிலில்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். என்னைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். நான் புதுக்கோட்டையில் வசித்து வருகிறேன்..என் அப்பா பத்திரிக்கை நிருபர் என்பதால் சிறுவயதிலே நல்ல புத்தகங்கள் எனக்கு தேடி கொடுத்தார்.தற்போது சிற்றிதழ்களில் சிறுகதைகள் எழுதுகிறேன்..

2014இல் கோவை வந்திருந்தபோது விஷ்ணுபுரம் விருதுவிழாவில் தங்களை நேரில் பார்த்து பேசினேன்.. நான் எழுதிய சிறுகதையை கூட உங்களிடம் காண்பித்தேன்.(அப்போது என்னிடத்தில் கணையாழி இருந்தது).. ஞாபகம் இருக்கா என்று தெரியவில்லை..போட்டோ எடுத்தது என்னிடத்தில் இல்லை இருந்தால் அதனை சேர்த்திருப்பேன்..
மிக எளிமையாக நீங்கள் நடந்துகொண்டது எனக்கு பிடித்திருந்தது…

தங்களுடைய இணையத்தில் சமீபத்தில் படித்த பதிவுகள்.

1.சலசலப்புகள் 2.விஷ்ணுபுரம் வாசிப்புகள் 3.பாராட்டுகள் பற்றி..


சலசலப்புகள்:

நான் புதுமைப்பித்தனில் தொடங்கி கா.நா.சு சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் நாஞ்சில்நாடன், சுஜாதா, ஜெயமோகன் என தமிழின் நல்ல எழுத்தாளர்களையும். பஷீர்,அனந்தமூர்த்தி படைப்புகளையும் வாசித்து வந்திருக்கிறேன்..இது வரையில் என் வாசிப்பைக் கட்டிப்போட்ட எழுத்தாளர்களில் உங்களின் எழுத்து உச்சம் .;;வணிக எழுத்தாளர்கள் இங்கு நிறைய உண்டு. வெறும் நாவலை வாங்கி மடக்கி படித்துவிட்டு எங்கோ தூர எறிந்துவிட்டு செல்கின்ற வாசகர்களுக்கு அதாவது அமெச்சூர் எழுத்தாளர்கள் =அமெச் சூர் வாசகர்கள்.

அவர்களுக்கு ஜெயமோகனின் படைப்பை புரட்டிப்பார்க்க கூடிய நேரம் கிடைப்பதில்லை பாவம் அப்படியே கிடைத்தாலும் அதன் நுண்தன்மையையும், வரலாறு, பண்பாடு அடுக்குகளையும் கடந்து செல்ல முடியாமல் போகிறது. சில என்னுடைய இலக்கிய வட்ட நண்பர்களிடத்தில் அதுவும் ஒரு சிலர் மேலே குறிப்பிட்டது போன்றும் தெரியக்கூடியவர்களிடத்தில் நான் தங்களின் நாவல் பற்றியோ அதில் கூறப்பட்டுள்ள கதைமாந்தர்களை பற்றியோ மேற்கோள் காட்டும்போது எனக்கு கிடைக்கும் முதல் எதிர்வினை “ஜெயமோகன் குரூப்பா” என்கிறதுதான்.

அவர்கள் எந்த குரூப் என்று நான் கேட்டதில்லை அதான் மேலே சொன்னேனே…ஆரம்பத்தில் குசுகுசுவென்று சொன்னவர்கள் பின் நேராகவே சொன்னார்கள். அவர்களிடத்தில் நான் சொன்னது “நான் அவருக்கு அல்லக்கையுமில்லை அவர் குரூப்புமில்லை..அவரை நேரில் கூட ஒருமுறைதான் பார்த்திருக்கிறேன்.. நல்ல படைப்பபை தருகிறவரை பற்றி பேசுவதற்கு அவருடைய குரூப்பாக இருக்கவேண்டிய அவசியமில்லை நல்ல வாசகனாக விமர்சகனாக இருந்தால் போதும்.” என்று.

ஒரு கட்டத்தில் “ஜெயமோகனின் படைப்பில் உங்களுக்கு பிடிக்காமல் புரியாமல் எரிச்சலாக ஆன ஒன்றை பற்றி ஒரு பத்து பக்கம் விமர்சனமாக கட்டுரை கொண்டுவாருங்கள்; என்றேன்”..அதன் பிறகு அந்து ‘குரூப்பை’யே காணோம்.நீங்கள் சொன்னது போன்று வெறுமே பாலியல் வன்முறை அதிர்ச்சிகளை மட்டுமே இலக்கியம் என நம்பும் ‘அமெச்சூர் குரூப்’ ஜெ சார்.

2.விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் வெளிவந்து போது நான் வாசிக்கவில்லை வாசித்திருக்கவும் முடியாது அப்போது நான் மிகச்சிறிவன். ஆனால் அதன்பிறகு எனது வாசிப்பு ஆரம்பித்தது புதுமைப்பித்தனில்தான் பல வருடங்கள் பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் வாசித்து வந்தேன் உங்களின் புத்தகங்களும் இடையிடையே வாசித்துகொண்டிருந்தேன்..ஆனால் விஷணுபுரம் தான் நான் உங்களின் எழுத்திற்குள் நுழையக் காரணம். அதன் பிறகு உங்களின் படைப்புகளில் விடுபட்டவைகளை தேடி படிக்கத்தொடங்கினேன்..

விஷ்ணுபுரமும் முதலில் எனக்கு ‘பெரும் அச்சுறுத்தலான –அது ஒரு பழைய புராணம்,இந்துத்வ தத்துவம் அப்படி இப்படி” என்று மேலோட்டமான வாசிப்பாளர்களால் சொல்லப்பட்டது. இப்போது என்னிடத்திலிருக்கும் அந்த நூல் நூலகம் மாதிரி அது பல பேர்களிடத்தில் சர்குலேஷனில் இருக்கிறது. நான் மறு வாசிப்பு செய்யக்கூட முடியவில்லை..

நான் எழுதுகின்ற சிறுகதைகளை ஆங்கில இலக்கியம் படித்த என் நண்பரிடம் வாசிக்கக் கொடுப்பேன் அவர் ஒருவர்தான் ரொம்ப காலமாகவே விஷ்ணுபுரத்தை தவிர்த்து வந்தவர். மூன்று மாதத்திற்குமுன் கசாயத்தை போன்று வேண்டாவெறுப்பாக எடுத்துச்சென்றார். சென்ற வாரம் வந்ததும் பிங்கலனிலிருந்து திருவடி சூரிதத்தர் சங்கர்ஷணன் என ஒவ்வொரு கதாபாத்திரத்தை பற்றியும் அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம் “; அது பெரிய கடல் சார் வலை போட்டு அள்ளலாம்.. நமக்கு கிடைக்கிற எல்லாமே எங்கேயும் கிடைக்காதது” என்றார்..

3.பாராட்டுகள்

அப்படியொரு குழந்தைத்தனம் ஜெமோவுக்கு இருப்பதாக சொல்பவர்களுக்குத்தான் அது நிறையவே இருக்கிறது..அவர்களின் குழந்தைத்தனம் தான் பேஸ்புக்,டிவிட்டர் என்று கொடிகட்டி பறக்கிறதே..
ஒரு எழுத்தாளன் வாசகனை ஒரு சிறந்த வாசகனாக மாற்றுவதுமட்டுமல்லாமல் அவனை ஒரு விமர்சகனாகவும் பின் படைப்பாளியாகவும் நல்ல எழுத்தாளராகவும் மாற்றும் சக்தி படைத்தவன். அவனே மிகச்சிறந்த எழுத்தாளன். அத்தகைய எழுத்தாளன் தமிழில் மிகக் குறைவே..

அதனால் அப்படி யாராவது வந்து வாசகனை புறந்தலையில் தட்டி ‘இதைப்படி’ ‘இது நல்ல புத்தகம’ ‘இதை இப்படி விமர்சனம் செய்ய கற்றுக்கொள்’ என்று சொல்லிக்கொடுத்தால் “அவரைத்தவிர வேறு ஆளே இல்லனு நினைப்பு போல” என்று டிவிட்டர்,பேஸ்புக் பக்கம் ஒதுங்கி கத்துக்கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..
ஒரு நூறு பக்க நாவலை புரட்ட போரடித்துவிடுகிறது அவர்களுக்கு …பாவம்

அன்புடன்
மு. தூயன்

அன்புள்ள தூயன்,

நீண்ட கடிதத்துக்கு நன்றி. தமிழ் இலக்கியச்சூழல் இப்படித்தான் என்றும் இருந்துகொண்டிருக்கிறது. சொல்லப்போனால் இன்னும் படுமட்டமாக இருந்தது. நான் எழுதவந்த எண்பதுகளில் வாசகர்களே முந்நூறு பேர்தான். தொடர்புகளின் வழியாகவே இலக்கியச்சுற்றத்தை உருவாக்கி எழுத்துக்கள் பற்றிய மதிப்பீடுகளை உருவாக்கிக்கொள்ள முடியும். வெறும் வம்புகளே அதிகம் சுழன்றுகொண்டிருந்தன. தொண்ணூறுகளுக்குப்பின்னர் வாசகர்கள் கூடுதலாக வரத்தொடங்கினர். அதன்பின்னரே இலக்கியத்திற்கு கொஞ்சமேனும் மூச்சுவெளி கிடைத்தது

இது ஏன் என்றால் ஒரே வரிதான். வாசிப்பது, தொடர்ந்து வாசிப்பது, உண்மையிலேயே வாசிப்பது சிரமானது என்பதுதான். பெரும்பாலானவர்கள் அதைச் செய்வதில்லை. வாசித்ததைப்பற்றி விவாதிப்பதும் அதைப்பற்றி ஒரு புறவயமான கருத்தை உருவாக்கிக்கொள்வதும் மேலும் சிரமம். அதேசமயம் இலக்கியம், அறிவியக்கம் பற்றிய தகவல்கள் காதில் விழுந்துகொண்டே இருக்கின்றன. அத்தகவல்களைக் கொண்டு ஒரு தோராயமான கருத்தை உருவாக்கிக்கொண்டால் சமாளித்துப்போக முடியும். கேட்பவர்களும் வாசிக்காமல் சமாளிப்பவர்கள் என்பதனால் அது செல்லுபடியாகும்.

இடது, வலது, கலகம் என ஏதேனும் ஒரு பாவனையை மேற்கொண்டுவிட்டால், அதிதீவிரத்தை நடிக்கத் தொடங்கினால் அப்படியே வாழ்நாள் முழுக்க வண்டி ஓடும். இங்கே கேட்கும் பெரும்பாலான குரல்கள் இத்தகையவை மட்டுமே. இது வாசகர்கள் மட்டும் அல்ல. எழுத்தாளர்களும் கூட செய்வதே. பாருங்கள், இங்கே எழுத்தாளர்களின் நூல்களின் பெயர்கள் அடிபடும். அவற்றைப்பற்றி அசலான ஒரு விமர்சனம் கண்ணில் படாது. கொள்கைகள் கோட்பாடுகள் சிக்கும். அவற்றை பயன்படுத்தும் ஓர் உண்மையான சிந்தனை தென்படாது.

ஒருவாசகன் அதைச்செய்தால் அவன் உண்மையாக வாசித்திருக்கிறானா என்று பாருங்கள். சமீபத்தில் மலேசிய நண்பர் ஒருவர் சொன்னார். ஒரு ஈழத்தோழர் பின் தொடரும் நிழலின் குரலை விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்தாராம். இவர் ‘நான் அந்த நாவலை வாசிச்சிருக்கேன். நீங்க வாசிச்சிருக்கீங்களா?” என்றார். ‘வாசிக்கவில்லை, ஆனா…’ என அவர் ஆரம்பித்ததுமே இவர் ‘போதும்’ என்றாராம். தன்னை அவமதித்துவிட்டதாக அவர் புண்பட்டு கொந்தளிக்க ஆரம்பித்தாராம்.

நாம் வாசித்தவற்றை பற்றி நாம் மதிக்கும் ஒரு கருத்தையேனும் சொல்லாத எவருடைய கருத்துக்கும் மதிப்பளிக்கவேண்டியதில்லை. எழுத்தாளன் என்றால் பொருட்படுத்தும்படி எதையாவது எழுதிக்காட்டாமல் பேசிக்கொண்டிருப்பவர்கள் ஆங்காங்கே பொறுக்கிச்சேர்த்தவற்றை கருத்துக்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள். அவர்களையும் பொருட்படுத்தவேண்டியதில்லை

அப்படிச்செல்லும்போது மிக எளிதில் வம்புகளைக் கடந்துவிடலாம். அந்த குரூப் இந்த குரூப் போன்றவற்றை விலக்கிவிடலாம். நாம் விவாதிக்க, அறிய விரும்பும் தளத்தை எளிதில் சென்று தொட்டுவிடலாம்.

தொடர்ந்து வாசியுங்கள். எழுதுங்கள். உங்களுக்கு நீங்களே பெரிய அறைகூவல்களை விடுத்துக்கொள்ளுங்கள். உங்களையே கடந்து செல்லுங்கள்

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஎஞ்சியிருப்பதன் பேரின்பம்!
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 75