‘ஜெகே – அஞ்சலிகள்’ கடலூர் சீனு

Jeyakanthan_1
எழுத்துலக வேந்தன், அருமை நண்பர் ஜெயகாந்தன் மறைந்த செய்தி கேள்வியுற்று அதிர்ச்சியுற்றேன் .நான்காண்டுகளுக்கு முன்பு அவர் உடல்நலம் குன்றி இருந்தபோது, தகவலறிந்து அவருக்கு உயர்தரச் சிகிச்சை கிடைக்க செய்தேன். உடல்நலம் தேறி மருத்துவமனயிலிருந்து புறப்படும்போது, ”கலைஞ்சரைப் பார்த்து நன்றி தெரிவித்துவிட்டுத்தான் நான் வீட்டுக்கு செல்வேன்” என்று சொல்லி ,என்னை வந்து பார்த்தார். ”என் உயிரை காப்பாற்றி விட்டீர்கள்” என்றார். இன்னமும் அந்த வார்த்தைகள் என் செவிகளில் ஒலிக்கின்றன. எழுத்துலக சிற்பி ஜெயகாந்தன் மறைந்தாலும், அவர் எழுத்துக்கள் என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நிற்கும்.

-திமுக தலைவர் மு. கருணாநிதி-

இனிய ஜெயம்,

காலை நண்பர் ஹிந்துவில் வெளியான உங்கள் கட்டுரை குறித்து சொல்ல, வாங்கினேன். இடது பக்கத்தில் பிரபலங்கள் அளித்திருந்த அஞ்சலிக் குறிப்புகள் பிரசுரிக்கப் பட்டிருந்தது. இன்றும் இறுதிக்காலத்தில் ஜெயகாந்தன், திரு மு. கருணாநிதி அவர்களை ‘எதிர்கொண்ட’ விதத்தைக் கொண்டு. ஜெயகாந்தனை விமர்சிப்பவர்கள் உண்டு. என்னிடம் இத்தகு நிலையை சுட்டி கேள்வி எழும்போதெல்லாம், மௌனம் காத்துவிடுவேன். உயிர் காப்பவன் தகப்பனுக்கு இணையானவனே என்று நம் மரபு சொல்கிறது. கருணாநிதி அவர்கள் தந்தை உள்ளம் கொண்டவர் என்று ஜெயகாந்தன் அதையே வழி மொழிந்திருக்கிறார். நிற்க. ஜெயகாந்தனாக இருந்தால் என்ன, தெரு நாயாக இருந்தால் என்ன? அதன் உயிர் காக்கும் நன்னயத்தில் இறங்கும் எவரும் போற்றப்பட வேண்டியவரே. ஆனால் திரு மு. கருணாநிதி அவர்களின் இந்த அஞ்சலிக் குறிப்பு, என்னை மிக மிக வருந்த வைத்துவிட்டது. இதை போன்றதொரு தருணத்தில், செய்த உதவியை சுட்டிக் காட்டுவது, ஒரு மனிதனின் இயலாமையில் தன்னை நிறுவும் இந்த செயல், மேன்மக்கள் செய்யக் கூடியது அல்ல,

என் ஆசானை வெறும் உடலாகக் குறுக்கி விட்டார். திரு மு .கருணாநிதி அவர்கள்,தன் இயல்பால் இலக்கியவாதியாக இருந்திருந்தால் இதை எழுதி இருக்க மாட்டார்.அழக் கூடாது என்று நினைத்திருந்தேன், ஆனால் ஒரு அவமதிப்பின் முன் அழாமல் இருக்கும் கலையை இன்னும் கற்கவில்லை.

கடலூர் சீனு

சீனு,

கல்லறையில் மிதித்து நின்று கடைசிச்சிரிப்பைச் சிரிக்கத்தான் மு க அந்த முதலீட்டை செய்திருக்கிறார். அறுவடை செய்யாமலிருக்க அவரென்ன புனிதரா?

தமிழ் இந்துவின் அஞ்சலிக்குறிப்பில் அசோகமித்திரனின் வரிகள்தான் மிகவும் சங்கடம் அளித்தன. என்ன சொல்ல?

ஜெ